மனம் போன போக்கில்

Archive for March 2013

ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும்?

‘இதை ஏண்டா வார நாளில் படிக்க ஆரம்பித்தோம்’ என்று வாசகனை நொந்துகொள்ளச் செய்யவேண்டும், ‘சனி, ஞாயிறு என்றால் ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கலாமே’ என்று ஆதங்கப்படச் செய்யவேண்டும், மற்ற வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டு, ஆஃபீசிலும் வெளியிலும் ’எப்போ வீடு திரும்புவோம், எப்போ மறுபடி வாசிப்போம்’ என்று ஏங்கச் செய்யவேண்டும், ராத்திரி கண் சொக்கத் தூங்கச் சென்றாலும், ’நாலு பக்கம் படித்துவிட்டுத் தூங்கலாமே’ என்று நப்பாசைப்படச் செய்யவேண்டும்.

திரைப்பட இயக்குநர் விக்ரமனின் சுயசரிதை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இவை அனைத்தையும் செய்கிறது, அதற்குமேலும் செய்கிறது.

விக்ரமன் இயக்கிய படங்களில் இரண்டைமட்டுமே நான் பார்த்துள்ளேன், ஆனால் மற்ற எல்லாப் படங்களின் பாடல்களையும் கேட்டு, சின்னத்திரையில் வந்த ’ஓவர் பாசிட்டிவ்’ காட்சிகள், ஹைதர் அலியையே தும்மல் போடவைக்கும் காமெடி(?)களையெல்லாம் நோட்டமிட்டு, அவரது முழு நீள நகல்களாக வந்த பல அஸிஸ்டெண்ட்கள் எடுத்த படங்களையெல்லாம் பார்த்து அவர்மீது ஒரு நக்கலான பிம்பம்தான் வந்திருக்கிறது.

இப்படிப் பெயரைக் கேட்டவுடன் காதுக்குள் ‘லாலாலா’ ஒலிக்கும் ஓர் இயக்குநரின் சுயசரிதையை நான் ஏன் வாங்கினேன், ஏன் வாசிக்க ஆரம்பித்தேன், சுத்தமாகத் தெரியவில்லை. ஒருவேளை, இதைப் படித்துவிட்டு இன்னும் கிண்டலடிக்கலாம் என்று நினைத்திருப்பேனோ என்னவோ.

ஆனால், விக்ரமன்மீது நான் வைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. இதனை எழுதியது அவரேதானா, அல்லது நிருபர் ஒருவர் எழுதினாரா (’சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடராக வந்தது) என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுத் தமிழில் தன் கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை.

விக்ரமன் படங்களைப்போலவே, இந்தப் புத்தகத்திலும் சஸ்பென்ஸ் உண்டு, நிறைய நெகிழ்ச்சி உண்டு, தன்னம்பிக்கை உண்டு, அவமானங்கள் (அநேகமாக இதில் வரும் எல்லாரும் விக்ரமனை ஏதோ ஒருவிதத்தில் அவமானப்படுத்தியிருக்கிறார்கள், அல்லது, அவர் அப்படி நம்புகிறார்), அவற்றைத் துடைத்துப்போட்டுவிட்டு மேலெழல், தோல்விகள், வெற்றிகள், மறுபடி தோல்விகள் (ஐந்து படம் எடுத்து மூன்று ஹிட் கொடுத்தபிறகும், கையில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் பட்டினிகூடக் கிடந்திருக்கிறார்), மறுபடி வெற்றிகள், சுய அலசல், திடீர் துரோகங்கள், நட்புகள் என எல்லாமே சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. கையில் எடுத்தால் கீழே வைக்க மனமே வராது, அப்படி ஒரு விறுவிறுப்பான நடை. இப்படி ஒரு சுவாரஸ்யமான சுயசரிதையைச் சமீபத்தில் படித்த நினைவில்லை.

இத்தனைக்கும் விக்ரமனின் இளமைப் பருவம், பள்ளி, கல்லூரி, பெற்றோர், நண்பர்களைப்பற்றிக்கூட இதில் அதிகம் இல்லை,  அவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுகூட இல்லை, அவர் எடுத்த படங்களில் முதல் ஏழோ எட்டோ விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான், அதை மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதையினூடே, சினிமா உருவாவதுபற்றிய டெக்னிகல் விஷயங்கள் அனைத்தும் உறுத்தலில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘டபுள் பாஸிட்டிவ்’ என்றால் என்ன என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார், அதன்பிறகு எங்கே ‘டபுள் பாஸிட்டிவ்’ வந்தாலும் நமக்கு அந்த விளக்கம் சட்டென்று நினைவில் வரும், அந்த அளவுக்கு எளிமையான விளக்கங்கள், கச்சிதமான உதாரணங்கள்.

சினிமா ஆசை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நிறைய நம்பிக்கை தரும், அதே அளவு அவநம்பிக்கையையும் தரும், ஒருவிதத்தில் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று சொல்வேன்.

அது சரி, இத்தனை எழுதிய விக்ரமன், தமிழில் மிகப் பெரிய வசூல் சம்பாதித்த படங்கள் சிலவற்றை இயக்கிய விக்ரமன் ஏன் தொடர்ந்து ஜெயிக்கமுடியவில்லை?

இந்தப் புத்தகத்தில் அதற்கும் பதில் இருக்கிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாக விக்ரமனே அதைச் சொல்லியிருக்கிறார், வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்த்துக் கண்டுபிடியுங்கள் 🙂

***

என். சொக்கன் …

21 03 2013

பின்குறிப்புகள்:

1. விக்ரமன் அளவுக்கு அவருடைய அஸிஸ்டென்ட் கே. எஸ். ரவிக்குமாரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்போல, ஆரேனும் ஆவன செய்தால் நல்லது

2. இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன். ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் இங்கே (இதனை வழங்கிய நண்பர் ரவிகாந்த்க்கு நன்றி)

3. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் : Part 1 , Part 2 & Part 3

இளையராஜா தரும் பாடல்களைதான் இயக்குநர்கள் வாங்கிக்கொள்ளவேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற கருத்து குறையாகவும் பெருமையாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து எனக்குப் பல கேள்விகள் உள்ளன.

1. இதைக் குறையாகச் சொல்கிறவர்களில் பெரும்பாலானோர் ராஜாவுடன் ஒரு படம்கூடப் பணியாற்றாதவர்கள், அல்லது சில படங்களில்மட்டும் பணியாற்றியவர்கள். அவர்கள் யாரோ சொல்ல நம்பியதைச் சொல்கிறார்களா, அனுபவித்ததைச் சொல்கிறார்களா?

2. ஒருவேளை இது (’நான் தரும் பாடல்களைதான் வாங்கிக்கொள்ளவேண்டும், மாற்றித் தரமாட்டேன்’) உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது தனது திறமையில், ரசிகர்களின் நாடித்துடிப்பைப் புரிந்துவைத்திருப்பதில் அவருக்கிருக்கும் தீவிர நம்பிக்கையைக் காட்டுகிறது, அவரது Hit Rate + Quality வைத்துப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு?

3. சும்மா ‘இங்கே டெம்போ குறையுது, அங்கே ஏறுது’ என்று சொல்லாமல், நிஜமாகவே இசை பற்றிக் கருத்துச் சொல்லத் தெரிந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் நம்முடைய வேலைபற்றி Value Adding Comments வராதபோது நாம் எரிச்சலடைவதில்லையா? இயக்குநர் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் இசையமைப்பாளர் கேட்டே தீரவேண்டுமா?

4. ‘அதெல்லாம் இல்லை, என்ன திறமை இருந்தாலும் அவர் இயக்குநரை மதிக்கவேண்டும்’ என்று நீங்கள் வாதிட்டாலும்கூட, அவரோடு பணியாற்றியவர்கள் திரும்பத் திரும்ப அவரிடம்தான் சென்றிருக்கிறார்கள், பல காரணங்களால் (May or May not be இசை related) எரிச்சலடைந்து விலகியவர்களும் மறுபடி வந்திருக்கிறார்கள், இது ஏன்? அவரது (In Media’s words, முரட்டுத்தனமான / சர்வாதிகாரமான) கணிப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதைதானே இது காட்டுகிறது?

5. பல இயக்குநர்கள் ‘எனக்கு அவர் பலமுறை ட்யூன்களை மாற்றித் தந்தார்’ என்று பேட்டி தந்திருக்கிறார்கள், அவை மறைக்கப்பட்டு, ‘அவர் முசுடு, தாகம் என்று வந்தவருக்குக் குடிக்கத் தண்ணீர்கூடத் தரமாட்டார்’ என்பதுபோன்ற செய்திகளைமட்டும் தீவிரமாகப் பரப்புவது யார்? இதனால் இன்றைக்கும் புதிய / இளைய / அதிபுத்திசாலி இயக்குநர்கள் அவரை அணுகத் தயங்குகிறார்கள், இவர்களில் யாரேனும் மேற்சொன்ன ’நம்பிக்கை’கள் எந்த அளவு உண்மை என்று ஆராயத் துணிவரா?

6. ஒருவேளை இது உண்மை என்றால், அவருடன் பணியாற்றி, அவரது பிடிவாதத்தால் படுமோசமான பாடல்களைப் பெற்று, அதனால் தோல்வி அடைந்து, வெறுப்படைந்து வெளியேறி, தன் கருத்துகளை மதிக்கக்கூடிய வேறு இசையமைப்பாளருடன் இணைந்து சிறந்த பாடல்களைப் பெற்று மிகப் பிரமாதமாக வெற்றி அடைந்த இயக்குநர்கள் பலர் இருக்கவேண்டும். அப்படி ஒரே ஒருவராவது உண்டா?

பின்குறிப்பு: இந்தக் கேள்விக்கான பதில்களில் தயவுசெய்து மற்ற இசையமைப்பாளர்களைப்பற்றிப் பேசவேண்டாம். My intention is NOT to start a new Raja Vs Rahman Fight

***

என். சொக்கன் …
20 03 2013

“A Swiss Army Knife For Your Discussions” என்று ஒரு புத்தகம் படித்தேன். பல்வேறு சிறு கருவிகளை உள்ளடக்கிய Swiss Army Knifeபோல, நமது விவாதங்களின்போது பயன்படுத்தக்கூடிய ஏழுவிதமான கருவிகளை இந்தச் சிறு நூல் விவரிக்கிறது.

முதலில், அந்த ஏழு கருவிகளின் பட்டியல்:

  • உடன்படுதல்
  • மறுத்தல்
  • உடன்பட்டு, பின் மறுத்தல்
  • நிரூபித்தல்
  • இரண்டில் ஒன்று
  • குற்றம் சொல்லுதல்
  • தன் கருத்தில் உறுதியாக நிற்றல்

Swiss Army Knifeல் கத்தியும் இருக்கும், திருப்புளியும் இருக்கும், இன்னும் பலவிதமான சிறு கருவிகள் இருக்கும், நாம் அப்போது செய்யவிருக்கும் வேலைக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறோம், தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளையும் சேர்த்துப் பயன்படுத்தி வேலையை முடிக்கிறோம். பின்னர் அந்தக் கருவிகளைப் பழையபடி மடித்துவைத்துவிடுகிறோம்.

அதுபோல, ஒரு விவாதத்தின்போது இந்த ஏழு கருவிகளில் ஏதேனும் ஒன்றைதான் நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, கைக்கு அடக்கமாக வைத்துக்கொள்ளலாம், விவாத சூழ்நிலையைப் பொருத்து, அதற்கு இந்தக் கருவிகளில் எது சரியாகப் பயன்படும் என்று யோசித்துத் தேர்ந்தெடுக்கலாம், பயன்படுத்தலாம், மறுபடி மடித்துவைத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதற்கு ஓர் எளிய உதாரணமாக, ‘இன்னிக்கு சினிமாவுக்குப் போலாமா?’ என்று ஒரு நண்பர் கேட்கிறார். அதற்கு இந்த ஏழு கருவிகளையும் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில், உடன்படுகிறோம், ‘எனக்கும் போரடிக்குது, வா, டிக்கெட் புக் பண்ணலாம்.’

