மனம் போன போக்கில்

திருவாசகமும் இளையராஜாவும்

Posted on: July 28, 2013

(சென்னையில் நடைபெற்ற இளையராஜா ரசிகர் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

அனைவருக்கும் வணக்கம்,

இளையராஜாவின் திரைப்படம் சாராத படைப்புகளில் முக்கியமான ஒன்று, திருவாசகம்.

அது தொடர்பாகப் பல சர்ச்சைகள் உண்டு. அவற்றையெல்லாம் தாண்டி, ஓர் இசைத் தொகுப்பாக அது பெற்றிருக்கும் கவனம் மிக முக்கியமானது. தமிழ் தெரியாதவர்கள், இந்திய இசை புரியாதவர்களெல்லாம்கூட, பக்தர்களல்லாதவர்கள்கூட ’இது ஏற்படுத்தும் உணர்வு தாளமுடியாததாக இருக்கிறது’ என்று சொல்வதை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

இதற்குக் காரணம், இளையராஜாமட்டுமல்ல. மாணிக்கவாசகரும்தான்.

திருவாசகம் ஒரு Classic என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், ஏன் கம்ப ராமாயணத்தைக்கூட பலர் இசை கோத்து வெளியிட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை இந்த இசை உருவாக்க என்ன காரணம்?

மாணிக்கவாசகர் பாடல்களாக எந்த உணர்வைக் கொண்டுவந்தாரோ, அந்த உணர்வைப் புரிந்துகொண்டு முழுமையாக மெட்டுகளில், இசைக் கோப்பில், முக்கியமாகப் பாடும் விதத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. அந்த ஒன்றுதல்தான் நம்மையும் அங்கே கொண்டு சென்று சேர்த்துவிடுகிறது.

’திருவாசகம் பாடல்கள் நன்றாகதான் உள்ளன. ஆனால், எல்லாவற்றையும் இளையராஜாவே பாடியிருக்கவேண்டுமா? வேறு தகுதி வாய்ந்த Professional பாடகர்களைப் பாடவைத்திருக்கலாம்’ என்று பலர் சொல்கிறார்கள். பாடகர் யேசுதாஸ்கூட இதை வெளிப்படையாகவே, அதாவது எனக்கு அவர் ஒரு பாடல் கொடுத்திருக்கலாமே என்பதுபோல ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த ‘வேறு யாராவது பாடியிருக்கலாம்’ விமர்சனத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை, முக்கியமாக திருவாசக விஷயத்தில்.

எனக்கு இசை அடிப்படைகள் தெரியாது. அந்தவிதத்தில் திருவாசகத்தை ராஜாவைவிடச் சிறப்பாகப் பாடக்கூடிய / பாடியுள்ள பல மேதைகள் இருப்பர் என்பதை ஏற்கிறேன். இது அந்தவிதமான ஆல்பம் அல்ல என்பது என் துணிபு.

ராஜா முழுக்க முழுக்க உணர்வு அடிப்படையிலேயே திருவாசகத்தை அணுகியிருக்கிறார், அதற்கான ஓர் அலங்கரிப்பாக / மரியாதையாகவே இசையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

நான் ராஜா பாட்டைக் கேட்டபிறகுதான் மாணிக்கவாசகரைத் தேடிச் சென்று (கிட்டத்தட்ட) முழுமையாக வாசித்தேன், மிக அற்புதமான அனுபவம் அது. இந்த மனிதருக்கு ‘மாணிக்க’ வாசகர் என்று பெயர் வைத்தவரைத் தேடிச் சென்று முத்தம் கொடுக்கத் தோன்றியது.

என் கருத்தில், திருவாசகத்தில் மாணிக்கவாசகர் முன்வைக்கும் இறைஞ்சல் தொனியை மிகக் கச்சிதமாகப் பற்றியிருக்கிறார் ராஜா (குரலிலும்). அதன்பிறகு, திருவாசகத்தில் (வேறு) எந்தப் பாடலைப் படித்தாலும், எனக்கு அது ராஜா குரலில்தான் கேட்கிறது. என்னளவில், மாணிக்கவாசகரின் குரலே அதுவாகிவிட்டது.

இதில் ரசிகன், வெறியன், பக்தன் புடலங்காயெல்லாம் இல்லை. ஒரு மனிதர் இந்நூலை எப்படி நுட்பமாகப் படித்து, உணர்ந்து புரிந்துகொண்டிருந்தால் இந்த Sync சாத்தியம் என வியக்கிறேன்.

ராஜாவின் இந்த ஆல்பத்தைக் கேட்பதற்கு முன்பாக, திருவாசகத்தில் நான் திருவெம்பாவையைமட்டுமே வாசித்திருந்தேன். அதுவும் தனி நூலாக, அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்றுகூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருவாசகம் கேட்கத் தொடங்கியதும், ஒவ்வொரு பாடலும், அதில் ஒவ்வொரு வரியும் திடுக்கென்று உள்ளே இறங்கியது. ‘என்னமாதிரி எழுத்து இது!’ என்று திகைப்பாக இருந்தது. முழுவதுமாகப் படிக்கவேண்டும் என்கிற ஆசை வந்தது.

பின்னர் அந்நூலை ஓரளவு வாசித்தவன் என்கிறமுறையில் இந்த ஆசை எல்லாருக்கும் வந்திருக்கக்கூடாதா என ஏங்குகிறேன். கொஞ்சம் முயன்றிருந்தால் இதனை ஓர் இயக்கமாகவே கொண்டுசென்றிருக்கலாம்.

அதிகம் வேண்டாம், குறைந்தபட்சம் இளையராஜாவின் இந்த சிடியில் உள்ள சுமார் ஐம்பது பாடல்களைமட்டுமாவது உரிய விளக்கங்களுடன் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கலாம். அதனை சிடியுடன் கேட்டுப் பார்த்தால், அர்த்தம் புரிந்துகொண்டு இன்னும் சிறப்பாக அனுபவித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

இதனை Demonstrate செய்வதற்காக, ஒரே ஒரு பாடலைமட்டும் விளக்கத்தோடு சொல்கிறேன். அதன்பிறகு அதன் ஆடியோ வடிவத்தைக் கேட்போம். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.

இதற்காக நான் எடுத்துக்கொண்டிருக்கும் பாடல், இளையராஜா ஆல்பத்தின் முதல் பாடல், நம் எல்லாருக்கும் அந்த முதல் திகைப்பை, அதிர்வை உண்டாக்கியிருக்கக்கூடிய பாடல், ‘பூவார் சென்னி மன்னன்’ என்று தொடங்கும் பாடல்.

திருவாசகத்தில் ’யாத்திரைப் பத்து’ என்ற பகுதியில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் இது. சிவபெருமானை நோக்கிய பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மாணிக்கவாசகர். அதைக் குறிப்பிடும்வகையில், ஒரு பயணப் பாடலைப்போலவே இதற்கு இசை கோத்திருப்பார் இளையராஜா.

முதலில், அந்தப் பாடல்:

பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

பூ ஆர் சென்னி மன்னன் : மலர்கள் நிறைந்த தலைமுடியை உடைய அரசன் (சிவபெருமான்)

எம் புயங்கப் பெருமான் : புயங்கம் (பாம்பு) அணிந்த எங்கள் பெருமான்

சிறியோமை : சிறியவர்களாகிய நம்மை

ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் : இடைவெளி இல்லாமல் நம் உள்ளத்தில் கலந்து உணர்வாக உருக்குகின்ற வெள்ளக் கருணையினால்

ஆவா என்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் : நம்மீது இரக்கப்பட்டு இறைவன் அருள, அதனால் அன்பாக ஆட்பட்டவர்களே!

வந்து ஒருப்படுமின் : இங்கே வந்து ஒன்றுகூடுங்கள்

பொய் விட்டு : பொய்யான இந்த உலக வாழ்க்கையை விட்டு

உடையான் கழல் புகவே காலம் வந்தது காண், போவோம் : நமக்கு நாயகனாகிய, நம்மைச் சேவகனாகக் கொண்ட இறைவனுடைய கழல் சூடிய திருவடிகளைச் சென்று புகுவதற்கு நேரம் வந்துவிட்டது, வாருங்கள் போகலாம்!

