மனம் போன போக்கில்

Archive for May 2013

பேராசிரியர் திரு. பெஞ்சமின் லெபோ, ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயலர், கம்பன் காதலர், சிறந்த தமிழ் அறிஞர், அருமையான பேச்சாளர்.

பெங்களூருவில் நாங்கள் பங்கு பெறும் ‘கம்ப ராமாயண வகுப்பு’களுக்குச் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அவர். சுமார் ஒரு மணி நேரம் அற்புதமான பேச்சில் எங்களை மகிழ்வித்தார். கம்பனின் வெவ்வேறு பாடல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் சிறப்பை எளிய முறையில், பொருத்தமான உதாரணங்களைச் சேர்த்து, மற்ற காவியங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார், சந்த இனிமை, கவிதை அழகு, இலக்கண நுட்பம், சமூகப் பின்னணி என்று பலவிதமான குறுக்குவெட்டுத் தோற்றங்களில் கம்பனை ரசிக்கமுடியும் என்று கற்றுக்கொடுத்தார். தெரிந்த விஷயங்களைக்கூட, ஒரு புதுக் கண்ணாடியின்வழியே பார்க்கும்போது எப்படிப்பட்ட ரசனை சாத்தியப்படுகிறது என்று புரியவைத்தார்.

ஆகவே, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1’ என்ற நூலை (சமீபத்தில் புதுவை கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது) மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சுக்குச் சற்றும் குறைபடாத எழுத்தில் அமைந்த சுவாரஸ்யமான நூல் இது.

எட்டே கட்டுரைகள்தாம். ஆனால், அவற்றுள் பேசுவதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் எல்லாவிதமான வாசகர்களுக்கும் முழுத் திருப்தி தரும்வகையில் அமைந்துள்ளன.

உதாரணமாக, திரைப்பாடல் மேதையாகிய கண்ணதாசனின் பாடல் வரிகளில் கம்பனின் தாக்கம் எப்படி இருந்தது என்று ஒரு கட்டுரை, அதே வீச்சில் வீரமாமுனிவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை, கம்ப ராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது என்கிற விளக்கம், அதனை வாசிப்பது எப்படி என்கிற பாடம், வாலிவதைபற்றிய விவாதம், பரசுராமன் படலம் ராமாயணத்தில் எதற்காக என்கிற விளக்கம், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் ஜான் மில்டனின் ‘Paradise Lost’ல் வரும் ஒரு பாத்திரத்தைக் கம்பனின் ஒரு பாத்திரத்தோடு ஒப்பிட்டு அழகுபடுத்தும் கட்டுரை ஒன்று… இப்படி எல்லாவிதமான கட்டுரைகளும் இங்கே உண்டு, அனைத்தும் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் மேலோட்டமாக அன்றி, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பது வாசிக்கும்போதே புரிகிறது.

பெஞ்சமின் லெபோவின் தமிழ் நடையில் கம்பன் நீக்கமற நிறைந்திருக்கிறார், பெரும்பாலும் கம்பன் பயன்படுத்திய அதே வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை இவரும் பயன்படுத்துகிறார், உரைநடை வாக்கியங்களில்கூட எதுகையும் மோனையும் இயைபும் கச்சிதமாக அமைந்து இன்பம் தருகின்றன.

இந்தப் புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் மேடையில் வாசிக்கப்பட்டவை, வேறு சில கட்டுரைகள் எழுத்து வடிவில் உருவானவை, ஆனால் இவை எல்லாமே, யார் வேண்டுமானாலும் வாசிக்கக்கூடிய எளிய மொழியில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன, சும்மா வார்த்தைகளால் ஜாலம் காட்டும் விளையாட்டே கிடையாது, Content Rich கட்டுரைகள், கம்பனின் காப்பியத்தில் ஏதேனும் ஒரு பகுதியை வேறு கோணத்தில் பார்ப்பது எப்படி என்று எளிமையானமுறையில் சொல்கின்றன, ஒரு புதிய அனுபவத்தைத் திறந்துவைக்கின்றன.

