பத்து வருஷமாச்சு
Posted May 27, 2013
on:- In: Media | Memories
- 2 Comments
முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் (2003ல்) எழுதியது. இலக்கணப் பிழைகளையும், சிற்சில வாக்கிய அமைப்புகளையும்மட்டும் திருத்தியிருக்கிறேன்
மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன்.
பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ பலகையைக் காணாமல் ஒரு மேட்ச் பார்த்துமுடித்தால் போன பிறவிப் புண்ணியம்!
டெஸ்ட் மேட்ச்சா? மூச்! எட்டரை மணிச் செய்தியின் இறுதிப் பகுதியில் மனசே இல்லாமல் அவர்கள் சொல்கிற ஸ்கோரைமட்டும் கேட்டுவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!
பின்னர், பெரும்பாலான ஒருநாள் போட்டிகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஷார்ஜா போல் நம்மூரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கிறவை, நேரடி ஒளிபரப்புகளாக வந்தன. பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு மேட்ச் பார்க்கிற பையன்கள் அதிகமானார்கள், இந்தியா விளையாடும் மேட்ச் என்றால் அலுவலகங்களுக்கு தைரியமாக விடுமுறை கேட்கிற பழக்கமும் ஆரம்பித்தது.
இத்தனைக்கும் தூர்தர்ஷனின் ஒளிபரப்பைப் பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பல தலைமுறைகள் முன்னாலேயே எழுதிவைக்கப்பட்ட ஒன்றிரண்டு கோணங்களில்மட்டுமே மேட்ச்சை ரசிக்கலாம், போதாக்குறைக்கு அவ்வப்போது கேமெராவை ஒரே திசையில் வைத்துவிட்டு தூங்கப்போய்விடுவார்கள், பதினைந்து ஓவர்களுக்கு ஒருமுறைதான் ஸ்கோர் காட்டுவார்கள், மற்ற நேரமெல்லாம் ’ஸுந்தர் ஷாட்’, ‘வெங்ஸர்கார் நே லெக்ஸைட் மேய்ன் க்ளான்ஸ் கீயா’ போன்ற ஹிந்தி வர்ணனைகளைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான், விசுவாசமான காந்தங்கள்போல பந்து இடதுபக்கம் அடிக்கப்பட்டால் கேமரா வலதுபக்கமும், அது வலதுபக்கம் ஓடினால் கேமரா இடதுபக்கமும் நகரும், நியூஸ், பிரதம மந்திரி ஹரப்பா பயணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் வந்தால் ஈவு, இரக்கம் இல்லாமல் மேட்ச்சை நிறுத்திவிடுவார்கள்… இத்தனைக்கும் இடையே இந்தியா உலகக் கோப்பை வாங்கிய காரணத்தால், அடுத்த (ரிலையன்ஸ்) உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடந்ததால் மக்கள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ரசித்தார்கள், தங்கள் அணி தோற்றாலும் அடுத்த மேட்ச்சில் ஜெயிக்கும் என்று ஆசையோடு பார்த்தார்கள் (இன்றைக்கும்தான்!), கபில்தேவ், தெண்டுல்கர் போன்றோர் எல்லாருக்கும் பிடித்த முகங்களாக உருவானதற்கு இந்த ஒளிபரப்புகளும் முக்கியக் காரணம்.
அடுத்து, சாடிலைட் சேனல்கள் களத்தில் இறங்கின. இந்தியா உலகத்தின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடப் போனாலும் பின்னாலேயே கேமராக்களோடு ஓடினார்கள் இவர்கள், புதுமையான ஒளிப்பதிவு விந்தைகள், ஆட்டத்துக்கு நடுவே திடீரென்று இடைவெளி கிடைத்தால் போட்டி நடக்கிற தீவின் இயற்கைக் காட்சி, அல்லது போட்டியைக் காண வந்திருக்கிற அம்மணிகளின் காது ஜிமிக்கிகள் என்று எதையாவது சுவாரஸ்யமாகக் காட்டிக் கலகலப்பூட்டினார்கள், நல்ல, புரியக்கூடிய ஆங்கிலத்தில் திறமையான வர்ணனையாளர்கள், அசத்தலான க்ராஃபிக்சும், நுணுக்கமான அலசல்களும், எப்போதும் கண்முன் விரிகிற ஸ்கோர் போர்டுமாய், ஆட்ட அரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைவிட டிவி முன்னால் உட்கார்ந்திருப்பது சிறந்தது என்று உணரச் செய்யுமளவு இவர்களின் ஒளிபரப்புத் தரம் இருந்தது.
அடுத்து டெஸ்ட் மேட்ச்களும் நேரடி ஒளிபரப்பாயின, போரடிக்கும் ஆட்டம் என்று இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக நிராகரித்துவந்த ஓர் ஆட்டத்தைக்கூடச் சுவையாக ஆக்கமுடிந்தது இவர்களால்.
இதன் அடுத்த கட்டம் இப்போது, போன வாரம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்தானபோது நாமெல்லாம் என்ன செய்திருக்கவேண்டும்? டிவியை அணைத்துவிட்டுத் தூங்கப்போயிருக்கவேண்டும்!
ஆனால், ஒருவர் என்றால் ஒருவர்கூடத் தூங்கவில்லை. மழையைப் பற்றியும், மழை வராவிட்டால் என்ன பண்ணியிருக்கலாம் என்பதுபற்றியும், மழை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமா, பாதகமா என்பதுபற்றியும், நாளைக்கு மழை பெய்யுமா என்பதுபற்றியும், மழை வந்தவுடன் போட்டியை ரத்து செய்துவிட்டது நியாயமா என்பதுபற்றியும், வெளிநாட்டிலிருந்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் அதனால் எத்தனை ஏமாற்றம் என்பதுபற்றியும் … இன்னும் என்னென்னவோ பேசி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் அடித்துக்கொண்டிருந்த வெட்டி அரட்டையை எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியே நடக்காவிட்டாலும், மூன்று மணி நேரம் அவர்கள் ஒளிபரப்பைப் பார்க்கவைத்துவிட்டார்கள்!
முதல் வரியை மீண்டும் படிக்கவும்!
***
என். சொக்கன் …
1 | karpaka vinayagar enterprises madurai
May 28, 2013 at 8:15 am
முதல் பாராவை பல முறை சொன்னாலும் எழுதுனாலும்
யாரும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என்பதே
இன்றைய நிதர்சனம் (நல்ல வேலை) இது வெள்ளைக்காரனுக்கு
அன்றே தெரிந்திருந்தால் நம்ம பாடு நல்ல பாடா யிருந்துருக்குமோ [?]
2013/5/27 “மனம் போன போக்கில்”
> **
> என். சொக்கன் posted: “முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால்
> (2003ல்) எழுதியது. இலக்கணப் பிழைகளையும், சிற்சில வாக்கிய
> அமைப்புகளையும்மட்டும் திருத்தியிருக்கிறேன் மீடியா முதலாளிகள் நினைத்தால்,
> மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை
> ராத்திர”