பெங்களூருவில் கம்ப ராமாயண வாசிப்பு
Posted April 12, 2013
on:- In: Announcements | கம்ப ராமாயணம் | கம்பர் | Events
- 12 Comments
நாளை தொடங்கி, பெங்களூருவில் ஒரு கம்ப ராமாயண வாசிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த வாசிப்புக் குழு, முழுவதும் தன்னார்வத்தின்பேரில் அமைக்கப்படுகிறது. இதில் சேரக் கட்டணம் ஏதும் இல்லை. வாரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் கம்பனை வாசிக்கும் ஆர்வம் இருந்தால்மட்டும் போதுமானது.
இதனை வழிநடத்திச் செல்ல அன்போடு இசைந்திருப்பவர், திரு. ஹரி கிருஷ்ணன் அவர்கள் (இணையக் குழுக்களில் ‘ஹரியண்ணா’ என்றால் எல்லாருக்கும் தெரியும்!)
கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளிலும் பங்கேற்று வந்துள்ள ஹரி கிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளார், அனைத்தும் தமிழ் இலக்கியங்களை மிக எளிய முறையில் அறிமுகப்படுத்தி நம் ரசனையை மேம்படுத்தும்விதமாக அமைந்தவை.
’வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள்’ என்று குறிப்பிடும் ஹரி கிருஷ்ணன் இதழியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரது மிகப் பெரிய சாதனை, கம்ப, வால்மீகி ராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரிக் கட்டுரைகளாக எழுதியதுதான்.
இந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதி ‘அனுமன்: வார்ப்பும், வனப்பும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்து மிகப் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதுபோல் இன்னமும் பதினைந்து பாத்திரங்களை விளக்கி நூல்வடிவாக்கவுள்ளார்.
ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது. அவர் இந்த வகுப்புகளை வழிநடத்த இசைந்திருப்பது நம்முடைய வாழ்நாள் பாக்கியம்.
இப்போது, இந்த வாசிப்பு வகுப்புகளைப்பற்றிக் கொஞ்சம், ஹரி கிருஷ்ணன் அவர்கள் தொலைபேசிவழியே குறிப்பிட்ட அடிப்படை விஷயங்கள் இவை:
- பால காண்டத்தின் முதல் பாடலில் தொடங்கி, யுத்த காண்டத்தின் நிறைவுப் பாடல்வரை முழுமையாக வாசிக்கவிருக்கிறோம், இடையில் எந்தப் பாட்டும் / பகுதியும் விடுபடாமல்
- கம்ப ராமாயணம் 10000 பாடல்களுக்குமேல் கொண்டது, ஆகவே, வாரம் நூறு பாடல்கள் என்று எடுத்துக்கொண்டால்கூட, இதனைப் பூர்த்தி செய்ய இரண்டு வருடங்கள் ஆகும்
- ஆகவே, ஒவ்வொரு வகுப்பிலும் நூறு பாடல்கள்வரை வாசிக்க முயற்சி செய்வோம். ஒவ்வொரு பாடலையும் சத்தமாகப் படிப்பது, அதற்கு விளக்கம் சொல்வது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சொற்களின் பொருளை விவரிப்பது, தேவைப்பட்டால் வேற்று நூல்களில் இருந்து தொடர்புபடுத்திப் பேசுவது என்ற விதத்தில் இது அமையும்
- வாசிப்பில் பங்கேற்கும் அனைவரும் பாடல்களை உரக்கப் படித்துப் பழகவேண்டும் என எதிர்பார்க்கிறோம், அது ஓர் அற்புதமான தனி அனுபவம்!
- பாடல்களை வாசித்து முடித்தபின் அதன் விளக்கம், கூடுதல் விவரங்கள், கவி நயம் போன்றவற்றைப் பற்றி எல்லாரும் பேசலாம், இது வகுப்பு என்பதைவிட, குழு வாசிப்பு என்றவகையில் அமைந்தால் நன்றாக இருக்கும்
- அதேசமயம், கம்ப ராமாயணம் / அது தொடர்பான தலைப்புகளைத்தவிர மற்ற அரட்டைப் பொருள்களைத் தவிர்த்துவிடுவோம். இல்லாவிடில் வாரம் நூறு பாடல்களைப் படிக்க இயலாதபடி கவனம் சிதறும். அன்றைய வாசிப்பு முடிந்தபின் தனி அரட்டைகளை வைத்துக்கொள்வோம்
- பாடல்களை வாசிக்கும்போது, கவிதை அழகு, மொழி நயம், அதன்மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், பாத்திரப் படைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும், பக்தி / வைணவ சம்பிரதாயம் சார்ந்த விளக்கங்கள், விவாதங்களுக்கு இடமிருக்காது, தவறாக எண்ணவேண்டாம்
- ஒவ்வொரு வார வாசிப்பையும் முழுமையாக ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வைக்க எண்ணியுள்ளோம், அது எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்
அடுத்து, வாசிப்பு நடைபெறும் நேரம், வழக்கமான இடம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நாளைய முதல் வகுப்பின் விவரங்களைமட்டும் இங்கே தந்துள்ளேன், அங்கே வருகிறவர்கள்மத்தியில் பேசி, பெரும்பாலானோருக்கு வசதியானவண்ணம் அடுத்தடுத்த வகுப்புகள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளலாம்:
நாள் : 13 ஏப்ரல்
நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்:
CRMIT Solutions Private Limited,
NR Towers, 2nd Floor,
#14, Hundred Feet Ring Road,
BTM Layout First Stage,
Bangalore 68
Map : Click Here
இந்த அலுவலகம் நெடுஞ்சாலையிலேயே உள்ளது. இடத்தைக் கண்டறிவதில் ஏதேனும் குழப்பம் எனில் (0)9900160925 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
அனைவரும் வருக!
***
என். சொக்கன் …
12 04 2013
12 Responses to "பெங்களூருவில் கம்ப ராமாயண வாசிப்பு"

அட்டகாசம்..வாழ்த்துக்கள்..100 பாடல்கள் ஒரு நாளிலா? கொஞ்சம் அதிகமாப்படுதே..


இரண்டு மணி நேரத்தில் நூறு பாடல்கள் படித்திட முடியுமா ?


நான் ஓசூரில் இருக்கிறேன். வாசிக்கும் ஆர்வத்துடன் வெறும் வாசகனாக (பார்வையாளனாக?) கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன். வரலாமா?


வாழ்துக்கள்


மஸ்கட்டில் இருக்கும் என் போன்றோரின் வசதியை கருதி இதை இணையத்தில் சேர்க்க ஏதாவது செய்யுங்களேன்.


[…] பெங்களூருவில் கம்ப ராமாயண வாசிப்புக் குழு ஒன்றைத் தொடங்குகிறோம். அதை […]


‘ஹரியண்ணா’வுக்குப் பெயர் வைத்ததே நான்தானே!
இந்த வாசிப்பு பற்றி கேள்விப்படவே ஏகப்பட்ட சந்தோஷமாக இருக்கிறது. மிக நல்ல காரியம்.
வாழ்த்துகள்.
நானும் பெங்களூருவில் இல்லையே என்ற ஏக்கத்துடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


All the best Sir….

1 | yeasix
April 12, 2013 at 8:22 pm
அட்டகாசமான முயற்சி, வெற்றியடைய வாழ்த்துகள்.
நான் தொடர்ந்து சில/பல வாரயிறுதிகள் ஊரில் இருக்கப்போவதில்லை, எப்பொழுது வாய்க்குமோ பார்க்கலாம் 🙂