பேராசிரியரின் ‘கம்பன் களஞ்சியம்’ அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

(கம்பன் களஞ்சியம் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ : வானதி பதிப்பகம் : விலை ரூ 60)

***

என். சொக்கன் …

31 05 2014

 

முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் (2003ல்) எழுதியது. இலக்கணப் பிழைகளையும், சிற்சில வாக்கிய அமைப்புகளையும்மட்டும் திருத்தியிருக்கிறேன்

மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன்.

பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ பலகையைக் காணாமல் ஒரு மேட்ச் பார்த்துமுடித்தால் போன பிறவிப் புண்ணியம்!

டெஸ்ட் மேட்ச்சா? மூச்! எட்டரை மணிச் செய்தியின் இறுதிப் பகுதியில் மனசே இல்லாமல் அவர்கள் சொல்கிற ஸ்கோரைமட்டும் கேட்டுவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!

பின்னர், பெரும்பாலான ஒருநாள் போட்டிகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஷார்ஜா போல் நம்மூரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கிறவை, நேரடி ஒளிபரப்புகளாக வந்தன. பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு மேட்ச் பார்க்கிற பையன்கள் அதிகமானார்கள், இந்தியா விளையாடும் மேட்ச் என்றால் அலுவலகங்களுக்கு தைரியமாக விடுமுறை கேட்கிற பழக்கமும் ஆரம்பித்தது.

இத்தனைக்கும் தூர்தர்ஷனின் ஒளிபரப்பைப் பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பல தலைமுறைகள் முன்னாலேயே எழுதிவைக்கப்பட்ட ஒன்றிரண்டு கோணங்களில்மட்டுமே மேட்ச்சை ரசிக்கலாம், போதாக்குறைக்கு அவ்வப்போது கேமெராவை ஒரே திசையில் வைத்துவிட்டு தூங்கப்போய்விடுவார்கள், பதினைந்து ஓவர்களுக்கு ஒருமுறைதான் ஸ்கோர் காட்டுவார்கள், மற்ற நேரமெல்லாம் ’ஸுந்தர் ஷாட்’, ‘வெங்ஸர்கார் நே லெக்ஸைட் மேய்ன் க்ளான்ஸ் கீயா’ போன்ற ஹிந்தி வர்ணனைகளைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான், விசுவாசமான காந்தங்கள்போல பந்து இடதுபக்கம் அடிக்கப்பட்டால் கேமரா வலதுபக்கமும், அது வலதுபக்கம் ஓடினால் கேமரா இடதுபக்கமும் நகரும், நியூஸ், பிரதம மந்திரி ஹரப்பா பயணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் வந்தால் ஈவு, இரக்கம் இல்லாமல் மேட்ச்சை நிறுத்திவிடுவார்கள்… இத்தனைக்கும் இடையே இந்தியா உலகக் கோப்பை வாங்கிய காரணத்தால், அடுத்த (ரிலையன்ஸ்) உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடந்ததால் மக்கள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ரசித்தார்கள், தங்கள் அணி தோற்றாலும் அடுத்த மேட்ச்சில் ஜெயிக்கும் என்று ஆசையோடு பார்த்தார்கள் (இன்றைக்கும்தான்!), கபில்தேவ், தெண்டுல்கர் போன்றோர் எல்லாருக்கும் பிடித்த முகங்களாக உருவானதற்கு இந்த ஒளிபரப்புகளும் முக்கியக் காரணம்.

அடுத்து, சாடிலைட் சேனல்கள் களத்தில் இறங்கின. இந்தியா உலகத்தின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடப் போனாலும் பின்னாலேயே கேமராக்களோடு ஓடினார்கள் இவர்கள், புதுமையான ஒளிப்பதிவு விந்தைகள், ஆட்டத்துக்கு நடுவே திடீரென்று இடைவெளி கிடைத்தால் போட்டி நடக்கிற தீவின் இயற்கைக் காட்சி, அல்லது போட்டியைக் காண வந்திருக்கிற அம்மணிகளின் காது ஜிமிக்கிகள் என்று எதையாவது சுவாரஸ்யமாகக் காட்டிக் கலகலப்பூட்டினார்கள், நல்ல, புரியக்கூடிய ஆங்கிலத்தில் திறமையான வர்ணனையாளர்கள், அசத்தலான க்ராஃபிக்சும், நுணுக்கமான அலசல்களும், எப்போதும் கண்முன் விரிகிற ஸ்கோர் போர்டுமாய், ஆட்ட அரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைவிட டிவி முன்னால் உட்கார்ந்திருப்பது சிறந்தது என்று உணரச் செய்யுமளவு இவர்களின் ஒளிபரப்புத் தரம் இருந்தது.

