ஒரு நாயகன்
Posted January 9, 2013
on:- In: Bangalore | IT | Open Question | People
- 9 Comments
சில ஆண்டுகளுக்குமுன் எங்கள் அலுவலகத்தில் ஒரு புதியவர் சேர்ந்தார். அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர், இந்தியா திரும்பிச் சில ஆண்டுகள் ஆகின்றன. அவர் என்னைப் பார்த்ததும் முதல் வாக்கியமாக ‘உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா ?’ என்றார்.
‘ஏதோ, ஓரளவு தெரியும்’ என்றேன்.
‘பிரமாதம்’ என்றவர் சட்டென்று பையில் கைவிட்டு ஜுனியர் விகடன் சைஸுக்கு ஒரு பெரிய அழைப்பிதழை எடுத்தார், ‘இதை எனக்குப் படிச்சுச் சொல்லுங்களேன்!’
‘என்னது இது ?’
‘நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன்’ என்று வெட்கமாகச் சிரித்தார் அவர், ‘அந்தப் படத்தின் பூஜை இன்விடேஷன் இது.’
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்னதான் தமிழ் தெரியாதவர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடினாலும், நூறு சதவீதம் கணினித் துறைப் பார்ட்டியான இவரைத் தமிழ் சினிமாவோடு என்னால் பொருத்திப்பார்க்கமுடியவில்லை. அதை அவரிடம் சொல்லமுடியுமா? ‘அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என்றபடி அவர் கொடுத்த அழைப்பிதழைத் திறந்தேன். படத்தின் பெயர், இன்னபிற தகவல்களை அவருக்குப் படித்துக்காட்டினேன்.
எனக்கு நன்றி சொன்னவர், தொடர்ந்து புலம்பலும் எதிர்பார்ப்பும் கலந்து நிறைய பேசினார். அவரது நண்பர் தயாரிக்கிற படமாம் இது, ‘நடிக்க ஆர்வம் உண்டா?’, என்று இவரைக் கேட்டிருக்கிறார்கள். தயக்கத்துடன் சம்மதித்திருக்கிறார், இப்போதும் அவருக்கு எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை, ‘நிஜமாவே இப்படி ஒரு படம் எடுக்கறாங்களா சார்?’ என்று என்னிடம் கேட்டார்.
அதுமட்டுமில்லை. அந்த அழைப்பிதழில் இருந்த ஒவ்வொரு தமிழ் வார்த்தையையும் அவருக்கு நான் ஆங்கிலத்தில் படித்துக்காட்டச் சொன்னார் அவர். சாதாரணமாக இது ரொம்ப எரிச்சலூட்டுகிற விஷயம். ஆனால் அவருடைய குழந்தைக் குதூகலத்தைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. நிதானமாகப் படித்தேன்.
கூடவே கொசுறாக, அந்தந்த வாக்கியங்களில் குறிப்பிடப்படும் நபர்களை எனக்குத் தெரியுமா என்றும் சொல்லவேண்டும் என எதிர்பார்த்தார் அவர். உதாரணமாக, ‘இசை : குப்புசாமி’ என்று படிக்கிறேன் என்று வையுங்கள், உடனடியாக அவரிடமிருந்து வரும் கேள்விகள், ‘யார் சார் இந்த குப்பு சாமி ? நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா, நல்லா ம்யூசிக் பண்ணுவாரா ? இதுக்குமுன்னாடி எத்தனை படம் பண்ணியிருக்கார் ?’ இப்படியே, அழைப்பிதழ் முழுமைக்கும் என்னுடைய அபிப்ராயங்களைக் கேட்டறிந்தார் அவர்.
‘ஏதோ, அவர் கேட்டதால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி எனக்கு இது ஹாபிகூட கிடையாது!’ என்று அவர் அடிக்கடி சொன்னபோதும், அப்படி ஒரு படம் நிஜமாகவே எடுக்கிறார்களா, தன்னை நடிக்கவைப்பார்களா, இல்லை எல்லாமே புருடாவா என்று அறிந்துகொள்ள அவருக்குள் அத்தனை துடிப்பு. அவருக்குத் தெரியாத மொழிப் படம் என்பதால் அவரது குறுகுறுப்புகள் பல மடங்காகிவிட்டன, அதைப்பற்றிப் பேசும்போதெல்லாம், அவரது கண்கள் விரிய, அவருக்குள் தெரிந்த இந்தச் சிறுகுழந்தை ஆர்வத்தையும், அதேசமயம், அதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளமுடியாத வெட்கத்தையும் பார்க்கச் சுவாரஸ்யமாக இருந்தது.
நிறைவாக அந்த அழைப்பிதழை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு, ‘தமிழ்ல சினிமாத் துறை ஆரோக்கியமா இருக்கா? நீங்க என்ன நினைக்கறீங்க? இந்தப் படம் ஓடுமா?’ என்றார் அவர்.
ஆரம்பத்திலேயே ‘எனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது’ என்று சொல்லியிருக்கலாமோ என நினைத்துக்கொண்டேன்.
***
என். சொக்கன் …
09 01 2013
9 Responses to "ஒரு நாயகன்"

அந்தப் படம் உண்மையிலேயே வெளியானதா? உங்கள் அலுவலக நண்பரும் தலை காட்டினாரா?


தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் கேட்கவேண்டிய கேள்விகள்.


நயமாக முடிக்கப்பட்ட கட்டுரை 🙂


ரொம்ப பொறுமைசாலி .


நீங்க ஆரம்பத்திலேயே தெரியாதுன்னு
சொல்லிருந்திங்கன்னா எங்களுக்கு
இப்படி ஒரு சுவாரசியமான தகவல்
கிடைச்சுருக்காதே……..
சரி அந்த படம் எடுத்தாங்களா இல்லையா ?……

1 | ranjani135
January 9, 2013 at 3:22 pm
கடைசி வரிகள் புன்னகையை வரவழைத்தன!