Archive for May 26th, 2013
யும் வும்
Posted May 26, 2013
on:- In: Grammar | Kids | Learning | Question And Answer | Tamil
- 16 Comments
இன்று என் மகள் பேச்சுவாக்கில் ‘நாளைக்கு அம்மாயும் என்னோட வருவா’ என்றாள்.
நான் அவளை நிறுத்தி, ‘அம்மாவும்ன்னு சொல்லணும், அம்மாயும்ன்னு சொல்லக்கூடாது’ என்றேன்.
’சரி’ என்று தலையாட்டியவள், கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அப்பா, பாட்டியும்ன்னு சொல்றோமே, அது கரெக்டா?’ என்றாள்.
‘கரெக்ட்தான்’
‘அப்போ, அம்மாயும்ன்னு சொன்னா என்ன தப்பு? அதைமட்டும் ஏன் அம்மாவும்ன்னு மாத்திச் சொல்லணும்?’
பிரமாதமான கேள்வி. நல்லவேளையாக, தமிழில் இதற்குத் தெளிவான இலக்கண வரையறைகள் உள்ளன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னேன், இங்கே முழு விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்.
இதற்கான நன்னூல் சூத்திரம்:
இ, ஈ, ஐ வழி ‘ய’ உம், ஏனை
உயிர் வழி ‘வ’ உம்,
ஏ முன் இவ்விருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்
அதாவது, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, முதல் சொல்லின் நிறைவில் ஓர் உயிர் எழுத்தும், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் இன்னோர் உயிர் எழுத்தும் அமைந்தால், அங்கே ஓர் மெய் எழுத்து தோன்றும், அது ’ய்’ அல்லது ’வ்’ ஆக இருக்கும்.
உதாரணமாக, மா + இலை
இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ என்ற உயிரெழுத்து உள்ளது (ம் + ஆ)
இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘இ’ என்ற உயிரெழுத்து உள்ளது.
இவை இரண்டும் ஒன்று சேரும்போது மா + இலை = மாவிலை, அல்லது மாயிலை என்று மாறும், அதாவது, ‘வ்’ அல்லது ‘ய்’ என்ற எழுத்து சேர்ந்துகொள்ளும்.
எப்போது வ்? எப்போது ய்?
அதற்குதான் மேலே சொன்ன சூத்திரம் : முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ அல்லது ஐ இருந்தால், அங்கே ‘ய்’ வரும், வேறு எந்த உயிரெழுத்து இருந்தாலும் ‘வ்’ வரும், முதல் சொல்லின் நிறைவில் ஏ இருந்தால், ய், வ் இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.
‘மா’ என்பதில் ‘ஆ’தான் உள்ளது, இ, ஈ, ஐ இல்லை. ஆகவே, ‘வ்’ வரவேண்டும், மா + இலை = மாவிலை
இன்னோர் உதாரணம் : புவி + அரசன்
இங்கே புவி என்ற சொல்லின் நிறைவில் ‘இ’ உள்ளது, அரசன் என்ற சொல்லின் தொடக்கத்தில் ‘அ’ உள்ளது, இரண்டும் உயிரெழுத்துகள், ஆகவே, ‘வ்’ அல்லது ‘ய்’ சேர்க்கவேண்டும்.
மேற்கண்ட நன்னூல் விதிப்படி, இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ என்ற எழுத்து வருவதால், ‘ய்’ வரும், அதாவது புவி + அரசன் = புவியரசன்.
ஆச்சா, இப்போது என் மகள் கேட்ட கேள்விக்கு வருவோம்.
பாட்டி + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ வருகிறது, ஆகவே, ‘ய்’ வரும், இது ‘பாட்டியும்’ என்று மாறும்.
அம்மா + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ வருகிறது, ஆகவே, ‘வ்’ வரும், இது ’அம்மாவும்’ என்று மாறும். அவ்ளோதான் மேட்டர்.
இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?
***
என். சொக்கன் …
26 05 2013