மனம் போன போக்கில்

விக்ரமன்

Posted on: March 21, 2013

ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும்?

‘இதை ஏண்டா வார நாளில் படிக்க ஆரம்பித்தோம்’ என்று வாசகனை நொந்துகொள்ளச் செய்யவேண்டும், ‘சனி, ஞாயிறு என்றால் ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கலாமே’ என்று ஆதங்கப்படச் செய்யவேண்டும், மற்ற வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டு, ஆஃபீசிலும் வெளியிலும் ’எப்போ வீடு திரும்புவோம், எப்போ மறுபடி வாசிப்போம்’ என்று ஏங்கச் செய்யவேண்டும், ராத்திரி கண் சொக்கத் தூங்கச் சென்றாலும், ’நாலு பக்கம் படித்துவிட்டுத் தூங்கலாமே’ என்று நப்பாசைப்படச் செய்யவேண்டும்.

திரைப்பட இயக்குநர் விக்ரமனின் சுயசரிதை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இவை அனைத்தையும் செய்கிறது, அதற்குமேலும் செய்கிறது.

விக்ரமன் இயக்கிய படங்களில் இரண்டைமட்டுமே நான் பார்த்துள்ளேன், ஆனால் மற்ற எல்லாப் படங்களின் பாடல்களையும் கேட்டு, சின்னத்திரையில் வந்த ’ஓவர் பாசிட்டிவ்’ காட்சிகள், ஹைதர் அலியையே தும்மல் போடவைக்கும் காமெடி(?)களையெல்லாம் நோட்டமிட்டு, அவரது முழு நீள நகல்களாக வந்த பல அஸிஸ்டெண்ட்கள் எடுத்த படங்களையெல்லாம் பார்த்து அவர்மீது ஒரு நக்கலான பிம்பம்தான் வந்திருக்கிறது.

இப்படிப் பெயரைக் கேட்டவுடன் காதுக்குள் ‘லாலாலா’ ஒலிக்கும் ஓர் இயக்குநரின் சுயசரிதையை நான் ஏன் வாங்கினேன், ஏன் வாசிக்க ஆரம்பித்தேன், சுத்தமாகத் தெரியவில்லை. ஒருவேளை, இதைப் படித்துவிட்டு இன்னும் கிண்டலடிக்கலாம் என்று நினைத்திருப்பேனோ என்னவோ.

ஆனால், விக்ரமன்மீது நான் வைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. இதனை எழுதியது அவரேதானா, அல்லது நிருபர் ஒருவர் எழுதினாரா (’சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடராக வந்தது) என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுத் தமிழில் தன் கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை.

விக்ரமன் படங்களைப்போலவே, இந்தப் புத்தகத்திலும் சஸ்பென்ஸ் உண்டு, நிறைய நெகிழ்ச்சி உண்டு, தன்னம்பிக்கை உண்டு, அவமானங்கள் (அநேகமாக இதில் வரும் எல்லாரும் விக்ரமனை ஏதோ ஒருவிதத்தில் அவமானப்படுத்தியிருக்கிறார்கள், அல்லது, அவர் அப்படி நம்புகிறார்), அவற்றைத் துடைத்துப்போட்டுவிட்டு மேலெழல், தோல்விகள், வெற்றிகள், மறுபடி தோல்விகள் (ஐந்து படம் எடுத்து மூன்று ஹிட் கொடுத்தபிறகும், கையில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் பட்டினிகூடக் கிடந்திருக்கிறார்), மறுபடி வெற்றிகள், சுய அலசல், திடீர் துரோகங்கள், நட்புகள் என எல்லாமே சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. கையில் எடுத்தால் கீழே வைக்க மனமே வராது, அப்படி ஒரு விறுவிறுப்பான நடை. இப்படி ஒரு சுவாரஸ்யமான சுயசரிதையைச் சமீபத்தில் படித்த நினைவில்லை.

இத்தனைக்கும் விக்ரமனின் இளமைப் பருவம், பள்ளி, கல்லூரி, பெற்றோர், நண்பர்களைப்பற்றிக்கூட இதில் அதிகம் இல்லை,  அவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுகூட இல்லை, அவர் எடுத்த படங்களில் முதல் ஏழோ எட்டோ விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான், அதை மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதையினூடே, சினிமா உருவாவதுபற்றிய டெக்னிகல் விஷயங்கள் அனைத்தும் உறுத்தலில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘டபுள் பாஸிட்டிவ்’ என்றால் என்ன என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார், அதன்பிறகு எங்கே ‘டபுள் பாஸிட்டிவ்’ வந்தாலும் நமக்கு அந்த விளக்கம் சட்டென்று நினைவில் வரும், அந்த அளவுக்கு எளிமையான விளக்கங்கள், கச்சிதமான உதாரணங்கள்.

சினிமா ஆசை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நிறைய நம்பிக்கை தரும், அதே அளவு அவநம்பிக்கையையும் தரும், ஒருவிதத்தில் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று சொல்வேன்.

அது சரி, இத்தனை எழுதிய விக்ரமன், தமிழில் மிகப் பெரிய வசூல் சம்பாதித்த படங்கள் சிலவற்றை இயக்கிய விக்ரமன் ஏன் தொடர்ந்து ஜெயிக்கமுடியவில்லை?

இந்தப் புத்தகத்தில் அதற்கும் பதில் இருக்கிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாக விக்ரமனே அதைச் சொல்லியிருக்கிறார், வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்த்துக் கண்டுபிடியுங்கள் 🙂

***

என். சொக்கன் …

21 03 2013

பின்குறிப்புகள்:

1. விக்ரமன் அளவுக்கு அவருடைய அஸிஸ்டென்ட் கே. எஸ். ரவிக்குமாரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்போல, ஆரேனும் ஆவன செய்தால் நல்லது

2. இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன். ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் இங்கே (இதனை வழங்கிய நண்பர் ரவிகாந்த்க்கு நன்றி)

3. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் : Part 1 , Part 2 & Part 3

5 Responses to "விக்ரமன்"

புத்தகத்த அறிமுக படுத்தி ஆசை ய தூண்டிடீங்க சரி. இப்போ நாங்க எப்படி வாசிகிறது? //இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன்

விக்ரமன், தான் படமெடுத்த காலத்தில் பெரும் கவிஞர் ஒருவருக்கும், அவருக்கும் நடந்த மோதல் பற்றி சுவாரஸ்யமாகச் சொன்னார்.

“புதிய மன்னர்கள்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைச்சார். அந்தப் படத்துக்கு பாட்டு எழுதினாரு ஒரு பெரிய கவிஞர்.. அவர் எழுதின ஒரு பாட்டுல சில இடத்துல எனக்கு திருப்தியில்லை. அதுனால இடைல இடைல நான் திருத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தேன். அவரும் செஞ்சாரு.. 9, 10 முறை திருத்தம் சொன்னப்புறம், “நான் பாரதிராஜா, பாலசந்தர் முதற்கொண்டு, பெரிய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் பாட்டு எழுதியிருக்கேன். ஆனா யாரும் உங்களை மாதிரி இப்படி திருத்தம் சொன்னதே இல்லை. நீங்க மட்டும் ஏன் இப்படி பண்றீங்க..?”ன்னு கேட்டார். நான் எந்தப் பதிலும் சொல்லலை. அமைதியா இருந்துட்டேன்..

உடனேயே அங்கேயிருந்து நேரா ரஹ்மான்கிட்ட போனேன்.. ‘ஸார்.. இந்த செட்டப் எனக்கு ஒத்து வராதுன்னு ஃபீல் பண்றேன்.. அதுனால அவர்கூட வொர்க் பண்ண முடியாதுன்னு’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..! அதுக்கப்புறமா அந்தப் பாட்டுக்கு பழநிபாரதியை எழுத வைச்சு அதைப் பயன்படுத்திக்கிட்டேன்..!

ஆனா அந்தச் சம்பவம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுச்சு.. அந்தக் கவிஞர் அளவுக்கு நான் இலக்கியம் படிச்சவனில்லைன்னாலும், 50 சதவிகிதமாவது தமிழ் இலக்கியம் பத்தி எனக்கும் தெரியும்.. ஏன்னா நான் பிளஸ் டூலேயே சிறப்புத் தமிழ் படிச்சவன். நான் எந்த அளவுக்கு புத்தகங்களை வாசிச்சவன்.. நேசிக்கிறவன்.. படிச்சவன்றது தமிழ் இண்டஸ்ட்ரில நிறைய பேருக்கு தெரியும்..! ஆனாலும் அவர் ‘நீங்க ஏன் திருத்தம் சொல்றீங்க?’ன்னு கேட்டது என்னை புண்படுத்துச்சு.

அதுக்கப்புறமாத்தான் இனிமே எல்லா படத்துலேயும் புதிய, புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியே ஆகணும்னு எனக்கு வெறியே வந்திருச்சு. அதையும் செஞ்சேன்.. இப்போ கணக்கற்ற அளவுக்கு புதிய கவிஞர்கள் தமிழ்ச் சினிமாவுக்கு கிடைச்சிருக்காங்க.. இதுக்குப் பின்புலமா நான் இருந்திருக்கேன்னாலும், முக்கியக் காரணம், அந்தக் கவிஞர்தான்..” என்றார்.

அந்தக் கவிஞர் யார் என்பதை அண்ணன் விக்ரமன் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இதைப் படிப்பவர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்..!

ஆக.. ஒரு கவிஞரின் கோபம்.. கோபத்தைத் தாங்க முடியாத இயக்குநரின் அறச்சீற்றம்.. இவையிரண்டும் சேர்ந்து தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு நிறைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் நல்ல இசை கிடைக்க வாய்ப்பாக இருந்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் சினிமா நியூஸ்..!

–http://truetamilans.blogspot.com/2012/03/blog-post_25.html

அண்ணன் விக்ரமன் தனது திரையுலக அனுபவங்களை “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற தலைப்புல புத்தகமா வெளியிட்டிருக்காரு. அதுல நான் படிச்சு கண்ணு கலங்குன ஒரு பகுதியை இங்கே உங்களுக்காக டைப்பி தர்றேன்.. படிச்சுப் பாருங்க..! சினிமாவுலகத்தின் உண்மையான கலைஞர்கள் எங்கேயிருந்து, எப்படி உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!

“புது வசந்தம்’ படத்தோட புரஜக்சன் போட்டிருக்காங்க. அப்ப படம் பார்த்தவங்களும் ‘படம் சூப்பர்’ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.. அது மட்டுமில்ல.. படத்தை வாங்க யாருமே முன் வராத நிலைமை மாறி, ஏரியாவுக்கு இருபது லட்சம், முப்பது லட்சம்ன்னு விலை கேட்டிருக்காங்க.. 22 லட்சம் ரூபாய் பர்ஸ்ட் காப்பில எடுத்த, ‘புது வசந்தம்’ படத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு ஆஃபர் வந்துக்கிட்டிருக்கு..

‘புது வசந்தம்’ படம் இந்த அளவுக்குப் பரபரப்பா பேசப்பட்டிருக்கிற இதே நேரம்.. நானோ சாப்பாட்டுக்கு வழியில்லாம ரூமுல படுத்துக் கிடக்கிறேன்.. பாக்கெட்டுல பத்து காசு இல்லை. டேப் ரிக்கார்டரை வித்தாச்சு.. பழைய பேப்பரை எடைக்குப் போட்டாச்சு.. மோதிரத்தை அடகு வைச்சாச்சு.. வாட்ச்சை அடகு வைச்சாச்சு.. இனிமே விக்குறதுக்கோ, அடகு வைக்கவோ ஒண்ணுமில்லை.. இன்னும் பச்சையா சொல்லப் போனா, இரண்டு பேண்ட்டையும் வித்துட்டேன்.. அப்படியும் வறுமை தீரலை. மூணு நாளா பட்டினி கிடக்கிறேன்..

சூப்பர் குட் பிலிம்ஸ்ல டிரைவரா இருந்த விஸ்வம்பரன்ங்கிறவர் ரெண்டு, மூணு தடவை வந்து, ‘ஸார்(ஆர்.பி.செளத்ரி) கூப்பிடறார்’ன்னு கூப்பிட்டார். நான் போகலை. அப்புறம் என் அஸிஸ்டெண்ட் ஒருத்தர் புரஜக்சன் போயிருக்கார். அவர்கிட்டேயும் என்னை வரச் சொல்லி அனுப்பியிருக்கார் செளத்ரி ஸார்.

‘விக்ரமனை நான் அவசியம் பார்க்கணும். அவர் வரலைன்னா, நான் வேண்ணா அவர் ரூமுக்கு வரட்டுமா..?’ என்று கேட்டிருக்கார். இந்த விஷயத்தை என் அஸிஸ்டெண்ட் வந்து சொன்னதும், என் பிடிவாதத்தைத் தளர்த்திட்டு, மறுநாள் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆபீஸுக்கு போனேன்.

‘ஏன் வர்றதே இல்லை..?’ என்று செளத்ரி ஸார் கேட்டார்..

‘நான் வந்தப்ப நீங்க்கூட என் முகம் கொடுத்துப் பேசலை.. நான் என்னவோ தப்பான கிளைமாக்ஸை எடுத்திட்டதா மத்தவங்க சொன்னதைக் கேட்டு இப்படி நடந்துக்கிட்டீங்க.. அதனாலதான் நா வர்றதை நிப்பாட்டிட்டேன்.. இப்ப பாருங்க.. எல்லாரும் கிளைமாக்ஸை பாராட்டுறாங்க..’ என்று நான் வருத்தப்பட்டேன்..

‘நான் அப்படிச் சொல்ல்லை.. எல்லாரும் என்னை பயம் காட்டிட்டாங்க.. நானும் ஃப்ர்ஸ்ட் படம்தானே எடுக்கிறேன்.. நான் என்ன பண்றது..?’ – நடந்த சம்பவங்களுக்காக அவரும் வருத்தப்பட்டார்.

அதுக்கப்புறம் போட்ட எல்லா புரஜக்சன்லேயும் படத்துக்கு நல்ல ரிப்போர்ட். ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் ஸார் படத்தைப் பார்த்துட்டு ஒரு ஏரியா வாங்கினார். ஏரியா வாங்கினது மட்டுமில்லே.. இன்னொரு காரியமும் பண்ணினார் அவர்.

அந்த நாளை என்னிக்குமே என்னால மறக்க முடியாது..!

அன்னைக்கு எனக்கு பிறந்த நாள். காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. என்கிட்ட காசு இல்லை.. மூணு நாள் பட்டினி வேற கிடந்திருக்கேன். வேற வழி தெரியாம எடிட்டர் தணிகாசலத்தைப் பார்க்கப் போனேன்..

‘உங்ககிட்ட நூறு ரூபாய் இருக்குமா?’ என்று அவர்கிட்ட கேட்டேன்..

‘எதுக்கு..?’

‘காளிகாம்பாள் கோவிலுக்குப் போகணும்.. ஆட்டோல போயிட்டு வர்றதுக்கு நாப்பது ரூபாய் ஆகும். அர்ச்சனை பண்றதுக்கு இருபது ரூபாயாகும். நான் மூணு நாளா சாப்பிடலை.. அதுக்கும் காசு வேணும்.. அதான் நூறு ரூபாய் கேட்டேன்..’

– நான் இப்படிச் சொன்னதும் தணிகாசலம் அதிர்ச்சியாயிட்டார்.. ‘மூணு நாளா சாப்பிடலை’ன்னு சொன்னதை அவரால தாங்க முடியலை.. உடனே அவர் போட்டிருந்த மோதிரத்தை அடகு வைச்சு 300 ரூபாயோ, 400 ரூபாயோ கொடுத்தார். இன்னைக்கும் அதை நான் எல்லா பேட்டிகளிலும் மறக்காம சொல்லிக்கிட்டிருக்கேன்..! அதுக்கப்புறம் அவர் என்னோடு ஐந்து படங்கள் பண்ணினார். அப்புறம் பண்ணலை. ஆனாலும், அன்னைக்கு அவர் பண்ணின உதவியை என்னால எப்பவும் மறக்க முடியாது..

தணிகாசலம் பணம் கொடுத்த்தும் காலைல கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். மதியானம் அவரை பார்த்தப்ப, சவேரா ஹோட்டல்ல இருந்த பிரிவியூ தியேட்டர்ல புரஜக்சன் நடக்குதுன்னு என்னைக் கூப்பிட்டார்.

நான் அங்கே போனப்ப படம் முடிஞ்சு ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஸார், வெளியே வர்றார். என்னைப் பார்த்த்தும் நேரா கிட்ட வந்தார். படத்தைப் பத்தி பாராட்டிட்டு கைல வைச்சிருந்த சூட்கேஸைத் திறந்து காட்டினார். உள்ளே ஏகப்பட்ட பணக்கட்டுக்கள்..!

‘விக்ரமன் ஸார்.. இதிலே இவ்வளவு பணம் இருக்கு.. வாங்கிக்கங்க. அடுத்த படம் எனக்குத்தான் பண்ண்ணும்.. இது அட்வான்ஸ்தான்.. படம் ஹிட்டாகி நீங்க என்ன சம்பளம் சொன்னாலும், அதுக்கு நான் ஒத்துக்குறேன்..’ என்று சொன்னார். நான் அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன்..! ‘இல்ல ஸார்.. ரெண்டாவது படம் சூப்பர் குட்டுக்கு பண்றதா செளத்ரி ஸார்கிட்ட வாக்குக் கொடுத்திருக்கேன். அதை முடிச்சிட்டு வேண்ணா உங்களுக்கு பண்றேன்’னு சொல்லிட்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்திட்டேன்.. அதுக்கப்புறமும் படத்தைப் பார்த்த பல பேர் அட்வான்ஸ் கொடுக்க வந்தாங்க. நான் வாங்கலை..

காலைல பிச்சைக்காரன்.. சாயந்தரம் கோடீஸ்வரன்.. இதுதான் சினிமா..!”

நன்றிகள்

“நான் பேச நினைப்பதெல்லாம்”
திரையுலகில் சாதிக்கத் தூண்டும் விக்ரமனின் போராட்டம்
பக்கங்கள் 67-70
போதி பதிப்பகம்
எஸ்-2, ஜாஸ்மின் கார்டன்
5, வேதவல்லி தெரு, சாலிகிராம்ம்
சென்னை-600093.

Read more: http://truetamilans.blogspot.com/2012/03/blog-post_25.html#ixzz2Oh00C56d

நன்னூல் பதிப்பகத்தில் ஷிப்பிங் காஸ்ட் 50 ரூபாயாம்.. புத்தக விலை 100 ஆனால் ஷிப்பிங் 50 என்றால் எப்படி? கேன்சல் செய்து விட்டேன்.

திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
%d bloggers like this: