யும் வும்
Posted May 26, 2013
on:- In: Grammar | Kids | Learning | Question And Answer | Tamil
- 16 Comments
இன்று என் மகள் பேச்சுவாக்கில் ‘நாளைக்கு அம்மாயும் என்னோட வருவா’ என்றாள்.
நான் அவளை நிறுத்தி, ‘அம்மாவும்ன்னு சொல்லணும், அம்மாயும்ன்னு சொல்லக்கூடாது’ என்றேன்.
’சரி’ என்று தலையாட்டியவள், கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அப்பா, பாட்டியும்ன்னு சொல்றோமே, அது கரெக்டா?’ என்றாள்.
‘கரெக்ட்தான்’
‘அப்போ, அம்மாயும்ன்னு சொன்னா என்ன தப்பு? அதைமட்டும் ஏன் அம்மாவும்ன்னு மாத்திச் சொல்லணும்?’
பிரமாதமான கேள்வி. நல்லவேளையாக, தமிழில் இதற்குத் தெளிவான இலக்கண வரையறைகள் உள்ளன. ஐந்து வயதுப் பிள்ளைக்கு அதைச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னேன், இங்கே முழு விளக்கத்தைப் பதிவு செய்கிறேன்.
இதற்கான நன்னூல் சூத்திரம்:
இ, ஈ, ஐ வழி ‘ய’ உம், ஏனை
உயிர் வழி ‘வ’ உம்,
ஏ முன் இவ்விருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்
அதாவது, இரண்டு சொற்கள் ஒன்றாகச் சேரும்போது, முதல் சொல்லின் நிறைவில் ஓர் உயிர் எழுத்தும், இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் இன்னோர் உயிர் எழுத்தும் அமைந்தால், அங்கே ஓர் மெய் எழுத்து தோன்றும், அது ’ய்’ அல்லது ’வ்’ ஆக இருக்கும்.
உதாரணமாக, மா + இலை
இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ என்ற உயிரெழுத்து உள்ளது (ம் + ஆ)
இரண்டாவது சொல்லின் தொடக்கத்தில் ‘இ’ என்ற உயிரெழுத்து உள்ளது.
இவை இரண்டும் ஒன்று சேரும்போது மா + இலை = மாவிலை, அல்லது மாயிலை என்று மாறும், அதாவது, ‘வ்’ அல்லது ‘ய்’ என்ற எழுத்து சேர்ந்துகொள்ளும்.
எப்போது வ்? எப்போது ய்?
அதற்குதான் மேலே சொன்ன சூத்திரம் : முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ அல்லது ஐ இருந்தால், அங்கே ‘ய்’ வரும், வேறு எந்த உயிரெழுத்து இருந்தாலும் ‘வ்’ வரும், முதல் சொல்லின் நிறைவில் ஏ இருந்தால், ய், வ் இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.
‘மா’ என்பதில் ‘ஆ’தான் உள்ளது, இ, ஈ, ஐ இல்லை. ஆகவே, ‘வ்’ வரவேண்டும், மா + இலை = மாவிலை
இன்னோர் உதாரணம் : புவி + அரசன்
இங்கே புவி என்ற சொல்லின் நிறைவில் ‘இ’ உள்ளது, அரசன் என்ற சொல்லின் தொடக்கத்தில் ‘அ’ உள்ளது, இரண்டும் உயிரெழுத்துகள், ஆகவே, ‘வ்’ அல்லது ‘ய்’ சேர்க்கவேண்டும்.
மேற்கண்ட நன்னூல் விதிப்படி, இங்கே முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ என்ற எழுத்து வருவதால், ‘ய்’ வரும், அதாவது புவி + அரசன் = புவியரசன்.
ஆச்சா, இப்போது என் மகள் கேட்ட கேள்விக்கு வருவோம்.
பாட்டி + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘இ’ வருகிறது, ஆகவே, ‘ய்’ வரும், இது ‘பாட்டியும்’ என்று மாறும்.
அம்மா + உம் = முதல் சொல்லின் நிறைவில் ‘ஆ’ வருகிறது, ஆகவே, ‘வ்’ வரும், இது ’அம்மாவும்’ என்று மாறும். அவ்ளோதான் மேட்டர்.
இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?
***
என். சொக்கன் …
26 05 2013
16 Responses to "யும் வும்"

நினைவூட்டியதற்கு நன்றி.. ‘ஏ முன் இவ்விருமையும்’ இதற்கு ஏதும் எ.கா?
-Ashok.


