மனம் போன போக்கில்

நேற்று ட்விட்டரில் வழக்கமான அரட்டையின் நடுவே நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.

‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’  வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.

அப்போது இன்னொரு நண்பர் இதற்கான இலக்கண விதியொன்றைத் தேடிக் கொடுத்தார்: ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.

இன்னும் சில உதாரணங்கள்:

 • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
 • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
 • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
 • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

இந்தச் சூத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருந்தது. கூடவே, இதை வைத்துப் புதுச் சொற்களையும் புனையமுடியும் என்று புரிந்தது. கொஞ்சம் விளையாட்டாகப் பேசினோம், ‘எழுதுபவரை எழுத்தாளர் என்று அழைக்கிறோம், மேற்சொன்ன விதிப்படி அது எழுதுநர்’ என்றல்லவா வரவேண்டும்?’

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சூத்திரத்தின்படி தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களையும் ‘நர்’ விகுதி கொண்ட சொற்களாக மாற்றமுடியும், உதாரணமாக, பாடுநர், ஆடுநர், செலுத்துநர்… இப்படி.

இதையெல்லாம் கேட்பதற்கு ஒருமாதிரி இருந்தாலும், அவை நம் பழக்கத்தில் இல்லை என்பதால்தான் அப்படி. பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

தமிழில் வார்த்தை வளம் என்றால், கம்ப ராமாயணம்தான். அதில் இந்த ‘நர்’ விகுதிச் சொற்கள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று அறிய விரும்பினேன். கொஞ்சம் தேடினேன்.

மொத்தம் 38 இடங்களில் ’நர்’ விகுதிச் சொற்களைப் பயன்படுத்துகிறார் கம்பர். இவற்றில் பல, நாம் பயன்படுத்தாத, ஆனால் உடனே ஏற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய தன்மை வாய்ந்தவை என்பதுதான் விசேஷம்.

 • செறுநர் (செறுதல் : எதிர்த்தல் / மாறுபடுதல், செறுநர் : எதிரி)
 • பொருநர் (பொருதல் : சண்டையிடுதல், பொருநர் : சண்டை இடுபவர்)
 • மங்குநர் (மங்குபவர்)
 • உழக்குநர் (உழக்குதல் : கலக்குதல், உழக்குநர் : கலக்குபவர்)
 • உலக்குநர் (உலத்தல் : அழிதல், உலக்குநர் : அழிபவர்)
 • திரிகுநர் (திரிபவர்)
 • வாங்குநர் (வாங்குபவர்)
 • காக்குநர் (காப்பாற்றுபவர்)
 • நிலைநாட்டுநர் (நிலை நாட்டுபவர்)
 • காட்டுநர் (காட்டுபவர், இங்கே பிரம்மனைக் குறிக்கிறது, உயிர்களை உருவாக்கிக் காட்டுபவர்)
 • வீட்டுநர் (வீழ்த்துபவர் / அழிப்பவர்)
 • செய்குநர் (செய்பவர்)
 • மகிழ்நர் (மகிழ்பவர்)
 • உய்குநர் (உய்தல் : பிழைத்தல், உய்குநர் : பிழைப்பவர்)
 • அறிகுநர் (அறிந்தவர்)
 • கொய்யுநர் (கொய்தல் : பறித்தல், கொய்யுநர் : பறிப்பவர்)
 • அரிகுநர் (அரிதல் : வெட்டுதல், அரிகுநர் : வெட்டுபவர்)
 • ஊருநர் (ஊர்தல் : குதிரைமேல் ஏறிச் செல்லுதல், ஊருநர் : குதிரை ஓட்டுபவர்)
 • உணர்குநர் (உணர்பவர்)
 • சோருநர் (சோர்வடைந்தவர்)
 • செருக்குநர் (கர்வம் கொண்டவர்)
 • ஆகுநர் (ஆகிறவர்)
 • வாழ்த்துநர் (வாழ்த்துகிறவர்)
 • மறைக்குநர் (மறைக்கிறவர்)
 • புரிகுநர் (செய்பவர்)
 • ஆடுநர் (ஆடுபவர்)
 • பாடுநர் (பாடுபவர்)
 • இருக்குநர் (இருக்கின்றவர்)
 • இடிக்குநர் (இடிக்கின்றவர்)
 • முடிக்குநர் (முடிக்கின்றவர்)
 • தெறுகுநர் (தெறுகுதல் : சண்டையிடுதல், தெறுகுநர் : எதிர்த்துப் போர் செய்கிறவர்)
 • வீழ்குநர் (வீழ்பவர்)
 • என்குநர் (என்று சொல்கிறவர்)
 • தெழிக்குநர் (தெழித்தல் : அதட்டுதல், தெழிக்குநர் : அதட்டுகிறவர்)
 • கொல்லுநர் (கொல்பவர்)
 • இயங்குநர் (இயங்குபவர், கவனியுங்கள் ‘இயக்குநர்’ வேறு, அவர்கள் இயக்குவதற்கு ஏற்ப ‘இயங்குநர்’ வேறு)
 • சாருநர் (சார்ந்திருப்பவர்)
 • உய்யுநர் (பிழைத்திருப்பவர், உய்குநர்போலவே)