இது ஓர் உத்தி, சில சமயங்களில் பயன்படும், வேறு சில சமயங்களில் பயன்படாது, இரண்டாவது உத்தி(மறுத்தல்)யைக் கையில் எடுக்கவேண்டியிருக்கும், ‘தலை வலிக்குதுய்யா, நான் வரலை!’

ஒரு விஷயம், இங்கே ‘மறுப்பு’ என்பது நீங்கள் எடுத்துவிட்ட தீர்மானம் அல்ல, அவர் சொன்னதை மறுக்கிறீர்கள், ஆனால் மீண்டும் அதனை மறுத்து அவர் தன் கருத்தை நிறுவ வாய்ப்பு இருக்கிறது, மனத்தைத் திறந்துவைத்திருக்கிறீர்கள்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘வேணாம்ய்யா, தலை வலிக்குது!’ (மறுத்தல்)

‘அட, வாய்யா, வழியில ஒரு காஃபி சாப்பிட்டா எல்லாம் சரியாப் போய்டும்!’

‘ஓகே, வர்றேன்!’ (உடன்படல்)

மூன்றாவது உத்தி இதற்கு முற்றிலும் எதிரானது, முதலில் உடன்படுதல், அப்புறம் மறுத்தல். ஆங்கிலத்தில் இதனை ‘Agreed, But’ என்று செல்லமாகச் சொல்வார்கள்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘போலாம், ஆனா என்னை டிக்கெட் எடுக்கச் சொன்னா வரமாட்டேன்.’

இதுதான் மூன்றாவது உத்தி, உடன்படுதல், பின் மறுத்தல், இதன்மூலம் இருதரப்பு வாதங்களையும் கிளறச் செய்வதற்கான ஆரோக்கியமான சூழல் அமைகிறது.

நான்காவது உத்தி, ‘நிரூபித்தல்’, நாமே ஒரு வாதத்தை முன்வைத்து, அதுதான் சரி என்று ஆதாரபூர்வமாக நிறுவுதல்.

‘சினிமாவுக்குப் போலாமா?’

‘வேணாம்ய்யா, அடிக்கடி சினிமா பார்த்தா மனசு கெட்டுப்போகும்ன்னு குசலாம்பாள் பல்கலைக்கழகத்துல செஞ்ச ஆராய்ச்சி சொல்லுது, இதோ அந்த ரிப்போர்ட்டை நீயே பாரு!’

இது வெறும் மறுப்பு அல்ல, மாற்றுக் கருத்தை நிரூபித்தல். இதன்மூலம் விவாதத்தை நம்முடைய கருத்தின் திசையில் நிறைவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறோம், எதிர்க் கருத்துக்கான வாசலை மூடப்பார்க்கிறோம். (ஆனால் பல நேரங்களில் அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தே தீரும் என்பது வேறு கதை!)

ஐந்தாவது உத்தி, இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்து அந்த இரண்டில் எது சரி என்று நாம் நினைக்கிறோம் என்பதைச் சொல்லுதல், அதாவது, ஏதேனும் ஒரு கட்சியில் சேர்ந்துகொள்ளுதல்.

‘சினிமாவுக்குப் போலாம்ய்யா.’

‘வேணாம்ய்யா, ஷாப்பிங் போலாம்.’

’எனக்கு சினிமாவுக்குப் போறதுதான் சரின்னு தோணுது.’

இதைச் சொல்வதன்மூலம் அந்த விவாதத்தில் நம்முடைய வாக்கு எந்தக் கட்சிக்கு என்று சொல்லிவிடுகிறோம், மெஜாரிட்டி வாக்குகளைப் பெற்ற கட்சிதான் ஜெயிக்கும் என்பதற்கான சூழலை ஏற்படுத்துகிறோம்.

ஆறாவது உத்தி, அடுத்தவர்களுடைய வாதத்தைக் குற்றம் சொல்வது.

‘சினிமாவுக்குப் போலாம்ய்யா.’

‘நீ இப்படிதான் எப்பப்பார் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போய் என் பர்ஸுக்கு வேட்டு வெச்சுடுவே.’

இதுவும் மறுப்புதான், ஆனால் குறை சொல்லும் மறுப்பு, இங்கே எதிர்க் கருத்தை முன்வைப்பது முக்கியம் அல்ல. எதிராளி குறைபட்டவன் என்று நிரூபித்துவிட்டால் போதும்!

நிறைவாக, ஏழாவது உத்தி, தன் கருத்தில் உறுதியாக நிற்றல், அதை வெளிப்படையாகச் சொல்லி, அதன்மூலம் விவாதத்தை முடித்துவைத்தல்.

‘நீங்க சொன்னதையெல்லாம் யோசிச்சுப் பார்த்தேன், எனக்கு வீட்ல படுத்துட்டுக் காமிக்ஸ் படிக்கறதுதான் சரின்னு படுது.’

இதற்கும் மற்ற உத்திகளுக்கும் முக்கியமான வித்தியாசம், இனி விவாதம் இல்லை, நிரூபிக்கவேண்டியதில்லை, எதிராளி சொல்வது தவறு என்று குற்றம் சாட்டவேண்டியதில்லை, ’இதுதான் என் தீர்மானம், அதை மாற்றிக்கொள்ளமாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறோம்.

எந்த ஒரு விவாதத்திலும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த ஏழு கருவிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினால் தெளிவும் கிடைக்கும், நம் பக்கம் வெற்றியும் கிடைக்கும் என்று “A Swiss Army Knife For Your Discussions” வாதிடுகிறது.