அடுத்து டெஸ்ட் மேட்ச்களும் நேரடி ஒளிபரப்பாயின, போரடிக்கும் ஆட்டம் என்று இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக நிராகரித்துவந்த ஓர் ஆட்டத்தைக்கூடச் சுவையாக ஆக்கமுடிந்தது இவர்களால்.

இதன் அடுத்த கட்டம் இப்போது, போன வாரம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்தானபோது நாமெல்லாம் என்ன செய்திருக்கவேண்டும்? டிவியை அணைத்துவிட்டுத் தூங்கப்போயிருக்கவேண்டும்!

ஆனால், ஒருவர் என்றால் ஒருவர்கூடத் தூங்கவில்லை. மழையைப் பற்றியும், மழை வராவிட்டால் என்ன பண்ணியிருக்கலாம் என்பதுபற்றியும், மழை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமா, பாதகமா என்பதுபற்றியும், நாளைக்கு மழை பெய்யுமா என்பதுபற்றியும், மழை வந்தவுடன் போட்டியை ரத்து செய்துவிட்டது நியாயமா என்பதுபற்றியும், வெளிநாட்டிலிருந்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் அதனால் எத்தனை ஏமாற்றம் என்பதுபற்றியும் … இன்னும் என்னென்னவோ பேசி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் அடித்துக்கொண்டிருந்த வெட்டி அரட்டையை எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியே நடக்காவிட்டாலும், மூன்று மணி நேரம் அவர்கள் ஒளிபரப்பைப் பார்க்கவைத்துவிட்டார்கள்!

முதல் வரியை மீண்டும் படிக்கவும்!

***

என். சொக்கன் …

சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.

’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.

சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.

அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.

அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!

பக்கத்து பெஞ்ச்

’கிஸ்’ என்றாள் மீரா.

‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’

‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’

‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’

‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’

‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’

‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.

இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.

சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’

‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’

‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’

’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’

சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.

அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!

‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’

‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’

’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.

அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.

நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.

பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.

இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.

சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.

இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.

பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.

இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.

அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?

சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’

பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.

பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.

பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.

‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’

’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’

மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.

அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’

வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.

மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’

‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’

அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’

சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.

****

ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.

மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.

சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.

‘எ.. எ.. எதுக்கு?’

பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.

அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.

****

மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’

’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’

‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’

‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’

‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’

‘சினிமா?’

‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.

‘இல்லை மீரா, சொல்லு!’

‘சரவணன்…’

‘ம்ம்…’

‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’

’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’

அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’

‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’

’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’

‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’

’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’

‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’

’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’

****

பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’

’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

’ஆமா, ஏழெட்டு வருஷமா!’

‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.

***

என். சொக்கன் …

இன்று என் மகள் பேச்சுவாக்கில் ‘நாளைக்கு அம்மாயும் என்னோட வருவா’ என்றாள்.

நான் அவளை நிறுத்தி, ‘அம்மாவும்ன்னு சொல்லணும், அம்மாயும்ன்னு சொல்லக்கூடாது’ என்றேன்.

’சரி’ என்று தலையாட்டியவள், கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அப்பா, பாட்டியும்ன்னு சொல்றோமே, அது கரெக்டா?’ என்றாள்.

‘கரெக்ட்தான்’

‘அப்போ, அம்மாயும்ன்னு சொன்னா என்ன தப்பு? அதைமட்டும் ஏன் அம்மாவும்ன்னு மாத்திச் சொல்லணும்?’

பிரமாதமான கேள்வி. நல்லவேளையாக, தமிழில் இதற்குத் தெளிவான இலக்கண வரையறைகள் உள்ளன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னேன், இங்கே முழு விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்.

இதற்கான நன்னூல் சூத்திரம்:

இ, ஈ, ஐ வழி ‘ய’ உம், ஏனை

உயிர் வழி ‘வ’ உம்,

ஏ முன் இவ்விருமையும்

உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்

அதாவது, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, முதல் சொல்லின் நிறைவில் ஓர் உயிர் எழுத்தும், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் இன்னோர் உயிர் எழுத்தும் அமைந்தால், அங்கே ஓர் மெய் எழுத்து தோன்றும், அது ’ய்’ அல்லது ’வ்’ ஆக இருக்கும்.

