தந்தானே தத்தானே
Posted August 6, 2013
on:- In: இலக்கணம் | Learning | Open Question | Tamil
- 3 Comments
இன்று ட்விட்டரில் நண்பர் அரவிந்தன் ‘கைரேகை பதிந்தேன்’ என்று எழுதினார். இது சரியா அல்லது ‘கைரேகை பதித்தேன்’ என்று இருக்கவேண்டுமா என்பதுபற்றிக் கொஞ்சம் யோசித்தேன்.
தொடங்குமுன் ஒரு குறிப்பு, இது இலக்கணப் பாடம் அல்ல. Common Sense அடிப்படையில் எனக்குத் ***தோன்றுவதைச்*** சொல்கிறேன். இதற்கு இணையான இலக்கணக் குறிப்பு என்ன என்று நான் இனிமேல்தான் தேடவேண்டும். ஆகவே, இப்போது இதனை ஒரு விவாதமாகமட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
பதிந்தேன், பதித்தேன் என்ற இரு சொற்களுக்கும் வேர்ச்சொல் ‘பதித்தல்’தான். ஆனால் அவற்றினிடையே வேறொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது.
இதைப் புரிந்துகொள்வதற்கு, கிட்டத்தட்ட இதேபோன்ற, ஆனால் இன்னும் எளிமையான இன்னோர் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன் : வளர்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த இரு சொற்கள்: வளர்ந்தேன், வளர்த்தேன்.
வளர்ந்தேன் என்றால், சொல்பவர் வளர்கிறார், வளர்த்தேன் என்றால் தன்னை அல்ல, வேறு எதையோ வளர்க்கிறார்.
உதாரணமாக, ’நான் வளர்ந்தேன்’, ‘செடியை வளர்த்தேன்’.
இரண்டாவது வாக்கியத்தில் ‘வளர்த்தேன்’க்கு முன்பாக ஓர் ‘ஐ’ (இரண்டாம் வேற்றுமை உருபு) வருகிறதல்லவா, அதுதான் அடையாளம்.
‘நான் வளர்ந்தேன்’ என்பதை ஒருவர் ‘என்னை வளர்த்தேன்’ என்று கவித்துவமாகச் சொல்லலாம், அப்போது ஐ விகுதி வருவதால், ‘வளர்ந்தேன்’ மாறி ‘வளர்த்தேன்’ என்று ஆகிவிடுகிறது.
ஆக, வளர்ந்தேன் = நானே வளர்ந்தேன், வளர்த்தேன் = நான் வேறு எதையோ வளர்த்தேன்.
அதேபோல், பதிந்தேன் = நானே பதிந்தேன், பதித்தேன் = நான் வேறு எதையோ பதித்தேன்.
ஆக, ’கைரேகை பதிந்தேன்’ என்பதை உண்மையில் ‘கைரேகையைப் பதித்தேன்’ என்றுதான் எழுதவேண்டும் என்பது என்னுடைய கருத்து.
ஒருவேளை அந்தக் கைரேகைக்கு உயிர் இருந்து, அது பேசத் தொடங்கினால், ‘நான் காகிதத்தில் பதிந்தேன்’ என்று சொல்லும். அப்போது ‘ஐ’ கிடையாது, ஆகவே ‘பதிந்தேன்’ என்பது சரி.
அரவிந்தன் அவர்கள் கேட்ட இன்னொரு கேள்வி: ஊரில் ’பத்திரம் பதிந்தேன்’ என்று சொல்வார்களே அதுவும் தவறா?
அப்படிதான் நான் நினைக்கிறேன். அங்கே ‘ஐ’ விகுதி மறைந்திருக்கிறது, அதைச் சேர்த்து ‘பத்திரத்தைப் பதித்தேன்’ என்று சொல்வதுதான் சரியான வாக்கியமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஆக, நான் நினைக்கும் ஃபார்முலா:
- நானே செய்தால் ‘ந்’ வரும் (உதா: பதிந்தேன், வளர்ந்தேன், நடந்தேன், கலந்தேன், உணர்ந்தேன், வந்தேன்)
- நான் இன்னொன்றைச் செய்தால் ‘ந்’ வராது (உதா: பதித்தேன், வளர்த்தேன், நடத்தினேன், கலக்கினேன், உணர்த்தினேன், வரவழைத்தேன்)
இதை ஞாபகம் வைத்துக்கொள்ள இன்னோர் உதாரணம் : ”வெங்காயத் துண்டுகளை மாவில் தோய்த்தேன், எண்ணெயில் போட்டுப் பொரித்தேன், பஜ்ஜியைத் தின்றேன், அதன் சுவையில் தோய்ந்தேன்.”
இங்கே முதலில் ’வெங்காயத் துண்டுகளை’ என்று வருவதால் (ஐ விகுதி) அது ‘தோய்த்தேன்’ என வருகிறது, பின்னர் நானே அந்தச் சுவையில் தோய்ந்துவிடுவதால், அது ‘தோய்ந்தேன்’.
சரிதானே?
பின்குறிப்பு: ‘பதிந்தேன்’ என்பது பேச்சு வழக்கில் ’பதிஞ்சேன்’ என்று வரும், ’பதித்தேன்’ என்பது ‘பதிச்சேன்’ என்று வரும், அவற்றுக்கும் இதே ஃபார்முலாவைப் பயன்படுத்தலாம்.
***
என். சொக்கன் …
06 08 2013
3 Responses to "தந்தானே தத்தானே"

நல்ல பதிவு.பாராட்டுகள்.

1 | Dr.V.K.Kanniappan
August 6, 2013 at 7:29 pm
அன்புள்ள சொக்கன்,
நல்லதொரு பதிவு. தமிழைச் சரியாகக் கற்போம்.
வ.க.கன்னியப்பன்