அது சரி, இந்தப் புத்தகம் யார் எழுதியது? எங்கே கிடைக்கும்? என்ன விலை? 😉

சும்மா டூப் விட்டேன், அப்படி ஒரு புத்தகமே இல்லை 😉 ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ‘Love & Love Only’ என்று ஒரு டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக் கதை நகரும், அதுபோல நானும் குன்ஸாக ஒரு தலைப்பைக் கற்பனை செய்து இந்தக் கட்டுரையை எழுதினேன்.

அப்போ அந்த ஏழு கருவிகள்? அதுவும் கற்பனையா?

ம்ஹூம், இல்லை. நிஜமாகவே இந்த ஏழு கருவிகளைப்பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது, மேற்கத்திய மேலாண்மைப் புத்தகங்களில் அல்ல, பல நூறு வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட ‘நன்னூல்’ என்கிற தமிழ் இலக்கணப் புத்தகத்தில்!

அந்த சூத்திரம்:

எழுவகை மதமே, உடன்படல், மறுத்தல்,

பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே,

தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே,

இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே,

பிறர்நூல் குற்றம் காட்டல், ஏனைப்

பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே!

என்ன? ‘ஏழு வகை மதம்’ என்றெல்லாம் வருகிறதே என்று யோசிக்கிறீர்களா? இங்கே ‘மதம்’ என்றால் இந்து, முஸ்லிம் அல்ல, ‘கொள்கை’ என்று அர்த்தம், நூலில் வரும் கருத்துகளை எப்படி முன்வைப்பது என்பதற்கு ஏழுவிதமான கொள்கைகளை, உத்திகளை விவரிக்கிறார் நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர்.

அதே கருவிகள், நம்முடைய தினசரி விவாதங்களுக்கும் பயன்படும், Swiss Army Knifeபோல!

***

என். சொக்கன் …

14 03 2013

கவிதையை ரசித்து அனுபவிப்பது ஒரு கலை. முக்கியமாக, பழந்தமிழ்க் கவிதைகளை.

ரசிகமணி டிகேசி அவர்கள் நடத்திய ‘வட்டத்தொட்டி’யில் இதுமாதிரி விவாதங்கள் நிறைய நடைபெறும் என்று கேள்வி. ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு, உரக்கப் படித்து, ஒவ்வொரு வரியாக அலசி, ஆராய்ந்து ரசிப்பார்களாம். அவற்றைக் கேட்க நமக்குக் கொடுத்துவைக்கவில்லை. இன்றுபோல் HDயில் வீடியோ பதிவு செய்து யூட்யூபில் ஏற்றுகிற தொழில்நுட்பமும் அன்றைக்கு இல்லை.

நல்லவேளையாக, அன்றைக்கு நிகழ்த்தப்பட்ட பல இலக்கிய விவாதங்களும் ரசனைப் பதிவுகளும் நூல் வடிவிலும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. கிடைத்தவரை லாபம்.

சமீபத்தில் அப்படி ஒரு கட்டுரை வாசித்தேன். பேராசிரியர் (பெயரே அதுதான்) எழுதிய சங்க இலக்கிய உரை, அதிலும் குறிப்பாக அகநானூறு வரிசையில் நான்காவது பாடலுக்கு அவர் தரும் ரசனையான விளக்கம், அற்புதம்.

முதலில், குறுங்குடி மருதனார் எழுதிய அந்தப் பாடலைத் தருகிறேன்:

முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு

பைங்கால் கொன்றை மென் பிணி அவிழ

இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்

பரல் அவல் அடைய, இரலை தெறிப்ப

மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப

கருவி வானம் கதழ் உறை சிதறி

கார் செய்தன்றே, கவின் பெறு கானம்

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி

நரம்பு ஆர்த்தன்ன வாங்கு வள்பு அரிய

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாது உண் பறவை பேது உறல் அஞ்சி

மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்

கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது

நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்

போது அவிழ் அலரின் நாறும்

ஆய்தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே

இதற்கு என்ன அர்த்தம்? 365பா வலைப்பதிவில் நான் எழுதிய விளக்கம் இங்கே:

சூழல்: காதலியைப் பிரிந்து சென்ற காதலன் ‘மழைக்காலத்தில் திரும்பி வருவேன்’ என்கிறான். இப்போது அவன் சொன்னபடி மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆனால் காதலன் இன்னும் வரவில்லை. வருந்திய காதலியிடம் பேசுகிறாள் தோழி:

ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே,

முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றிவிட்டன. தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெல்லமாக மலரத் தொடங்கிவிட்டன.

இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது, மேகம் மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது, மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!

மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டதுபோன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.

சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, அந்தப் பூக்களைப் போல் மணக்கின்ற அழகு உன்னுடையது.

ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலனுக்கு உன்னுடைய ஞாபகம் வரும். உடனடியாகக் கிளம்பி வருவான்.

அவனுடைய தேரில், சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். அவை தங்களுடைய தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும்.

உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருக்கும். அங்கே யாழின் இசையைப்போல் இனிமையாகச் சத்தமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும்.

அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், உன் காதலன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கட்டிவிடுவான்.

கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்!

நல்ல பாடல். சுவையான கற்பனை. நான் குறிப்பிட்டதுபோல் வரி வரியாக ரசிக்காவிட்டாலும், ஒட்டுமொத்தப் பாடல் சொல்லும் கருத்தைப் புரிந்துகொண்டு நன்றாக அனுபவிக்கலாம்.

ஆனால், அதோடு ஏன் நிறுத்தவேண்டும்? கொஞ்சம் உள்ளே போய் ஆழமாகப் படித்தால் இன்னும் அபாரமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் பேராசிரியர். இந்தப் பாடலுக்கு, குறிப்பாக, அதன் முதல் ஏழு வரிகளுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் மிக நுணுக்கமானது, அற்புதமானது, அதைக் கொஞ்சம் இன்றைய மொழியில் தருகிறேன்:

1. முல்லை வைந்நுனை தோன்ற

கார்காலத்துக்குமுன்பாக, வெயில்காலம். முல்லைக்கொடி அதைத் தாங்கமுடியாமல் துவண்டு கிடந்தது.