முக்கியமான விஷயம், ஒரு வேலையைச் செய்கிறவர் என்ற அர்த்தம் வரும்போது கம்பர் ஓர் இடத்தில்கூட ‘னர்’ விகுதியைச் சேர்க்கவே இல்லை. எல்லாம் ‘நர்’தான்!

ஆகவே, இனி ‘ஓட்டுநர்’, ‘இயக்குநர்’, ‘ஆளுநர்’ என்றே எழுதுவோம் 🙂

***

என். சொக்கன் …

01 03 2013

Advertisements

16 Responses to "நர்"

எழுத்தை ஆள்பவர் என்ற பொருள்பட எழுத்தாளர் என்று ஆகியிருக்கலாம்.

இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்களையெல்லாம் எழுதுதற்பொடுட்டு தங்களுக்கு ’இவ்வாண்டின் சிறந்த கலக்குநர்’ விருது அளிக்கிறேன்.

Sir. What is the meanung of ‘Pithamagan’ ? Where / how this is to be used? People used this just like to flatter anybody, I observe. Pl enligheten me.

Its a sanskrit word, Pitamah means Grandfather, Now used for anyone senior / great in a field

நேத்து இந்த டிஸ்கஷனைக் கவனிக்கலையேன்னு நினைச்சேன். பரவாயில்லை. பதிவாகவே போட்டுட்டீங்க. நன்றி.

எழுத்தரை(Clerk) எழுதுநர் என்றும் அழைப்பார்கள் அல்லவா?
ஆளர் விகுதி பெயர்ச் சொல்லுடன் தான் வருமோ? (எழுத்தாளர்,வாக்காளர்,வேட்பாளர்,கணக்காளர்,பதிவாளர்,பொருளாளர்,செயலாளர்)

நல்ல பதிவு. நன்றி பத்ரி.

“நர்” விளக்கம் தந்த
நல்லறிஞரே!
நம்மாளுகள்
நற்றமிழ் பேச உதவிடும்
பதிவிது!
எழுதுங்கள்
இன்னும் பல
இலக்கணத் துளிகளை!

உய்தல் என்றால் ‘போக்குதல், நீக்குதல்’ என்று நினைத்திருந்தேன். (இடருய்தி)

உய்குநர் , உய்யுநர் … நுட்பமான பொருள் மாறுபாடுகள் தமிழின் மேன்மையை எண்ணி வியக்கும்படி.

கம்ப ராமாயணத்திலிருந்து எடுத்துக் காட்டிய 38-ம் புழக்கத்துக்கு கொணருவோம்.

//வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.// தமிழின் எளிமை வெகு இனிமை!

உபயோகமான பேச்சு… எல்லோருக்குமாக.

இப்படியே “ஞர்” பதிவும் ஒன்னு போட்டுருங்க;

தமிழில், “ஏவல்” வினை-ன்னு ஒன்னு இருக்கு! (பில்லி சூனிய ஏவல் அல்ல:)
கொஞ்சம் உன்னிப்பாக் கவனிச்சாத் தெரியும் = “உ & இ”

* ஓட்டு, நடத்து = ஓட்டு-நர், நடத்து-நர்
* அறி, வறி = அறி-ஞர், வறி-ஞர்

“உ” வரும் இடத்தில் எல்லாம், பெரும்பாலும் “நர்” வரும்
“இ” வரும் இடத்தில் எல்லாம், பெரும்பாலும் “ஞர்” வரும்
—-

தமிழில் பெரும்பாலான வினைகள், “உ”/ “இ” -ன்னு தான் முடியும்;
Ex: சொல்லு, கூறு, இயக்கு, நடத்து,
அறி, உறி, செரி, தரி
+ நீங்கள் பதிவில் இட்டுள்ள அத்தனை கம்ப இராமாயண வினைகளும்:)

அப்படி என்ன “உ/இ” -க்கும், வினைக்கும் தொடர்பு?
அதான் தமிழ் மொழியின் அழகியல்;
தமிழ் எழுத்து நெடுங்கணக்கு = வரிசை வச்சதே, ஒரு scientific/ mathematical அடிப்படையில் தான்; இன்னோரு நாளு சொல்லுறேன்;

சொற்பமாக, “அ” வில் முடிவதும்/ மெய் எழுத்தில் முடிவதும் உண்டு,
Ex: நட, கட, செல், கொல்
ஆனா, இதையும் நடவு, கடவு, செல்லு, கொல்லு -ன்னு, “உ”கர வினைகளா ஆக்க இயலும்;
—-

நர் – ஞர் : இன்னொன்னும் கவனிங்க:
இதுல ஐ, ஒள என்பதும் உண்டு!
கலை = கலை-ஞர்; சுவை = சுவை-ஞர்

ஐ = இ-க்கு இனவெழுத்து;
அதனால் ஐ வரும் இடத்தில் கூட “ஞர்” தான் வரும்; கொலை-ஞர்; கை-வினை-ஞர் etc

மொழியாக்கம் செய்யும் போது மட்டும், கொஞ்சம் கவனமா இருக்கோணும்;
* Direct = இயக்கு – இயக்குநர் சரியே!
* ஆனா Directorate = இயக்குநரகம் -ன்னு சிலரு ஆக்கிடறாங்க; இது இயக்கு + “நரகம்” -ன்னும் ஆயீரும்:))

Govt Office எல்லாம் மக்கள் வாழ்க்கையில், நரகத்தைத் தானே இயக்குது?
அதனால் இயக்கு + “நரகம்” சரியே -ன்னு கிண்டல் செய்யலாம்; ஆனா மொழி வளம் அப்படியல்ல!:)

Direct = இயக்கு
Direct-or = இயக்கு-நர்;
Direct-orate = இயக்ககம் (இயக்கு+அகம்)

@npodiyan

//ஆளர் விகுதி பெயர்ச் சொல்லுடன் தான் வருமோ?//
(எழுத்தாளர்,வேட்பாளர்,பதிவாளர்,பொருளாளர்,செயலாளர்)

பலவற்றுக்கும், “ஆளர்” விகுதி சேர்த்துக் கொள்வது, சற்றே பின்னாளைய வழக்கம்;
பெயர்ச் சொல்லுக்கு மட்டுமே “ஆளர்” போடணும் -ன்னு அவசியம் இல்லை;

* எழுத்து – எழுத்தாளர்
* கவி – கவியாளர் -ன்னு சொல்வதில்லையே? கவி-ஞர் தானே?:)

மேலும், வினைச் சொல்லுக்கும் “ஆளர்” உண்டு! வேள் = வேள்+ஆளர் = வேளாளர்/ வேளாண்மை
வேள் -ன்னா, விழை/விரும்பு -ன்னு வினைச்சொல்;

நீங்க குடுத்த எடுத்துக்காட்டிலேயே, பலவும் வினைச் சொல்லு தான்:)
*எழுத்தாளர் = எழுது (எழுத்து)
*வேட்பாளர் = வேள்
*பதிவாளர் = பதி
*செயலாளர் = செய்
——-

அதாச்சும், தமிழில் 90% வினைச் சொல்லு தான்:) Only Action, Not just Talk:)

இடுகுறிப் பெயர், காரணப் பெயர் -ன்னு ரெண்டு வகை;
* யானை -ன்னு நாமா ஒரு பேரை இட்டா = அது இடு-குறி (இட்டுக் குறிப்பது)
* முருகன் -ன்னா = காரணப் பெயர் (இளமை/அழகில், முருகுவதால்; முருகுதல்=tenderness, முருகொடு வளைஇ)

பாத்தீங்க-ன்னா, எல்லா வினைச் சொல்லும், இடு-குறியாத் தான் இருக்கும்!
ஆனா, அதில் இருந்து, பலப்பல சொல்லு எழும்; அத்தனையும் காரணப் பெயர்!

பறப்பதால் = பறவை
கறப்பதால் = கறவை
தோய்ப்பதால் = தோசை
வடுப்பதால் (வட்டமாய்) = வடை
அடுப்பதால் = அடுப்பு
உடுப்பதால் = உடுப்பு

இப்பிடி எல்லாமே காரணப் பெயர் தான்;
அத்தனைக்கும் “வினைச்சொல்” தான் மூலம்!
——-

சொக்கன் குடுத்த ஒரு சொல்லையே எடுத்துப்போம் = நடத்து-நர்
* நட = இதான் வினைச் சொல்!
* நடப்பு, நடனம், நடத்து, நடத்துநர், நடவு, நடை(பாதை), நடல், நடங்கம், நடவை(வேளாண்மை) -ன்னு பலப்பல சொற்கள் உருவாகும்;

அப்படித் தான் நீங்க கேட்ட பெயர்ச் சொல்லும்!
ஒரு பெயர்ச் சொல்லைப் பிடிச்சிக்கிட்டே போனீங்க-ன்னா, கடைசீல அது ஒத்தை வினைச் சொல்லில் கொண்டு போய் ஒங்கள விட்டுரும்:)

“தமிழ்” என்பதே ஒரு வகையில் வினைச் சொல்லு தான்:)
இனிமையும், நீர்மையும் தமிழெனல் ஆகும் -ன்னு நிகண்டு;
இப்படி நீர்மையில் நம்மையெல்லாம் “அமிழ்”த்துவதால் = தமிழ்!

அ, இ, உ or மெய்யெழுத்தில் தான், பெரும்பாலான வினைகள் முடியும் -ன்னு சொன்னேன்-ல்ல?

அதுலயும், ஏவல் வினை, வியங்கோள் வினை -ன்னு, முடிப்புக்களும் உண்டு!
* ஏவல் -ன்னா ஏவுறது
* வியங்கோள் -ன்னா, அந்த ஏவலைக் கொள்ளுறது; வியம் (ஏவல்) + கோள் (கொள்ளுதல்)

வாழ் – வாழ்க! (வியங்கோள்)
வாழ் – வாழ்வாய்! (ஏவல்)

ஆனா, “வாழ்” -ன்னு இந்த ஒத்த வினைச் சொல்லு தான், எல்லாத்துக்கும் வேர்;
* வாழ் – வாழு – வாழுநர்
* வாழ் – வாழ்த்து – வாழ்த்துநர்
* வாழ் – வாழ்வு – வாழ்வாளர்
* வாழ் – வாழ்க – வாழ்வாய் – வாழ்வீர் – வாழ்ச்சி – வாழ்கை – வாழ்க்கை
——

இந்த “நர்-ஞர்” நமக்கெல்லாம் நல்ல பழக்கம் தான்;
விடு-நர்; பெறு-நர் -ன்னு school -இல் எத்தினி Letter Writing எழுதி இருப்போம்?
ஆனா பெருசா வளர்ந்த பொறவு, தப்பே பேசிப்பேசி, சரி-ன்னு ஆயிடுறது போல, இயக்கு-னர் -ன்னு ஆயிருச்சோ என்னமோ?:)

கண்டிப்பா, இது “மிகைத்திருத்தம்” அல்ல!
சினிமா-வில் இருந்து வங்கி வரைக்கும், “இயக்கு-நர்” -ன்னு மாத்திக்கறது தான் சரி;
பார்ப்போம், எந்த நல்ல cinema director changes himself to இயக்கு-நர்:) – பாரதிராஜா or வெற்றிமாறன்:)

படகோட்டி,தேரோட்டி,ஆள்காட்டி,நாள்காட்டி,தோட்டி ,ஆள்மயக்கி,மேனாமினுக்கி எல்லாம் தமிழ் இல்லையா
நர் எனபது பண்டைய தமிழில் குறிப்பிட்ட சொற்களுக்கு மட்டும் தானே இருந்தது
இப்போது எல்லாவற்றிற்கும் நம் விருப்பத்திற்கு சேர்த்து கொள்ளலாமா
ஆள்காட்டி விரல் என்பதற்கு பதில் ஆள்காட்டுனர் விரல் என்றா குறிப்பிட முடியும்
இயக்கி எனபது தானே சரியான தமிழ் சொல்லாக இருக்க முடியும்

//ஆள்காட்டி விரல் என்பதற்கு பதில் ஆள்காட்டுனர் விரல் என்றா குறிப்பிட முடியும்?//

மிக நல்ல கேள்வி;

தேர்-ஓட்டுநர், தேர்-ஓட்டி
கார்-ஓட்டுநர், கார்-ஓட்டி
= ரெண்டையும் சொல்லிப் பாருங்க; எது “மரியாதை” மிக்கதா இருக்கு?:)
——

தமிழில், இந்த மரியாதைப் பன்மை விகுதிகள் -ன்னு சில உண்டு! eg: புலவன்-புலவர்
ஆனா, அர் = பலர் பால் விகுதி (தேடி-னர்);
ஆனா மரியாதைக்காக, அதைப் பயன்படுத்தும் வழக்கம் இருப்பதால், “கள்” விகுதி சேர்த்து, புலவர்-கள் -ன்னு பன்மையைக் குறிக்கத் துவங்கினாங்க; Language evolves with life – right?

அதே போல் தான் இந்த “இ” விகுதியும்!
* செல்லுதி = ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி
* செல்லுக = வியங்கோள்
ஏவல்-ல சொன்னா மரியாதைக் குறைச்சல்-ன்னு, “இ” விகுதியை, இடத்துக்குத் தக்கவாறு சொல்லும் வழக்கம் வந்தது;

ஆள்-காட்(டி)
நாள்-காட்(டி) -ன்னு சொன்னா, விரல் (அ) Calendar கோச்சிக்காது;
ஆனா, கார் ஓட்டு-நரை, ஏய் காரோ-ட்டி -ன்னு சொல்லும் போது லேசா இடறுது அல்லவா?:) அதான்!

//இப்போது எல்லாவற்றிற்கும் நம் விருப்பத்திற்கு சேர்த்து கொள்ளலாமா//

சொக்கன் அவர்கள், அப்படிச் சொல்ல வரலை;
அவர் சொல்ல வந்தது, “நர்” விகுதியை, எல்லா வினைகளுக்கும் சேர்க்க “இயலும்” என்பதே!

ஆனா, அப்படி இயன்றாலும், இடத்துக்கு ஏற்றவாறு தான், இந்தச் சேர்த்தலும்!

* மயக்-கி -ன்னு (ஒருத்தியைத்) “திட்டும்” போது சொல்லுவோம்
* மயக்கு-நர் -ன்னு (அனுஷ்காவை) “ரசிக்கும்” போது சொல்லுவோம்; அம்புட்டு தான்!:)

விமான ஓட்டுநர் ,விமான்நர் என்றால் தான் விமானி கோவித்து கொள்வார்.ஆங்கிலத்தில் கூட கார் டிரைவர் போல பிளேன் டிரைவர் கிடையாது.
நம் விருப்பத்திற்கு அனைவருக்கும் மரியாதையை தர முடியுமா.தமிழ் சில தொழில்களை குறைவாக பார்த்து நர் சேர்க்கவில்லை என்றால் சேர்க்கவில்லை தான்
வார்த்தைகளை குறைவாக வைத்தால் பேசுவது எழுதுவதற்கு எளிது அல்லவா
படகோட்டி என்ற சொல்லில் உள்ள இனிமை படகு ஓட்டுநரில் இருக்கிறதா .ஒரு அந்நியத்தன்மை வரவில்லையா

சூப்பர் பதிவு. நான் இன்று எழுத்துப் பிழை செய்தபோது நீங்கள் டைம் லைனில் இருந்து திருத்தியதால் இந்தப் பதிவையும் படிக்க முடிந்தது. இந்த எடுத்துக்காட்டினால் இனி மறக்கவே மராக்காது.

amas32

என்னுடைய கணிணியின் ‘அஞ்சல்’ தமிழ் ‘ந’வை எல்லாஇடத்திலும் அடிக்கிறது என்று நினைத்தேன். பரவாயில்லை பல சொற்களும் சரியாக உள்ளது. நல்ல உபயோகமான பதிவு. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 521 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

 • 451,670 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Advertisements
%d bloggers like this: