சொல்டிங்
Posted May 3, 2013
on:- In: இலக்கணம் | Learning | Poetry | Tamil | Uncategorized
- 12 Comments
இன்று காலை ’யாப்பருங்கலக் காரிகை’யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏதோ ஒரு பக்கத்தில் ‘இரண்டு உலோகங்களை இணைத்துப் பற்றவைக்கும்போது…’ என்று ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன்.
இதென்ன இலக்கணப் புத்தகமா, அல்லது எஞ்சினியரிங் புத்தகமா? மரபுக் கவிதை எழுதச் சொல்லித்தரும் நூலில் வெல்டிங் மேட்டரெல்லாம் எப்படி நுழைந்தது.
குறுகுறுப்பில் அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தேன். அந்த வெல்டிங் சமாசாரம் எத்துணை பொருத்தமாக இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று வியந்துபோனேன்.
அதைச் சொல்வதற்குமுன்னால், வெண்பாபற்றிய சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் ‘வெல்டிங்’குக்கும் இலக்கணத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாது.
வெண்பாவில் மிகச் சிறியது, குறள், அதாவது இரண்டே வரிகள், ஏழே வார்த்தை(சீர்)களில் விஷயத்தைச் சொல்லி முடித்துவிடவேண்டும். அதற்குள் எதுகை வேண்டும், மோனை வேண்டும், வெண்பாவுக்கு உரிய மற்ற இலக்கண வரையறைகளுக்கும் கட்டுப்படவேண்டும்.
இதற்கு உதாரணம் தேடி அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. திருக்குறள்முழுவதுமே குறள் வெண்பாக்களால் ஆனதுதான்.
ஒரு விஷயம், ‘ஏழு வார்த்தை’ என்று ஒரு வசதிக்காகச் சொல்கிறோமேதவிர, உண்மையில் குறள் வெண்பாவில் ஏழைவிடக் குறைவாகவோ அதிகமாகவோ வார்த்தைகள் இருக்கலாம், அவற்றை ஏழு சீர்களாகப் பகுத்துவைப்பார்கள். அவ்வளவுதான்.
உதாரணமாக, ‘கசடற’ என்று திருக்குறளில் வருவது ஒரு சீர், ஆனால் உண்மையில் அது ‘கசடு அற’ என்று இரு வார்த்தைகளாகப் பிரியும்.
இதற்கு நேர் எதிராக, ‘வந்தனையோ’ என்பது ஒரே வார்த்தைதான், ஆனால், மரபுக்கவிதை விதிமுறைகளுக்கேற்ப அது ‘வந்த னையோ’ என்று இரு சீர்களாகப் பிரியக்கூடும்.
ஆக, வார்த்தையும் சீரும் ஒன்றல்ல. அதை இங்கே இன்னும் விரிவாக விளக்க முற்பட்டால், இந்தக் கட்டுரையின் நோக்கம் சிதறிவிடும். ஆகவே, இப்போதைக்கு இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இதற்குமேல் நான் ‘வார்த்தை’ என்று எங்கே குறிப்பிட்டாலும், அதைச் ‘சீர்’ என்றே எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக, 3 வரி வெண்பா, நாம் அதை சாய்ஸில் விட்டுவிட்டு, நேரடியாக 4 வரிக்குத் தாவுவோம்.
நான்கு வரி வெண்பாக்களில் இரண்டு வகை, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா.
இதில் இன்னிசை வெண்பாவும் குறள் வெண்பாவும் look alike அண்ணன், தம்பிமாதிரி, அங்கே ஏழு வார்த்தை, இங்கே பதினைந்து வார்த்தை, அது ஒன்றுமட்டும்தான் வித்தியாசம், மற்றபடி எல்லா இலக்கண வழிமுறைகளும் அச்சு அசல் அப்படியே.
உதாரணமாக, நள வெண்பாவிலிருந்து இந்தப் பாடல்:
ஈர மதியே, இளநிலவே, இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று
ஒரு பெண் நிலவைப் பார்த்துப் பாடும் இந்தப் பாட்டின் சுருக்கமான பொருள், ’ஏய் நிலாவே, நான்பாட்டுக்கு கெடக்கேன், நீ ஏன் திடீர்ன்னு வந்து என்னைத் தாக்கறே? எனக்குத் தெரியும், அந்த மன்மதன்தான் உன்னை இங்கே அனுப்பிவெச்சிருக்கான்!’
நேரிசை வெண்பாவிலும் அதே பதினைந்து வார்த்தைகள்தான், ஆனால் ஒரு வித்தியாசம், இன்னிசை வெண்பாவைப்போல் அவை ஒரே தொடராக வராது, பதினைந்து வார்த்தைகளும் 7 + 1 + 7 என்று பிரியும்.
அதாவது, முதல் ஏழு, ஒரு குறள் வெண்பா, அப்புறம் ஒரு தனிச்சொல், பின்னர் வரும் அடுத்த ஏழு, இன்னொரு குறள் வெண்பா.
உதாரணமாக, ஔவையாரின் மிகப் பிரபலமான இந்தப் பாடல்:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
இதில் முதல் 7 வார்த்தைகள்மட்டும் (பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை / நாலும் கலந்துனக்கு நான்தருவேன்) தனியே ஒரு குறள்மாதிரி இருக்கும், அடுத்த 7 வார்த்தைகள் (துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்/ சங்கத் தமிழ்மூன்றும் தா) தனியே இன்னொரு குறள்.
இந்த இரண்டுக்கும் நடுவே, இரட்டைக் கதாநாயகி சப்ஜெக்டில் மாட்டிய பாக்யராஜ்மாதிரி திருதிருவென்று விழித்துக்கொண்டு ‘கோலஞ்செய்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா? அதைத் ’தனிச்சொல்’ என்பார்கள், இந்தப் பக்கமும் சேராது, அந்தப் பக்கமும் சேராது, ஆனால் இரண்டையும் இணைப்பது அதுதான் (ச்சே, அந்த பாக்யராஜ் உதாரணம் செல்லாது, எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள்!)
இப்போது, செய்யுள் இலக்கணத்தில் ‘வெல்டிங்’ எப்படி வந்தது என்று புரிந்திருக்கும், முதல் 7 வார்த்தைகள் ஓர் உலோகப் பட்டை, அடுத்த 7 வார்த்தைகள் ஓர் உலோகப்பட்டை, இரண்டையும் சேர்த்துப் பற்றவைக்கிறபோது அதற்கு இன்னோர் உலோகம் தேவைப்படும், அது அந்த இடத்தில் (Welding point) சிறு புடைப்புமாதிரி தெரியும், அதுதான் தனிச்சொல்.
‘வெல்டிங்’குக்கு இணையாக வேண்டுமானால், இதற்குச் ‘சொல்டிங்’ என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம், இதைப் பயன்படுத்தி எந்த இரு குறள் வெண்பாக்களையும் இணைத்து நேரிசை வெண்பாவாக்கிவிடலாம்.
உதாரணமாக, இந்த இரு குறள்களைப் பாருங்கள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
அதாவது, வானத்திலிருந்து மழைத்துளிமட்டும் விழாவிட்டால் போச்சு, பூமியில் ஒரு பசும்புல்லைக்கூடப் பார்ப்பது சிரமம்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அதாவது, மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை, மனிதர்களிடையே ஒழுக்கமும் இல்லை.
இந்த ஒரு குறள்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதானே, சும்மா சொல்டிங் செய்து நேரிசை வெண்பாவாக்கிப் பார்ப்போமா?
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது, பசும்பொன்னே
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
அவ்வளவுதான், வெண்பா இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும், ‘விசும்பு’, ‘பசும்புல்’க்கு எதுகையாகவும் ’பசும்பொன்னே’ என்கிற ஒரு சொல்லைச் சேர்த்ததும், திருவள்ளுவர் எழுதிய இந்த இரு குறள் பாக்களும் நேரிசை வெண்பாவாகிவிட்டன.
ஆனால், எல்லாக் குறள் வெண்பாக்களையும் இப்படி நேரிசை வெண்பாவாக்கமுடியாது. உதாரணமாக, இந்தக் குறளைப் பாருங்கள்:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
இந்தக் குறளின் 7வது சொல், ‘தலை’ என்று வருகிறது, இதை ‘ஓரசைச் சீர்’ என்பார்கள், அது வெண்பாவின் நிறைவுச் சொல்லாக வரலாம், நடுவில் வரக்கூடாது.
ஆகவே, நாம் இந்தக் குறளை நேரிசை வெண்பாவின் இரண்டாவது பகுதியாக வைத்தால் பிரச்னையில்லை, அது 15வது சொல்லாக (அதாவது, நிறைவுச் சொல்லாக) சென்று உட்கார்ந்துவிடும்.
ஒருவேளை, நாம் இதை ஆரம்பத்தில்தான் வைப்போம் என்று அடம் பிடித்தால்? ‘தலை’ என்பது நேரிசை வெண்பாவின் நடுவில் (அதாவது 15 சொல் உள்ள வெண்பாவில் 7வது சொல்லாக) வராதே!
அதற்கு, அந்தத் ’தலை’யோடு நாம் வேறெதையாவது சேர்த்து கொஞ்சம்போல் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். இதோ, இந்தமாதிரி:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலையாகும், நல்லவனே,
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவர்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
இங்கே ‘தலை’ வெண்பாவுக்கு மத்தியில் வராது என்பதால், அதற்குப் பக்கத்தில் ‘ஆகும்’ என்று ஒரு எக்ஸ்ட்ரா சொல்லைச் சேர்த்து, அதை வெண்பாவுக்கு மத்தியில் வரச் செய்திருக்கிறோம், கூடவே ‘நல்லவனே’ என்ற சொல்லைச் சேர்த்து சொல்டிங் செய்திருக்கிறோம்.
இந்த ‘ஆகும்’ என்ற எக்ஸ்ட்ரா சொல்லுக்கு, ‘ஆசு’ என்று பெயர்.
தமிழில் ‘ஆசு’ என்றால் குற்றம் என்று அர்த்தம். அதாவது, அந்த இரு உலோகத் துண்டுகள் (குறள்கள்) ஒன்று சேர்வதற்காக, அவற்றினிடையே தேவையில்லாத ஒரு ‘ஆசு’ சேர்க்கப்படுகிறது. ஆகவே, இந்த வெண்பாவுக்கு ‘ஆசிடை நேரிசை வெண்பா’ என்று பெயர்.
இதுபோல, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் இரண்டு குறள்களைச் சும்மா சேர்த்து விளையாடிப் பாருங்கள், செம ஜாலியாக இருக்கும்!
***
என். சொக்கன் …
03 05 2013
12 Responses to "சொல்டிங்"