மழை பெய்தவுடன், அதில் அரும்புகள் தோன்றத் தொடங்குகின்றன. பின்னர் அவை மலர்ந்து பூவாகின்றன.

ஆகவே, இந்தத் தோழி ‘முல்லை வைந்நுனை’ என்கிறாள், அதாவது ‘முல்லை அரும்புகள்’, இன்னும் பூவாகவில்லை, ஆகவே, கார்காலம் has just started, உன் காதலன் வருவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கவலைப்படாதே.

அதிலும் ‘வைந்நுனை’ என்றால், கூரிய அரும்புகள் என்று அர்த்தம், அதாவது, இளம் அரும்புகள், இப்போதுதான் அரும்பியிருக்கின்றன, மிக மிக ஆரம்ப நிலை, அதாவது, ’கார்காலத் தொடக்கம்’ அல்ல, ‘கார்காலத் தொடக்கத்தின் தொடக்கம்’ இது.

2. இல்லமொடு பைங்கால் கொன்றை மென் பிணி அவிழ

இங்கே இரண்டு மரங்கள் குறிப்பிடப்படுகின்றன: தேற்றா மற்றும் கொன்றை.

இந்த இரண்டு மரங்களுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு, வெயில்காலத்தில் எத்தனை வெப்பம் வந்தாலும் பரவாயில்லை, அவை தாங்கிக்கொள்ளும்.

பின்னர், மழை வந்தவுடன், சட்டென்று இந்த மரங்கள் நன்கு செழிப்பாக வளரத் தொடங்கிவிடும். அவற்றில் ஏராளமான பூக்கள் மலரும்.

இந்தக் காட்சியைக் காதலிக்குக் காட்டுகிறாள் தோழி, அதுவும் ‘தேற்றா, கொன்றை மரங்கள் பூத்துவிட்டன’ என்று சொல்லாமல் ‘மென் பிணி அவிழ்கின்றன’ என்கிறாள், அதாவது, இப்போதுதான் மெதுவாகக் கட்டவிழ்ந்து மலர்கின்றன, வெயில் காலத்தின் சூடு இன்னும் முழுமையாகத் தணியவில்லை. கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

3. இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய

’கயிறு திரித்து’ என்று சொல்வார்கள், அதென்ன ‘இரும்பு திரித்து’?

இரும்பை நன்கு சூடாக்கினால், அதை நாம் திரிக்கமுடியும், அதாவது முறுக்கிவிடமுடியும். அப்படி முறுக்கிவிட்ட இரும்பைப்போன்ற கொம்புகளைக் கொண்ட இரலை மான் என்று வர்ணிக்கிறார் குறுங்குடி மருதனார்.

சாதாரணமாகப் பார்த்தால், இது ஓர் அழகான உவமை. ஆனால் இதை எங்கே, எதற்காகப் பயன்படுத்துகிறார் என்று பார்க்கும்போது, அது அற்புதமான உவமையாக மாறிவிடுகிறது.

இரும்பைச் சூடாக்கும்போது, ஏராளமான வெப்பம் வரும், அதற்கு, பூமியை வெம்மையில் மூழ்கடிக்கிற வெய்யில்காலத்தை ஒப்பிடலாம்.

அடுத்து, அந்த இரும்பை நீரில் மூழ்கடித்துக் குளிரவைப்பார்கள், அப்போது வெப்பம் குறையும், இதற்கு (இப்போது பிறந்திருக்கும்) கார்காலத்தை ஒப்பிடலாம்.

நெருப்பில் காய்ச்சிய இரும்பைத் திரித்து, அதைத் தண்ணீரில் மூழ்கடித்தாலும், அதன் வெப்பம் உடனே தணிந்துவிடாது, சிறிது நேரம் அப்படியே வெப்பம் இருக்கும்.

அதுபோல, இந்த மான் வெய்யில்காலம்முழுவதும் காட்டில் அங்கும் இங்கும் திரிந்தது, அதன் கொம்புகள்கூட சூடாகிவிட்டன, இப்போது மழைக் காலத்தில் தண்ணீர் பொழிந்து அந்தக் கொம்புகளை நனைக்கிறது, ஆனாலும் சூடு முழுவதுமாகத் தணியவில்லை, இன்னும் இருக்கிறது.

அப்படியானால் என்ன அர்த்தம்? மழை பொழியத் தொடங்கி இன்னும் நெடுநேரமாகிவிடவில்லை, இப்போதுதான் கார்காலம் தொடங்கியிருக்கிறது!

4. இரலை தெறிப்ப

இரலை மான்கள் தண்ணீரைப் பார்த்துத் துள்ளிக் குதிக்கின்றன. ஏன்?

நாம் ஒரு வீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம். கையில் ஒரு கிலோ லட்டு.

அதைப் பார்த்தவுடன், குழந்தைகள் துள்ளிக் குதித்து ஓடிவருகிறார்கள். நாம் தரும் லட்டை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ‘இன்னும் இன்னும்’ என்று ஆசையாகக் கேட்கிறார்கள்.

மறுநாள், அதே வீடு, இன்னொரு கிலோ லட்டு.

இப்போதும், குழந்தைகள் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். ஆனால் அந்த வேகம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

இப்படி ஏழெட்டு நாள் தினந்தோறும் ஒரு கிலோ லட்டு வாங்கிச் சென்றால், அவர்களுக்குத் திகட்டிவிடும், ’எப்போதும் வீட்டில் லட்டு இருக்கிறது, அப்புறமென்ன?’ என்று நினைத்துவிடுவார்கள்.

ஆக, ஒரு பொருள் இல்லாமல் இருந்து (அல்லது, நீண்ட நாள் இல்லாமல் இருந்து) திடீரென்று கிடைத்தால்தான் உற்சாகம் வரும், துள்ளிக் குதிப்போம். பின்னர் we take it for granted.

இந்த மான்களும் அப்படிதான், இத்தனை நாளாக வெய்யிலில் அலைந்துவிட்டு, திடீரென்று தண்ணீரைப் பார்த்தவுடன், துள்ளிக் குதிக்கின்றன.