அருமை…கோவில்தான், சரிதானே…நாகர்கோவில், நாகர்கோயிலல்ல…


அன்பார் சொக்கரே
எங்களைச் சொக்க வைத்தவரே
வணக்கம்
அருமையான இலக்கண வகுப்பு நடத்துகிறீர்கள்
கோவில் என்பதுதான் சரி
ஆனால் வழக்கில் இரண்டும் கலந்து விட்டது
ச கம்பராமன்
மதுரை
27.05.13


இதேபோல் மற்ற உறவுமுறைகளையும் சொல்லிப் பாருங்கள் : அப்பாவும், அம்மாவும், அத்தையும், சித்தியும், மனைவியும், அண்ணாவும், அக்காவும்… ய், வ் பொருத்தம் கச்சிதமாக உள்ளதல்லவா?
//ரத்த சொந்தத்திற்கு ‘வு’, ஏனையவற்றுக்கு ‘யு’


மிகவும் செறிவான பதிவு;
ஒரு குழந்தைக்கு, எவ்வளவு சொல்லி விளங்க வைக்கணுமோ, அதைச் செய்துள்ளீர்கள்!
இப்படிக் கேள்வி கேட்கும் பிள்ளைகள் இருந்துட்டாலே போதும்; தமிழ் தானே பழகும்; தானே வாழும்!
—
முன்பெல்லாம், கிராமப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் குடுக்கும் போது, இந்தக் குழப்பமே வராமல் சொல்லிக் குடுப்பாங்க!
அ-ன்னா
ஆ-வன்னா (ஆ-யன்னா இல்ல)
இ-ன்னா
ஈ-யன்னா (ஈ-வன்னா இல்ல)
அதே போல், ஐ-யன்னா, ஒள-வன்னா!
“இ, ஈ, ஐ – வழி ய-வ்வும்” ன்னு நன்னூல் விதியைச் சொல்லாமலேயே சொல்லிக் குடுக்கும் ஒன்னாம் வகுப்பு முறை!
இப்படிச் சொல்லிக் குடுக்கும் முறை போய் விட்டது:(
Convent-இல், “அ-ஆ,இ-ஈ” -ன்னு “decent”ஆகச் சொல்வதால்,
“ஆவன்னா, ஈயன்னா” போய் விட்டது பாருங்கள்;


கோ-யிலா? கோ-விலா?
= இரண்டுமே, “இலக்கணப் படியும்” சரியே:)
உங்களோடு முரண்படனும் -ன்னே முருகன், எனக்கு விதி எழுதிட்டானோ என்னமோ?:)
ஏன்டா முருகா, என்னைப் பாடாய்ப் படுத்தற?:)
சரி, எதுவாயினும், “தமிழின் நன்மைக்கு” என்பதால், சிறியேன் இயன்ற வரை எடுத்துக் காட்டுறேன்; பிழை இருந்தால் மன்னித்து விடுக;
நோக்கம்: எதிர்த்துப் பேசுவது அன்று; தமிழின் நன்மைக்கு மட்டுமே!
——–
இ, ஈ, ஐ வழி யவ்வும் – நன்னூல் விதி
பு(வி)+ (அ)ரசன்
இரண்டும் உயிர் எழுத்து; முதலில் முடிவது “வி” = வ்+இ
Rule says: இ வந்தா ய-வ்வும்
So, புவியரசன் என்பது சரியே!
அதே போல் கோ + இல்
முதலில் முடிவது “கோ” = க் + ஓ
Rule says: ஏனை உயிர் வந்தா வ-வ்வும் (இ, ஈ, ஐ, ஏ அல்லாத இதர உயிர் எழுத்துக்கள்; ஓ என்பது இதர உயிர் எழுத்து)
So, கோ+வ்+இல் = கோவில் என்பதே சரி;
உங்கள் வாதம் முற்றிலும் நியாயமானதே; ஆனால்…. ஆனால்….
——–
கம்பனைப் பாருங்கள்:
* முனியொடும் வேந்தன் “கோயில்” புக்கு – திரு அவதாரப் படலம்
* அம் பொன் “கோயில்” பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – மிதிலைக் காட்சிப் படலம்
* “கோவில்” நான்முகன் படைக்கலம் தடக் கையில் கொண்டான் – பாசப் படலம்
கம்பன், எதுக்குக் “கோயில்”-ன்னும் சொல்லணும்? “கோவில்”-ன்னும் சொல்லணும்?
Poetic Licence-ஆ? அல்ல அல்ல! காரணம் இருக்கு, தமிழில்… தெரிந்த வரை சொல்கிறேன்…


