சீதா கல்யாணம்
Posted September 4, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Media | Poetry | Tamil
- 4 Comments
நண்பர் கா. ராமனாதன் அவர்களின் பெற்றோருக்கு மணிவிழா. ”அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறேன், கம்ப ராமாயணம்பற்றி ஏதாவது ஒரு கட்டுரை தாருங்கள்” என்று கேட்டார். அறுபதாம் கல்யாணத்துக்குப் பொருத்தமாக, சீதா கல்யாணத்தைப்பற்றி எழுதிக் கொடுத்தேன்.
கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றான சீதா கல்யாண நிகழ்விலிருந்து பத்து பாடல்களைமட்டும் Highlightsபோல தொகுத்து மூலப் பாடலைத் தந்து, அதற்கு உரைநடை வடிவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம்போல் என்னுடைய சரக்கும் இருக்கும், அதில் பிழையிருந்தால் மன்னிக்க!
இன்னொரு விஷயம், இதைப் படித்தால் ஓரளவுதான் தொடர்ச்சி, முழுமை இருக்கும். இவை உங்களுக்குப் பிடித்திருந்தால், மீதமுள்ள பாடல்களையும் தேடி எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கா. ராமனாதன் குடும்பத்தாருக்கு நன்றி!
சீதா கல்யாணம்
1
வானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்
’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,
பூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று
ஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்
வானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா?
‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.
உடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.
2
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே
உடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.
எல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.
3
புயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே
சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?
அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.
அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.
பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.
இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.
இப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?
4
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்
எறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.
அப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்!
பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!
5
சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,
மலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்
ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!
சீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.
இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!
முன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!
6
இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!
சீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்!
முதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!
அடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்!
பின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்!
7
மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்
ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்!
அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது!
8
கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்
சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.
’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!’
9
வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்
வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்!
10
ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை!
அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!
***
என். சொக்கன் …
11 07 2013
4 Responses to "சீதா கல்யாணம்"

Im loving this. Will be super good to read it as a book. Thanks Chokkan


இராமாயணத்திலேயே அருமையான பகுதி சீதா கல்யாணம்தான். அதனை அழகாக வரிசைப் படுத்தி இருக்கிறீர்கள். கல்யாணத்தையே நேரில் பார்த்த உணர்வு. வாழ்க.


பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த தங்கள் அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..!

1 | amas32
September 4, 2013 at 3:57 pm
Lovely post! In today’s parlance very similar to a VVIP family wedding where both the bride and the groom come from equally influential families! Wedding is a joyous occasion and when it is done in style and splendor the whole world rejoices 🙂
amas32