இரு கில்லாடிகள்
Posted September 8, 2013
on:- In: Bangalore | Characters | Learning
- 7 Comments
பெங்களூரின் ரோட்டோரங்களில் நான் சந்தித்த இரண்டு கில்லாடிகளைப்பற்றி இந்தப் பதிவு. சுமார் பத்து நாள் இடைவெளியில் நகரின் இரு வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் இருவரையும் பார்த்தேன். அந்த நிகழ்வுகள் தனித்தனியே எழுதுமளவு சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் தொகுத்துப் பார்த்தபோது அவர்களுடைய ஆளுமை பதிவு செய்யப்படவேண்டியது என்று தோன்றியது.
கில்லாடி 1
ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திரா நகர் சென்றிருந்தேன். பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.
பெங்களூரில் அநேகமாக எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி நன்றாகவே இருக்கும். நாள்முழுவதும் பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும். அலுவலகம் செல்கிற, திரும்புகிற நேரம் தவிர, மற்ற நேரங்களில் கூட்டமும் அதிகமாக இராது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டும் இந்நகரின் பேருந்து சேவை விநோதமாக மாறிவிடும். இருக்கிற பஸ்களையெல்லாம் பிரித்துப் போட்டு ஆயில் மாற்றுவார்களோ என்னவோ, சாலையில் பஸ்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிடும். எந்த பஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வழக்கமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிற இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வருவதே கேள்விக்குறியாகிவிடும்.
இப்படிப் பேருந்துகளின் எண்ணிக்கை தடாலெனக் குறைவதால், வரும் பேருந்துகளில் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதே நேரம் வேறு சில பஸ்கள் காலியாக ஓடும் அதிசயமும் நடக்கும்.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரிசையாகப் பல பேருந்துகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் நம்பர் ப்ளேட்கூட இல்லை.
நானும் பொறுமையாக ஒவ்வொரு பஸ்ஸையும் அணுகி, ‘BTM லேஅவுட் ஹோக்த்தா?’ என்று கேட்பேன். ‘இல்லா’ என்று பதில் வரும். மறுபடி என் இருக்கையில் அமர்ந்துகொள்வேன்.
சிறிது நேரத்தில் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் எங்கேயோ செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் எங்கே என்று நான் கவனிக்கவில்லை. என்னிடமிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்.
அடுத்து ஒரு பஸ் வந்தது. ட்ரைவர், கண்டக்டரைத்தவிர ஒரு பயல் இல்லை. காலி.
நான் பஸ்ஸை நெருங்குமுன், முரடர்போல் தோற்றமளித்த ஓர் இளைஞர் எட்டிப்பார்த்து, ‘கண்டக்டர் சார், எங்கே போறீங்க?’ என்றார் கன்னடத்தில்.
‘எம்ஜி ரோட்’ என்று பதில் வந்தது, ‘வர்றீங்களா?’
அவர் சற்றும் தாமதிக்காமல், ‘காலி பஸ்ஸை ஓட்டிகிட்டு எதுக்கு எம்ஜி ரோட் போறீங்க?’ என்றார். ‘இதோ, நாங்க அஞ்சு பேரும் பிடிஎம் லேஅவுட் போகணும், அங்கே பஸ்ஸை ஓட்டலாமே?’
பின்னால் நின்றிருந்த நான் திகைத்துப்போனேன். பஸ் செல்லும் இடத்துக்குதானே நாம் போகவேண்டும்? இவர் என்ன வித்தியாசமாக நாங்கள் செல்லும் இடத்துக்கு பஸ்ஸை விரட்டுகிறார்?
அதுமட்டுமில்லை, இங்கிருந்த ஐந்து பேரும் பிடிஎம் லேஅவுட்டுக்குதான் போகவேண்டும் என்று இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை, சும்மா அளந்துவிடுகிறாரோ?
அப்படியே நாங்கள் ஐவரும் பிடிஎம் லேஅவுட் செல்கிறவர்களாக இருந்தாலும், இந்த அரசாங்க பஸ் தான் செல்லும் இடத்தை (எம்ஜி ரோட்) மாற்றி எப்படி பிடிஎம் லேஅவுட் செல்லும்? சினிமாவில் வருவதுபோல் டிரைவர் கழுத்தில் அரிவாள் வைத்து பஸ்ஸை ஹைஜாக் செய்யவா முடியும்? சுத்த கிராமத்தானாக இருக்கிறானே இந்த ஆள்!