ஆக, கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, அதனால்தான் அவை துள்ளுகின்றன. இன்னும் சில நாள்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் கிடைக்கும், ஆகவே, அவற்றுக்கு இத்தனை உற்சாகம் வராது.

மான்களின் அதீத உற்சாகத்தைக் காண்பித்து, அதன்மூலம் ’கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது’ என்று விளக்குகிறாள் தோழி.

5. மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்பக்

இந்த வரிக்கு நேரடிப் பொருள், ‘உலகம்முழுவதும் (தண்ணீர் இல்லாமல்) நேர்ந்த துன்பம் / வருத்தம் தீர’.

ஆனால் இங்கே ‘புறக் கொடுப்ப’ என்ற வார்த்தைக்கு இன்னும் நுணுக்கமாக அர்த்தம் பார்க்கிறார் பேராசிரியர்.

‘புலம்பு புறக் கொடுப்ப’ என்றால், துன்பம் / வருத்தம் முழுமையாகத் தீர்ந்துவிட்டது என்று பொருள் இல்லை, தீரத் தொடங்கியிருக்கிறது என்றுதான் பொருள்.

அதாவது, தண்ணீர் இல்லாத கஷ்டம் இப்போதுதான் தீர ஆரம்பித்திருக்கிறது, ஏனெனில், கார்காலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்துதான் அந்தக் கஷ்டம் முழுமையாகத் தீரும்.

6. கருவி வானம் கதழ் உறை சிதறிக் கார் செய்தன்றே கவின் பெறு கானம்

மின்னல் போன்றவற்றைக் கொண்ட வானம் / மேகம் விரைவாகத் துளிகளைச் சிந்துகிறது, அதன்மூலம் மழை பொழிந்து காட்டுக்கே அழகு சேர்க்கிறது.

அறிவியல்ரீதியில் பார்த்தால், கருத்த மேகத்தின்மீது காற்று படுகிறது, அது துளிகளைச் சிந்துகிறது. ‘முதல் மழை’ என்பார்களே, அதுதான்.

தோழி சொல்லும் இந்த வரிகள் அந்தக் காட்சியைதான் காண்பிக்கின்றன. ’இப்பதான் மேகத்துலேர்ந்து முதல் மழைத் துளியே விழுந்திருக்கு’ என்று அடித்துவிடுகிறாள் அவள்.

இத்தனை பாடும் எதற்காக?

ஒரே காரணம்தான். ‘மழை வந்துடுச்சு, அவன் இன்னும் வரலையேன்னு நினைச்சுக் கவலைப்படாதே தாயி, இன்னும் மழைக்காலம் முழுமையாத் தொடங்கலை!’ என்று அவளை நம்பச் செய்யவேண்டும். காதலி வருத்தப்படக்கூடாது என்பதற்காகதான் இத்தனை மெனக்கெடுகிறாள் அந்தத் தோழி!

வெறுமனே ‘மழைக்காலம் இன்னும் தொடங்கலை’ என்றூ சொன்னால் ஆச்சா? அதற்குப் பல சாட்சிகளை நுணுக்கமாக அடுக்குகிறாள் அவள், ‘இதோ, இந்த முல்லை அரும்புகளைப் பாரு, இன்னும் கூர்மையா ஆரம்ப நிலைல இருக்கு, தேற்றா, கொன்றைல இப்பதான் பூக்கள் மலர ஆரம்பிச்சிருக்கு, இரலை மானோட கொம்புகள்ல இன்னும் சூடு தணியலை, மேகத்துல முதல் துளியே இப்பதான் விழுந்திருக்கு, அதனால, காட்டோட தண்ணீர்க் கஷ்டம் இன்னும் முழுமையாத் தீரலை, அந்த மான்கள் புதுசாக் கண்ணுல பட்ட கொஞ்சூண்டு தண்ணீரையே கொண்டாட்டமா ரசிக்குது.’

‘இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இப்பதான் மழைக்காலம் ஆரம்பிச்சிருக்கு, உன் காதலனுக்குக் கொஞ்சம் Grace Period கொடு, இதோ வந்துடுவான்.’

இப்படிச் சொல்லிவிட்டு, அடுத்த பத்து வரிகளில் அவன் வரும் காட்சியை விவரிக்கிறாள் தோழி. அது இன்னொரு தனிக் கட்டுரைக்குரிய மேட்டர்!

சங்க இலக்கியங்களைப் புதிதாகப் படிக்கிற சிலர், ‘வளவளன்னு என்ன வர்ணனை வேண்டிக்கிடக்கு? நேரா மேட்டருக்கு வந்து 140 எழுத்துக்குள்ளே சொன்னாப் போதாதா?’ என்று சொல்வது வழக்கம். இவர்களுக்காகவே வர்ணனைகளைச் சுருக்கி (அல்லது வெட்டி) பாடலின் மையக் கருத்தைமட்டும் உரையாகப் பதிவு செய்யும் நூல்கள்கூட இருக்கின்றன.

என்னைப்பொறுத்தவரை இதுமாதிரி நூல்களை எழுதுகிறவர்கள், வாசிக்கிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். தாம் இழப்பது என்ன என்பதுகூட அவர்களுக்குத் தெரியப்போவதில்லை!

***

என். சொக்கன் …

11 03 2013

பின்குறிப்பு:

இந்தப் பதிவைப் பிரசுரித்தபின் ‘இதுமாதிரி நூல்களை எழுதுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்’ என்ற வரையறையில் நானும் உண்டு என்று சுட்டிக்காட்டினார் ஒரு நண்பர்.

உண்மைதான். மணிமேகலையின் கதைப்பகுதியைமட்டும் நான் ஒரு நூலாக எழுதியிருக்கிறேன். அதில் எத்தனையோ அழகான வர்ணனைகள், உவமைகள், விவாதங்கள், முழுப் பாடல்கள்கூட விடுபட்டிருக்கும்தான். Guilty as charged 🙂

இதற்குப் பரிகாரமாக, வாய்ப்புக் கிடைக்கும்போது முழுமையான ‘மணிமேகலை’ உரை ஒன்றை எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்ஷா புத்தா!