உதாரணமாக, மா + இலை

இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ என்ற உயிரெழுத்து உள்ளது (ம் + ஆ)

இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘இ’ என்ற உயிரெழுத்து உள்ளது.

இவை இரண்டும் ஒன்று சேரும்போது மா + இலை = மாவிலை, அல்லது மாயிலை என்று மாறும், அதாவது, ‘வ்’ அல்லது ‘ய்’ என்ற எழுத்து சேர்ந்துகொள்ளும்.

எப்போது வ்? எப்போது ய்?

அதற்குதான் மேலே சொன்ன சூத்திரம் : முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ அல்லது ஐ இருந்தால், அங்கே ‘ய்’ வரும், வேறு எந்த உயிரெழுத்து இருந்தாலும் ‘வ்’ வரும், முதல் சொல்லின் நிறைவில் ஏ இருந்தால், ய், வ் இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.

‘மா’ என்பதில் ‘ஆ’தான் உள்ளது, இ, ஈ, ஐ இல்லை. ஆகவே, ‘வ்’ வரவேண்டும், மா + இலை = மாவிலை

இன்னோர் உதாரணம் : புவி + அரசன்

இங்கே புவி என்ற சொல்லின் நிறைவில் ‘இ’ உள்ளது, அரசன் என்ற சொல்லின் தொடக்கத்தில் ‘அ’ உள்ளது, இரண்டும் உயிரெழுத்துகள், ஆகவே, ‘வ்’ அல்லது ‘ய்’ சேர்க்கவேண்டும்.

மேற்கண்ட நன்னூல் விதிப்படி, இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ என்ற எழுத்து வருவதால், ‘ய்’ வரும், அதாவது புவி + அரசன் = புவியரசன்.

ஆச்சா, இப்போது என் மகள் கேட்ட கேள்விக்கு வருவோம்.

பாட்டி + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ வருகிறது, ஆகவே, ‘ய்’ வரும், இது ‘பாட்டியும்’ என்று மாறும்.

அம்மா + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ வருகிறது, ஆகவே, ‘வ்’ வரும், இது ’அம்மாவும்’ என்று மாறும். அவ்ளோதான் மேட்டர்.

இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?

***

என். சொக்கன் …

26 05 2013

இன்று காலை ’யாப்பருங்கலக் காரிகை’யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் ‘இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…’ என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.

இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது எஞ்சினியரிங் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் வெல்டிங் மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது.

குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த வெல்டிங் சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.

அதைச் சொல்வதற்குமுன்னால், வெண்பாபற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘வெல்டிங்’குக்கும் இலக்கணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாது.

வெண்பாவில் மிகச் சிறியது, குறள், அதாவது இரண்டே வரிகள், ஏழே வார்த்தை(சீர்)களில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடவேண்டும். அதற்குள் எதுகை வேண்டும், மோனை வேண்டும், வெண்பாவுக்கு உரிய மற்ற இலக்கண வரையறைகளுக்கும் கட்டுப்படவேண்டும்.

இதற்கு உதாரணம் தேடி அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. திருக்குறள்முழுவதுமே குறள் வெண்பாக்களால் ஆனதுதான்.

ஒரு விஷயம், ‘ஏழு வார்த்தை’ என்று ஒரு வசதிக்காகச் சொல்கிறோமேதவிர, உண்மையில் குறள் வெண்பாவில் ஏழைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ வார்த்தைகள் இருக்கலாம், அவற்றை ஏழு சீர்களாகப் பகுத்துவைப்பார்கள். அவ்வளவுதான்.

உதாரணமாக, ‘கசடற’ என்று திருக்குறளில் வருவது ஒரு சீர், ஆனால் உண்மையில் அது ‘கசடு அற’ என்று இரு வார்த்தைகளாகப் பிரியும்.

இதற்கு நேர் எதிராக, ‘வந்தனையோ’ என்பது ஒரே வார்த்தைதான், ஆனால், மரபுக்கவிதை விதிமுறைகளுக்கேற்ப அது ‘வந்த னையோ’ என்று இரு சீர்களாகப் பிரியக்கூடும்.

