Archive for December 3rd, 2012
பெங்களூருவில் மைசூரு
Posted December 3, 2012
on:- In: Bangalore | Food
- 15 Comments
சில வாரங்களுக்கு முன்னால் ‘தி ஹிந்து’வில் மைசூர் பாக் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதன் சாராம்சம்: பெங்களூருவிலேயே மிகச் சிறந்த மைசூர் பாக் வேண்டுமென்றால், அது ’குண்டப்பா ஸ்வீட்ஸ்’ என்ற கடையில்தான் கிடைக்கும்.
இதைப் படித்ததும், நான் வெட்கித் தலை குனிந்தேன்.
பின்னே? ஸ்வீட்ஸ் பிரியன், பெங்களூருவில் 12 வருடங்களாக வாழ்கிறவன், ஆனால் குண்டப்பா ஸ்வீட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே. இது அவமானகரமான விஷயமில்லையா? உடனடியாக, தேடல் வேட்டையைத் தொடங்கினேன்.
இதுமாதிரி விஷயங்களுக்குக் கூகுளைவிட, நிஜ மனிதர்களிடம் பேசுவதுதான் சரிப்படும். எங்கள் அலுவலகத்திலேயே இனிப்பான மனிதர் இன்னொருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டால் உடனே விவரம் கிடைக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கூடச் சேர்ந்து தேடுவதற்கு பார்ட்னர் கிடைப்பார்!
கேட்டேன். அவர் முகம் ஸ்விட்ச் போட்டாற்போல் மலர்ந்தது. ‘ஆஹா, குண்டப்பா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்’ என்றார்.
‘என்ன சார், உங்களுக்கு இது ஏற்கெனவே தெரியுமா?’
‘நல்லாத் தெரியும், ஏராளமா வாங்கி விழுங்கியிருக்கேன்’ என்றார் அவர். ‘நாக்கு நுனியில வெச்சா கரையறதும் உள்ளே போறதும் தெரியாது சார், அப்படி ஒரு மென்மை, மிதமான இனிப்பு, அட்டகாசமான சுவை’ என்று அடுக்கினார் அவர்.
சட்டென்று அவர் முகத்தில் சோகம். தீவிர நினைவுப் பெருமூச்சுடன் கடை முகவரி, செல்லும் வழியைச் சொன்னார்.
அந்தக் கடை நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறது. அதனால் என்ன? நல்ல மைசூர் பாக் தேவையென்றால் கொஞ்சம் சிரமப்படதான் வேண்டும். ‘உங்களுக்கும் வாங்கிவரட்டுமா சார்?’ என்றேன்.
‘வேணாம் வேணாம்’ அவசரமாக மறுத்தார்.
‘ஏன்? இப்பதானே அதை அவ்ளோ அழகா வர்ணிச்சீங்க.’
‘ஆமா, ஆனா, சமீபத்துல காசிக்குப் போனபோது மைசூர் பாக் சாப்பிடறதை விட்டுட்டேன். அதனால, எனக்கு வேணாம், நீங்க வாங்கிச் சாப்பிடுங்க.’
நேற்று ஓர் உறவினரை வழியனுப்ப யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்லவேண்டியிருந்தது. அதோடு மைசூர் பாக் பயணத்தையும் சேர்த்துக்கொண்டேன்.
பசவேஷ்வர நகரில் நான்கு முக்கியச் சாலைகள் சந்திக்கிற ஹவனூர் சர்க்கிள் உள்ளது. அங்கே இரு சாலைகளின் கச்சிதமான மூலையில் உள்ள சின்னக் கடைதான் ‘குண்டப்பா ஸ்வீட்ஸ்’. நீங்கள் காரிலோ ஆட்டோவிலோ சென்றால் நிச்சயம் மிஸ் செய்துவிடுவீர்கள், பஸ்ஸில் சென்று இறங்குங்கள் (மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 10 ரூபாய் டிக்கெட்டாம், விசாரித்தேன்), அல்லது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று நாற்சந்தியின் மையத்தைத் தொடுங்கள். கடை சிக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம், கடையின் போர்ட் முழுவதும் கன்னடத்தில் உள்ளது. யாரிடமாவது விசாரியுங்கள், அல்லது, ‘ಗು’ என்ற முதல் எழுத்தை நன்றாக நினைவு வைத்துக்கொண்டு தேடுங்கள்.
கடை வாசலிலேயே பெரிய கடாய் (வார்த்தை வெளாட்டு மாமே!) வைத்து மைசூர் பாக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள். ராத்திரி ஒன்பது மணிக்கு Fresh Batchஆ என்று வியந்தபடி நுழைந்தேன். கவுன்டர் அருகே சுடச்சுட இன்னொரு Batch தயாராக இருந்தது. வாங்கிக்கொண்டேன். (விலை: கிலோ ரூ 400/-)
வீடு வந்தபோது இரவு 11. அப்போதும் விடாமல் மனைவியார் ஒரு துண்டு சாப்பிட்டுவிட்டுக் கிறங்கிப்போனார், ’இந்தக் கடையை எப்படி 12 வருஷமா மிஸ் பண்ணே?’ என்று என் தலையில் குட்டாத குறை!
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா(அங்கே ‘க்’ இல்லை)கூட இப்படிதான் மென்மையாக இருக்கும், ஆனால் அதில் மெஷின் வைத்துச் செய்தமாதிரி ஒரு செயற்கைத்தன்மை (எனக்குத்) தோன்றும். குண்டப்பா ஸ்வீட்ஸில் அந்தப் பிரச்னையே இல்லை, கரடு முரடுத் தோற்றம், உள்ளே ஆங்காங்கே இளம்பழுப்பு, ஆங்காங்கே அடர்பழுப்பு, ஆனால் நாக்கில் வைத்தபின் அந்தக் குறைகள் எவையும் இல்லை, அப்படி ஒரு ருசி.
காலை எழுந்த மகளும் ஒரு துண்டு சுவைத்தாள், ‘Awesomeப்பா’ என்றாள் அயல்நாட்டு தோரணையில், ‘அம்மா, அப்படியே மொத்தமா என் டிஃபன் பாக்ஸ்ல வெச்சுடு.’
***
என். சொக்கன் …
03 12 2012