இளையராஜா எனும் பாடலாசிரியர்
Posted June 16, 2013
on:- In: Ilayaraja | Music | Poetry | Tamil
- 4 Comments
(பெங்களூருவில் நடைபெற்ற ‘இளையராஜா 70’ ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
அனைவருக்கும் வணக்கம்,
இளையராஜாவின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நாம் இங்கே கூடியிருக்கிறோம். இசைத் தமிழில் அவரது அற்புதமான சாதனைகளைப்பற்றிப் பேசிவருகிறோம்.
இதனிடையே, ஒரு சின்ன மடைமாற்றமாக, இயல் தமிழ், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், ஒரு பாடலாசிரியராக அவரது திறமைகள், பங்களிப்புகள் என்னென்ன என்பதுபற்றிச் சிறிது நேரம் பேச நினைக்கிறேன்.
பயப்படவேண்டாம், இது ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல. ‘இளையராஜாவின் பாடல் வரிகளில் மலர் உருவகங்கள்’ என்கிற ரேஞ்சுக்கு ஆழ இறங்கி போரடிக்கமாட்டேன். அவர் எழுதிய பாடல்களைப் பட்டியலிட்டுக் கொட்டாவி வரவழைக்கமாட்டேன், தமிழ்த் திரை இசைத்துறையில் ஒரு பாடலாசிரியராக அவர் செய்தவற்றையும், அதில் எனக்குப் பிடித்த அம்சங்களையும் அறிமுகப்படுத்துகிற சிறிய பதிவுதான் இது.
நாம் ஏன் இதுபற்றிப் பேசவேண்டும்?
இளையராஜா இசையமைத்த பாடல்கள், பாடிய பாடல்கள், அவரது மேடைப் பேச்சுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள், ஏன், அவரது புகைப்படங்கள், வீடியோக்களில் அவர் காண்பிக்கும் அலாதியான உற்சாகக் கணங்களைக்கூட அணு அணுவாக ரசித்து ஆராதிக்கிற கூட்டம் உலகம்முழுக்க இருக்கிறது. ஆனால், இந்தத் தீவிர ரசிகர்கள்கூட, அவரது பாடலாசிரியப் பங்களிப்புபற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், இருக்கிறோம்.
அதனால்தான், இளையராஜா எத்தனை பாடல்கள் எழுதியுள்ளார் என்கிற கணக்கோ பட்டியலோ இன்று அநேகமாக எங்கேயும் இல்லை. அவருக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
சொல்லப்போனால், ராஜா இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாக அவர் மீடியாவில் அதிகம் தென்படுகிறார், தன் பாடல்களைப்பற்றி நிறைய பேசுகிறார், ஆனால் அங்கேயும் அவர் தான் எழுதிய பாடல்களைப்பற்றிக் குறிப்பிட்டுப் பேசக் காணேன்.
இதன் அர்த்தம், அவர் ஒரு மோசமான பாடலாசிரியர் என்பதல்ல. அவர் இதற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை. நமக்கெல்லாம் Hobbies உண்டல்லவா, அதுபோல் இதைச் செய்துவந்திருக்கிறார் என்று ஊகிக்கலாம்.
ஆனால் எனக்கு, இளையராஜாவை ஒரு பாடலாசிரியராகவும் பிடிக்கும். இன்றைக்கும், ‘இந்தப் பாட்டு ராஜா எழுதினது’ என்று எதையாவது புதிதாகக் கேள்விப்படும்போது, சிலீரென்று உள்ளுக்குள் ஒரு காற்றடிக்கிறது. பரபரவென்று அந்தப் பாட்டைத் தேடி எடுத்து, பாடல் வரிகளைக் கூர்ந்து கவனிக்கிறேன், விசேஷ அம்சங்களை உள்வாங்கிக்கொள்கிறேன். அவர் எழுதிய பாடல்களைக் கூடுதல் ஆதூரத்துடன் ரசிக்கிறேன்.
வார்த்தைகளில் விவரிக்கச் சிரமமான உணர்வு அது. கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.
ராஜாவின் பல பாடல்களை நான் ‘Injection Moulded’ என்று நினைப்பதுண்டு. அதாவது, தனித்தனி பாகங்களாகச் செய்யப்பட்டு, பின் பூட்டப்பட்டவை அல்ல, முழுமையாக அப்படியே சிந்தித்து, அப்படியே உற்பத்தியானவை.
உதாரணமாக, ஒரு மர நாற்காலியை எடுத்துக்கொண்டால், அதற்கு நான்கு கால்கள், உட்காரும் இடம், முதுகு சாயும் இடம் என ஒவ்வொன்றையும் தனித்தனியே உருவாக்கி, பின் அவற்றை ஒன்றாகப் பொருத்துவார்கள். அது தன் வேலையைச் சிறப்பாகவே செய்யும்.
வேறு சில நாற்காலிகள், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகின்றன, இவற்றைத் தனித்தனியே செய்து பொருத்துவது இல்லை, இந்தப் பக்கம் பிளாஸ்டிக்கை அனுப்பினால், அந்தப் பக்கம் நாற்காலி வரும். அதில் கால் எது, முதுகு எது என்று பிரித்தறியக்கூட முடியாது.
அதுபோல, ராஜாவின் பாடல்களில் Prelude, Interlude, பல்லவி, அனுபல்லவி, சரண மெட்டுகள், பாடல் வரிகள், பாடும் விதம், இடையே வரும் கோரஸ் என ஒவ்வொன்றும் மிகுந்த நுட்பத்துடன் உருவாக்கப்படுபவைதான். ஆனால் ஒட்டுமொத்தப் பாடலைக் கேட்கும்போது, அவை இப்படித் தனியே துருத்திக்கொண்டு தெரியாது. ஒன்றுடன் ஒன்று சிறப்பாக இயைந்து காணப்படும். கேட்டுக்கொண்டே இருப்போம், பாடல் முடிந்துவிடும், ‘அட! நாலரை நிமிஷம் எங்கே போச்சு?’ என்று திகைப்போம்.
மேலே நான் சொன்ன பட்டியலில், பாடல் வரிகள், பாடகர்கள் என்ற இரு விஷயங்களைத்தவிர, மற்ற அனைத்தும் ராஜாவின் நேரடிப் பங்களிப்புகள். பின்னர் ஒரு கவிஞரோ, பாடகரோ அதில் இணைகிறார். பாடல் உருவாகிறது.
இங்கேதான் என் பிரச்னை தொடங்குகிறது, இன்னொரு கவிஞர், பாடகருடன் இணைந்து ராஜா உருவாக்கிய பாடல்கள் எத்துணைதான் சிறப்பாக இருப்பினும், அவை முழுமையாக ஒரே வீச்சில் உருவாக்கப்பட்டவை என்று என்னால் நினைக்கமுடிவதில்லை. லேசாக உறுத்துகிறது.
அதற்காக நான் அந்தக் கவிஞர்களை, பாடகர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று நினைக்கவேண்டாம், அவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகவே செய்துள்ளார்கள், அதேசமயம், அது முழு Injection Mouldingகாக, ‘அப்டியே வந்த’தாக இருக்க வாய்ப்பில்லை, முனைந்து செய்யப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
இங்கேதான், ராஜா எழுதிய பாடல்கள் ஒரு படி மேலே சென்றுவிடுகின்றன, அவர் அந்தப் பாடலைச் சிந்திக்கும்போதே இசைக் குறிப்புகள், மெட்டுகள், வரிகளுடன் வந்து விழுந்திருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.
Of course, இதற்குச் சாட்சிகள் எதுவும் இல்லை. ராஜா மெட்டமைத்துவிட்டுப் பின் தனியே உட்கார்ந்து பாடல் வரிகளை எழுதியிருக்கலாம். ஆனால் எனக்கு இப்படி யோசிப்பது பிடித்திருக்கிறது.
அந்தப் பாடலை ராஜாவே பாடியிருந்தால், இன்னும் விசேஷம். நான் அவரை ஓர் அஷ்டாவதானிபோல் கற்பனை செய்துகொள்வேன். இயக்குநர் சூழலைச் சொல்வார், ராஜா மெட்டோடு, வரிகளோடு அவரே பாடுவார், அதைப் பதிவு செய்து கேஸட்டில் போட்டுவிடுவார்கள்!
சிரிக்காதீர்கள். இம்மென்னும் முன்னே இருநூறும் முந்நூறுமாகக் கவிதை எழுதிய தமிழ்க் கவிஞர்கள் இங்கே உண்டு. ஓர் இசையமைப்பாளராக ராஜாவும் அப்படிப்பட்டவர்தான், அவருடைய Spontaneous திறமையும் ஆளுமையும் நமக்குத் தெரியும், சூழலைச் சொன்னதும் மெட்டுப் போடுவார், மளமளவென்று நோட்ஸ் எழுதுவார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவரை ஓர் ஆசுகவியாகவும் கற்பனை செய்வதில் என்ன தவறு?
சொல்லப்போனால், ராஜாவின் பல பாடல் வரிகள் எந்த முன் தயாரிப்பும் இன்றி Just In Time எழுதப்பட்டதுபோல்தான் தெரிகின்றன.
அதன் அர்த்தம், அவை மோசமான வரிகள் என்பதல்ல. ஆங்காங்கே பளிச்சென்று சில வரிகள் வந்து விழுந்திருக்கும், இசையில் தோய்ந்தவர் என்பதால், அவரது தமிழில் எதுகை, மோனை, இயைபுக்குக் குறைச்சலே இருக்காது, அருமையான, மிக இயல்பான உவமைகள் தென்படும், அதேசமயம், இதற்காக அவர் ரொம்ப மெனக்கெட்டு, ஆராய்ச்சி செய்து, வித்தியாசமாகச் சிந்தித்து எழுதினார் என்று நமக்குத் தோன்றாது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சூழலுக்குப் பொருத்தமான, அதேசமயம் இயல்பான வரிகள், சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் மொழி, அதுதான் ராஜாவின் பாணி.
ஒரு விஷயம், ஓர் இசையமைப்பாளராக இளையராஜா காண்பித்துள்ள தரம் அலாதியானது, அது எண்ணிக்கை அளவிலாகட்டும், பரிசோதனை முயற்சிகளிலாகட்டும், பலதரப்பட்ட விஷயங்களைத் தன் இசையில் கையாள்வதிலாகட்டும், உலக இசையைப் புரிந்துகொண்டு தன் முத்திரையோடு பாடல்களில் தருவதிலாகட்டும், அடித்தட்டு மக்களையும் நிபுணர்களையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக்கூடிய இசையை உருவாக்குவதிலாகட்டும், பாடல்கள், பின்னணி இசை என சகலத்திலும் அவர் ஒரு மேதை. சந்தேகமே இல்லை.
இதே தரத்துடன், இதே மேதைமையுடன் அவர் ஒரு பாடலாசிரியராகவும் இயங்கியுள்ளாரா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. அவர் எழுதிய பல பாடல்களை வேறொரு தொழில்முறைக் கவிஞர் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கக்கூடும்.
யோசித்துப்பார்த்தால், இதே விமர்சனம் அவரது குரல்மீதும் வைக்கப்படுகிறது. அவர் பாடிய பல பாடல்களை வேறொரு தொழில்முறைப் பாடகர் இன்னும் சிறப்பாகப் பாடியிருக்கக்கூடும். இதை ராஜாவே ஒப்புக்கொண்டுள்ளார், சமீபத்தில் குமுதம் இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போதுகூட இதைக் குறிப்பிட்டார்.
ஆனால், ஒரு தொழில்முறைக் கவிஞரோ, பாடகரோ தரமுடியாத நுணுக்கமான உணர்வுகளை, இயல்பான குரலில், மொழியில் ஒரு வீதியோரக் கலைஞர் தந்து செல்வதைப் பார்க்கிறோம். அந்தப் பாடல்கள் மேடைகளில் வைத்து ஆராதிக்கப்படாவிட்டாலும், மற்ற கலை வடிவங்களுக்கு அவை எந்தவிதத்திலும் குறைச்சலில்லை.
ராஜாவின் பாடல் வரிகளையும் நான் அப்படிதான் பார்க்கிறேன். காதல், கேலி, குறும்பு, விரக்தி, தத்துவம் என்று சகலத்தையும் தன்னுடைய மொழியில் அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பெரிய கவிஞர்களோடு ஒப்பிடுவதைவிட, தன்னளவில் அவை என்ன சொல்கின்றன என்பதைக் கவனித்தால், ஒரு பாடலாசிரியராகவும் நாம் ராஜாவை ரசிக்கமுடியும்.
உதாரணமாக, ‘நிலா அது வானத்து மேலே’ என்கிற பிரபலமான பாடலைக் கவனிக்கலாம், இந்தப் படத்தில் மற்ற அனைத்துப் பாடல்களும் புலமைப்பித்தன் எழுதியவை, மிக அற்புதமான வரிகளைக் கொண்டவை.
அப்படியிருக்க, இந்த ஒரு பாடலைமட்டும் ராஜா ஏன் எழுதவேண்டும்?
இதற்கான பதில், அந்தப் பாடலிலேயே இருக்கிறது, ‘நான் பாட்டாளி’ என்று கதாபாத்திரத்தின் மொழியிலேயே சொல்லிவிடுகிறார் ராஜா. ஆகவே, ஒரு பாட்டாளியின் மொழியில் எளிமையாக பாடலைச் சொன்னால் போதும் என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.
புலமைப்பித்தனால் பாட்டாளிப் பாடலை எழுதமுடியாதா என்பது இங்கே விஷயமல்ல. ராஜாவின் மொழி அந்தப் பாடலுக்கு என்னவிதமான நியாயத்தைச் செய்திருக்கிறது என்பதையே நாம் கவனிக்கவேண்டும். ‘பசிக்குது பசிக்குது தெனம் தெனம்தான், தின்னா பசி அது தீர்ந்திடுமா’ போன்ற எதுகை, மோனை, இயைபு எதுவுமற்ற வரிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கல்லவா இங்கே மரியாதை?
இதோடு ஒப்பிடத்தக்க ஒரு பாடல், ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் உண்டு. பாட்டாளிகள் மத்தியில் கதாநாயகன் பாடுவதுபோன்ற சூழ்நிலை. அதைப் புலமைப்பித்தன்தான் எழுதினார். ஆனால் அதன் மொழி முற்றிலும் வேறுவிதமாக இருந்ததைக் கவனிக்கவேண்டும்.
இளையராஜா மிக அருமையாக வெண்பா எழுதுவார் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், சிலவற்றை வாசித்திருக்கிறேன், அருமையான அந்தப் புலமை அவரது பாடல் வரிகளில் வெளிப்படாதபடி அவர் கவனமாகப் பார்த்துக்கொள்வது முக்கியமான விஷயம்.
ஏனெனில், ராஜாவைப் பொறுத்தவரை, கதாபாத்திரம் எது என்பதுதான் இசையைத் தீர்மானிக்கிறது, அதுவே குரலையும், மொழியையும், அதாவது பாடல் வரிகளையும் தீர்மானிக்கவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
அதனால்தான், ராஜா தனது பக்திப் பாடல்களில் பெரும்பாலானவற்றை அவரே எழுதிப் பாடிவிடுகிறார். காரணம், அங்கே பக்தர் அவர், பக்தி அவருடையது, அதன் இசை, மொழி, குரல் அனைத்தும் அவருடையவையே.
ஒருவிதத்தில், ராஜா எழுதிய பாடல்கள் தனித்துப் பட்டியலிடப்படாததற்கு, பிரபலப்படுத்தப்படாததற்கு, அதிகம் பேசப்படாததற்குக் காரணமும் இதுவாக இருக்கலாம். அவை அவரது பாடலின் ஒரு பகுதி, அதைமட்டும் தனியே பிரித்துப் பாராட்டவேண்டிய அவசியமில்லை!
நிறைவு செய்யுமுன் ஒரு புள்ளிவிவரம், ராஜா பிற இசையமைப்பாளர்களுடைய திரைப்படங்களில் பாடியிருக்கிறார், ஆனால் எனக்குத் தெரிந்து அவர் மற்ற யாருக்கும் பாடல் எழுதியதில்லை!
ஒரே ஒரு விதிவிலக்கு, எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த ‘ஸ்ரீ ரமண நாத அமுதம்’ என்ற பக்தி ஆல்பத்தில் இளையராஜா சில பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்தவிதத்தில், ஒரு கவிஞராக இளையராஜாவைக் கையாண்ட ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான்.
நன்றி!
***
என். சொக்கன் …
16 06 2013
4 Responses to "இளையராஜா எனும் பாடலாசிரியர்"

/இது எப்படி சாத்தியமானது? /
எப்படியென்றால், MSV ஐ விட திறமையில் பலபடிகள் ராஜா மேல் தான் என்றாலும், என்ன இருந்தாலும் ராஜாவுக்கு MSV குரு, முன்னோடி, வழிகாட்டி. எனவே MSVஐ எப்போது சந்தித்தாலும், ராஜா அவராகவே அணுகிப்பேசுவார், குருபக்தியை வெளிக்காட்டுவார். ராஜா நல்ல, திறமையான, நேர்மையான சிஷ்யராக நடந்துகொள்வதால் MSVக்கும் ராஜாவால் பெருமை தான், சந்தோஷம் தான்! எனவே தான் இருவருக்கும் இடையில் ஒரு அழகான குரு-சிஷ்யன் உறவு நீடிக்கிறது! குருவும் சிஷ்யனும் இணைந்து இசையமைக்கும் அதிசயமும் நடைபெறுகிறது!
இங்கும், MSV குரு என்பதால் அவர் இறங்கிவந்து ராஜாவிடம் கேட்கமுடியாது. ஆனால் ராஜா சிஷ்யர் என்பதால் MSVயிடம் சென்று அனுமதி கேட்டு அதன்பிறகே இருவரும் சேர்ந்து இசையமைக்கிறார்கள்.


Untouched topic touched my heart……heartfelt greetings…….


சுகமான ராகங்கள் படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

1 | GiRa ஜிரா
June 16, 2013 at 3:11 pm
// ஒரு கவிஞராக இளையராஜாவைக் கையாண்ட ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான் //
இது எப்படி சாத்தியமானது? பொதுவில் மிகவும் ஸ்டிரிக்ட்டாகத் தென்படும் ராஜா, எப்படி எம்.எஸ்.யிடம் மட்டும் இத்தனை இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது.
1. எம்.எஸ்.வியோடு இணைந்து இசையமைத்திருக்கிறார்
2. எம்.எஸ்.வியை தன் இசையில் பாட வைத்திருக்கிறார்
3. எம்.எஸ்.வி இசையில் பாடியிருக்கிறார்
4. எம்.எஸ்.வி இசையில் பாட்டும் எழுதியிருக்கிறார்
இருவரும் அடுத்தடுத்த தலைமுறை இசையமைப்பாளர்கள். அப்படியிருக்க அவர்களுக்குள் இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பது இருவரின் இசைப்புலமையையும் திறமையும் சுட்டிக்காட்டுகிறது.
இருவரும் இறையருளால் நீண்டு நிலைத்து நமக்கு நல்லிசை வழங்க இறைவனை வேண்டுகிறேன்.