பொதுவாக எல்லாக் கதவுகளிலும் ஒருபக்கம் ‘Push’ என்றும், இன்னொருபக்கம் ‘Pull’ என்றும் எழுதியிருப்பார்கள். இதைத் தமிழில் தள்ளு, இழு என்று மொழிபெயர்ப்பார்கள், அரசாங்க அலுவலகக் கதவுகளில் ‘தள்ளு’ என்றுமட்டும்தான் எழுதியிருக்கும் என்கிற ஜோக்கூட இருக்கிறது.

ரயில் எஞ்சின்களிலும் Push, Pull வித்தியாசம் உண்டு. ஒரு வகை எஞ்சின், ரயிலின் முன்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளை இழுத்துச் செல்லும். இன்னொரு வகை எஞ்சின், ரயிலின் பின்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளத் தள்ளிச் செல்லும். இவை இரண்டுமே கொண்டிருக்கும் ரயில்களை ‘Push Pull Trains’ என்று அழைப்பார்கள்.

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் ஒரு பகுதி. சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்’ படத்திலும் இதே காட்சி வரும்.

பாண்டியனின் சபை. வடக்கேயிருந்து ஹேமநாத பாகவதர் என்று ஒருவர் வருகிறார். பாடுகிறார். ‘என்னைப்போல் பாடுவதற்கு உங்களுடைய பாண்டிய நாட்டில் யாரேனும் உண்டா?’ என்று கர்வத்துடன் கேட்கிறார்.

உடனே, பாண்டியனுக்கு மீசை துடிக்கிறது. தன்னுடைய சபையில் இருக்கும் பாணபத்திரர் என்கிற இசைக் கலைஞர், பாடகரைக் கூப்பிடுகிறான், ‘நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ, எனக்குத் தெரியாது, நீ இந்தாளைப் பாட்டுப் போட்டியில ஜெயிச்சாகணும்’ என்று கட்டளை இடுகிறான்.

‘உத்தரவு மன்னா’ என்கிறார் பாணபத்திரர். ’நாளைக்கே பாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள், இந்தப் பாகவதரை ஒரு வழி பண்ணிவிடுகிறேன்.’

பாணபத்திரர் வீடு திரும்பும் வேளையில், கடைத்தெருவில் யாரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள். அபாரமான குரல், மிக நேர்த்தியாகப் பாடுகிறார்கள்.

‘யார் இது?’ என்று விசாரிக்கிறார் பாணபத்திரர்.

‘ஹேமநாத பாகவதர்ன்னு வடக்கேயிருந்து வந்திருக்காரே, அவரோட சிஷ்யப் புள்ளைங்க!’

பாணபத்திரர் அதிர்ந்துபோகிறார், ‘சிஷ்யர்களே இப்படித் தூள் கிளப்புகிறார்கள் என்றால், அந்தக் குருநாதர் எப்படிப் பாடுவாரோ! அவரை நான் எப்படிப் போட்டியில் ஜெயிப்பது?’

குடுகுடுவென்று சிவன் கோயிலுக்கு ஓடுகிறார் பாணபத்திரர். ‘உம்மாச்சி, காப்பாத்து!’

உடனடியாக, சிவன் பூமிக்கு இறங்கி வருகிறார், ஹேமநாத பாகவதர் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்கிறார். பிரமாதமாக ஒரு பாட்டுப் பாடுகிறார்.

திகைத்துப்போன ஹேமநாத பாகவதர் வெளியே வந்து, ‘நீ யாருய்யா?’ என்று விசாரிக்கிறார்.

‘நான் பாணபத்திரரோட அடிமை’ என்கிறார் சிவன். ‘அவர்கிட்ட பாட்டுக் கத்துக்கலாம்ன்னு போனேன், அவர் என் குரலைக் கேட்டுட்டுத் தேறாதுன்னு ரிஜெக்ட் பண்ணிட்டார். அடுத்து சூப்பர் சிங்கர் போட்டில சேரலாமான்னு யோசிக்கறேன்.’

ஹேமநாத பாகவதருக்கு அதிர்ச்சி, ‘பாணபத்திரர் நிராகரித்த குரலே இத்தனை பிரமாதமாக இருக்கிறதே, அவருடைய குரல் எப்படி இருக்குமோ!’ என்று யோசித்து நடுங்குகிறார், ராத்திரியோடு ராத்திரியாக சொந்த ஊருக்கு ஓடிவிடுகிறார்.

சரியாக இந்த இடத்தில் வரும் ஒரு பாட்டு:

மடக்கு பல் கலைப் பேழையும், மணிக்கலம், பிறவும்
அடக்கும் பேழையும், கருவி யாழ்க்கோலும் ஆங்கே ஆங்கே
கிடக்க, மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து
நடக்க, உத்தர திசைக்கணே நாடினான், நடந்தான்.

வடக்கே இருந்து வந்த ஹேமநாத பாகவதரிடம் நிறைய பெட்டி, படுக்கைகள் இருக்குமல்லவா? பலவகை ஆடைகளை மடித்துவைத்திருக்கிற ஒரு பெட்டி, நகைகள், மற்ற பொருள்களை வைத்துள்ள இன்னொரு பெட்டி, யாழ் முதலான இசைக் கருவிகள் என அந்த மாளிகைமுழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு செல்லக்கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படியே போட்டபடி போட்டுவிட்டு, வடக்கு திசையை நோக்கி ஓடுகிறார் ஹேமநாத பாகவதர்.

அவர் தானாக ஓடவில்லை, மானமும் பயமும் அவரை முன்னாலிருந்து ‘இழுத்து’ச் செல்கின்றன. அதாவது, ஹேமநாத பாகவதரும் அவரது சிஷ்யர்களும் ரயில் பெட்டி, பாணபத்திரரிடம் தோற்றுவிடுவோமோ என்கிற பயமும் அவமான உணர்வும் முன்னாலிருந்து இழுக்கும் Pull எஞ்சின்.