ஆக, வார்த்தையும் சீரும் ஒன்றல்ல. அதை இங்கே இன்னும் விரிவாக விளக்க முற்பட்டால், இந்தக் கட்டுரையின் நோக்கம் சிதறிவிடும். ஆகவே, இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இதற்குமேல் நான் ‘வார்த்தை’ என்று எங்கே குறிப்பிட்டாலும், அதைச் ‘சீர்’ என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக, 3 வரி வெண்பா, நாம் அதை சாய்ஸில் விட்டுவிட்டு, நேரடியாக 4 வரிக்குத் தாவுவோம்.

நான்கு வரி வெண்பாக்களில் இரண்டு வகை, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா.

இதில் இன்னிசை வெண்பாவும் குறள் வெண்பாவும் look alike அண்ணன், தம்பிமாதிரி, அங்கே ஏழு வார்த்தை, இங்கே பதினைந்து வார்த்தை, அது ஒன்றுமட்டும்தான் வித்தியாசம், மற்றபடி எல்லா இலக்கண வழிமுறைகளும் அச்சு அசல் அப்படியே.

உதாரணமாக, நள வெண்பாவிலிருந்து இந்தப் பாடல்:

ஈர மதியே, இளநிலவே, இங்ஙனே

சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்

பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா

இரவளித்தான் அல்லனோ இன்று

ஒரு பெண் நிலவைப் பார்த்துப் பாடும் இந்தப் பாட்டின் சுருக்கமான பொருள், ’ஏய் நிலாவே, நான்பாட்டுக்கு கெடக்கேன், நீ ஏன் திடீர்ன்னு வந்து என்னைத் தாக்கறே? எனக்குத் தெரியும், அந்த மன்மதன்தான் உன்னை இங்கே அனுப்பிவெச்சிருக்கான்!’

நேரிசை வெண்பாவிலும் அதே பதினைந்து வார்த்தைகள்தான், ஆனால் ஒரு வித்தியாசம், இன்னிசை வெண்பாவைப்போல் அவை ஒரே தொடராக வராது, பதினைந்து வார்த்தைகளும் 7 + 1 + 7 என்று பிரியும்.

அதாவது, முதல் ஏழு, ஒரு குறள் வெண்பா, அப்புறம் ஒரு தனிச்சொல், பின்னர் வரும் அடுத்த ஏழு, இன்னொரு குறள் வெண்பா.

உதாரணமாக, ஔவையாரின் மிகப் பிரபலமான இந்தப் பாடல்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்

சங்கத் தமிழ்மூன்றும் தா

இதில் முதல் 7 வார்த்தைகள்மட்டும் (பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை / நாலும் கலந்துனக்கு நான்தருவேன்) தனியே ஒரு குறள்மாதிரி இருக்கும், அடுத்த 7 வார்த்தைகள் (துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்/ சங்கத் தமிழ்மூன்றும் தா) தனியே இன்னொரு குறள்.

இந்த இரண்டுக்கும் நடுவே, இரட்டைக் கதாநாயகி சப்ஜெக்டில் மாட்டிய பாக்யராஜ்மாதிரி திருதிருவென்று விழித்துக்கொண்டு ‘கோலஞ்செய்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா? அதைத் ’தனிச்சொல்’ என்பார்கள், இந்தப் பக்கமும் சேராது, அந்தப் பக்கமும் சேராது, ஆனால் இரண்டையும் இணைப்பது அதுதான் (ச்சே, அந்த பாக்யராஜ் உதாரணம் செல்லாது, எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள்!)

இப்போது, செய்யுள் இலக்கணத்தில் ‘வெல்டிங்’ எப்படி வந்தது என்று புரிந்திருக்கும், முதல் 7 வார்த்தைகள் ஓர் உலோகப் பட்டை, அடுத்த 7 வார்த்தைகள் ஓர் உலோகப்பட்டை, இரண்டையும் சேர்த்துப் பற்றவைக்கிறபோது அதற்கு இன்னோர் உலோகம் தேவைப்படும், அது அந்த இடத்தில் (Welding point) சிறு புடைப்புமாதிரி தெரியும், அதுதான் தனிச்சொல்.

‘வெல்டிங்’குக்கு இணையாக வேண்டுமானால், இதற்குச் ‘சொல்டிங்’ என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம், இதைப் பயன்படுத்தி எந்த இரு குறள் வெண்பாக்களையும் இணைத்து நேரிசை வெண்பாவாக்கிவிடலாம்.

உதாரணமாக, இந்த இரு குறள்களைப் பாருங்கள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது

அதாவது, வானத்திலிருந்து மழைத்துளிமட்டும் விழாவிட்டால் போச்சு, பூமியில் ஒரு பசும்புல்லைக்கூடப் பார்ப்பது சிரமம்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

அதாவது, மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை, மனிதர்களிடையே ஒழுக்கமும் இல்லை.

இந்த ஒரு குறள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே, சும்மா சொல்டிங் செய்து நேரிசை வெண்பாவாக்கிப் பார்ப்போமா?

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது, பசும்பொன்னே

நீர்இன்று  அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

அவ்வளவுதான், வெண்பா இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும், ‘விசும்பு’, ‘பசும்புல்’க்கு எதுகையாகவும் ’பசும்பொன்னே’ என்கிற ஒரு சொல்லைச் சேர்த்ததும், திருவள்ளுவர் எழுதிய இந்த இரு குறள் பாக்களும் நேரிசை வெண்பாவாகிவிட்டன.

ஆனால், எல்லாக் குறள் வெண்பாக்களையும் இப்படி நேரிசை வெண்பாவாக்கமுடியாது. உதாரணமாக, இந்தக் குறளைப் பாருங்கள்:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

இந்தக் குறளின் 7வது சொல், ‘தலை’ என்று வருகிறது, இதை ‘ஓரசைச் சீர்’ என்பார்கள், அது வெண்பாவின் நிறைவுச் சொல்லாக வரலாம், நடுவில் வரக்கூடாது.

ஆகவே, நாம் இந்தக் குறளை நேரிசை வெண்பாவின் இரண்டாவது பகுதியாக வைத்தால் பிரச்னையில்லை, அது 15வது சொல்லாக (அதாவது, நிறைவுச் சொல்லாக) சென்று உட்கார்ந்துவிடும்.

ஒருவேளை, நாம் இதை ஆரம்பத்தில்தான் வைப்போம் என்று அடம் பிடித்தால்? ‘தலை’ என்பது நேரிசை வெண்பாவின் நடுவில் (அதாவது 15 சொல் உள்ள வெண்பாவில் 7வது சொல்லாக) வராதே!

அதற்கு, அந்தத் ’தலை’யோடு நாம் வேறெதையாவது சேர்த்து கொஞ்சம்போல் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். இதோ, இந்தமாதிரி:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலையாகும், நல்லவனே,

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை

இங்கே ‘தலை’ வெண்பாவுக்கு மத்தியில் வராது என்பதால், அதற்குப் பக்கத்தில் ‘ஆகும்’ என்று ஒரு எக்ஸ்ட்ரா சொல்லைச் சேர்த்து, அதை வெண்பாவுக்கு மத்தியில் வரச் செய்திருக்கிறோம், கூடவே ‘நல்லவனே’ என்ற சொல்லைச் சேர்த்து சொல்டிங் செய்திருக்கிறோம்.

இந்த ‘ஆகும்’ என்ற எக்ஸ்ட்ரா சொல்லுக்கு, ‘ஆசு’ என்று பெயர்.

தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம் என்று அர்த்தம். அதாவது, அந்த இரு உலோகத் துண்டுகள் (குறள்கள்) ஒன்று சேர்வதற்காக, அவற்றினிடையே தேவையில்லாத ஒரு ‘ஆசு’ சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த வெண்பாவுக்கு ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என்று பெயர்.

இதுபோல, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இரண்டு குறள்களைச் சும்மா சேர்த்து விளையாடிப் பாருங்கள், செம ஜாலியாக இருக்கும்!

***

என். சொக்கன் …

03 05 2013

’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.

இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:

இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை

இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:

இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?

திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.

ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.

பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.

மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.

ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.

இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.

ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?

’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)

அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:

இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை

இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.

அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.

Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!

***

என். சொக்கன் …

01 05 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,747 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2013
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031