தழுவும் இதழ்கள்
Posted February 25, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Learning | Poetry | Puzzle | Question And Answer | Tamil
- 4 Comments
முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>
வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.
தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’
இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.
நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.
அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.
தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?
நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.
அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.
ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.
பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.
ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.
ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.
இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!
இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html
***
என். சொக்கன் …
25 02 2013
4 Responses to "தழுவும் இதழ்கள்"

படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!
//நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால்,//
நானும்தான்.(அப்பாடா ! பெருமையாக சொல்லிக்கொள்ள ஒரு இடம் )


நல்லா எழுதி உள்ளீர்கள். நீங்கள் தந்த இலக்குவனார் திருவள்ளுவன் படைப்பு இணைப்பு அருமை. திருடி எழுதுவோர் உள்ளபொழுது படித்ததைத் தெரிவிக்கும் பண்பு பாராட்டப்படவேண்டியது.

1 | சின்னக் கண்ணன்
February 25, 2013 at 1:54 pm
அல்லி வட்டம் புல்லி வட்டம் நானறிஞ்ச எல்லாவட்டம்
மாயவரக் காளை ஒண்ணுமயங்குத்டி மயங்கி நின்னு
ஓடாதேடி காவேரி..(கூடையில கருவாடு பாடல் நினைவுக்கு வருகிறது..) இதான் புல்லி வட்டமா.. டி.ஆர்க்கு த் தெரிஞ்சுருக்கே அப்பவே..!