என்ன காரணம்?
இன்னொரு கம்பன் பாட்டையே பார்ப்போமா?
= மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் (கரன் வதைப் படலம்)
மா + இரு = “மாவிரு” -ன்னு தானே வரணும்? (ஏனை உயிர் வழி வ-வ்வும்)
ஏன் கம்பன் “மாயிரு” -ன்னு எழுதறான்?
கம்பனுக்குக் கண்டிப்பாத் தமிழ் இலக்கணம் தெரியும்; அதை விடத் “தமிழ்-அன்பு” உண்டு;
ஒரு வேளை, கம்பனும், “மக்கள் நிறைய புழங்குறாங்க; So, “acceptable mistakes”/ ஏற்கத் தக்க பிழைகள்” -ன்னு முடிவு கட்டீட்டானோ?
அல்ல!
——-
“மா” என்பது உரிச்சொல்!
மா + இரு -ன்னா = மிகப் பெரிய
(சால உறு தவ நனி கூர் கழி என்பது போல உரிச்சொல்)
ஒரு சொல்லு, உரிச்சொல்லா வரும் போது,
“ஏனை உயிர் வழி வ-வ்வும்” -ன்னு விதி பொருந்தாது!
இதை நன்னூலே சொல்லுது; புறனடை (exception) என்கிற கடைசிப் பக்கத்தில்!
நாம தான், முதல் பக்கத்தை மட்டும் பாத்துட்டு…
அவசரப்பட்டு, அவசரப்பட்டு, இணையத்தில் எழுதி விடுகிறோம்:(
இடை, உரி, வடசொலின் இயம்பிய கொளாதவும்,
போலியும், மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே
(நன்னூல் புறனடை for உரிச்சொல்)
——-
இந்த மாதிரிக் குழப்பம் வந்துறக் கூடாது-ன்னு தான்,
தொல்காப்பியர் “இ, ஈ, ஐ வழி ய-வ்வும்” -ன்னு
பொதுப்படையா ஆக்காமச் சொல்லுவாரு; His Formulation Skills;
நன்னூலார், பொதுவாச் சொன்னதால, அது பிரபலம் ஆகி, அவரே சொன்ன “புறனடை”(exception) காத்துல போயிருச்சி:)
ஆனா, முத்து வீரியம் எனும் இலக்கண நூல், இதைத் தெளிவா எடுத்துக் காட்டி,
இடையில் ஏற்பட்ட பிழையை மீண்டும் சரி செய்கிறது;
“கோ-மா முன்வரின் யகரமுங் குதிக்கும்” (முத்து வீரியம் – 184)
நீங்களே பாருங்கள்: http://www.tamilvu.org/slet/l0I00/l0I00pka.jsp?pno=53


