ஞகரம்
Posted February 25, 2013
on:‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்தி சூடி’ என்ற குறிப்புடன், கவிஞர் சிற்பி குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் நவீன ஆத்தி சூடி நூலைக் ‘கோலம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (28 பக்கங்கள், விலை ரூ 10)
அகரவரிசையில் இந்தக் கால விஷயங்களைச் சுருக்கமாகப் புரியும்படி எழுதியிருப்பது நன்கு மனத்தில் பதிகிறது. சட்டென்று கவனத்தில் தோன்றுகிற உதாரணங்கள் : நொறுக்குணவு தவிர், கணிப்பொறி பழகு, காடுகள் போற்று, மந்தைத்தனம் ஒழி, யுகமாற்றம் நாடு!
இந்த வரிசையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய விஷயம், நாம் பொதுவாக அதிகம் பயன்படுத்தாத ஞகரத்தில் அவர் தந்திருக்கிற வரிகள்தாம்.
- ஞண்டெனப் பற்று (ஞண்டு : நண்டு)
- ஞாலத்து இசை பெறு (ஞாலம் : உலகம்)
- ஞிமிரெனப் பாடு (ஞிமிர் : வண்டு)
- ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க : இறுக்கமாக)
- ஞேயம் நாட்டில் வை (ஞேயம் : அன்பு)
ஞகரத்தில் இத்தனை வார்த்தைகள் உள்ளன என்று இதைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஆர்வத்தில், ஆத்தி சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும் ஞகரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்று தேடிப் பார்த்தேன். (பாரதிதாசனும் ஆத்தி சூடி எழுதியிருப்பதாக முன்னுரையில் சிற்பி சொல்கிறார். ஆனால் என்னிடமுள்ள பாரதிதாசன் கவிதைகள் (முழுத்?)தொகுப்பில் ஆத்தி சூடி எதுவும் இல்லை!)
ஔவையாரின் ஆத்தி சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.
- ஞயம்பட உரை (ஞயம்பட : கனிவானமுறையில்)
ஔவையுடன் ஒப்பிடுகையில், பாரதியார் ஞகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது ‘புதிய ஆத்தி சூடி’யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.
- ஞமலிபோல் வாழேல் (ஞமலி : நாய்)
- ஞாயிறு போற்று (ஞாயிறு : சூரியன்)
- ஞிமிறென இன்புறு (ஞிமிறு : வண்டு … சிற்பியின் நூலில் வரும் ‘ஞிமிர்’ என்பது, அச்சுப்பிழையாக இருக்குமோ?)
- ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் : அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், நெகிழ்தல், இன்னும் நிறைய அர்த்தங்கள் வருகிறது … பாரதி சொல்லும் அர்த்தம் என்ன?)
- ஞேயம் காத்தல் செய் (ஞேயம் : அன்பு)
மேலும் ஞகரம் தேடுகிற ஆசையோடு, கழக அகராதியை (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) அணுகினேன். நிறைய சுவாரஸ்யமான வார்த்தைகள் தட்டுப்பட்டன. (இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றைக் குழந்தைகளால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும் என்பது வேறு விஷயம் 😉 )
- ஞஞ்ஞை : மயக்கம் (இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்துவிடும்!)
- ஞத்துவம் : அறியும் தன்மை
- ஞலவல் : மின்மினிப் பூச்சி / கொக்கு
- ஞறா : மயிலின் குரல்
- ஞாஞ்சில் : கலப்பை / நாஞ்சில்
- ஞாடு : நாட்டுப் பகுதி (இப்படிப் பல வார்த்தைகளில், ‘ஞ’கரத்தைத் தூக்கிவிட்டு, ‘ந’கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது!)
- ஞாதி : சுற்றம் (நாதி?)
- ஞாயிறுதிரும்பி : சூரிய காந்தி (வாவ்!)
- ஞாய் : தாய்
- ஞெகிழ் : தீ
- ஞெள்ளை : நாய்
- ஞேயா : பெருமருந்து
- ஞொள்கு : இளை, அஞ்சு, சோம்பு, அலை
இனிமேல், ‘ஞாயிறு’, ‘ஞானம்’, ‘ஞாபகம்’ ஆகிய பொதுவான வார்த்தைகளைமட்டுமின்றி, மற்ற ஞகர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும்!
(மீள் பதிவு From September 2005, With Few Corrections : Originally Published @ http://www.tamiloviam.com/unicode/09080503.asp)
6 Responses to "ஞகரம்"

nice , happy to know about tamil old with golden meaning.


ரொம்ப ஞன்றி(ந’ போட்டுக்கலாம் ) ஐயா…! ஞாய்- மட்டும் ‘நா’ போட முடியாத சில வார்த்தைகளில் அடக்கம் இல்லையா…:)
தமிழில் கல்லாததே உலகளவு இருக்கும் போல…


ஞாயிறு திரும்பி … என்ன அழகு!

1 | Thangamani
February 26, 2013 at 11:08 am
நிறைய வார்த்தைகள் அறியமுடிந்தது.
ஞறா- மயிலின் குரல். சட்டேன உள்ளே எதோ தளும்புகிறது. மொழி எதற்கு என்று வகுப்பில் வினவினேன். இன்னொருவருடன் தொடர்பாடலுக்கா? அதற்கு சைகை மொழி போதாதா?
மனிதன் தன்னுடன் தானே தொடர்புகொள்ள அல்லவா மொழி வேண்டும்! இன்று மனிதன் ஆகக்குறைவாகத் தொடர்கொள்வது அவனுடன் தானே. எல்லா செம்மொழிகளும் தீட்டீத் தீட்டீச் செய்தது வெறும் வெண்ணை வெட்டவா?