ஹேமநாதரை அப்படியே விட்டுவிட்டு, கம்ப ராமாயணத்துக்குச் செல்வோம். அங்கே அயோத்தி நகரத்தின் அழகை வர்ணிக்கும் ஒரு பாடல்:

உமைக்கு ஒருபாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெரும் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர் அது காண்பான்,
அமைப்பு அரும் காதல் அது பிடித்து உந்த, அந்தரம் சந்திர ஆதித்தர்
இமைப்பு இலர், திரிவர், இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது, மற்று யாதோ!

உமை(பார்வதி)க்குத் தன் உடலின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமான், திருமகள், நிலமகள் என இருவரை மணந்துகொண்ட திருமால், தாமரைப் பூமீது பொறுமையே செல்வமாகத் தவம் செய்யும் பிரம்மா, இந்த மூவராலும்கூட, இந்த அயோத்திக்கு இணையாக ஒரு நகரத்தைச் சொல்லமுடியாது.

இங்கே ‘கமை’ என்றால் பொறுமை. ‘கம்முன்னு கிட’ என்கிறோமே, அதுவும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியவில்லை.

இருக்கட்டும், பாடலின் அடுத்த இரண்டு வரிகள்தான் நமக்கு முக்கியம்.

அயோத்திமீது சூரியனும் சந்திரனும் ஒருவர்மாற்றி ஒருவர் உலவிக்கொண்டே இருக்கிறார்களாம், கண் இமைக்காமல் அந்த நகரத்தைப் பார்த்து ரசிக்கிறார்களாம்.

இது என்ன ஒரு பெரிய விஷயமா? எல்லா ஊர்மீதும் சூரியன், சந்திரன் மாறி மாறி வரதானே செய்யும்?

ஆனால், அயோத்தி கொஞ்சம் ஸ்பெஷல். மற்ற ஊர்கள்மீது சூரியன், சந்திரன் தானாக வரும், ஆனால் அயோத்தியின்மீது, அவற்றை யாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்.

யார்?

ஆசைதான்! இப்பேர்ப்பட்ட சிறப்பு நிறைந்த நகரத்தைப் பார்க்கவேண்டும் என்ற காதல் பின்னாலிருந்து உந்தித் தள்ள, சூரியனும் சந்திரனும் அயோத்திமீது எப்போதும் திரிந்துகொண்டே இருக்கிறார்களாம்.

ஆக, இங்கே சூரியனும், சந்திரனும் ரயில் பெட்டிகள், அயோத்தியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை, அவற்றைப் பின்னாலிருந்து தள்ளும் Push எஞ்சின்.

இப்போது, மீண்டும் திருவிளையாடல் புராணத்துக்குத் திரும்புவோம். இன்னொரு பாண்டிய அரசன், சிவபெருமானை வணங்கச் செல்கிறான். அந்தக் காட்சியில் வரும் பாடல்:

அன்பு பின் தள்ள முன்பு வந்து அருள்கண் ஈர்த்து ஏக
என்பு நெக்கிட ஏகி, வீழ்ந்து, இணையடிக் கமலம்
பொன் புனைந்த தார் மௌலியில் புனைந்து எழுந்து இறைவன்
முன்பு நின்று சொற்பதங்களால் தோத்திரம் மொழிவான்.

சிவன்மீது வைத்துள்ள அன்பு, அரசனைப் பின்னாலிருந்து தள்ளுகிறது, அதேசமயம் இறைவனுடைய அருள் பார்வை அவனை முன்னாலிருந்து இழுக்கிறது, எலும்பு உருகும்படி செல்கிறான், வணங்குகிறான், கிரீடமும், மாலையும் சூடிய தன்னுடைய தலையில் சிவபெருமானின் திருவடித் தாமரைகளைச் சூடிக்கொண்டு எழுகிறான், இறைவன்முன்னால் நின்று அவனைப் போற்றித் துதிக்கிறான்.

இங்கே அன்பு, இறைவனின் பார்வை என்று இரண்டு எஞ்சின்கள். ஒன்று பின்னாலிருந்து தள்ளுகிறது, இன்னொன்று முன்னால் இருந்து இழுக்கிறது, Push Pull Train, Very Effective!

***

என். சொக்கன் …

06 03 2013

நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.

‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’  வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.

அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.

இன்னும் சில உதாரணங்கள்:

  • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
  • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
  • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
  • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.

இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.

மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.

  • செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
  • பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
  • மங்குநர் (மங்குபவர்)
  • உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
  • உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
  • திரிகுநர் (திரிபவர்)
  • வாங்குநர் (வாங்குபவர்)
  • காக்குநர் (காப்பாற்றுபவர்)
  • நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
  • காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
  • வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
  • செய்குநர் (செய்பவர்)
  • மகிழ்நர் (மகிழ்பவர்)
  • உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
  • அறிகுநர் (அறிந்தவர்)
  • கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
  • அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
  • ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
  • உணர்குநர் (உணர்பவர்)
  • சோருநர் (சோர்வடைந்தவர்)
  • செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
  • ஆகுநர் (ஆகிறவர்)
  • வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
  • மறைக்குநர் (மறைக்கிறவர்)
  • புரிகுநர் (செய்பவர்)
  • ஆடுநர் (ஆடுபவர்)
  • பாடுநர் (பாடுபவர்)
  • இருக்குநர் (இருக்கின்றவர்)
  • இடிக்குநர் (இடிக்கின்றவர்)
  • முடிக்குநர் (முடிக்கின்றவர்)
  • தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
  • வீழ்குநர் (வீழ்பவர்)
  • என்குநர் (என்று சொல்கிறவர்)
  • தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
  • கொல்லுநர் (கொல்பவர்)
  • இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
  • சாருநர் (சார்ந்திருப்பவர்)
  • உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)

முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!

ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂

***

என். சொக்கன் …

01 03 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,749 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031