அர்த்தம் சேர்த்தல்
Posted December 9, 2012
on:- In: ஓசிப் பதிவு | கம்ப ராமாயணம் | கம்பர் | Blogs | Ilayaraja | Literature | Media | Music | Poetry | Reading
- 7 Comments
முதலில், ஒரு சிபாரிசு.
நண்பர் ’ரசனைக்காரன்’ (ட்விட்டரில் @nattanu) எழுதியிருக்கும் பதிவு ஒன்று, இளையராஜாவின் ஒரே ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதனை மிக விரிவாகப் பேசுகிறது. வரிக்கு வரி வெறித்தனமான ரசனை, கூடவே, பாடலின் தன்மைக்கு ஏற்ற அட்டகாசமான குறும்பு நடை. வாசிக்கத் தவறாதீர்கள்: http://kushionline.blogspot.in/2012/12/blog-post.html
அடுத்து, இந்தப் பதிவை முன்வைத்து நடந்த ஒரு விவாதம்.
இளையராஜா பாடல் வரிகளுக்கு ஏற்ற இசைக்கருவிகளைத் தேர்வு செய்கிறார் என்று குறிப்பிடவந்தார் நண்பர் @kryes. அதற்கு அவர் தந்த ஓர் உதாரணம் (Slightly Edited):
பனி விழும் மலர்வனம் பாட்டுல
- “காமன் கோயில் சிறைவாசம்”ன்னு வரும்போது, வீணைமட்டும் 3 விநாடிகள்; அவளை அவன் மீட்டுவதுபோல்…
- “காலை எழுந்தால் பரிகாசம்” ன்னு வரும் போது, புல்லாங்குழல்மட்டும் 3 விநாடிகள்; சிரித்தால் வாயில் வரும் காற்றுபோல்…
- “கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்”… மெல்லிய தபேலா அடிச்சி அடிச்சி, நமுட்டுச் சிரிப்பா/ நமுட்டு இசையா முடிச்சிருவாரு 🙂
இப்படி, வரியில் உள்ள உணர்ச்சிகளுக்கெல்லாம் பொருத்தமான வாத்தியங்களை ஒலிக்க வச்சி அழகு பார்க்க ராஜாவால் மட்டுமே முடியும்!
Raja’s microscopic strength is, his “Choice of Instruments”
இந்தப் பகுதியை ஜாலியாக கேலி செய்து நண்பர் @iamkarki இப்படிப் பதில் எழுதினார் (Slightly Edited):
இது ஓக்கே.. ஆனா, இதே மெட்டுக்கு ”சேலை மூடும் இளஞ்சோலை” வரும்போதும் அதே வீணைதான்.. அதே குழல்தான். ஆனா அந்த வரிக்கு இந்த இசைக்கருவிகள் பொருத்தமாக இல்லை.. ஏன்?
ராஜா ஏதோ போட்டுவச்சாரு. நீங்களா அதுக்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கிறீங்கன்னு கத்தறான் எனக்குள்ள இருக்கிற ஆரீசு செயராசின் ரசிகன் :))
இதுகுறித்த என்னுடைய கருத்துகளை அங்கே எழுதினேன். சிறிய மாற்றங்களுடன் இங்கேயும் அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.
முதலில், இளையராஜா ஏதோ யோசித்து இசையமைத்துவிட்டார், நாம் இப்போது அதற்கு விளக்கங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்பது உண்மைதான். அவர் இசையமைத்தபோது என்ன நினைத்தாரோ அதை அப்படியே நாமும் நினைத்துவிட்டால் அப்புறம் அவர்மட்டும் எப்படி இசைஞானியாக இருக்கமுடியும்? 🙂
ஆக, இளையராஜா இந்தக் காரணத்துக்காகதான் அங்கே வீணை மற்றும் புல்லாங்குழலைச் சேர்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. பாடல் வரிகள், காட்சி அமைப்பு, படத்தின் கதை என்று பலவற்றைச் சேர்த்துக் கேட்கிறபோது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவுதான்.
இது ராஜா பாட்டுகளுக்குமட்டுமல்ல, எல்லாப் பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும். எப்போதோ எழுதப்பட்ட குறுந்தொகை, புறநானூறு, நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்பர் பாடல்களுக்கு நாம் இப்போது யோசித்துப் புது விளக்கங்கள், சாத்தியங்களைச் சேர்க்கிறோம், அதனால் அவை நமக்கு (சில சமயங்களில் பிறர்க்கும்) மேலும் அழகாகத் தெரிகின்றன.
ஆக, அந்த இசையமைப்பாளரோ கவிஞரோ அதை நினைத்து எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட கூடுதல் interpretationகளுக்கு சாத்தியம் அளிக்கிற படைப்புகளாக அவை இருக்கின்றன. அவ்வளவுதான்.
சில நாள் முன்னால் ட்விட்டரில் ஒரு விவாதம். ‘முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும்’ என்கிற பஞ்சு அருணாசலத்தின் பாடலைக் குறிப்பிட்டு, ’அந்த ஒரு வரியில் வெள்ளைச் சோறுக்கு 3 உவமைகள் (முல்லைப் பூ, வெள்ளி, அன்னப் பறவை) உள்ளன’ என்று நான் எழுதினேன்.
பலர் இதனை ஏற்கவில்லை. ‘முல்லை, வெள்ளி இரண்டும் உவமைகள், அன்னம் என்பது ‘போல’வுக்குப் பின்னால் வருவதால் அது உவமை ஆகாது, தவிர, அது சாதத்தை நேரடியாகக் குறிக்கிறது’ என்றார்கள்.
அன்னம் என்பது சோற்றைக் குறிப்பிடும் இன்னொரு வார்த்தை. அதற்கு உவமை அல்ல. சரிதான்.
ஆனால், இங்கே அதே மெட்டுக்குப் பஞ்சு அருணாசலம் ‘முல்லை, வெள்ளி போல சோறு பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், ‘சாதம் பொங்கத்தான் வேணும்’ என்று எழுதியிருக்கலாம், பெருமளவு புழக்கத்தில் இல்லாத அன்னம் என்ற வார்த்தையை அவர் ஏன் அங்கே கொண்டுவருகிறார்?
அப்போது அவர் அதை யோசிக்காமல் போட்டிருக்கலாம், அல்லது, வார்த்தை அழகுக்காகப் போட்டிருக்கலாம், அன்னம் என்பது அன்னப்பறவையைக் குறிக்கும் என்று அவர் அப்போது யோசிக்காமலேகூட இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போது நாம் யோசிக்கும்போது, அன்னம் என்கிற வார்த்தை அங்கே அன்னப் பறவையை நினைவுபடுத்தி. அந்த வரியில் 3வது உவமை ஆகிவிடுகிறது. இல்லையா?
ஆக, பஞ்சு அருணாசலம் அதுபோல் நினைத்து எழுதினாரோ, இல்லையோ, அப்படிப்பட்ட ஒரு சிந்தனைக்கு இடமளிக்கும் படைப்பு அவருடையது. அது மேன்மையான ஒரு விஷயம். அம்மட்டே!
இப்படிப் படைப்பாளியோடு நாமும் கொஞ்சம் பங்கேற்று, நமது அனுபவங்கள், interpretationsஐ அதில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, எழுதியவருக்குப் பெருமையான விஷயம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துகளை Commentsல் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
09 12 2012
7 Responses to "அர்த்தம் சேர்த்தல்"

