Archive for March 6th, 2013
தள்ளு, இழு
Posted March 6, 2013
on:- In: Poetry | Tamil
- 8 Comments
பொதுவாக எல்லாக் கதவுகளிலும் ஒருபக்கம் ‘Push’ என்றும், இன்னொருபக்கம் ‘Pull’ என்றும் எழுதியிருப்பார்கள். இதைத் தமிழில் தள்ளு, இழு என்று மொழிபெயர்ப்பார்கள், அரசாங்க அலுவலகக் கதவுகளில் ‘தள்ளு’ என்றுமட்டும்தான் எழுதியிருக்கும் என்கிற ஜோக்கூட இருக்கிறது.
ரயில் எஞ்சின்களிலும் Push, Pull வித்தியாசம் உண்டு. ஒரு வகை எஞ்சின், ரயிலின் முன்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளை இழுத்துச் செல்லும். இன்னொரு வகை எஞ்சின், ரயிலின் பின்பகுதியில் இருந்து மற்ற பெட்டிகளத் தள்ளிச் செல்லும். இவை இரண்டுமே கொண்டிருக்கும் ரயில்களை ‘Push Pull Trains’ என்று அழைப்பார்கள்.
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் ஒரு பகுதி. சிவாஜி நடித்த ‘திருவிளையாடல்’ படத்திலும் இதே காட்சி வரும்.
பாண்டியனின் சபை. வடக்கேயிருந்து ஹேமநாத பாகவதர் என்று ஒருவர் வருகிறார். பாடுகிறார். ‘என்னைப்போல் பாடுவதற்கு உங்களுடைய பாண்டிய நாட்டில் யாரேனும் உண்டா?’ என்று கர்வத்துடன் கேட்கிறார்.
உடனே, பாண்டியனுக்கு மீசை துடிக்கிறது. தன்னுடைய சபையில் இருக்கும் பாணபத்திரர் என்கிற இசைக் கலைஞர், பாடகரைக் கூப்பிடுகிறான், ‘நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ, எனக்குத் தெரியாது, நீ இந்தாளைப் பாட்டுப் போட்டியில ஜெயிச்சாகணும்’ என்று கட்டளை இடுகிறான்.
‘உத்தரவு மன்னா’ என்கிறார் பாணபத்திரர். ’நாளைக்கே பாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள், இந்தப் பாகவதரை ஒரு வழி பண்ணிவிடுகிறேன்.’
பாணபத்திரர் வீடு திரும்பும் வேளையில், கடைத்தெருவில் யாரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள். அபாரமான குரல், மிக நேர்த்தியாகப் பாடுகிறார்கள்.
‘யார் இது?’ என்று விசாரிக்கிறார் பாணபத்திரர்.
‘ஹேமநாத பாகவதர்ன்னு வடக்கேயிருந்து வந்திருக்காரே, அவரோட சிஷ்யப் புள்ளைங்க!’
பாணபத்திரர் அதிர்ந்துபோகிறார், ‘சிஷ்யர்களே இப்படித் தூள் கிளப்புகிறார்கள் என்றால், அந்தக் குருநாதர் எப்படிப் பாடுவாரோ! அவரை நான் எப்படிப் போட்டியில் ஜெயிப்பது?’
குடுகுடுவென்று சிவன் கோயிலுக்கு ஓடுகிறார் பாணபத்திரர். ‘உம்மாச்சி, காப்பாத்து!’
உடனடியாக, சிவன் பூமிக்கு இறங்கி வருகிறார், ஹேமநாத பாகவதர் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்கிறார். பிரமாதமாக ஒரு பாட்டுப் பாடுகிறார்.
திகைத்துப்போன ஹேமநாத பாகவதர் வெளியே வந்து, ‘நீ யாருய்யா?’ என்று விசாரிக்கிறார்.
‘நான் பாணபத்திரரோட அடிமை’ என்கிறார் சிவன். ‘அவர்கிட்ட பாட்டுக் கத்துக்கலாம்ன்னு போனேன், அவர் என் குரலைக் கேட்டுட்டுத் தேறாதுன்னு ரிஜெக்ட் பண்ணிட்டார். அடுத்து சூப்பர் சிங்கர் போட்டில சேரலாமான்னு யோசிக்கறேன்.’
ஹேமநாத பாகவதருக்கு அதிர்ச்சி, ‘பாணபத்திரர் நிராகரித்த குரலே இத்தனை பிரமாதமாக இருக்கிறதே, அவருடைய குரல் எப்படி இருக்குமோ!’ என்று யோசித்து நடுங்குகிறார், ராத்திரியோடு ராத்திரியாக சொந்த ஊருக்கு ஓடிவிடுகிறார்.
சரியாக இந்த இடத்தில் வரும் ஒரு பாட்டு:
மடக்கு பல் கலைப் பேழையும், மணிக்கலம், பிறவும்
அடக்கும் பேழையும், கருவி யாழ்க்கோலும் ஆங்கே ஆங்கே
கிடக்க, மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து
நடக்க, உத்தர திசைக்கணே நாடினான், நடந்தான்.
வடக்கே இருந்து வந்த ஹேமநாத பாகவதரிடம் நிறைய பெட்டி, படுக்கைகள் இருக்குமல்லவா? பலவகை ஆடைகளை மடித்துவைத்திருக்கிற ஒரு பெட்டி, நகைகள், மற்ற பொருள்களை வைத்துள்ள இன்னொரு பெட்டி, யாழ் முதலான இசைக் கருவிகள் என அந்த மாளிகைமுழுக்க ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன.
அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு செல்லக்கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படியே போட்டபடி போட்டுவிட்டு, வடக்கு திசையை நோக்கி ஓடுகிறார் ஹேமநாத பாகவதர்.
அவர் தானாக ஓடவில்லை, மானமும் பயமும் அவரை முன்னாலிருந்து ‘இழுத்து’ச் செல்கின்றன. அதாவது, ஹேமநாத பாகவதரும் அவரது சிஷ்யர்களும் ரயில் பெட்டி, பாணபத்திரரிடம் தோற்றுவிடுவோமோ என்கிற பயமும் அவமான உணர்வும் முன்னாலிருந்து இழுக்கும் Pull எஞ்சின்.
ஹேமநாதரை அப்படியே விட்டுவிட்டு, கம்ப ராமாயணத்துக்குச் செல்வோம். அங்கே அயோத்தி நகரத்தின் அழகை வர்ணிக்கும் ஒரு பாடல்:
உமைக்கு ஒருபாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெரும் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர் அது காண்பான்,
அமைப்பு அரும் காதல் அது பிடித்து உந்த, அந்தரம் சந்திர ஆதித்தர்
இமைப்பு இலர், திரிவர், இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது, மற்று யாதோ!
உமை(பார்வதி)க்குத் தன் உடலின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமான், திருமகள், நிலமகள் என இருவரை மணந்துகொண்ட திருமால், தாமரைப் பூமீது பொறுமையே செல்வமாகத் தவம் செய்யும் பிரம்மா, இந்த மூவராலும்கூட, இந்த அயோத்திக்கு இணையாக ஒரு நகரத்தைச் சொல்லமுடியாது.
இங்கே ‘கமை’ என்றால் பொறுமை. ‘கம்முன்னு கிட’ என்கிறோமே, அதுவும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியவில்லை.
இருக்கட்டும், பாடலின் அடுத்த இரண்டு வரிகள்தான் நமக்கு முக்கியம்.
அயோத்திமீது சூரியனும் சந்திரனும் ஒருவர்மாற்றி ஒருவர் உலவிக்கொண்டே இருக்கிறார்களாம், கண் இமைக்காமல் அந்த நகரத்தைப் பார்த்து ரசிக்கிறார்களாம்.
இது என்ன ஒரு பெரிய விஷயமா? எல்லா ஊர்மீதும் சூரியன், சந்திரன் மாறி மாறி வரதானே செய்யும்?
ஆனால், அயோத்தி கொஞ்சம் ஸ்பெஷல். மற்ற ஊர்கள்மீது சூரியன், சந்திரன் தானாக வரும், ஆனால் அயோத்தியின்மீது, அவற்றை யாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்.
யார்?
ஆசைதான்! இப்பேர்ப்பட்ட சிறப்பு நிறைந்த நகரத்தைப் பார்க்கவேண்டும் என்ற காதல் பின்னாலிருந்து உந்தித் தள்ள, சூரியனும் சந்திரனும் அயோத்திமீது எப்போதும் திரிந்துகொண்டே இருக்கிறார்களாம்.
ஆக, இங்கே சூரியனும், சந்திரனும் ரயில் பெட்டிகள், அயோத்தியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை, அவற்றைப் பின்னாலிருந்து தள்ளும் Push எஞ்சின்.
இப்போது, மீண்டும் திருவிளையாடல் புராணத்துக்குத் திரும்புவோம். இன்னொரு பாண்டிய அரசன், சிவபெருமானை வணங்கச் செல்கிறான். அந்தக் காட்சியில் வரும் பாடல்:
அன்பு பின் தள்ள முன்பு வந்து அருள்கண் ஈர்த்து ஏக
என்பு நெக்கிட ஏகி, வீழ்ந்து, இணையடிக் கமலம்
பொன் புனைந்த தார் மௌலியில் புனைந்து எழுந்து இறைவன்
முன்பு நின்று சொற்பதங்களால் தோத்திரம் மொழிவான்.
சிவன்மீது வைத்துள்ள அன்பு, அரசனைப் பின்னாலிருந்து தள்ளுகிறது, அதேசமயம் இறைவனுடைய அருள் பார்வை அவனை முன்னாலிருந்து இழுக்கிறது, எலும்பு உருகும்படி செல்கிறான், வணங்குகிறான், கிரீடமும், மாலையும் சூடிய தன்னுடைய தலையில் சிவபெருமானின் திருவடித் தாமரைகளைச் சூடிக்கொண்டு எழுகிறான், இறைவன்முன்னால் நின்று அவனைப் போற்றித் துதிக்கிறான்.
இங்கே அன்பு, இறைவனின் பார்வை என்று இரண்டு எஞ்சின்கள். ஒன்று பின்னாலிருந்து தள்ளுகிறது, இன்னொன்று முன்னால் இருந்து இழுக்கிறது, Push Pull Train, Very Effective!
***
என். சொக்கன் …
06 03 2013