மனம் போன போக்கில்

Archive for February 2013

‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்தி சூடி’ என்ற குறிப்புடன், கவிஞர் சிற்பி குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் நவீன ஆத்தி சூடி நூலைக் ‘கோலம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (28 பக்கங்கள், விலை ரூ 10)

அகரவரிசையில் இந்தக் கால விஷயங்களைச் சுருக்கமாகப் புரியும்படி எழுதியிருப்பது நன்கு மனத்தில் பதிகிறது. சட்டென்று கவனத்தில் தோன்றுகிற உதாரணங்கள் : நொறுக்குணவு தவிர், கணிப்பொறி பழகு, காடுகள் போற்று, மந்தைத்தனம் ஒழி, யுகமாற்றம் நாடு!

இந்த வரிசையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய விஷயம், நாம் பொதுவாக அதிகம் பயன்படுத்தாத ஞகரத்தில் அவர் தந்திருக்கிற வரிகள்தாம்.

  • ஞண்டெனப் பற்று (ஞண்டு : நண்டு)
  • ஞாலத்து இசை பெறு (ஞாலம் : உலகம்)
  • ஞிமிரெனப் பாடு (ஞிமிர் : வண்டு)
  • ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க : இறுக்கமாக)
  • ஞேயம் நாட்டில் வை (ஞேயம் : அன்பு)

ஞகரத்தில் இத்தனை வார்த்தைகள் உள்ளன என்று இதைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஆர்வத்தில், ஆத்தி சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும் ஞகரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்று தேடிப் பார்த்தேன். (பாரதிதாசனும் ஆத்தி சூடி எழுதியிருப்பதாக முன்னுரையில் சிற்பி சொல்கிறார். ஆனால் என்னிடமுள்ள பாரதிதாசன் கவிதைகள் (முழுத்?)தொகுப்பில் ஆத்தி சூடி எதுவும் இல்லை!)

ஔவையாரின் ஆத்தி சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.

  • ஞயம்பட உரை (ஞயம்பட : கனிவானமுறையில்)

ஔவையுடன் ஒப்பிடுகையில், பாரதியார் ஞகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது ‘புதிய ஆத்தி சூடி’யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.

  • ஞமலிபோல் வாழேல் (ஞமலி : நாய்)
  • ஞாயிறு போற்று (ஞாயிறு : சூரியன்)
  • ஞிமிறென இன்புறு (ஞிமிறு : வண்டு … சிற்பியின் நூலில் வரும் ‘ஞிமிர்’ என்பது, அச்சுப்பிழையாக இருக்குமோ?)
  • ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் : அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், நெகிழ்தல், இன்னும் நிறைய அர்த்தங்கள் வருகிறது … பாரதி சொல்லும் அர்த்தம் என்ன?)
  • ஞேயம் காத்தல் செய் (ஞேயம் : அன்பு)

மேலும் ஞகரம் தேடுகிற ஆசையோடு, கழக அகராதியை (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) அணுகினேன். நிறைய சுவாரஸ்யமான வார்த்தைகள் தட்டுப்பட்டன. (இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றைக் குழந்தைகளால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும் என்பது வேறு விஷயம் 😉 )

  • ஞஞ்ஞை : மயக்கம் (இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்துவிடும்!)
  • ஞத்துவம் : அறியும் தன்மை
  • ஞலவல் : மின்மினிப் பூச்சி / கொக்கு
  • ஞறா : மயிலின் குரல்
  • ஞாஞ்சில் : கலப்பை / நாஞ்சில்
  • ஞாடு : நாட்டுப் பகுதி (இப்படிப் பல வார்த்தைகளில், ‘ஞ’கரத்தைத் தூக்கிவிட்டு, ‘ந’கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது!)
  • ஞாதி : சுற்றம் (நாதி?)
  • ஞாயிறுதிரும்பி : சூரிய காந்தி (வாவ்!)
  • ஞாய் : தாய்
  • ஞெகிழ் : தீ
  • ஞெள்ளை : நாய்
  • ஞேயா : பெருமருந்து
  • ஞொள்கு : இளை, அஞ்சு, சோம்பு, அலை

இனிமேல், ‘ஞாயிறு’, ‘ஞானம்’, ‘ஞாபகம்’ ஆகிய பொதுவான வார்த்தைகளைமட்டுமின்றி, மற்ற ஞகர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும்!