மா + பெரும் விழா
கோ + பெரும் சோழன்
இப்படி உரிச்சொல்லா வரும் போது, “ய”-வரும்!
*கோ + இல் = கோயில்
*மா + இரு = மாயிரு
ஆனா, கோ என்பதற்கு “அரசன்” -ன்னு இன்னொரு பொருளும் இருப்பதால்…
கோ + இல் = கோவில் என்பதும் சரியே! (உரிச் சொல் அல்லாத பொருளில், வரும்போது)
Tamizh has this unique flexibility with minimum number of letters, even before non internet age; (12 + 18 + 1 = Just 31 letters)
ka, kha, ga, gha ன்னு ரொம்ப அழுத்தாமல், context based flexibility குடுக்கும்; (ஓசை நெகிழ்வு)
அதான், உரிச் சொல்லுக்கு ஒரு மாதிரியும், மற்ற இடங்களில் வேறு மாதிரியும் வருது = மாயிரு / மாவிலை;
*மாங்காய் மரத்தின் இலை-ன்னா = மாவிலை
*ஒரு மரத்தின் பெரிய (மா) இலை-ன்னா = மாயிலை
இதைத் தான், “இரட்டைப் பயன்பாட்டால் வந்த சொற்கள்” -ன்னு நான் அடிக்கடி வேண்டிக் கேட்டுக்குவேன்;
(பலர் சினத்தையும் சம்பாதித்துக் கொள்வேன்:)))
———-
அதனால் என்ன?
என்னை விடத் தமிழ் பெரிது; தமிழ் நல்லா வாழணும்;
எழுத்தில் என் விசுவாசம், தமிழுக்கு மட்டுமே; முருகனுக்குக் கூட இல்லை!
அதனால், இங்கே நான் சொன்ன சொற்களைத் தவறாகக் கொள்ள வேண்டாம் -ன்னு கேட்டுக்கறேன்;
பிழை இருப்பின் தள்ளி விடவும்;
மற்றபடி, பதிவில் நீங்கள் சொன்ன மற்ற எடுத்துக்காட்டுகள் அனைத்தும் சரியே!
அதைச் சொல்லத் தூண்டிய உங்கள் செல்வி வாழி!
நன்றி!


எனக்கு, பள்ளி நாட்களில் மிகச் சுலபமாக மனதில் பதிந்த இலக்கண விதிமுறை, “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்” தான், (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே, உக்குறள் …. இவையும் சொல்லலாம்). இதனை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி 🙂
ஆவன்னா ஈயன்னா விளக்கம் அற்புதம்.


Should be “manaththil” in the previous comment. Didn’t proof read.


