படி, தோய், பொழி, நனை
Posted January 30, 2013
on:- In: இலக்கணம் | Learning | Poetry | Question And Answer | Tamil
- 5 Comments
பெரிய புராணத்திலிருந்து ஒரு வரி : (சிவபெருமான்) பொன்னி நீர் படிந்து வந்தாரோ? கங்கை நீர் தோய்ந்துவந்தாரோ?
காவிரியைக் குறிப்பிடும் ‘பொன்னி’க்கு மோனையாகப் ’படிந்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் சரி, கங்கைக்கு ஏன் ‘தோய்ந்து’?
சிவன் குளித்தார் என்பதுதான் இந்தப் பாட்டின் செய்தி. அவர் குளித்தது காவிரியிலா, அல்லது கங்கையிலா என்பது கேள்வி
காவிரி என்பது நிலத்தில் ஓடும் ஒரு நதி, சிவன் அதில் படிந்து குளிக்கவேண்டும்
ஆனால் கங்கை அப்படியில்லை, அவருடைய தலையிலேயே அந்த நதி இருக்கிறது, அவர் நின்றவாறு அதில் தோய்ந்து குளிக்கலாம், படியவேண்டாம்.
ஆக, படிதல், தோய்தல் என்ற சொற்களுக்கு இடையே இப்படி ஒரு நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது, சிவன் விஷயத்தில் அதை மிகச் சரியாக உணர்ந்து பயன்படுத்துகிறார் சேக்கிழார். சும்மா ஒரே வார்த்தை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக Randomஆக எழுதியது அல்ல.
ஒரு மொழியில் நல்ல சொல்வளம்(Vocabulary)மட்டும் இருந்தால் போதாது, அதை எங்கே எப்படிப் பொருத்தமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஞானமும் தேவை, அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப் பாட்டு.
இவைதவிர, இதேபாட்டில் மூன்றாவதாக ஒரு வாக்கியத்தையையும் சேக்கிழார் பயன்படுத்துகிறார், ‘வான நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து…’
படிதல், தோய்தல் ஆச்சு, இப்போது (வானத்திலிருந்து மழை) பொழிதல், (அதில் இவர்) நனைதல் என்று 4 வெவ்வேறு Verbs, வெவ்வேறு அர்த்தம். எனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்கிறேன்:
- படிதல் : ஒன்றன்மீது ஒன்று சென்று படிதல், still they are 2 different things, உதா: ஓவியத்தின்மீது தூசு படிந்துள்ளது
- தோய்தல் : ஒன்று இன்னொன்றில் கலந்து இரண்டறத் தோய்தல், உதா: அவர் கம்ப ராமாயணத்தில் தோய்ந்தவர்
- பொழிதல் : ஒன்று இன்னொன்றின்மீது பெரும் எண்ணிக்கையில் விழுதல், உதா: மழை பூமியில் பொழிகிறது
- நனைதல் : ஒன்று பொழிவதால் இன்னொன்று நனைதல், உதா: மழையில் வெள்ளாடு நனைகிறது
இந்த வரையறைகள் சரிதானா? இதன் அடிப்படையில், கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா என்று பாருங்கள்:
- இளைய நிலா பொழிகிறது
- இதயம்வரை நனைகிறது
- நிலவொளி பூமியில் படிகிறது? தோய்கிறது?
- வியர்வையில் தோய்ந்த கைக்குட்டை
- அடியாத மாடு படியாது
- அமுதைப் பொழியும் நிலவே
- வெள்ளத்தில் நனைந்தேன்
- மழையில் நனைந்தேன்
- இசையில் தோய்ந்தேன்
- பக்தியில் தோய்ந்தேன்
- நிழல் படிந்தது
- உப்புப் படிவம்
***
என். சொக்கன் …
30 01 2013
5 Responses to "படி, தோய், பொழி, நனை"

இலங்கைத் தமிழில் தலைக் குளிப்பதை தோய்தல் என்றே சொல்வார்கள். உங்கள் விளக்கம் அதற்கு சரியாக பொறுந்துகிறது..


மழை நீர் பொழிந்து நனைந்திருந்த தூசு படிந்த கூந்தலை தோய்தல் மூலம் சுத்தப்படுத்தினாள்


ஒரு மொழியில் நல்ல சொல்வளம்(Vocabulary)மட்டும் இருந்தால் போதாது, அதை எங்கே எப்படிப் பொருத்தமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிற ஞானமும் தேவை,//
நல்ல விளக்கம்!

1 | baskaran
January 30, 2013 at 3:05 pm
சேக்கிழார் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடினார் என்பார்கள்.நீங்கள் கவிதையில் படிந்து, தோய்ந்து, நனைந்து பொழிந்திருக்கிறீர்கள்.நன்றி.