தேடித் தேடி இளைத்தேன்
Posted December 7, 2012
on:- In: (Auto)Biography | A. R. Rahman | Food | Humor | Uncategorized | Women
- 14 Comments
நான் இளையராஜாவின் முழு நேர ரசிகனாக இருந்தபோதும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் ஏ. ஆர். ரஹ்மானைத் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.
ஊரு சனமெல்லாம் தூங்கி, ஊதக்காத்து அடிச்சபிறகுதான், இந்தப் பாவி மனத்துக்கு எழுத வரும். அதற்குமுன்னால் ஏதோ பேருக்குக் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பேன். தூக்கத்தில் கண் செருகும், ஒரு வரிகூட உருப்படியாக அமையாது.
ஆனால், எங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் ஒருத்தர் பாக்கியில்லாமல் நித்திரையில் ஆழ்ந்தபின்னர், என்னுடைய தூக்கம் காணாமல் போய்விடும். பின்னணியில் ஏதாவது ஒரு பாட்டை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவேன். ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் நடுவே அவ்வப்போது ட்விட்டரில் கொஞ்சம் அரட்டையடித்தால், இன்னும் வேகமாக எழுதமுடியும்.
இப்படித் தினமும் ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் ஓட்டம், குறைந்தபட்சம் நள்ளிரவுவரை தொடரும். அதற்குமேல் அதிகாலை 1 மணி, 2 மணிவரை நிறுத்தாமல் எழுதிய நாள்களும் உண்டு. நண்பர்களோடு கூட்டணி சேர்ந்து, எல்லாரும் ராமுழுக்க எழுதிவிட்டுக் காலையில் சுருண்டு படுத்துத் தூங்கியதும் உண்டு.
என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள், புத்தகங்கள் இரவு நேரத்தில் எழுதப்பட்டவைதான். எந்தத் தொந்தரவோ இடையூறோ இல்லாமல் நிம்மதியாக வேலை ஓடும்.
இந்த ராக்கோழி உத்தியோகத்தில் ஒரே ஒரு பிரச்னை, மாதத்தில் எல்லா நாளும் இப்படி எழுதமுடியாது, உடம்பு கண்டபடி வெயிட் போட்டுவிடும்.
எழுத்துக்கும் உடல் பருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
பொதுவாக (எழுத்து வேலை இல்லாத மற்ற நாள்களில்) ராத்திரி எட்டரை மணிக்கு இரவு உணவை முடித்துக்கொண்டுவிடுவேன், அப்புறம் கொஞ்சம் இன்டர்நெட் மேய்ந்துவிட்டு ஒன்பதரை மணிக்குப் படுத்தால், காலைவரை பசி எடுக்காது.
ஆனால், எழுதும் நாள்களில், சரியாகப் பத்தரை மணிக்கு ஒருமுறை, பன்னிரண்டு மணிக்கு ஒருமுறை பசிக்கும். அப்போது வயிற்றுக்கு எதையாவது கொடுக்காவிட்டால், தூக்கம் வந்துவிடும்!
பொதுவாக இதுபோல் ராத்திரியில் நீண்ட நேரம் கண் விழிக்கிறவர்கள் தேநீர் அருந்துவார்கள். ஆனால் எனக்கு அந்த வாடையே ஆகாது. காபியும் அந்த நேரத்தில் சரிப்படாது. நொறுக்குத் தீனி வேண்டும்.
ஆக, இப்படிச் சேர்ந்தாற்போல் பத்து நாள் ’எழுதி’னால் போதும், உடம்பில் கண்டபடி கலோரிகள் குவிந்து எடை ஏறிவிடும். அப்புறம் இருபது நாள் ஒழுங்காக நேரத்துக்குத் தூங்கி, நடந்து, ஓடி, டயட் இருந்து அதைச் சரி செய்யவேண்டியிருக்கும்.
அது நிற்க. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல். அவரைப் பார்த்தால் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறவராகவும் தெரியவில்லை!
இப்படிதான், நேற்று இரவு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல், வயிற்றுக்குள் மணி அடித்தது. கம்ப்யூட்டரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையினுள் நுழைந்து தேட ஆரம்பித்தேன்.
நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.
அந்தக் கடலை, இப்போது எங்கே?
எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.
வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.
அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.
அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.
சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?
இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.
ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.
‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.
‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’
’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.
***
என். சொக்கன் …
07 12 2012
14 Responses to "தேடித் தேடி இளைத்தேன்"

//ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும் //
என்ன ஒரு உளவியல் பார்வை


Simply fantastic! ROFL
amas32


[…] என்.சொக்கனின் பதிவிலிருந்து ரசித்த ஒரு பகுதி உங்கள் […]


ஹஹஹா..செமத்தியா இருக்கு..:)


உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த’ – அப்புறம் ஏன் ‘ அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு’?

1 | இளங்கோ
December 7, 2012 at 12:44 pm
திக்குத் தெரியாத சமையலறையில்..அனுபவம் சுவையாயிருக்கு…