அழகை ரசிப்பதில் குற்றமில்லை
அழகு ரசிப்பதற்குத் தானே
அம்பாளையே நாம் ரசிக்கத் தானே செய்கிறோம்
கோவிலில் ஆண்டவன் அலங்காரம் உடனே ஆகிவிடும்
அம்பாளுக்குதான் அலங்காரம் நேரமாகும்
நகை பூட்டி அழகு பார்ப்பதும் அம்பாளுக்குத்தான்
ஆண்டவனின் விபூதி பூசி அம்பாளின் குங்குமமும் வைத்தால்
அது ஒரு அழகுதான் இல்லையா
நீரில்லா நெற்றி பாழ் பழமொழி
போட்டு இல்லா நெற்றி அழகு பாழ் புதுமொழி
ஆண்டவனும் அழகை பெண்ணுக்காகத் தானே
படைத்துள்ளான் நாமும் பெண் பிள்ளைகளைதானே
அழகாய் வளர்கிறோம்
ச கம்பராமன்
29.05.13
2013/5/28 Natrajan Kalpattu Narasimhan
> பங்களூரு பார்க்கில் நடைப் பயணம் எனக்குத் தந்த அனுபவத்தைப் பாருங்கள்.
>
> *மனம் ஒரு குரங்கு*
>
>
> [image: Inline image 2]
>
> ****
>
>
> நகர நந்த வனம் ஒன்றில் பச்சைப் பசேல் என்று மரங்களும் செடிகளும், அவற்றில்
> பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள். வேலியோரம் இருந்த மரங்களிடையே
> ஆங்காங்கே உட்கார்ந்து இயற்கையின் அழகினை ரசித்திட இருக்கைகள். சில மரத்தால்.
> சில சிமெண்ட் கான்கிரீட்டால். அதற்கடுத்து மக்கள் நடைப் பயிற்சி செய்வதற்குத்
> தோதாக சிமெண்ட் கற்கள் பாதிக்கப் பட்ட நடை பாதை.
>
>
>
> நந்த வனத்தின் நடுவே பல வித செடிகள், சிறிய மரங்கள். அவற்றின் இடையேயும்
> இருக்கைகள்.
>
>
>
> நடை பாதையில் இளைஞர் முதல் வயோதிகர் வரை நடந்து கொண்டிருக்கின்றனர். சிலர்
> கடியார மூள் போன்று இடமிருந்து வலமாக. சிலர் வலமிருந்து இடமாக.
>
>
>
> இருக்கை ஒன்றில் வயதான ஜோடி. நடந்த களைப்பு தீர உட்கார்ந்து பேசிக்
> கொண்டிருக்கின்றனர்.
>
>
>
> “ஏன்னா ஒத்தர் சம்பந்தா சம்பந்தமில்லாமெ நீல டீ ஷர்ட்டும், செகப்பு பேன்டும்
> போட்டுண்டு போனாரே பாத்தேளோ?”
>
>
>
> “அப்பிடியா? பாக்கலியே.”
>
>
>
> “இந்த காலத்துப் பொண்ணுகள் எப்பிடி யெல்லாம் ட்ரெஸ் பண்ணிக்கெறது பாத்தேளோ?
> ஒரு பொண்ணு கருப்பு ட்ரேக் பேண்ட் போட்டுண்டு மேலெ செகப்பு டீ ஷர்ட்டு
> போட்டுண்டு இருக்கு. டீ ஷர்டுலெ கண்றாவியா கொட்டெ எழுத்துலெ “மை ஃபுட் பால்”
> னு வாசகம் வேறெ.”
>
>
>
> “ஆமாம்….. ஆமாம். பாத்தேன் பாத்தேன். நான் கூட நெனெச்சிண்டேன் ஸ்பெல்லிங்க்
> மிஸ்டேக்கா இருக்குமோன்னு. ஃபுட்டுங்கறெ வார்த்தெ அவசியமில்லே, பால்னு
> ஒருமைலெ போட்டதும் தப்போன்னு நெனெச்சேன்.”
>
>
>
> “நெனெப்பேள் நெனெப்பேள். பொண்ணூன்னா கட்டாயம் பாப்பேளே நீங்க. தேவை தானா
> ஒங்களுக்கு இந்த வயசிலெ?”
>
>
>
> “டாக்டர் சொல்லி இருக்காரேடீ நீங்க தினோம் ஒரு அரை மணி நேரமாவது நடக்கணும்னு.”
>
>
>
> “நான் நடக்கெறதெப் பத்தி கேக்கலெ.”
>
>
>
> *(படம் இணைய தளத்தில் இருந்து)*
>
> * *
>
> *04-06-2011 நடராஜன் கல்பட்டு*
>
>
> 2013/5/27 karpaka vinayagar enterprises madurai
>
>> வக்கிரம் இல்லாத காதலர்கள் வாழ்க
>> அருமையான கதை இயல்பான
>> இளமையான் காதல் கதை அமைப்புக்குப்
>> பாராட்டுக்கள்
>>
>> என்னுடைய கணிப்பு தன்னால் செய்யமுடியாததை
>> மற்றவர்கள் செய்யும்பொழுது அல்லது நம் காலத்தில்
>> இதை எல்லாம் நாம் அனுபவிக்கவில்லையே
>> என்ற ஆதங்கம்தான்
>>
>> ஒரு சிலருக்கு சமூக அக்கறை இருக்கலாம்
>>
>> ச கம்பராமன்
>> 27.05.13
>>
>>
>>
>>


WHile seeting this kind of explanation, I am Remembering my Xth standard Tamil Iyya (Thiru Narayanan)…

1 | ராம்
May 26, 2013 at 10:19 pm
அருமை