அன்புள்ள சொக்கன்,
உங்கள் கட்டுரை நன்றாகவும் பயனுள்ளதாகவும் தெளிவாக உள்ளது. இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, ஆசிடை நேரிசை வெண்பா விளக்கம் அருமை. தனிச்சொல்லை அடையாளம் காட்ட, முன்னால் ஒரு – இட்டால் தனித்துக் காட்டும் என எண்ணுகிறேன்.
நட்புடன்,
வ.க.கன்னியப்பன்


Now I feel… How much fun I could have had in my Tamil classes till 12th…


ரொம்ப அருமையாக விளக்கம் அளித்து விளங்கச் செய்கிறீர்கள். ஆனால் ஒன்று எனக்கு தமிழ் இலக்கண அறிவு குறைவாக இருப்பதினால் உங்கள் பதிவை படிக்கும் பொழுது புரிவது போல இருப்பது படித்து முடித்தவுடன் புரிவதில்லை 😦 அது உங்கள் குற்றமில்லை, என் நிலைமை 🙂
இரு குரள்களையும் வெல்டிங் முறையில் இணைத்து வெண்பா ஆக்கிய விதம் என்னைப் போன்றவர்களுக்கும் எளிமையாகப் புரியும் விதமாக இருந்தது, நன்றி 🙂
amas32


அன்புடையீர்
வணக்கம்
இவ்வளவு நாளாய் தங்கள் தொடர்பு இல்லாதது எனக்கு எவ்வளவு பெரிய இழப்பு
என்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன். தாங்கள் யாப்பருங்க கலக்காரிகை
படிக்கப்போக
எங்களுக்கு அருமையான விளக்கமான சுலபமான வெண்பா விளையாட்டு
கிடைத்து விட்டது
எங்கள் அதிர்ஷ்டம்தான்.
சொல்டிங் ஓர் அருமையான வார்த்தை சாலம்
சொக்கனே தமிழால் சொக்கியதாக புராணம் சொல்கிறது இப்பொழுது என்
சொக்கனே தமிழைச் சொக்க வைப்பதைப் பார்க்கிறோம்
எங்களையும் சொக்க வைக்கும் சொக்கரே வாழ்க பல்லாண்டு
ச கம்பராமன்
மதுரை
03.05.13


ரொம்பவும் எளிமையாக என்னைப் போன்ற அறிவிலிகளுக்கும் புரியும்படி விளக்கியமைக்கு மிக்க நன்றி. இந்த மாதிரி விளக்கங்களுடன் படிக்கும்போதுதான் தமிழின் அருமை வியக்க வைக்கிறது. உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வகுப்பில் நிறையத் தூங்கி இருக்கிறேன் என்று இப்போது தெரிகிறது! நன்றி! – ஜெ.


நீங்கள் செய்யுள் இலக்கண பாடங்கள் எழுதலாமே. எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது. அவ்வப்போது சின்ன டெஸ்ட் கூட வைக்கலாம்.- கடுகு.


இலக்கணத்தை இத்தனை இனிமையாக நகைச்சுவை கலந்து எளிமையாக, அருமையாகச் சொல்கின்றீர்கள்.


அடடா அழகு ….! அப்பப்பா தமிழில் தான் எவ்வளவு சிறப்புகள். அற்புதம் அண்ணா …! பகிர்விற்கு மிக்க நன்றி …!


Sri PSR: What, testaa..! Ungalaip poola chinna vayathinarukku vendumaanaal test ellaam ok. Ennaip pola marathi mannarkal ellaam enna seyvom? – R. J.


Cool man..

1 | SRK
May 3, 2013 at 6:36 pm
எனக்கு இந்த கூட்டல் கழித்தல் அசை சீர் இதெல்லாம் ஒன்றுமே தெரியாது. இருந்தாலும் இந்த சொல்டிங் சமாசாரம் [பாக்யராஜ் வார்த்தை 🙂 ] மட்டும் நச்சென்று புரிந்து விட்டது. அருமை.