பொங்கலைத் தேடி
Posted January 14, 2013
on:- In: Bangalore | Change | Food | Humor
- 4 Comments
முன்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு. 2002ம் ஆண்டு பொங்கல் நாளன்று ’அகத்தியர்’ மின்னஞ்சல் குழுவில் எழுதியது. சில இலக்கணப் பிழைகளை, வாக்கிய அமைப்புகளைமட்டும் திருத்தியுள்ளேன், மற்றபடி விஷயம் அரதப்பழசு.மீதி விவரம், பின்குறிப்பில்
இந்த முறையும் பண்டிகை நாளில் எ(பெ)ங்களூரில் மாட்டிக்கொண்டேன்!
காலை எழுந்தவுடன் ‘ஹேப்பி பொங்கல்’ என்று தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்தும் நண்பர்களுக்கு எந்த மொழியில் பதில் சொல்வதென்று யோசித்துக் குழம்பிப்போய், கிளம்பி அலுவலகம் வரும் வழியில் உடுப்பி கார்டன் ஹோட்டலில் நுழைந்து, ‘ஒந்து ப்ளேட் பொங்கல்’ என்றால் அவன் நரபட்சிணியைப்போல் என்னைப் பார்த்து, ‘பொங்கல் இல்லா’ என்றான் பல்லிளித்து. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஞாபகம் வந்தது.
‘ஏன் இல்லா?’ என்று ஒரு கலவை மொழியில் கேட்டேன்.
‘எல்லாம் தீர்ந்து போச்’ என்று கைவிரித்தான், பாவி!
ஏதோ கிடைத்ததைச் சாப்பிட்டு அலுவலகம் வந்தேன், எப்போதும்போல் முழுமூச்சாக வேலைசெய்தேன் (சரி, சரி!). என்றாலும், பொங்கல் திருநாளில் பொங்கல் சாப்பிடாத சோகம் எனக்குள் மெகாசீரியலின் கண்ணீரூற்றைப்போல ஊறிக்கொண்டே இருந்தது. மதியம் கிளம்பி கதம்பம் போனேன்.
‘கதம்பம்’ என்பது எங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஐயங்கார்வாள் ஹோட்டல். நின்று சாப்பிடுகிற ஹோட்டல் என்று பெயர்தான், ஆனால் நிற்க இடம் இருக்காது, மதிய வேளையில் கடுகைப் போட்டால்காணாமல்தான்போகும், பக்கத்தில் ஒரு பெண்கள் கல்லூரியும் ஒன்றிரண்டு வங்கிகளும் இருப்பதால், எப்போதும் பெருங்கூட்டம், பரபரப்பு, அசந்துமறந்தால் உங்கள் சப்பாத்திக்குப் பக்கத்திலிருக்கிறவர் தட்டுச் சட்னியைத்தான் தொட்டுச்சாப்பிட வேண்டியிருக்கும். அப்படியொரு நெரிசல்!
எந்நேரமும் அப்படிக் கூட்டம் சேர்க்கிறது என்றால், அங்கே சாப்பாடு எப்படி இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று வருடம்முழுக்கப் பொங்கல் கொண்டாடுகிற ஹோட்டல் அது, புளியோதரை, பிஸிபேளாபாத், வாங்கிபாத் என்று எதையெடுத்தாலும் யாரோ ‘தேவதை’ தொட்டுக்கொடுத்ததுபோல அப்படி இனிப்பாக இனித்துக் கிடக்கும், திகட்டிப்போகாத லேசான இனிப்பும், புளிப்பும், ருசிப்பும், காபி குடித்து நாலு மணி நேரமாகியும் நாக்கில் அப்படியே நிற்கும், அப்படியொரு ருசி! அதனால், எல்லாப் பண்டங்களும் மற்ற ஹோட்டல்களைவிட ஐந்து ரூபாய் அதிகம் விலை என்றாலும், வரிசையில் நின்று சாப்பிட்டுப்போகிறவர்கள் இருக்கிற ஹோட்டல்.
எதையோ சொல்லவந்து வழக்கம்போல உபகதைக்குள் போய்விட்டேன், எனக்குத்தெரிந்து மதிய வேளையில் பொங்கல் சாப்பிடமுடிகிற ஒரே ஹோட்டல் என்பதால் அந்தக் கதம்பத்தைத் தேடிப் போனேன், ஹோட்டலுக்குச் சற்று முன்பாகவே வண்டி நிறுத்துமிடம். வழக்கமாய் அந்த ஏரியாவில், சிறுபிள்ளைகள் குச்சியோட்டி விளையாடுகிற டயர் வண்டி நிறுத்தக்கூட இடமில்லாதபடிக்கு இருசக்கர வாகனங்களின் கூட்டம் மொய்க்கும், ஆனால் இன்றைக்கு இரண்டே இரண்டு சைக்கிள்கள் மட்டும்தான் நின்றிருந்தன. எப்போதும் அங்கே உட்கார்ந்து (அல்லது நின்று) சலிக்காமல் அரட்டையடிக்கிற ஜீன்ஸ் பதுமைகளையோ, அவர்களின் விநோத தலைக் காதலர்களையோ யாரையுமே காணோம்.
அப்போதே எனக்குச் சந்தேகம்தான், வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிப்போய்க் கதம்பம் வாசலைப்பார்த்தால், இழுத்து மூடிக்கிடக்கிறது. ஐந்தரை கிலோமீட்டர் வண்டியோட்டி வந்தது வீண்!
மீண்டும் வந்தவழியே திரும்பினேன், கண்ணில்பட்ட ஹோட்டல்களிலெல்லாம் வேண்டுதல்போல நின்று, சீதையைத் தேடுகிற ராமன் (சரி, அனுமன்)போல, ‘ஷுகர் பொங்கல் இருக்கா?’., ‘இல்லா’,
ராம ராஜ்யத்தில் ‘இல்லை’ என்ற சொல்லே இல்லை என்று சொல்வார்கள், இங்கே கர்நாடகத்தில் (எஸ். எம்.) கிருஷ்ண ராஜ்ஜியம்தானே, எங்கே போனாலும் ‘இல்லா’தான்!
நிறைவாக, அலுவலகத்துக்கு சற்று முன்பிருந்த ஒரு ஹோட்டலில் முயன்றேன், அங்கேயும் பொங்கல் இல்லா. தோல்வியின் சாயையை மறைத்து ”பரவா இல்லா, ஒரு மினிமீல்ஸ்’ என்றேன்.
பத்துநிமிடம் மேஜைமேலிருந்த ரோஜா நிஜமா, பொய்யா என்று சோதித்துப் பொறுமையிழந்தபோது, குறுமீல்ஸ் வந்தது. சாம்பார், ரசம், ஒரு செவ்வகக் கிண்ணத்தில் அப்பளத்தால் மூடப்பட்ட சாதம், பீட்ரூட் பொறியல், தயிர், மோர், ஒற்றை வடை, அட… அதென்ன மூலையில் ஸ்வீட்?
பொங்கல், பொங்கலேதான்!
‘தேடுவதை நிறுத்து, தேடியது கிடைக்கும்’ என்றார் விவேகானந்தர் (அவர்தானே? அவராகத்தான் இருக்கும்!, இதெல்லாம் அவர்தான் சொல்வார்!), அதுபோல மினிமீல்ஸிடம் சரணடைந்தபிறகு எனக்கு மணக்க மணக்க, முந்திரிப்பருப்பு, திராட்சையோடு பொங்கல் கிடைத்தது!
நிற்க. விஷயம் இன்னும் முடியவில்லை. இப்படியாகத் தவம் செய்து கிடைத்த பொங்கலை ஆசையாக ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டால், கடக்கென்று ஏதோ சத்தம் கேட்டது, பல்தான் உடைந்துவிட்டதோ என்கிற சந்தேகத்தில் அவசரமாகப் பக்கத்திலிருந்த மண்தொட்டியில் வாயிலிருந்த முழுமையையும் துப்பினேன். பிறகு உற்று கவனித்தால், வட்டமாக ஒரு நாலணாக் காசு!
சாப்பாட்டில் கரித்துண்டு (‘றி’ இல்லை, அது வேறே அர்த்தமாக்கும்) கிடந்தால் கல்யாண விருந்து கிடைக்கும் என்று சொல்வார்கள், நாலணா காசு கிடந்தால் என்ன கிடைக்கும்? பலன் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டுகிறேன்.
கடைசியில் மீதி பொங்கலை என்ன செய்தாய் என்று அங்கே யாரோ கேட்கிறார்கள். போங்க சார், இதையெல்லாம் விசாரிச்சுகிட்டு… ஹி ஹி ஹி!
***
பின்குறிப்பு:
தற்போது பெங்களூருவில் எஸ். எம். கிருஷ்ணா ராஜ்ஜியம் இல்லை, நாலணாக் காசு இல்லை, உடுப்பி கார்டன் ஹோட்டல் இல்லை, கதம்பம் ஹோட்டல்கூட இல்லை. ஜஸ்ட் 11 வருடங்களில் இத்தனை மாற்றங்களா?!
***
என். சொக்கன் …
14 01 2013
4 Responses to "பொங்கலைத் தேடி"

நண்பரே எப்படி சாதாரணமான ஒரு விசயத்தை இவ்வளவு சுவையுடனும் அதனை படிப்பவர்களுக்கு தாங்களுக்கு ஏற்பட்ட உணர்வையும் தருகிறீர்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்


அன்பின் சொக்கன்: ஆண்டு பல ஆயினும் மறக்கமுடியாத
சுவையான பொங்கல் கதை. இனிய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள். இன்னும் பிஸிபேளேஹுளி
பழகவில்லையா?
சர்க்கரைப் பொங்கல் உண்ட பகல் வேளை மயக்கத்தில்,
லாஸ் ஏஞ்சலஸிலிருந்து,
சுவாமிநாதன்

1 | PVR
January 14, 2013 at 2:58 pm
‘ஏன் இப்பல்லாம் இது மாதிரி எழுத மாட்டேங்கறீங்க’ன்னு கேக்க ஆசையாயிருக்கு. ஆனா அது அனர்த்தமாயிடுமோன்னு பயமாவும் இருக்கு. 😉