மனம் போன போக்கில்

Archive for April 2013

ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.

முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.

நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.

சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.

அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.

திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.

முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.

என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.

‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’

அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’

ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!

***

என். சொக்கன் …

27 04 2013

நாளை தொடங்கி, பெங்களூருவில் ஒரு கம்ப ராமாயண வாசிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த வாசிப்புக் குழு, முழுவதும் தன்னார்வத்தின்பேரில் அமைக்கப்படுகிறது. இதில் சேரக் கட்டணம் ஏதும் இல்லை. வாரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் கம்பனை வாசிக்கும் ஆர்வம் இருந்தால்மட்டும் போதுமானது.

இதனை வழிநடத்திச் செல்ல அன்போடு இசைந்திருப்பவர், திரு. ஹரி கிருஷ்ணன் அவர்கள் (இணையக் குழுக்களில் ‘ஹரியண்ணா’ என்றால் எல்லாருக்கும் தெரியும்!)

கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளிலும் பங்கேற்று வந்துள்ள ஹரி கிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளார், அனைத்தும் தமிழ் இலக்கியங்களை மிக எளிய முறையில் அறிமுகப்படுத்தி நம் ரசனையை மேம்படுத்தும்விதமாக அமைந்தவை.

’வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள்’ என்று குறிப்பிடும் ஹரி கிருஷ்ணன் இதழியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரது மிகப் பெரிய சாதனை, கம்ப, வால்மீகி ராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரிக் கட்டுரைகளாக எழுதியதுதான்.

இந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதி ‘அனுமன்: வார்ப்பும், வனப்பும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து மிகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதுபோல் இன்னமும் பதினைந்து பாத்திரங்களை விளக்கி நூல்வடிவாக்கவுள்ளார்.

ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது. அவர் இந்த வகுப்புகளை வழிநடத்த இசைந்திருப்பது நம்முடைய வாழ்நாள் பாக்கியம்.

இப்போது, இந்த வாசிப்பு வகுப்புகளைப்பற்றிக் கொஞ்சம், ஹரி கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசிவழியே குறிப்பிட்ட அடிப்படை விஷயங்கள் இவை:

  • பால காண்டத்தின் முதல் பாடலில் தொடங்கி, யுத்த காண்டத்தின் நிறைவுப் பாடல்வரை முழுமையாக வாசிக்கவிருக்கிறோம், இடையில் எந்தப் பாட்டும் / பகுதியும் விடுபடாமல்
  • கம்ப ராமாயணம் 10000 பாடல்களுக்குமேல் கொண்டது, ஆகவே, வாரம் நூறு பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, இதனைப் பூர்த்தி செய்ய இரண்டு வருடங்கள் ஆகும்
  • ஆகவே, ஒவ்வொரு வகுப்பிலும் நூறு பாடல்கள்வரை வாசிக்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பாடலையும் சத்தமாகப் படிப்பது, அதற்கு விளக்கம் சொல்வது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சொற்களின் பொருளை விவரிப்பது, தேவைப்பட்டால் வேற்று நூல்களில் இருந்து தொடர்புபடுத்திப் பேசுவது என்ற விதத்தில் இது அமையும்
  • வாசிப்பில் பங்கேற்கும் அனைவரும் பாடல்களை உரக்கப் படித்துப் பழகவேண்டும் என எதிர்பார்க்கிறோம், அது ஓர் அற்புதமான தனி அனுபவம்!
  • பாடல்களை வாசித்து முடித்தபின் அதன் விளக்கம், கூடுதல் விவரங்கள், கவி நயம் போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசலாம், இது வகுப்பு என்பதைவிட, குழு வாசிப்பு என்றவகையில் அமைந்தால் நன்றாக இருக்கும்
  • அதேசமயம், கம்ப ராமாயணம் / அது தொடர்பான தலைப்புகளைத்தவிர மற்ற அரட்டைப் பொருள்களைத் தவிர்த்துவிடுவோம். இல்லாவிடில் வாரம் நூறு பாடல்களைப் படிக்க இயலாதபடி கவனம் சிதறும். அன்றைய வாசிப்பு முடிந்தபின் தனி அரட்டைகளை வைத்துக்கொள்வோம்
  • பாடல்களை வாசிக்கும்போது, கவிதை அழகு, மொழி நயம், அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், பாத்திரப் படைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், பக்தி / வைணவ சம்பிரதாயம் சார்ந்த விளக்கங்கள், விவாதங்களுக்கு இடமிருக்காது, தவறாக எண்ணவேண்டாம்
  • ஒவ்வொரு வார வாசிப்பையும் முழுமையாக ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வைக்க எண்ணியுள்ளோம், அது எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்

அடுத்து, வாசிப்பு நடைபெறும் நேரம், வழக்கமான இடம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாளைய முதல் வகுப்பின் விவரங்களைமட்டும் இங்கே தந்துள்ளேன், அங்கே வருகிறவர்கள்மத்தியில் பேசி, பெரும்பாலானோருக்கு வசதியானவண்ணம் அடுத்தடுத்த வகுப்புகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்:

நாள் : 13 ஏப்ரல்

நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை

இடம்:

CRMIT Solutions Private Limited,

NR Towers, 2nd Floor,

#14, Hundred Feet Ring Road,

BTM Layout First Stage,

Bangalore 68

Map : Click Here

இந்த அலுவலகம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் குழப்பம் எனில் (0)9900160925 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

அனைவரும் வருக!

***

என். சொக்கன் …

12 04 2013

அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.

இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.

‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’

இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.

ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’

முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!

இதற்கு என்ன அர்த்தம்?

எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.

அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!

பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.

‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?

ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?

ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?

’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’

இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.

ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?

இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?

சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?

‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’

இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.

அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.

அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/

***
என். சொக்கன் …

04 04 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,782 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2013
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930