சுருக்கமாகச் சொன்னால், நாமெல்லாம் ரொம்பச் சிறியவர்கள், ஆனாலும், சிவபெருமான் நமக்குள் எப்போதும் நிறைந்திருக்கிறான், கருணை பொழிகிறான், அதனால் நம் உள்ளத்தில் உணர்வாகக் கலந்திருக்கிறான், அவனுடைய அன்புக்கு அடிமைகளாக நாம் இருக்கிறோம், பொய்யான இந்த வாழ்க்கையை விட்டு அவன் சேவடியைச் சேர்வோம், எல்லாரும் வாருங்கள்!

இப்போது, அந்தப் பாடலைக் கேட்போம்!

நான் சொல்லவந்தது இப்போது தெளிவாகப் புரியும் என்று நினைக்கிறேன். இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலையும் இப்படிப் பொருள் புரிந்து கேட்கும்போது, ராஜாவின் அர்ப்பணிப்புணர்வு நமக்குப் புரியும், இசையை இன்னும் ரசிக்கமுடியும். முயற்சி செய்யுங்கள்.

அதன்பிறகு, மீதமிருக்கும் நூற்றுக்கணக்கான திருவாசகப் பாடல்களை நீங்களே தேடிச் சென்று படிப்பீர்கள். ராஜாவின் நோக்கமும் அதுதான்.

நன்றி!

***

என். சொக்கன் …
28 07 2013

14 Responses to "திருவாசகமும் இளையராஜாவும்"

திருவாசகத்துக்கு ராஜா பிரதான பாடகராக பாடியது தான் சரியானது,ராஜாவின் ஆன்மீகத்தேடலுக்கு மிகச்சிறப்பான வரமான அவர் குரலில் வெளிவந்திருக்கும் அவரே இயற்றிய ராஜாவின் ரமணமாலை,குருரமண கீதம் ,ரமண ஆரம்,ரமண ஹாரம்,போன்றவையே அதற்கு சாட்சி,பிறர் பாடினால் அந்த பாடலில் நமக்கு கிட்டும் உருக்கமும்,இறையை நோக்கி இறைஞ்சும் தன்மையும் காணாமல் போய்விட்டிருக்கும்.

//மாணிக்கவாசகர் பாடல்களாக எந்த உணர்வைக் கொண்டு வந்தாரோ, அந்த உணர்வைப் புரிந்துகொண்டு//

மிகக் “கச்சிதமாகச்” சொல்லி விட்டீர்கள்!

வேறு பாடகர்களும் பாடி இருக்கலாம்! தப்பில்லை;
ஆனா, பல நாள் உள்ளத்தில் ஊறிய உணர்வு – அதை ஒரே நாளில் Syringe ஏற்றிக் கொண்டுப் பாடினாப் போலத் தான் முடியும்:(

Actually, பாடியும் இருக்காங்க! Same album!
உன்னி கிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் சேர்ந்து பாடும் – “முத்து நற்றாமம்”!

“முத்தநல் தாமம்பூ மாலை தூக்கி” -ன்னு திருப் பொற் சுண்ணம்!
அதாச்சும், பொண்ணுங்க, அழகுப் பொடிகளை உலக்கையால் இடித்துக் கொண்டே பாடுவது!

அதுக்குக் “குழுவாப்” பாடினாத் தான் நல்லா இருக்கும்!
ராஜாவும்… அதான், தான் ஒதுங்கி, குழுவாப் போட்டாரு! – ஏன்னா அது “ஆத்ம அனுபவம்” அல்ல!
—-

ஆனா, பாட்டின் இறுதியில்…
அத்தனை பொண்ணுங்களோட, “தனித்தனி” ஏக்கமா முடிப்பாரு மாணிக்கவாசகர்;

முத்தணி கொங்கைகள் ஆட ஆட
சித்தம் சிவனொடும் ஆட ஆட

இப்படி, “மாரு கண்டபடிக் குலுங்குவதும்” தெரியாம, காதலன் (சிவன்) நினைவில் ஆட…
“நாயிற் கடைப்பட்ட நம்மை” -ன்னு வரும்! அப்போ மனசு “கேவணும்”;

ராஜாவும், அப்படித் தான் போட்டிருப்பாரு – ஆண் குரலில், அந்த வரி மட்டும் நிறுத்தி + தனியாப் பாடப்படும்!

