Archive for March 21st, 2013
விக்ரமன்
Posted March 21, 2013
on:- In: Books | Reviews
- 5 Comments
ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும்?
‘இதை ஏண்டா வார நாளில் படிக்க ஆரம்பித்தோம்’ என்று வாசகனை நொந்துகொள்ளச் செய்யவேண்டும், ‘சனி, ஞாயிறு என்றால் ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கலாமே’ என்று ஆதங்கப்படச் செய்யவேண்டும், மற்ற வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டு, ஆஃபீசிலும் வெளியிலும் ’எப்போ வீடு திரும்புவோம், எப்போ மறுபடி வாசிப்போம்’ என்று ஏங்கச் செய்யவேண்டும், ராத்திரி கண் சொக்கத் தூங்கச் சென்றாலும், ’நாலு பக்கம் படித்துவிட்டுத் தூங்கலாமே’ என்று நப்பாசைப்படச் செய்யவேண்டும்.
திரைப்பட இயக்குநர் விக்ரமனின் சுயசரிதை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இவை அனைத்தையும் செய்கிறது, அதற்குமேலும் செய்கிறது.
விக்ரமன் இயக்கிய படங்களில் இரண்டைமட்டுமே நான் பார்த்துள்ளேன், ஆனால் மற்ற எல்லாப் படங்களின் பாடல்களையும் கேட்டு, சின்னத்திரையில் வந்த ’ஓவர் பாசிட்டிவ்’ காட்சிகள், ஹைதர் அலியையே தும்மல் போடவைக்கும் காமெடி(?)களையெல்லாம் நோட்டமிட்டு, அவரது முழு நீள நகல்களாக வந்த பல அஸிஸ்டெண்ட்கள் எடுத்த படங்களையெல்லாம் பார்த்து அவர்மீது ஒரு நக்கலான பிம்பம்தான் வந்திருக்கிறது.
இப்படிப் பெயரைக் கேட்டவுடன் காதுக்குள் ‘லாலாலா’ ஒலிக்கும் ஓர் இயக்குநரின் சுயசரிதையை நான் ஏன் வாங்கினேன், ஏன் வாசிக்க ஆரம்பித்தேன், சுத்தமாகத் தெரியவில்லை. ஒருவேளை, இதைப் படித்துவிட்டு இன்னும் கிண்டலடிக்கலாம் என்று நினைத்திருப்பேனோ என்னவோ.
ஆனால், விக்ரமன்மீது நான் வைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. இதனை எழுதியது அவரேதானா, அல்லது நிருபர் ஒருவர் எழுதினாரா (’சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடராக வந்தது) என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுத் தமிழில் தன் கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை.
விக்ரமன் படங்களைப்போலவே, இந்தப் புத்தகத்திலும் சஸ்பென்ஸ் உண்டு, நிறைய நெகிழ்ச்சி உண்டு, தன்னம்பிக்கை உண்டு, அவமானங்கள் (அநேகமாக இதில் வரும் எல்லாரும் விக்ரமனை ஏதோ ஒருவிதத்தில் அவமானப்படுத்தியிருக்கிறார்கள், அல்லது, அவர் அப்படி நம்புகிறார்), அவற்றைத் துடைத்துப்போட்டுவிட்டு மேலெழல், தோல்விகள், வெற்றிகள், மறுபடி தோல்விகள் (ஐந்து படம் எடுத்து மூன்று ஹிட் கொடுத்தபிறகும், கையில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் பட்டினிகூடக் கிடந்திருக்கிறார்), மறுபடி வெற்றிகள், சுய அலசல், திடீர் துரோகங்கள், நட்புகள் என எல்லாமே சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. கையில் எடுத்தால் கீழே வைக்க மனமே வராது, அப்படி ஒரு விறுவிறுப்பான நடை. இப்படி ஒரு சுவாரஸ்யமான சுயசரிதையைச் சமீபத்தில் படித்த நினைவில்லை.
இத்தனைக்கும் விக்ரமனின் இளமைப் பருவம், பள்ளி, கல்லூரி, பெற்றோர், நண்பர்களைப்பற்றிக்கூட இதில் அதிகம் இல்லை, அவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுகூட இல்லை, அவர் எடுத்த படங்களில் முதல் ஏழோ எட்டோ விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான், அதை மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கதையினூடே, சினிமா உருவாவதுபற்றிய டெக்னிகல் விஷயங்கள் அனைத்தும் உறுத்தலில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘டபுள் பாஸிட்டிவ்’ என்றால் என்ன என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார், அதன்பிறகு எங்கே ‘டபுள் பாஸிட்டிவ்’ வந்தாலும் நமக்கு அந்த விளக்கம் சட்டென்று நினைவில் வரும், அந்த அளவுக்கு எளிமையான விளக்கங்கள், கச்சிதமான உதாரணங்கள்.
சினிமா ஆசை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நிறைய நம்பிக்கை தரும், அதே அளவு அவநம்பிக்கையையும் தரும், ஒருவிதத்தில் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று சொல்வேன்.
அது சரி, இத்தனை எழுதிய விக்ரமன், தமிழில் மிகப் பெரிய வசூல் சம்பாதித்த படங்கள் சிலவற்றை இயக்கிய விக்ரமன் ஏன் தொடர்ந்து ஜெயிக்கமுடியவில்லை?
இந்தப் புத்தகத்தில் அதற்கும் பதில் இருக்கிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாக விக்ரமனே அதைச் சொல்லியிருக்கிறார், வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்த்துக் கண்டுபிடியுங்கள் 🙂
***
என். சொக்கன் …
21 03 2013
பின்குறிப்புகள்:
1. விக்ரமன் அளவுக்கு அவருடைய அஸிஸ்டென்ட் கே. எஸ். ரவிக்குமாரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்போல, ஆரேனும் ஆவன செய்தால் நல்லது
2. இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன். ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் இங்கே (இதனை வழங்கிய நண்பர் ரவிகாந்த்க்கு நன்றி)
3. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் : Part 1 , Part 2 & Part 3