Archive for July 2013
திருவாசகமும் இளையராஜாவும்
Posted July 28, 2013
on:- In: Ilayaraja | Music | Poetry | Tamil
- 14 Comments
(சென்னையில் நடைபெற்ற இளையராஜா ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
அனைவருக்கும் வணக்கம்,
இளையராஜாவின் திரைப்படம் சாராத படைப்புகளில் முக்கியமான ஒன்று, திருவாசகம்.
அது தொடர்பாகப் பல சர்ச்சைகள் உண்டு. அவற்றையெல்லாம் தாண்டி, ஓர் இசைத் தொகுப்பாக அது பெற்றிருக்கும் கவனம் மிக முக்கியமானது. தமிழ் தெரியாதவர்கள், இந்திய இசை புரியாதவர்களெல்லாம்கூட, பக்தர்களல்லாதவர்கள்கூட ’இது ஏற்படுத்தும் உணர்வு தாளமுடியாததாக இருக்கிறது’ என்று சொல்வதை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.
இதற்குக் காரணம், இளையராஜாமட்டுமல்ல. மாணிக்கவாசகரும்தான்.
திருவாசகம் ஒரு Classic என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், ஏன் கம்ப ராமாயணத்தைக்கூட பலர் இசை கோத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை இந்த இசை உருவாக்க என்ன காரணம்?
மாணிக்கவாசகர் பாடல்களாக எந்த உணர்வைக் கொண்டுவந்தாரோ, அந்த உணர்வைப் புரிந்துகொண்டு முழுமையாக மெட்டுகளில், இசைக் கோப்பில், முக்கியமாகப் பாடும் விதத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. அந்த ஒன்றுதல்தான் நம்மையும் அங்கே கொண்டு சென்று சேர்த்துவிடுகிறது.
’திருவாசகம் பாடல்கள் நன்றாகதான் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் இளையராஜாவே பாடியிருக்கவேண்டுமா? வேறு தகுதி வாய்ந்த Professional பாடகர்களைப் பாடவைத்திருக்கலாம்’ என்று பலர் சொல்கிறார்கள். பாடகர் யேசுதாஸ்கூட இதை வெளிப்படையாகவே, அதாவது எனக்கு அவர் ஒரு பாடல் கொடுத்திருக்கலாமே என்பதுபோல ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்த ‘வேறு யாராவது பாடியிருக்கலாம்’ விமர்சனத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை, முக்கியமாக திருவாசக விஷயத்தில்.
எனக்கு இசை அடிப்படைகள் தெரியாது. அந்தவிதத்தில் திருவாசகத்தை ராஜாவைவிடச் சிறப்பாகப் பாடக்கூடிய / பாடியுள்ள பல மேதைகள் இருப்பர் என்பதை ஏற்கிறேன். இது அந்தவிதமான ஆல்பம் அல்ல என்பது என் துணிபு.
ராஜா முழுக்க முழுக்க உணர்வு அடிப்படையிலேயே திருவாசகத்தை அணுகியிருக்கிறார், அதற்கான ஓர் அலங்கரிப்பாக / மரியாதையாகவே இசையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நான் ராஜா பாட்டைக் கேட்டபிறகுதான் மாணிக்கவாசகரைத் தேடிச் சென்று (கிட்டத்தட்ட) முழுமையாக வாசித்தேன், மிக அற்புதமான அனுபவம் அது. இந்த மனிதருக்கு ‘மாணிக்க’ வாசகர் என்று பெயர் வைத்தவரைத் தேடிச் சென்று முத்தம் கொடுக்கத் தோன்றியது.
என் கருத்தில், திருவாசகத்தில் மாணிக்கவாசகர் முன்வைக்கும் இறைஞ்சல் தொனியை மிகக் கச்சிதமாகப் பற்றியிருக்கிறார் ராஜா (குரலிலும்). அதன்பிறகு, திருவாசகத்தில் (வேறு) எந்தப் பாடலைப் படித்தாலும், எனக்கு அது ராஜா குரலில்தான் கேட்கிறது. என்னளவில், மாணிக்கவாசகரின் குரலே அதுவாகிவிட்டது.
இதில் ரசிகன், வெறியன், பக்தன் புடலங்காயெல்லாம் இல்லை. ஒரு மனிதர் இந்நூலை எப்படி நுட்பமாகப் படித்து, உணர்ந்து புரிந்துகொண்டிருந்தால் இந்த Sync சாத்தியம் என வியக்கிறேன்.
ராஜாவின் இந்த ஆல்பத்தைக் கேட்பதற்கு முன்பாக, திருவாசகத்தில் நான் திருவெம்பாவையைமட்டுமே வாசித்திருந்தேன். அதுவும் தனி நூலாக, அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்றுகூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
திருவாசகம் கேட்கத் தொடங்கியதும், ஒவ்வொரு பாடலும், அதில் ஒவ்வொரு வரியும் திடுக்கென்று உள்ளே இறங்கியது. ‘என்னமாதிரி எழுத்து இது!’ என்று திகைப்பாக இருந்தது. முழுவதுமாகப் படிக்கவேண்டும் என்கிற ஆசை வந்தது.
பின்னர் அந்நூலை ஓரளவு வாசித்தவன் என்கிறமுறையில் இந்த ஆசை எல்லாருக்கும் வந்திருக்கக்கூடாதா என ஏங்குகிறேன். கொஞ்சம் முயன்றிருந்தால் இதனை ஓர் இயக்கமாகவே கொண்டுசென்றிருக்கலாம்.
அதிகம் வேண்டாம், குறைந்தபட்சம் இளையராஜாவின் இந்த சிடியில் உள்ள சுமார் ஐம்பது பாடல்களைமட்டுமாவது உரிய விளக்கங்களுடன் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கலாம். அதனை சிடியுடன் கேட்டுப் பார்த்தால், அர்த்தம் புரிந்துகொண்டு இன்னும் சிறப்பாக அனுபவித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இதனை Demonstrate செய்வதற்காக, ஒரே ஒரு பாடலைமட்டும் விளக்கத்தோடு சொல்கிறேன். அதன்பிறகு அதன் ஆடியோ வடிவத்தைக் கேட்போம். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.
இதற்காக நான் எடுத்துக்கொண்டிருக்கும் பாடல், இளையராஜா ஆல்பத்தின் முதல் பாடல், நம் எல்லாருக்கும் அந்த முதல் திகைப்பை, அதிர்வை உண்டாக்கியிருக்கக்கூடிய பாடல், ‘பூவார் சென்னி மன்னன்’ என்று தொடங்கும் பாடல்.
திருவாசகத்தில் ’யாத்திரைப் பத்து’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் இது. சிவபெருமானை நோக்கிய பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மாணிக்கவாசகர். அதைக் குறிப்பிடும்வகையில், ஒரு பயணப் பாடலைப்போலவே இதற்கு இசை கோத்திருப்பார் இளையராஜா.
முதலில், அந்தப் பாடல்:
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே
பூ ஆர் சென்னி மன்னன் : மலர்கள் நிறைந்த தலைமுடியை உடைய அரசன் (சிவபெருமான்)
எம் புயங்கப் பெருமான் : புயங்கம் (பாம்பு) அணிந்த எங்கள் பெருமான்
சிறியோமை : சிறியவர்களாகிய நம்மை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் : இடைவெளி இல்லாமல் நம் உள்ளத்தில் கலந்து உணர்வாக உருக்குகின்ற வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் : நம்மீது இரக்கப்பட்டு இறைவன் அருள, அதனால் அன்பாக ஆட்பட்டவர்களே!
வந்து ஒருப்படுமின் : இங்கே வந்து ஒன்றுகூடுங்கள்
பொய் விட்டு : பொய்யான இந்த உலக வாழ்க்கையை விட்டு
உடையான் கழல் புகவே காலம் வந்தது காண், போவோம் : நமக்கு நாயகனாகிய, நம்மைச் சேவகனாகக் கொண்ட இறைவனுடைய கழல் சூடிய திருவடிகளைச் சென்று புகுவதற்கு நேரம் வந்துவிட்டது, வாருங்கள் போகலாம்!
சுருக்கமாகச் சொன்னால், நாமெல்லாம் ரொம்பச் சிறியவர்கள், ஆனாலும், சிவபெருமான் நமக்குள் எப்போதும் நிறைந்திருக்கிறான், கருணை பொழிகிறான், அதனால் நம் உள்ளத்தில் உணர்வாகக் கலந்திருக்கிறான், அவனுடைய அன்புக்கு அடிமைகளாக நாம் இருக்கிறோம், பொய்யான இந்த வாழ்க்கையை விட்டு அவன் சேவடியைச் சேர்வோம், எல்லாரும் வாருங்கள்!
இப்போது, அந்தப் பாடலைக் கேட்போம்!
நான் சொல்லவந்தது இப்போது தெளிவாகப் புரியும் என்று நினைக்கிறேன். இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலையும் இப்படிப் பொருள் புரிந்து கேட்கும்போது, ராஜாவின் அர்ப்பணிப்புணர்வு நமக்குப் புரியும், இசையை இன்னும் ரசிக்கமுடியும். முயற்சி செய்யுங்கள்.
அதன்பிறகு, மீதமிருக்கும் நூற்றுக்கணக்கான திருவாசகப் பாடல்களை நீங்களே தேடிச் சென்று படிப்பீர்கள். ராஜாவின் நோக்கமும் அதுதான்.
நன்றி!
***
என். சொக்கன் …
28 07 2013