Archive for August 2013
வந்தாளே ராக்கம்மா
Posted August 8, 2013
on:இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு?’
‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?’
‘தெரியாதே, சொல்லு!’
அவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு!’
‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!’
’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/
இணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.
சட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன?
நானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.
‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
பாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.
ஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:
ஒலி வடிவம்:
எழுத்து வடிவம்:
ஆஹா அம்மகா,
ஆஹா ஜும்மகா,
ஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே
வந்தாளே ராக்கம்மா!கைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
அழகா ஆடுது அவ கைதான்!(ஆஹா அம்மகா
கால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,
போட்டுக்கிட்டா ராக்கம்மா,
ஆட்டம் போடுது அவ கால்தான்!(ஆஹா அம்மகா
கண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,
தீட்டிப்புட்டா ராக்கம்மா,
மீனாத் திரியிது அவ கண்ணாம்!(ஆஹா அம்மகா
காதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,
தொங்கவிட்டா ராக்கம்மா,
தானாத் துள்ளுது அவ காதும்!(ஆஹா அம்மகா
இடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,
தவழவிட்டா ராக்கம்மா,
காத்தாச் சுத்துது அவ இடுப்பும்!(ஆஹா அம்மகா
வெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
வெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்!(ஆஹா அம்மகா
நகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூவா மலருது அவ நகமும்!(ஆஹா அம்மகா
கழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,
சூடிக்கிட்டா ராக்கம்மா,
ஷோக்கா மின்னுது அவ கழுத்தும்!(ஆஹா அம்மகா
கூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
ஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்!(ஆஹா அம்மகா
***
என். சொக்கன் …
08 08 2013
தந்தானே தத்தானே
Posted August 6, 2013
on:- In: இலக்கணம் | Learning | Open Question | Tamil
- 3 Comments
இன்று ட்விட்டரில் நண்பர் அரவிந்தன் ‘கைரேகை பதிந்தேன்’ என்று எழுதினார். இது சரியா அல்லது ‘கைரேகை பதித்தேன்’ என்று இருக்கவேண்டுமா என்பதுபற்றிக் கொஞ்சம் யோசித்தேன்.
தொடங்குமுன் ஒரு குறிப்பு, இது இலக்கணப் பாடம் அல்ல. Common Sense அடிப்படையில் எனக்குத் ***தோன்றுவதைச்*** சொல்கிறேன். இதற்கு இணையான இலக்கணக் குறிப்பு என்ன என்று நான் இனிமேல்தான் தேடவேண்டும். ஆகவே, இப்போது இதனை ஒரு விவாதமாகமட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
பதிந்தேன், பதித்தேன் என்ற இரு சொற்களுக்கும் வேர்ச்சொல் ‘பதித்தல்’தான். ஆனால் அவற்றினிடையே வேறொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு, கிட்டத்தட்ட இதேபோன்ற, ஆனால் இன்னும் எளிமையான இன்னோர் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன் : வளர்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த இரு சொற்கள்: வளர்ந்தேன், வளர்த்தேன்.
வளர்ந்தேன் என்றால், சொல்பவர் வளர்கிறார், வளர்த்தேன் என்றால் தன்னை அல்ல, வேறு எதையோ வளர்க்கிறார்.
உதாரணமாக, ’நான் வளர்ந்தேன்’, ‘செடியை வளர்த்தேன்’.
இரண்டாவது வாக்கியத்தில் ‘வளர்த்தேன்’க்கு முன்பாக ஓர் ‘ஐ’ (இரண்டாம் வேற்றுமை உருபு) வருகிறதல்லவா, அதுதான் அடையாளம்.
‘நான் வளர்ந்தேன்’ என்பதை ஒருவர் ‘என்னை வளர்த்தேன்’ என்று கவித்துவமாகச் சொல்லலாம், அப்போது ஐ விகுதி வருவதால், ‘வளர்ந்தேன்’ மாறி ‘வளர்த்தேன்’ என்று ஆகிவிடுகிறது.
ஆக, வளர்ந்தேன் = நானே வளர்ந்தேன், வளர்த்தேன் = நான் வேறு எதையோ வளர்த்தேன்.
அதேபோல், பதிந்தேன் = நானே பதிந்தேன், பதித்தேன் = நான் வேறு எதையோ பதித்தேன்.
ஆக, ’கைரேகை பதிந்தேன்’ என்பதை உண்மையில் ‘கைரேகையைப் பதித்தேன்’ என்றுதான் எழுதவேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஒருவேளை அந்தக் கைரேகைக்கு உயிர் இருந்து, அது பேசத் தொடங்கினால், ‘நான் காகிதத்தில் பதிந்தேன்’ என்று சொல்லும். அப்போது ‘ஐ’ கிடையாது, ஆகவே ‘பதிந்தேன்’ என்பது சரி.
அரவிந்தன் அவர்கள் கேட்ட இன்னொரு கேள்வி: ஊரில் ’பத்திரம் பதிந்தேன்’ என்று சொல்வார்களே அதுவும் தவறா?
அப்படிதான் நான் நினைக்கிறேன். அங்கே ‘ஐ’ விகுதி மறைந்திருக்கிறது, அதைச் சேர்த்து ‘பத்திரத்தைப் பதித்தேன்’ என்று சொல்வதுதான் சரியான வாக்கியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஆக, நான் நினைக்கும் ஃபார்முலா:
- நானே செய்தால் ‘ந்’ வரும் (உதா: பதிந்தேன், வளர்ந்தேன், நடந்தேன், கலந்தேன், உணர்ந்தேன், வந்தேன்)
- நான் இன்னொன்றைச் செய்தால் ‘ந்’ வராது (உதா: பதித்தேன், வளர்த்தேன், நடத்தினேன், கலக்கினேன், உணர்த்தினேன், வரவழைத்தேன்)
இதை ஞாபகம் வைத்துக்கொள்ள இன்னோர் உதாரணம் : ”வெங்காயத் துண்டுகளை மாவில் தோய்த்தேன், எண்ணெயில் போட்டுப் பொரித்தேன், பஜ்ஜியைத் தின்றேன், அதன் சுவையில் தோய்ந்தேன்.”
இங்கே முதலில் ’வெங்காயத் துண்டுகளை’ என்று வருவதால் (ஐ விகுதி) அது ‘தோய்த்தேன்’ என வருகிறது, பின்னர் நானே அந்தச் சுவையில் தோய்ந்துவிடுவதால், அது ‘தோய்ந்தேன்’.
சரிதானே?
பின்குறிப்பு: ‘பதிந்தேன்’ என்பது பேச்சு வழக்கில் ’பதிஞ்சேன்’ என்று வரும், ’பதித்தேன்’ என்பது ‘பதிச்சேன்’ என்று வரும், அவற்றுக்கும் இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.
***
என். சொக்கன் …
06 08 2013