வீட்டுப் பாடம்
Posted February 25, 2013
on:- In: (Auto)Biography | Art | நவீன அபத்தங்கள் | Change | Characters | Cheating | Creativity | Kids | Learning | Peer Pressure | People | Perfection | Play
- 18 Comments
இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’
’என்னது?’
’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’
‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’
’நாளைக்கு!’
‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’
‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’
’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’
அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.
ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?
மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.
’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’
‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’
‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’
ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.
’எதுப்பா?’
‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’
அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.
முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.
’ஏன் அப்படி?’
’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’
‘ம்ஹூம், மாட்டாங்க!’
‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’
நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.
’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’
‘ம்ஹூம், இல்லை!’
’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’
‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’
‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’
‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’
‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’
நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’
‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.
பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.
‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’
‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’
’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’
‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’
பின்குறிப்பு:
இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>
***
என். சொக்கன் …
25 02 2013
Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂
18 Responses to "வீட்டுப் பாடம்"

அந்த miss க்கு புடிக்குதோ இல்லையோ ,நம்ம் குடுத்திரலாம் 10 க்கு 10


முதல் முயற்சி மாதிரியே தெரியலை. நல்லா இருக்கு..அதைவிட அவளின் ‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’ பதிலில் தெரியும் நேர்மைக்கு மதிப்பெண்ணே கிடையாது. இதிலேயிருந்து குழந்தைகளுக்கு மதிப்பெண்களை விட ஒரு செயலைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம் என்பது நிருபணம். மதிப்பெண்களின் பின்னால் அலைவது பெற்றோரே..


உங்க நேர்மை பிடிச்சிருக்கு….அதை குழந்தைக்கு எளியமுறையில் பின்பற்ற சொல்லிதர்றது அத விட பிடிச்சிருக்கு…. 🙂


namala senju evlo Mark vangnalum romba santhosama Irukkum . appo than athu inime seirathukkum uthavi ya Irukkum.


தங்கள் வீட்டில் நங்கை – மங்கை…
இங்கே உத்ரா – உதயா …
வீட்டுக்கு வீடு வாசப்படி சார்…


10/10


Nice 🙂


தாராளமா 10/10 கொடுக்கலாம்… நங்கையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..


நீங்கள் செய்திருந்தால் மதிப்பிடலாம்.. இது மதிப்பிட முடியா பொக்கிஷம்!


எங்கள் பள்ளிகளில் இதற்கு 10/10 கொடுக்காத ஆசிரியர்கள் இருந்தனர், இரவெல்லாம் முழித்திருந்து செய்துவரும் projectகளை விட்டு விட்டு, perfect-ஆக பெற்றோர் செய்து தரும் projectகளை வகுப்பு முன்னிலையில் அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கச்செய்வார்கள்.. ஒரு கட்டத்தில் அவர்களை வெறுப்பேற்றவே எதையும் செய்யாமல் போகத்துவங்கினோம்..
>>> அவள் கற்றுக் கொண்டதை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். அது மேலும் நன்மையை விளைவிக்கும். <<<
மற்ற குழந்தைகளுக்கு புரியுமோ புரியாதோ.. இது ஒரு அற்புதமான suggestion. இதை செயல்படுத்துகையில், தனக்கு புரிந்ததை மற்றவர்களுக்கும் பகிரனும் என்ற எண்ணமும் வரும் 🙂


உங்களுடைய வழிகாட்டல் சாலச் சிறந்தது. இன்று என் மகளனைய ரமா தன் ஐந்தாம் வகுப்பு மகளை, பள்ளியில் ‘ ஒரு வீட்டின் ‘மாதிரி செய்யச்சொன்னதாகவும்,அதுவும் ஒரே நாளில்! இன்னொரு மகளுக்கு வேறு ஒன்று எனவும், கொலு பொம்மைகளை கீழே இறக்கி தேடியதாகவும் வருந்தினார். பள்ளிக்கூடங்கள் பெற்றோரை ஒருவழி செய்கின்றன.


சரியான வழிகாட்டி.
இது பசுமரத்தாணி போல் பதிந்திருந்தால் இன்னும் பல தலமுறைகளுக்கு போய் சேரும்.


good nagas. teaching kids honesty at the early stage is appericiated.


உங்கள் அணுகுமுறை சரியானதே. நங்கைக்கு என் பங்குக்கு 100 மார்க் கொடுத்துவிடுகிறேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும் என் பையன் ஸ்கூலில் இந்த மாதிரி ஏதாவது செய்து கொண்டுவரச் சொல்லுவார்கள். மெனக்கெட்டு (நான்தான்) செய்து எடுத்துகொண்டுபோனால் அன்றைக்கு அதைப் பார்த்து மார்க் போடமாட்டார்கள். அடுத்த நாள் டீச்சர் லீவு. அதற்கடுத்த நாள் எதிலாவது பிஸியாக இருப்பார்கள். தினமும் இதை அந்த 25 கிலோ புத்தக மூட்டையில் வைத்து எடுத்துபோனதில் கசங்கி நைந்துபோய் அல்லது பிய்ந்துபோய் கடைசியாக டீச்சர் பார்க்கும்போது 5 மார்க்குக்கு மேல் தேறாது.
ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டிவிட்டு பிறகு எல்லாவற்றையும் நாமே இப்படி சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பதும் வருத்தம்தான். எ.கொ.ச.இ.


நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’
‘அது போதும் நங்கை’ //
பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’//
பெற்றோர் கையிலிருக்கிறது பிள்ளைகளை நல்வழிக்குத் திருப்புவது.
முடிவில் அக்குட்டிப்பெண் தெளிந்ததைக் கண்டு நாமே முழு மதிப்பெண்களையும் அள்ளியது போலொரு மகிழ்வு.

1 | tcsprasan
February 25, 2013 at 10:54 pm
இந்த முயற்சிக்கே 10/10.கொடுக்கலாம் சார். நீங்க் சொன்னத புரிஞ்சுகிட்டு அழகா செஞ்சதுக்கு இன்னொரு பத்து. மொத்தம் 20/10 🙂