மனம் போன போக்கில்

பெங்களூருவில் மைசூரு

Posted on: December 3, 2012

சில வாரங்களுக்கு முன்னால் ‘தி ஹிந்து’வில் மைசூர் பாக் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதன் சாராம்சம்: பெங்களூருவிலேயே மிகச் சிறந்த மைசூர் பாக் வேண்டுமென்றால், அது ’குண்டப்பா ஸ்வீட்ஸ்’ என்ற கடையில்தான் கிடைக்கும்.

இதைப் படித்ததும், நான் வெட்கித் தலை குனிந்தேன்.

பின்னே? ஸ்வீட்ஸ் பிரியன், பெங்களூருவில் 12 வருடங்களாக வாழ்கிறவன், ஆனால் குண்டப்பா ஸ்வீட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே. இது அவமானகரமான விஷயமில்லையா? உடனடியாக, தேடல் வேட்டையைத் தொடங்கினேன்.

இதுமாதிரி விஷயங்களுக்குக் கூகுளைவிட, நிஜ மனிதர்களிடம் பேசுவதுதான் சரிப்படும். எங்கள் அலுவலகத்திலேயே இனிப்பான மனிதர் இன்னொருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டால் உடனே விவரம் கிடைக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கூடச் சேர்ந்து தேடுவதற்கு பார்ட்னர் கிடைப்பார்!

கேட்டேன். அவர் முகம் ஸ்விட்ச் போட்டாற்போல் மலர்ந்தது. ‘ஆஹா, குண்டப்பா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்’ என்றார்.

‘என்ன சார், உங்களுக்கு இது ஏற்கெனவே தெரியுமா?’

‘நல்லாத் தெரியும், ஏராளமா வாங்கி விழுங்கியிருக்கேன்’ என்றார் அவர். ‘நாக்கு நுனியில வெச்சா கரையறதும் உள்ளே போறதும் தெரியாது சார், அப்படி ஒரு மென்மை, மிதமான இனிப்பு, அட்டகாசமான சுவை’ என்று அடுக்கினார் அவர்.

சட்டென்று அவர் முகத்தில் சோகம். தீவிர நினைவுப் பெருமூச்சுடன் கடை முகவரி, செல்லும் வழியைச் சொன்னார்.

அந்தக் கடை நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறது. அதனால் என்ன? நல்ல மைசூர் பாக் தேவையென்றால் கொஞ்சம் சிரமப்படதான் வேண்டும். ‘உங்களுக்கும் வாங்கிவரட்டுமா சார்?’ என்றேன்.

‘வேணாம் வேணாம்’ அவசரமாக மறுத்தார்.

‘ஏன்? இப்பதானே அதை அவ்ளோ அழகா வர்ணிச்சீங்க.’

‘ஆமா, ஆனா, சமீபத்துல காசிக்குப் போனபோது மைசூர் பாக் சாப்பிடறதை விட்டுட்டேன். அதனால, எனக்கு வேணாம், நீங்க வாங்கிச் சாப்பிடுங்க.’

நேற்று ஓர் உறவினரை வழியனுப்ப யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்லவேண்டியிருந்தது. அதோடு மைசூர் பாக் பயணத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

பசவேஷ்வர நகரில் நான்கு முக்கியச் சாலைகள் சந்திக்கிற ஹவனூர் சர்க்கிள் உள்ளது. அங்கே இரு சாலைகளின் கச்சிதமான மூலையில் உள்ள சின்னக் கடைதான் ‘குண்டப்பா ஸ்வீட்ஸ்’. நீங்கள் காரிலோ ஆட்டோவிலோ சென்றால் நிச்சயம் மிஸ் செய்துவிடுவீர்கள், பஸ்ஸில் சென்று இறங்குங்கள் (மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 10 ரூபாய் டிக்கெட்டாம், விசாரித்தேன்), அல்லது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று நாற்சந்தியின் மையத்தைத் தொடுங்கள். கடை சிக்கும்.

அப்புறம் இன்னொரு விஷயம், கடையின் போர்ட் முழுவதும் கன்னடத்தில் உள்ளது. யாரிடமாவது விசாரியுங்கள், அல்லது, ‘ಗು’ என்ற முதல் எழுத்தை நன்றாக நினைவு வைத்துக்கொண்டு தேடுங்கள்.

கடை வாசலிலேயே பெரிய கடாய் (வார்த்தை வெளாட்டு மாமே!) வைத்து மைசூர் பாக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள். ராத்திரி ஒன்பது மணிக்கு Fresh Batchஆ என்று வியந்தபடி நுழைந்தேன். கவுன்டர் அருகே சுடச்சுட இன்னொரு Batch தயாராக இருந்தது. வாங்கிக்கொண்டேன். (விலை: கிலோ ரூ 400/-)

வீடு வந்தபோது இரவு 11. அப்போதும் விடாமல் மனைவியார் ஒரு துண்டு சாப்பிட்டுவிட்டுக் கிறங்கிப்போனார், ’இந்தக் கடையை எப்படி 12 வருஷமா மிஸ் பண்ணே?’ என்று என் தலையில் குட்டாத குறை!

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா(அங்கே ‘க்’ இல்லை)கூட இப்படிதான் மென்மையாக இருக்கும், ஆனால் அதில் மெஷின் வைத்துச் செய்தமாதிரி ஒரு செயற்கைத்தன்மை (எனக்குத்) தோன்றும். குண்டப்பா ஸ்வீட்ஸில் அந்தப் பிரச்னையே இல்லை, கரடு முரடுத் தோற்றம், உள்ளே ஆங்காங்கே இளம்பழுப்பு, ஆங்காங்கே அடர்பழுப்பு, ஆனால் நாக்கில் வைத்தபின் அந்தக் குறைகள் எவையும் இல்லை, அப்படி ஒரு ருசி.

காலை எழுந்த மகளும் ஒரு துண்டு சுவைத்தாள், ‘Awesomeப்பா’ என்றாள் அயல்நாட்டு தோரணையில், ‘அம்மா, அப்படியே மொத்தமா என் டிஃபன் பாக்ஸ்ல வெச்சுடு.’

***

என். சொக்கன் …

03 12 2012

Advertisements

15 Responses to "பெங்களூருவில் மைசூரு"

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவை மைசூர்பாக் என்று ஒத்துக்கொள்ள இன்னும் எனக்கு மனம் இல்லைதான். அடுத்த முறை சேலம் செல்லும்போது பக்கத்தில் இருக்கும் ராசிபுரத்துக்கு சென்று லக்‌ஷ்மி விலாஸ் மைசூர்பாக் சுவைத்துப் பாருங்கள். ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ளது. சேலத்திலிருந்து ராசிபுரத்திற்கு தாராளமான பேருந்து வசதியும் உண்டு.

குண்டப்பா கடைக்கு சென்னையில் கிளை உண்டா?

ஒரு முறை டெல்லி சென்ற பொழுது என்னுடன் வந்த கலீக் என்னை ‘சாந்தினி சவுக்’ என்ற இடத்துக்குக் கூட்டிபோய் ஒரு முச்சந்திக் கடையில் சுடச் சுடத் தயாராகிக்கொண்டிருந்த ஜாங்கிரி வாங்கிக் கொடுத்தது, (அடடா அற்புத சுவை அது. இரண்டு பெரிய ஜாங்கிரிகள் 10 ரூபாய்தான்.) அந்தக் கடையில் ஜாங்கிரி வாங்குபவர்களிடம் எல்லாம் ஒவ்வொரு ஜாங்கிரித் துண்டை வாங்கிச் சாப்பிட்டுக் கொழுத்த ஒரு நாய் அங்கே இருந்தது, நாய்க்கெல்லாம் சர்க்கரை வியாதி வராதா என்று எனக்கு சந்தேகம் எழுந்தது என எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தியது இது.

awesome.

அன்பரே.தயவுசெய்து குண்டப்பா ஸ்வீட்சின் முகவரியைத் தர இயலுமா?10.12.2012 அன்று பெங்களுருவில் இருப்பேன்.
வாங்கி ருசித்து மகிழ எனக்கு ஒரு சந்தர்ப்பம் தர இயலுமா?
நன்றி
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

ஆசையை தூண்டுகிறது. இன்சிடண்ட்லி நானும் இங்கு நேற்று புதிதாய் ஒரு கடையில் மைசூர்பாகு வாங்கினேன். எந்த தனித்தன்மையும், பிராண்ட் வால்யுவும் இல்லாத சுமாரான மைசூர்பாகு 🙂

There is no address really 🙂 Get an auto and reach Havanur Circle, Look for Gundappa Sweets. Enjoy :))

நன்றி வாங்கி ருசித்த பின் தங்களுக்கு இனிய சுவையுடன் பதில் தருகிறேன்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

சுவை மிகுந்த மைசூரை பெங்களூரில் தேடிக் கண்டு பிடித்து எங்களுக்கு வழி காட்டி விட்டீர்கள். நன்றி!
குண்டப்பா கடைக்குப் போய் மைசூர்பாகு சாப்பிடும்போது உங்களை நிச்சயம் நினைத்துக் கொள்ளுவேன்!

<> – நல்ல ஐடியா சார் ! <> – எனக்கும்தான் சார்.

இதுவல்லவோ ‘புலனாய்வு நிருபர்’த்துவம். எனக்கும் தெரியாதே. ட்விட்டர்ல பேவரைட் பண்ணி வெச்சுக்கறேன். ப்ளூபெல் டர்கிஷ் அல்வாவுக்கு இணையான தேடல் இது.

உங்களை நம்பித் தான் குண்டப்பாவை அலைந்து திரிந்து கண்டுபிடித்து அரை கிலோ வீட்டிற்க்கு வாங்கியிருக்கிறேன், யாருக்கேனும் பிடிக்கவில்லையெனில் தாங்கள் தான் பொறுப்பு , வீடு தேடி வந்து 200 ரூபாய் வாங்கி விடுவேன் .

நல்ல வேளை தப்பித்தீர்கள், வீட்டில் யாரும் நல்லா இருக்கிறதென்றும் சொல்லவில்லை, நல்லா இல்லையென்றும் சொல்லவில்லை.

திருச்சி B.G நாயுடு வில் ருசி பார்த்திருக்கிறீர்களா என தெரியவில்லை, எதுக்கும் அந்த பக்கம் போனால், ருசி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

எனக்கென்னவோ குண்டப்பா, B.G நாயிடுவை விட மேலாக தெரியவில்லை.

பிஜி நாயுடுவில் வேறு இனிப்புகள் சாப்பிட்டதுண்டு, மைசூர்பாகு சாப்பிட்டதில்லை. முயற்சி செய்கிறேன், நன்றி 🙂

நாக்கில் எச்சில் ஊற வெய்த்து விட்டிர்கள் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 507 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 437,977 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2012
M T W T F S S
« Nov   Jan »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: