மான் குட்டியே!
Posted April 27, 2013
on:ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.
முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.
நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.
சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.
அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.
திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.
முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.
என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.
‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’
அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’
ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!
***
என். சொக்கன் …
27 04 2013
3 Responses to "மான் குட்டியே!"

🙂 enjoyed reading your post 🙂
amas32


அய்யா சொக்கரே
வணக்கம் பல பல
சொக்கனை கண்டு சொக்கிப்போனவன்
சொக்கனின் எழுத்திலும் சொக்கிப்போனேன்
அதை விட கம்பனை வாரா வாரம் கொண்டாடுவதை மிகவும்
அக முக மகிழ்ந்து பாராட்டுகிறேன். தங்கள் புதிய முயற்சி
நாட்டுக்கும் மக்களுக்கும் பயன் கிடைக்க ஆண்டவன் அருளும்
அன்பர்கள் ஒத்தாசையும் கிடைக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்
கம்பன் பெயரென்பதால் பாராட்டாத்தானே வேண்டும்
வேறு யோக்கியதை எனக்கேது ?
அன்புடன்
ச கம்பராமன்
ம து ரை

1 | கிரி ராமசுப்ரமணியன் (@rsGiri)
April 28, 2013 at 10:20 am
என்னுடைய ஹிந்தி ஞானம் முழுக்க முழுக்க ஹிந்தி திரைப்பாடல்களைக் கேட்டு வளர்ந்ததே 🙂