அழுகக்கூடாது
Posted January 19, 2013
on:- In: Grammar | Kids | Learning | Play
- 10 Comments
காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.
‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.
‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.
நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.
‘சொல்லு.’
’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’
நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.
’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’
’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’
‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’
’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’
‘அப்புறம்?’
‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’
‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’
‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’
‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’
‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’
***
என். சொக்கன் …
19 01 2013
10 Responses to "அழுகக்கூடாது"

ஒரு சின்ன சண்டையிலும் கதை பிறக்கும். கதை கதையாம் காரணமாம்!


nice story


Nangai learnt it this young? I learnt it only when I was in MCA, until then, I always used the phrase “azhuga”!


இன்னும் சிலர் எனக்கு அழுகாச்சியா வருது என்பார்கள் 🙂 குழந்தை வளர்ப்பு ஒரு கலை. அதில் முனைவர் பட்டம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள் 🙂
amas32


செம! நானும் ‘அழுக’ன்னுதான் சொல்வேன். மாத்தணும் 🙂

1 | சித்ரன் ரகுநாத்
January 19, 2013 at 12:48 pm
”எனக்கு இந்த பெர்சனல் லோன் என்னோட பேங்க் ’மூலியமா’ கெடச்சது” ஒரு நண்பர் நேற்று சொன்னார். மூலம் அவருக்கு பிடிக்காதோ என்னவோ!. அவருக்குச் சொல்ல ஒரு கதை சொல்லுங்களேன்.