ஆனா, அதுல “கேவல்” இருக்கா? -ன்னு நீங்களே கேட்டுட்டுச் சொல்லுங்க பார்ப்போம்?:)
—-

இதே “நாயி” வரியை, இளையராஜாவும் பாடுவாரு – “பொல்லா வினையேன்” பாட்டுல! = நாயிற் கடையாய்க் கிடந்த…
அதுல இருக்குற “கேவல்” – அதையும் கேட்டுட்டுச் சொல்லுங்க:))

இதுவொரு இசைக்கோப்பு மட்டுமே அல்ல! = மனக்கோப்பு;

* மாணிக்கவாசகர் மனக்கோப்பு
* இளையராஜா மனக்கோப்பு
இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டதால் தோன்றிய இடி-மின்னல்!

இளையராஜா, எந்தவொரு “மனநிலையில்” பல நாள் இருந்தாரோ…
அப்போ, பழுக்கக் காய்ச்சிய தங்கத்தில் விழுந்த அடி = திருவாசக ஓரட்டோரியோ அடி!

அதான் அப்படியொரு வார்ப்பு!

இதே இளையராஜா, சிலப்பதிகாரம் பாடினா, அது வருமா? -ன்னு எனக்குச் சந்தேகம் தான்!
சிவபுராணம் பாடினா வரும்! ஏன்-ன்னா அது ராஜாவின் “மனநிலை”;

Don’t mistake me, that I have doubts on Raja;
As a maestro, he might do justice to Chilapathikaaram too!
But his heart has been in ஊறுகாய் state = only for such ஞானப் பாடல்; Not இளங்கோ பாடல்!

Thatz why, “இளையராஜா கேவல்” in திருவாசகம்!
—-

வான்கலந்த மாணிக்க வாசக – நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
“ஊன்கலந்து” உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

சார் அருமையா சொன்னீங்க.. இதை நீங்கள் நேரில் விளக்கும்போது கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி

Just one doubt or confusion from my side. In one song IR reaggranged manikavasagars some line in the song to first line. Not sure how can we change the legacy song. Rest I totally agree with the song, composition and they way thalaivar gave us.

excellent write up.

வான்கலந்த மாணிக்க வாசக – நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
“ஊன்கலந்து” உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

that’s the ultimate !!!

என்னிடம் IR ன் திருவாசகம் CD இருந்தும் நான் இது நாள் வரை முழுதும் உட்கார்ந்துக் கேட்கவில்லை. நீங்கள் நேற்று ஒரு பாடலை விளக்கியதும் எனக்கு அந்தப் பாடல் மனனம் ஆனது போலத் தெரிகிறது. அவ்வளவு அருமையாக விளக்கினீர்கள் நன்றி 🙂

amas32

கிரேட்.

[…] அதன் தொகுப்பை இங்கே படிக்கலாம். https://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/ வந்திருந்த பலரும் ராஜாவின் இசை […]

கட்டுரை மிக அருமை!!

திருத்தணி சுவாமிநாதன் ஒதூவாமூர்த்தி அவர்கள் திருவாசகம் முழுமையையும் இசை, பொருள் விளக்கங்களுடன் குறுந்தகடாக தந்துள்ளார்கள்.

/* கொஞ்சம் முயன்றிருந்தால் இதனை ஓர் இயக்கமாகவே கொண்டுசென்றிருக்கலாம். */

‘திருவாசக சித்தர்’ என்று அழைக்கபெறும் அருளாளர் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் ‘திருவாசக முற்றோதல்’ நிகழ்ச்சியை ஒவ்வொரு ஊரிலும் ஞாயிற்றுகிழமைகளில் நடத்திவருகிறார்.

நாயினும் கடைப்பட்ட அடியேன் தங்களுக்கு ட்விட்டரில் பகிர்ந்தது நினைவிருக்கலாம்.

திருவாசக முற்றோதல் வரும்

11 ம் தேதி – நெரூர்
11 ம் தேதி – ஊட்டி
11 ம் தேதி – ஆளுடைய பிள்ளையை தந்த சீர்காழி மாநகர்
11 ம் தேதி – வள்ளியூர்
செப். 1 ம் தேதி – ஓசூர்

ஆகியவிடங்களில் நடைபெற திருவருள் கிடைத்துள்ளது.
தேவாரீர், அன்பின் கேஆர்எஸ்,மற்றும் அனைவரும் தவறாது கலந்து கொள்ள இறைஞ்சுகிறேன்.

ஆடக மதுரை அரசே போற்றி!!
கூடலிலங்கு குருமணி போற்றி!!

ஆரூரா!! ஐயாறா!!

நாயினும் கடைப்பட்ட அடியேன்,
கார்த்தி
@Karthee_143

பிழை பொறுத்தருள வேண்டுகிறேன்..

வரும்
11 ம் தேதி – நெரூர்
15 ம் தேதி – ஊட்டி
18 ம் தேதி – ஆளுடைய பிள்ளையை தந்த சீர்காழி மாநகர்
25 ம் தேதி – வள்ளியூர்
செப். 1 ம் தேதி – ஓசூர்

என கொள்ள வேண்டுகிறேன்.

அனைத்து முற்றோதல்களிலும் உணவு,தங்குமிடம்,மகிழுந்து நிறுத்தும் போன்ற வசதிகள் செய்யபட்டுள்ளது.

சிவ சிவ..
நாயினும் கடைப்பட்ட அடியேன்,
கார்த்தி
@Karthee_143

மணிவாசகப் பெருமானின் புலமைக்கு சான்று ஒன்று!!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8104&padhi=25&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

உயிர்கள் எவ்வாறு பிறக்கின்றன? தாயின் வயிற்றில் ஒவ்வொரு மாதமும் கரு எவ்வாறு இருக்கும் என்பதையெல்லாம் அடிகள் விளக்குகிறார்.

:):)
அடியேன் அழகான பெண்களை பார்க்கும் போது அடிகளின்

” ஈர்க்கு இடை போதா இளமுலை மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்”

என்ற வரிகளே நினைவில் வரும்!!
:):)

‘காழிப் பிள்ளையார்’ திருஞானசம்பந்தர்,
‘தாண்டக வேந்தர்”வாகீசர்’ திருநாவுக்கரசர்,
‘தம்பிரான் தோழர்’ ‘வன்றொண்டர்’ சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவார பதிகங்களை திருநாவுடையார் என்றழைக்கப்பெறும் சிவத்திரு. தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் பாடி குறுந்தகடாக தந்துள்ளார்கள். அவற்றை கீழ்காணும் தளத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.

http://devarathirumurai.wordpress.com/

திருமூலர் பெருமானின் திருமந்திரம் முழுமையும் இங்கு பதிவிறக்கிக்கொள்ளலாம்.

http://devarathirumurai.blogspot.in/2013/02/3000-mp3.html

‘வாக்குக்கு அருணகிரி’, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களை இங்கு தரவிறக்கி கொள்ளலாம்.

http://devarathirumurai.wordpress.com/2013/02/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-mp3-700-mb/

கடையேன் அடிமை கண்டாய் போற்றி!!

நாயினும் கடைப்பட்ட அடியேன்,
கார்த்தி
@Karthee_143

‘திருவாசக முற்றோதல்’ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உண்டு ..

இளைய ராஜாவின் பாடல்கள் தனித்தமையானவை.. கரைந்து உணரும் பாங்கினைப் பெற்றவை ..

அர்த்தமுள்ள அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

July 2013
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: