காமன் அம்பு
Posted February 20, 2013
on:- In: Music | Poetry | SPB | Vaalee
- 6 Comments
ஏதோ சானலில் ‘அபூர்வ சகோதரர்கள்’. அப்பு, ராஜா என்கிற இருவேறுபட்ட கதாபாத்திரங்களில் கமல் வித்தியாசம் காட்டியதை எல்லாரும் பாராட்டிவிட்டோம். அதற்குச் சமமாக, இன்னொருவரையும் பாராட்டவேண்டியிருக்கிறது.
எஸ். பி. பாலசுப்ரமணியத்தைதான் சொல்கிறேன்.
இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் (’ராஜா கைய வெச்சா’ உள்பட) SPBதான் பாடியுள்ளார். அதில் அப்புவுக்கு இரண்டு, ராஜாவுக்கு மூன்று, அதே குரல்தான் என்றாலும், இந்த இரண்டைப்போல் அந்த மூன்று இருக்காது, ஏதோ நுணுக்கமானதொரு மாற்றத்தைக் காட்டிவிடுகிறார்.
சந்தேகமிருந்தால் ‘புது மாப்பிள்ளைக்கு’, ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து கேளுங்கள். இரண்டுமே காதல் / டூயட் பாட்டுகள்தாம். ஆனால் ஒருவரே பாடியது என்பதை ஒரு புதியவர் நம்புவதுகூடச் சிரமம், ஏதோ நாம் SPBயைப் பல பத்தாண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருப்பதால் we take such things for granted 🙂
அது நிற்க. இப்போது நான் எழுத வந்தது ‘வாழ வைக்கும் காதலுக்கு ஜே’ பாடலைப்பற்றி.
படத்தில் இந்தப் பாடல் வருவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, ஒரு கதாபாத்திரம் கொலை செய்யப்படுகிறது, அதுவும் அம்பினால் குத்தப்பட்டு.
இதையடுத்து வருக்கிற காதல் பாட்டில் வாலி எழுதியுள்ள ஒரு வரி, ‘அம்பு விட்ட காமனுக்கும் ஜே!’
இந்த ஒற்றுமை எதேச்சையாக அமைந்த விஷயமா? அல்லது, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட குறும்பா?
நான் இதனை coincidence என நம்பவில்லை. காரணம், பின்னர் இன்னொரு கதாபாத்திரம் புலியால் தாக்கப்பட்டுக் கொலையாகிறபோது, அடுத்து வரும் பாடலில் இதே நாயகன் புலி வேஷம் போடுகிறான், இதே வாலி ‘நியாயம் இல்லாத பொல்லாரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்” என்று எழுதுகிறார்.
அப்படியானால், இந்த ‘அம்பு விட்ட காமன்’ என்பதுகூட, கதையை நமக்கு நினைவுபடுத்தும் Easter Eggதானா? ஒரு காதல் பாட்டுக்கு நடுவே இதை நுழைக்கவேண்டும் என்று யாருக்கு, எப்படித் தோன்றியது? வாலிக்கு இயக்குனரோ இளையராஜாவோ கதை சொல்லும்போது, முந்தின காட்சியில் அம்பு விட்டு ஒரு கொலை நடக்கிறது என்று சொல்லியிருப்பார்களா? அதற்கு அவசியமே இல்லையே, ‘சும்மா ஒரு டூயட் பாட்டுங்க’ என்று சொல்லியிருந்தாலே போதுமே, இத்தனை விவரங்களைச் சொல்வது அவசியமா? அதனால் இப்படி ஒரு ‘புத்திசாலித்தனமான’ வரி கிடைக்கும் என்று யாரோ எதிர்பார்த்தார்களா? ’இதையெல்லாம் எத்தனை பேர் கவனிக்கப்போகிறார்கள்?’ என்கிற அலட்சியத்தில் ‘3 டூயட், 1 குத்துப் பாட்டு, 1 சோகப்பாட்டு’ என்று கவிஞரை நுனிப்புல் மேயச்சொல்லாத குணம் இன்னும் இருக்கிறதா?
’ஒரு படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதினால், அந்தக் கதையோடு அவருக்கு முழு ஈடுபாடு வரும், அது பாடல் வரிகளின் தரத்தில் பிரதிபலிக்கும்’ என்கிற அர்த்தத்தில் வைரமுத்து அடிக்கடி பேசியிருக்கிறார். அதற்கு ஒரு நல்ல உதாரணம் இது.
***
என். சொக்கன் …
20 02 2013
6 Responses to "காமன் அம்பு"

இது எதேச்சையாக அமைந்ததா என்று தெரியவில்லை-ஆனால் ஒரு சம்பவத்தை வாலி அவர்கள் மேடையிலேயே சொன்னார்-தீனா படத்திற்காக முருகதாஸ் வாலியிடம் பாடல் வாங்க சென்றபோது காட்சியை விளக்கிய போது வாலி சொன்ன வரிகள் “வத்திகுச்சி பத்திக் காதுடா யாரும் வந்து உரசுற வரையிலே,வம்பு தும்பு வச்சிக்காதடா”.முருகதாஸ் வ யடைத்து உட்கார்ந்திருந்தாராம்.உடனே வாலி யோவ் என்னய்யா வரி பிடிச்சிருக்கா,இல்லையா -இப்படி செத்தவன் கையில வெத்தலையை கொடுத்தா மாதிரி
உக்கார்ந்திருக்க என்ற போது முருகதாஸ்,இல்லைங்க இந்த ஹீரோ வாயில குச்சி வெச்சுக்கிட்டு இருக்கற ஒரு ரௌடியா தான் நான் நினைச்சிருந்தேன்,உங்க கிட்ட சொல்லாமலே பாட்டுல நீங்க கொண்டு வந்ததை நினைச்சு பிரமிச்சு போயிட்டேன் என்றாராம்.கவிஞர்கள் வாழ்வில் இப்படி எத்தனை சுவையான அனுபவங்கள் வந்திருக்குமோ :-))


தற்செயல் எல்லாம் இல்லை.
லாரியை நிறுத்துற இடையிசை கேளுங்க. பிணம்சுமந்து வர்ற லாரி காதல்பாட்டுக்குள்ள நுழையுது. ஒரு மாதிரி unease of the macabre வரும். Trumpet (?) ஊதித் தள்ளி பாட்டை நகர்த்தும்.
‘கடைசி அம்புவிட்ட காமனுக்கும் ஜே’ல கமல் அம்பைப் பிடிங்கிக் குத்துவார் LOL
இதெல்லாம் கேட்டு எழுதி வாங்குறதுதான்.


இதையெல்லாம் எத்தணை பேர் கவனிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் நம்மைப் போன்று பலர் கவனிக்கத் தான் செய்கிறோம். பழைய சினிமா உலகில் இது முடிந்தது. பெருகி வரும் கவிஞர்கள், பாடகர்கள் எண்ணிக்கை.. இதற்கு இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை.

1 | amas32 (@amas32)
February 20, 2013 at 10:06 pm
உங்கள் கடைசி வரிகளைப் படிக்கும் முன் இதைத்தான் வைரமுத்துவும் சொல்லி வருகிறார் என்று குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன், உங்கள் பதிவின் நோக்கமே அது தான் என்று புரிந்தது. நிறக: என்னமா உன்னிப்பாய் கவனிக்கிறீர்கள்!!
amas32