ஒசந்த முல்லை
Posted December 27, 2012
on:- In: மருதகாசி | Download | eBook | Poetry
- 8 Comments
சில வருடங்கள் முன்னால் ’வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா’ என்று ஒரு ரீமிக்ஸ் பாட்டு வந்தது.
வழக்கம்போல் எனக்குப் பிடிக்கவில்லை, ‘கண்ணதாசன் வரிகள் இந்தக் காலத்துக்கும் பொருத்தமா அமைஞ்சதுதான் ஒரே சந்தோஷம்’ என்றேன்.
பழைய பாடல் பிரியராகிய நண்பர் ஒருவர், ‘அந்தப் பாட்டு கண்ணதாசன் இல்லையே’ என்றார்.
பல்ப் வாங்கிய கூச்சத்துடன், ‘அடடே, வாலியா?’ என்றேன்.
‘ஏன்ய்யா, பழைய பாட்டுல நல்ல பாட்டுன்னாலே கண்ணதாசன், வாலிதானா?’ என்று கோபித்தார் அவர். ‘இந்தப் பாட்டு எழுதினது மருதகாசி.’
நான் ஏற்கெனவே மருதகாசிபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதுண்டு. குறிப்பாக கலைவாணர் என் எஸ் கேவுக்கு அவர் எழுதிய ‘சிரிப்பு’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
மற்றபடி மருதகாசி எழுதியவை என்று குறிப்பாகக் கேட்டதில்லை. இந்த உரையாடலுக்குப்பிறகுதான் தேடிக் கேட்க / வாசிக்க ஆரம்பித்தேன்.
முதலில், நான் இதுவரை கண்ணதாசன் (அ) வாலி எழுதியது என்று நினைத்துக்கொண்டிருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் மருதகாசி எழுதியவை என்று புரிந்தது. உதாரணமாக, அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை லிஸ்ட் போடுகிறேன்
1. வசந்த முல்லை போலே வந்து
2. மாசிலா உண்மைக் காதலே
3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி
4. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
5. மணப்பாறை மாடு கட்டி
6. தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் (இந்தப் பாடலை எழுதியது ‘சுரதா’ என்று நண்பர் அபுல் கலாம் ஆசாத் தெரிவித்துள்ளார். இதை எப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை)
7. சித்தாடை கட்டிகிட்டு
8. அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்
9. மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா
10. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
11. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
12. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
இது ஒரு சின்ன சாம்பிள்தான். மருதகாசிக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்திருக்கிறது, என்னுடைய வாசிப்பில் எனக்குப் புரிந்தது: எளிய வார்த்தைகள், கிராமத்து மனம், அதில் பட்டணத்துக் கிண்டல்.
இவர் கண்ணதாசனுக்கு சீனியரா என்று தெரியவில்லை, ஆனால் அவரைப்போலவே இவரும் ஒரு வட்டத்துக்குள் சிக்கவில்லை, எல்லாவிதமாகவும் எழுதியுள்ளார், ஆங்காங்கே பட்டுக்கோட்டையார் சாயல். காதல் பாட்டு என்றால் நெகிழ்வும் உருக்கமும், அதே தத்துவப் பாட்டு என்றால் ஆழமான சிந்தனைகள், கிராமத்துப் பாட்டில் பாமர உதாரணங்கள் என்று seamless shift, எல்லா வகையிலும் கொடி கட்டிப் பறந்துள்ளார்.
எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:
1
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன்
குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே
2
மழையைப் பாடும் ஒரு பாட்டின் நடுவே,
‘கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே, அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைபோலே’
என்று மழைத்துளிக்கு உவமைகளை அடுக்குகிறார்
3
தென்றல் உறங்கியபோதும்,
திங்கள் உறங்கியபோதும், காதல்
கண்கள் உறங்கிடுமா?
4
’மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே’ என்று ஒரு பாட்டு (யார் எழுதியது?) கேட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட மருதகாசியின் பல்லவிதான் அது ‘மண்ணில் உலவும் நிலவே, என் வயிற்றில் உதித்த கனியே’ என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் எழுதினார் அவர்
5
வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்,
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்
6
காவிரியை முப்பெரும் தேவியருக்கு ஒப்பிடும் வரிகள்:
‘மலைமுடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!
அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!
சலசலக்கும் ஓசையிலே தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!’
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். மருதகாசியின் பாடல்களை (பெருமளவு) படித்தபிறகு, இவரது பாணி இன்றைய பிரபல கவிஞர்கள் பலருக்கு முன்னோடியாக இருந்திருப்பது புரிகிறது. பல 80களின் பாடல்கள் மருதகாசியின் வரிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருப்பதும் உண்டு. உதாரணம் சொல்ல விரும்பவில்லை 🙂
மருதகாசியின் பாடல் வரிகள் முழுவதும்(?) இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizhagam.net/nationalized%20books/A.Marudhakasi/TIRIISAIPADALGAL.pdf
***
என். சொக்கன் …
27 12 2012
8 Responses to "ஒசந்த முல்லை"

என்னமா ரிசெர்ச் பண்ணி எழுதறீங்க. அனுபவித்து படித்தேன் 🙂
ama32


I see a 365tamilquiz question in this 🙂


பழைய பாடல்களை நினைவுபடுத்துவதற்கு நன்றி. அருமையான பாடல்கள்


Eerikkaraiyin mele pooravalae pen mayilae

1 | Eswar (@w0ven)
December 27, 2012 at 2:03 pm
பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்?நன்றி