(மீள் பதிவு From September 2005, With Few Corrections : Originally Published @ http://www.tamiloviam.com/unicode/09080503.asp)

இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’

’என்னது?’

’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’

‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’

’நாளைக்கு!’

‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’

‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’

’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’

அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.

ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?

மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.

’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’

‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’

‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’

ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.

’எதுப்பா?’

‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’

அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.

முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.

’ஏன் அப்படி?’

’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’

‘ம்ஹூம், மாட்டாங்க!’

‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’

நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.

’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’

‘ம்ஹூம், இல்லை!’

’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’

‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’

‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’

‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’

‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’

நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’

‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.

பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.

‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’

‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’

’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’

‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’

பின்குறிப்பு:

இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>

photo

***

என். சொக்கன் …

25 02 2013

Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂

முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>

வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.

தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’

இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.

நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.

அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.

தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?

நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.

அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.

பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.

ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.

ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.

இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!

இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html

***

என். சொக்கன் …

25 02 2013

ஏதோ சானலில் ‘அபூர்வ சகோதரர்கள்’. அப்பு, ராஜா என்கிற இருவேறுபட்ட கதாபாத்திரங்களில் கமல் வித்தியாசம் காட்டியதை எல்லாரும் பாராட்டிவிட்டோம். அதற்குச் சமமாக, இன்னொருவரையும் பாராட்டவேண்டியிருக்கிறது.

எஸ். பி. பாலசுப்ரமணியத்தைதான் சொல்கிறேன்.

இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் (’ராஜா கைய வெச்சா’ உள்பட) SPBதான் பாடியுள்ளார். அதில் அப்புவுக்கு இரண்டு, ராஜாவுக்கு மூன்று, அதே குரல்தான் என்றாலும், இந்த இரண்டைப்போல் அந்த மூன்று இருக்காது, ஏதோ நுணுக்கமானதொரு மாற்றத்தைக் காட்டிவிடுகிறார்.

சந்தேகமிருந்தால் ‘புது மாப்பிள்ளைக்கு’, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேளுங்கள். இரண்டுமே காதல் / டூயட் பாட்டுகள்தாம். ஆனால் ஒருவரே பாடியது என்பதை ஒரு புதியவர் நம்புவதுகூடச் சிரமம், ஏதோ நாம் SPBயைப் பல பத்தாண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருப்பதால் we take such things for granted 🙂

அது நிற்க. இப்போது நான் எழுத வந்தது ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ பாடலைப்பற்றி.

படத்தில் இந்தப் பாடல் வருவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, ஒரு கதாபாத்திரம் கொலை செய்யப்படுகிறது, அதுவும் அம்பினால் குத்தப்பட்டு.

இதையடுத்து வருக்கிற காதல் பாட்டில் வாலி எழுதியுள்ள ஒரு வரி, ‘அம்பு விட்ட காமனுக்கும் ஜே!’

இந்த ஒற்றுமை எதேச்சையாக அமைந்த விஷயமா? அல்லது, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட குறும்பா?

நான் இதனை coincidence என நம்பவில்லை. காரணம், பின்னர் இன்னொரு கதாபாத்திரம் புலியால் தாக்கப்பட்டுக் கொலையாகிறபோது, அடுத்து வரும் பாடலில் இதே நாயகன் புலி வேஷம் போடுகிறான், இதே வாலி ‘நியாயம் இல்லாத பொல்லாரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்” என்று எழுதுகிறார்.

அப்படியானால், இந்த ‘அம்பு விட்ட காமன்’ என்பதுகூட, கதையை நமக்கு நினைவுபடுத்தும் Easter Eggதானா? ஒரு காதல் பாட்டுக்கு நடுவே இதை நுழைக்கவேண்டும் என்று யாருக்கு, எப்படித் தோன்றியது? வாலிக்கு இயக்குனரோ இளையராஜாவோ கதை சொல்லும்போது, முந்தின காட்சியில் அம்பு விட்டு ஒரு கொலை நடக்கிறது என்று சொல்லியிருப்பார்களா? அதற்கு அவசியமே இல்லையே, ‘சும்மா ஒரு டூயட் பாட்டுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதுமே, இத்தனை விவரங்களைச் சொல்வது அவசியமா? அதனால் இப்படி ஒரு ‘புத்திசாலித்தனமான’ வரி கிடைக்கும் என்று யாரோ எதிர்பார்த்தார்களா? ’இதையெல்லாம் எத்தனை பேர் கவனிக்கப்போகிறார்கள்?’ என்கிற அலட்சியத்தில் ‘3 டூயட், 1 குத்துப் பாட்டு, 1 சோகப்பாட்டு’ என்று கவிஞரை நுனிப்புல் மேயச்சொல்லாத குணம் இன்னும் இருக்கிறதா?

’ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதினால், அந்தக் கதையோடு அவருக்கு முழு ஈடுபாடு வரும், அது பாடல் வரிகளின் தரத்தில் பிரதிபலிக்கும்’ என்கிற அர்த்தத்தில் வைரமுத்து அடிக்கடி பேசியிருக்கிறார். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.

***

என். சொக்கன் …

20 02 2013

போரடிக்கும்போது ஷெல்ஃபிலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. இன்றைக்கு அப்படிச் சிக்கியது, சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை.

மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தைப்பற்றிப் பாடும் இளங்கோவடிகள், அவள் ஆடிய மேடை எப்படி இருந்தது என்று மிக விரிவாகப் பேசுகிறார். அதில் ஒரு வரி:

ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்,

கரந்துவரல் எழினியும்…

’எழினி’ என்ற பெயரில் சில பழைய அரசர்கள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அபூர்வமாகச் சிலர் அந்தப் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதாக அறிகிறேன். ஆனால் இந்த வரிகளைப் படித்தபோதுதான் ‘எழினி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தேடத் தோன்றியது.

தமிழில் ‘எழினி’ என்றால் திரை அல்லது திரைச்சீலை என்று அர்த்தமாம். இந்தப் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டும்போதும்கூட, ‘திரை போன்றவன்’, ‘திரை போன்றவள்’ என்றுதான் பொருளாம்.

இளங்கோவடிகள் வர்ணிக்கும் மாதவியின் நாட்டிய அரங்கில் மூன்றுவிதமான திரைகள் கட்டப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இயங்குகிறவை:

  • ஒருமுக எழினி : அரங்கத்தின் இடதுபக்கத்தில் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும், இதோடு இணைக்கப்பட்டுள்ள கயிறை இழுத்தால் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் சென்று முழுவதுமாக மூடிவிடும், அல்லது திறந்துவிடும்
  • பொருமுக எழினி : அரங்கத்தின் இருபுறமும் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும். இவற்றோடு இணைக்கப்பட்டுள்ள கயிறுகளை இழுத்தால், ஒவ்வொன்றும் அரங்கின் ஒரு பாதியை மூடும் (அதாவது, அரங்கத்தின் மையத்தில் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும், பின்னர் எதிர்த் திசையில் பிரிந்து வரும்)
  • கரந்துவரல் எழினி : மேடைக்குமேலே சுருட்டிக் கட்டப்பட்டிருக்கும். கயிறை இழுத்தால் கீழே வந்து அரங்கை மூடும், அல்லது திறக்கும்

இந்த மூன்று வகைத் திரைகளையும் நாம் இப்போதும் பார்க்கிறோம், சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோதே இவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

குறிப்பாக, ‘கரந்துவரல் எழினி’ என்ற பெயர் மிக மிக அழகானது, பொருத்தமானது.

தமிழில் ‘கரத்தல்’ என்றால் மறைத்தல் அல்லது ஒளித்துவைத்தல் என்று அர்த்தம். ‘கரந்து’ என்றால் ‘ஒளிந்து’, ‘உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இறைவனைப் பாடுவார் நம்மாழ்வார்.

ஆக, ‘கரந்து வரல்’ என்றால் என்ன அர்த்தம்? ஒளிந்திருந்து திடீர் என்று நம்முன்னே வந்து தோன்றுதல். இல்லையா?

ஒரு மேடையில் மேலே இருந்து கீழே வரும் திரை அதைத்தானே செய்கிறது? நிகழ்ச்சி நடக்கும்வரை அப்படி ஒரு திரை இருப்பதே நம் கண்ணில் படுவதில்லை, சட்டென்று எங்கிருந்தோ ஒரு திரை கீழே வருகிறது, அரங்கை மூடிவிடுகிறது.

பின்னர், அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன், திரை மீண்டும் சுருண்டு மேலே செல்கிறது, ஒளிந்துகொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு திரைக்குக் ‘கரந்து வரல் எழினி’ என்ற பெயர் எத்துணைப் பொருத்தம்!

***

என். சொக்கன் …

15 02 2013

டிவியில் ’பொம்மீஸ் நைட்டி’ என்ற ஒரு விளம்பரம் அடிக்கடி வரும். பார்த்திருக்கிறீர்களா?

அந்த விளம்பரத்தில் ஒரு விநோதமான வசனம், தேவயானியின் டப்பிங் கலைஞர் அதை உணர்ச்சிமயமாக இழுத்துப் பேசியிருப்பார், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்கு மனைவிங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்.’

’மனைவி’ என்பது கௌரவப் பதவியா? அப்படியே எடுத்துக்கொண்டாலும்கூட, அதை ஒருவர் மெனக்கெட்டுத் தட்டில் வைத்துத் தரவேண்டுமா? கல்யாணம் முடிந்த மறுகணம் அந்தப் பதவி கிடைத்துவிடுமல்லவா?

சரி, தாலி கட்டுவதன்மூலம் கணவர்தான் மனைவிக்கு அந்தப் பதவியைத் தருகிறார் என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணுக்குக் ‘கணவர்’ என்கிற ஒரு கௌரவப் பதவியைத் தருகிறார் அல்லவா? பொம்மீஸ் நிறுவனம் நாளைக்கே லுங்கிகளைத் தயாரித்தால் ‘என்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டு, எனக்குக் கணவன்ங்கற கௌரவத்தையும் கொடுத்தார் அவர்’ என்கிற வசனத்துடன் விளம்பரம் வெளியிடுமா?

நிற்க. இது சத்தியமாகப் பெண்ணியப் பதிவு அல்ல. மேட்டர் வேறு.

பொம்மீஸ் நைட்டீஸ் விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு இந்த வசனம்பற்றிய லேசான குழப்பம் இருக்கும், அதைத் தெளிவாக்குவதற்காக, இன்று ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

என்னுடைய நண்பர் ஒருவர், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவருடைய Boss உடன் சேர்ந்து ஒரு பைப் உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.

அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்தால், என் நண்பர், அவருடைய Boss, இருவர் பெயரும் புகைப்படமும் இருக்கும், மேலே உச்சியில் ‘CoFounders’ என்று போட்டிருக்கும்.

இப்போது ஒரு கேள்வி, CoFounder என்றால் என்ன? பத்து வரிகளுக்கு மிகாமல் விளக்குக.

ஒரு நிறுவனத்தை ஒரே நபர் தொடங்கினால், அவர் Founder, நிறுவனர். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடங்கினால், ஒவ்வொருவரும் CoFounder எனப்படுவர். தமிழில் ‘சக நிறுவனர்’, ‘இணை நிறுவனர்’?

ஆக, நிறுவனத்தைத் தொடங்கிய அந்தக் கணத்தில் என்னுடைய நண்பர், அவருடைய Boss இருவருமே CoFounders ஆகிவிட்டார்கள். இல்லையா?

ஆனால் ஒரு வித்தியாசம், என் நண்பர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது 5%மட்டும்தான், மீதமுள்ள 95% அவருடைய Boss முதலீடு செய்திருக்கிறார்.

ஆக, அவர்கள் இருவருமே CoFounders என இருப்பினும், ஒருவர் ஆங்கில CoFounder, இன்னொருவர் தமிழ் ‘கோ’Founder, அதாவது, ராஜா!

இந்த வித்தியாசம் நண்பருக்கு நேற்றுவரை தெரியவில்லை. இன்று காலை தெரிந்துகொண்டார்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களுடைய தொழிற்சாலையைப் பார்வையிட வந்திருக்கிறார்கள். நண்பருடைய பாஸ் அவர்களுக்கு எல்லா இயந்திரங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு, இவருடைய அறைக்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார், ‘This is Mr. _____, I used to work with him, later when I started this company, I decided to make him my CoFounder.’

ஆக, ’கம்பெனி ஆரம்பித்த கணத்தில் அவர்கள் இருவரும் CoFounders ஆகிவிடுகிறார்கள், ஒருவர் இன்னொருவருக்கு CoFounder பட்டத்தைத் தரமுடியாது’ என்பதெல்லாம் வெறும் Dictionary Definitions. எதார்த்தத்தில், இது இன்னும் முதலாளி : தொழிலாளி உறவுதான், அதனால்தான் CoFounder என்ற கௌரவம்(?) ஒருவரால் இன்னொருவருக்குத் ‘தரப்படுகிறது’.

இந்தக் கதையைக் கேட்டபிறகு, பொம்மீஸ் நைட்டி விளம்பர வசனம் எனக்குப் ‘புரிகிறது’.

***

என். சொக்கன் …

11 02 2013

பெங்களூருவில் எல்லாப் பூங்காக்களிலும், ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஐஸ் க்ரீம் வண்டிகள் காத்திருக்கும். உள்ளே விளையாடிக் களைத்துத் திரும்பும் குழந்தைகளுக்காகவும், காதலாடிக் களித்துத் திரும்பும் இளைஞர்களுக்காகவும்.

ஐஸ் க்ரீம் வண்டிகளுக்குப் பக்கத்தில், இளநீர் விற்பார்கள், பொம்மைகள் கிடைக்கும், பூ விற்பனையும் நடக்கும், அதிர்ஷ்டமிருந்தால் பிங்க் நிறத்தில் பஞ்சுமிட்டாய்கூடக் கிடைப்பதுண்டு.

இந்த வரிசையில் நேற்றைக்கு ஒரு புது வரவு, கூடையொன்றில் உரச் சாக்குக்குள் எதையோ குவித்துவைத்துப் படியால் அளந்து விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். எட்டிப்பார்த்தால், அட! கார்ன் ஃப்ளேக்ஸ்.

’பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்றது’ என்று விளம்பரம் செய்யாதகுறையாக கெல்லாக்ஸ் தொடங்கி பிக் பஸார்வரை எல்லாரும் கார்ன் ஃப்ளேக்ஸ் விற்கிறார்கள். நேரம் மிச்சம், டயட்டுக்கும் ஆகும் என்று ஜனமும் அதைக் கிலோ கணக்கில் வாங்கிப் பாலில் தோய்த்துத் தின்கிறது.

இதைப் பார்த்த யாருக்கோ, கார்ன் ஃப்ளேக்ஸைக் குடிசைத் தொழிலாகத் தயாரித்து விற்கிற யோசனை வந்திருக்கிறது. நெல்லிக்காய் வியாபாரம்போல் கூடையும் படியுமாகப் புறப்பட்டுவிட்டார்கள். பலே!

ஆனால், மேற்கத்திய உணவு வகையாக அறியப்படும் கார்ன் ஃப்ளேக்ஸைப் பார்க் வாசலில் படியால் அளந்து விற்கமுடியுமா என்ன? ஆவலுடன் அவரைக் கவனித்தபடி நடந்தேன்.

அடுத்த பத்து நிமிடங்களில், அவர் ஏழெட்டுப் படி கார்ன் ஃப்ளேக்ஸ் விற்றுவிட்டார். வாங்கிய எல்லாரும் ஜீன்ஸ் / சுரிதார் தரித்த இளைஞர்கள்.

அவர்களுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் ஏற்கெனவே பரிச்சயமானது, பிளாட்ஃபார்ம் வியாபாரமாகப் பார்ப்பதில் ஆச்சர்யம், ஆனால் வாங்குவதற்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. ‘ஒரு முறை வாங்கிப் பார்ப்போம், சரிப்படாவிட்டால் கெல்லாக்ஸுக்குத் திரும்பிவிடுவோம்’ என்று யோசித்திருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, ஒரு முதிய பெண்மணி வந்தார். இவருடைய கூடையைக் கவனித்து, ‘என்னய்யா இது?’ என்றார்.

‘கார்ன் ஃப்ளேக்ஸ்ம்மா’ என்றார் வியாபாரி, ‘படி இருவது ரூவாதான், வேணுமா?’

அவர் சற்றே யோசித்தார், ‘கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னா என்ன?’ என்றார்.

வியாபாரிக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் தயங்கி, ‘இட்லி, தோசைக்குப் பதிலா இதைப் பால்ல போட்டுச் சாப்பிடலாம்’ என்று பதில் சொன்னார்.

அந்தப் பெண்மணி முகம் சுளித்தார். ’இட்லி, தோசைக்கு இணையாக இந்த அற்ப சமாசாரத்தை முன்வைப்பதா’ என்று அவரது சிந்தனை ஓடுவதாக ஊகித்தேன்.

நான் நினைத்தபடி, அவர் அதை வாங்க விரும்பவில்லை. தலையை அசைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

வியாபாரிக்கு ஏமாற்றம். இளவட்டங்களின் பேராதரவைப் பெற்ற தன்னுடைய பொருளுக்கு இப்படி ஒரு முதிய சவால் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு கார்ன் ஃப்ளேக்ஸை எப்படிப் புரியவைப்பது?

சிறிது நேரம் கழித்து, இன்னொரு முதியவர் வந்தார். கூடையைக் குனிந்து பார்த்து, ‘என்னது இது?’ என்றார் அந்த அம்மணியின் ஜெராக்ஸ் பிரதிபோல்.

வியாபாரி சற்றும் யோசிக்காமல், ‘அவல்ங்க’ என்றார்.

‘அவலா? மஞ்சக் கலர்ல இருக்குது?’

‘அரிசிய அவல் செஞ்சா வெள்ளக் கலர்ல இருக்கும், நாங்க புதுசா சோளத்துல செஞ்சிருக்கோம், அதான் மஞ்சக் கலர்’ என்றார் வியாபாரி. ‘படி இருவது ரூவாதான், கொஞ்சம் ருசிச்சுப் பாருங்க’ என்று அள்ளிக் கொடுத்தார்.

முதியவர் மெதுவாக மென்றார். ‘நல்லாருக்கு, ரெண்டு படி போடு!’ என்றார்.

***

என். சொக்கன் …

08 02 2013

இந்த வலைப்பதிவில் அவ்வப்போது என் மனைவியார், மகள்களைப்பற்றி எழுதுவதுண்டு. லேசாகக் கற்பனை மசாலா தூவிய உண்மைப் பதிவுகள்தாம் அவை. என்றாலும், பொதுவில் சொல்கிறோமில்லையா, ஆகவே, பப்ளிஷ் செய்த மறுகணம் அவர்களுக்குப் படித்துக் காட்டிவிடுவேன். அவ்வப்போது அவர்கள் முகத்தில் லேசாகப் புன்முறுவல் தோன்றினால் அந்தப் பதிவு ’பாஸ்’ என்று அர்த்தம்.

அதேசமயம் இப்படி நான் அவர்களைப்பற்றி அடிக்கடி கிண்டல் பதிவுகளை எழுதுவதற்குப் பதிலடி தரவேண்டும் என்று மூவரும் யோசித்துவைத்திருக்கிறார்கள். சென்ற வாரம் நான் ஊரில் இல்லாதபோது ’ரூம் போட்டு யோசித்து’ ஒரு கற்பனைக் கதை ‘பண்ணி’யிருக்கிறார்கள், பின்னர் அந்த அனுபவத்தை நங்கை எழுதிக் கொடுத்தாள். அதே வலைப்பதிவில் இதைப் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டளையுடன்.

ஆகவே, ஆங்கிலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று (எழுத்துப் பிழைகளைமட்டும் திருத்தி, நிறுத்தற்குறிகளைச் சேர்த்து) இங்கேயே டைப் செய்துள்ளேன். அட்ஜஸ்ட் செய்துகொண்டு படித்துவிடுங்கள் 🙂

A Story On My Father

How Me and My Sister longed to have a puppy!

We were speaking about that one fine day,  my mother, me and my sister.

We were pleading to my mother if we could have a puppy.

My mother replied, ‘No, are you kidding?’

We replied, ‘No Ma!’

Suddenly, My mother’s face brightened and she laughed aloud.

I asked my mother ‘Why are you laughing?’

My mother said, ‘Oh! when you were talking about the puppy, I got a couple of jokes on your father, Hee Hee Hee!’

I asked my mother in excitement, ‘Please do tell them to me!’

My mother told ‘Okay!, Let me start.’

When your father goes for his evening walk, he takes the puppy with him, he will be trying to do 3 things at 1 time:

  • Listening to music
  • Reading a book
  • Controlling the puppy

But he couldn’t do so.

After a while, they reached the main road, traffic signal, the Puppy did potty in your father’s shoe and your father become very angry, But he still waited for the green light to move.

But the puppy, not knowing colour, ran ahead and broke glass of a car.

Your father had to pay that man Rs 10000 to replace the glass.

So, he comes home in a bad mood, scolding the puppy!

When he told us the whole incident, we all laughed, ‘Hahahaha!’

Next day, my father was getting ready for his evening walk, and my mother asked, ‘Will you take puppy with you?’

My father replied in a very scared voice, ‘NEVER WILL I TAKE A PUPPY FOR WALK!’


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

February 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728