சம்ஸ்க்ருதத்திலே ஒன்று சொல்வார்கள்: ஒரு கவி ஒன்று நினைத்து எழுதினால், அதை ரசிகன் ஒன்பதாகப் புரிந்து கொள்வான் என்று.
நீங்கள் கூறியது போல அது அனைத்து பெரும் படைப்புகளுக்கும் பொருந்தும்.


Guess this is the post modernism Charu is speaking about. You losers realising it after 10 years.


தவறே இல்லை.. நல்ல விஷயம் தான்.
நான் சும்மா ஜாலிக்காக போட்டேன் 🙂


ஆனால், அப்படி நாம interpret செய்து கொள்ளும் போது அந்த பாட்டை சிலாகிக்கலாம். இப்படியொரு அனுபவம் நமக்கு தருகிறதே என சொல்லலாம். ஆனால் அது இசையமைப்பாளரின் திறமையென சொல்லும்போது லாஜிக் மிஸ் ஆகிறது
இவையல்லாமலும் ராஜாவின் அருமை தெரியாதா??? நான் பொதுவாக சொல்கிறேன்


the heroine’s name is annam..so முல்லை, வெள்ளி போல அன்னம் பொங்கத்தான் வேணும் means mullai velli pola annam manasum pongatum nu 😛

1 | @rmdeva
December 9, 2012 at 4:49 pm
எந்த கலைஞரும், பாடல் எழுதும் போதோ, இசை அமைக்கும் போதோ..அந்த நேரத்தில் என்ன தோன்றியதோ அதை வெளிப்படுத்தினார்கள். நாம் அதை பார்க்கும்போதோ அல்லது கேட்க்கும் போதோ நம்முடைய அந்த நேரத்தில் உள்ள மனநிலையுடன் அந்த கலையை சமந்தபடுத்தி பார்க்கின்றோம் அதில் ஒரு பரவசமும் ஆச்சரியம் இருக்கு.
சமந்தப்பட்ட கலைஞனின் எண்ணம், வேறு மாதிரி இருந்திருப்பதற்க்கான சாத்தியங்கள் அதிகம்.