இவ்வாறு நான் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த கண்டக்டர் டிரைவரைத் திரும்பிப் பார்த்தார், ‘என்னய்யா? பிடிஎம் லேஅவுட் போகலாமா?’ என்றார்.
டிரைவரும் தயக்கமாகத் தலையாட்டினார்.
’தேங்க்ஸ் குரு’ என்றார் அந்த இளைஞர், எங்களைத் திரும்பிப் பார்த்து, ‘வாங்க, போலாம்’ என்றார் உற்சாகமாக.
மளமளவென்று நாங்கள் ஐவரும் ஏறிக்கொண்டோம். பஸ் பிடிஎம் லேஅவுட்டை நோக்கி விரைந்தது.
‘கிடைப்பது, கிடைக்காமல் இருப்பது நம் கையில் இல்லை, ஆனால் அதற்காகக் கேட்கத் தயங்காதே, கேட்டுவிடு, அதிகபட்சம் இல்லை என்று பதில் கிடைக்கும், அவ்வளவுதானே?’ என்று ஒரு பிரபலமான மேனேஜ்மென்ட் பொன்மொழி உண்டு. அந்த இளைஞர் அதை எங்கு கற்றாரோ.
கில்லாடி 2
எங்கள் அலுவலகத்தின் முன்னே ஒரு நெடுஞ்சாலை. பெங்களூரிலேயே மிக அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் ஒன்று அது. ராத்திரி, பகல் எந்நேரமும் அங்கே வாகனங்கள் நிரம்பி வழியும்.
என் வீடு, அந்தச் சாலையின் மறுபுறத்தில் இருக்கிறது. ஆகவே, தினசரி அதனை நான்கு முறை கடந்தாகவேண்டிய கட்டாயம். ஒவ்வொரு முறையும் வாகன ஓட்டம் உறைவதற்காகக் காத்திருந்து உள்ளே புகுந்து வெளியே வருவதற்குள் கால்கள் நொந்து போகும்.
அப்படி ஒருநாள், விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி உள்புகும் தருணத்துக்காகக் கூம்பும் பருவத்துக் கொக்கைப்போல் காத்திருந்தேன். என்னருகே ஒரு ஜோடி.
அந்தப் பெண் கேட்டார், ‘ஜெயநகர்க்கு எப்படிப் போறது? ஆட்டோவா?’
’ஆமா’ என்றார் அந்த ஆண்.
‘இந்த நேரத்துல ஆட்டோ கிடைக்குமா?’
‘நிச்சயமாக் கிடைக்கும், ஆனா ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய்தான் ஆட்டோ பிடிக்கணும்!’
‘எதுக்கு?’ என்றார் அந்தப் பெண். இங்கிருந்தபடி சாலையின் மறுபுறம் விரைந்துகொண்டிருந்த வாகனங்களைக் கூர்ந்து கவனித்தார். காலியாகச் செல்லும் ஓர் ஆட்டோ அவர் கண்ணில் பட்டுவிட்டது. ‘ஆட்டோ’ என்றார் சத்தமாக.
சத்தம் என்றால் சாதாரண சத்தம் இல்லை. நன்கு அகலமான சாலை, அதில் ஓடும் பலவித வாகனங்களின் ஒலி, அவற்றின் ஹார்ன் சத்தம் இத்தனையையும் தாண்டி, மறுமுனைக்குக் கேட்கும் அளவு உரக்கக் கத்தினார் அவர்.
ஆச்சர்யம், அந்த ஒலி அந்த ஆட்டோ டிரைவருக்கும் கேட்டுவிட்டது. சடாரென்று வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார். ‘எங்கே?’ என்பதுபோல் சைகை காட்டினார்.
மறுபடி, அதே உரத்த குரலில், ‘ஜெயநகர்’ என்றார் இந்தப் பெண்.
‘ஓகே’ என்றார் ஆட்டோ டிரைவர். மீட்டர் போட்டு வண்டியை நிறுத்திவிட்டார்.
நாங்கள் வாகன நெரிசலின் உள்ளே புகுந்து மறுமுனையைச் சென்றடைய முழுமையாக நான்கு நிமிடங்கள் ஆயின. அதுவரை அந்த ஆட்டோ அவருக்காகக் காத்திருந்தது.
***
என். சொக்கன் …
08 09 2013
7 Responses to "இரு கில்லாடிகள்"

எனக்கு சுஜாதா ஒரு முறை சொன்னது ஞாபகம் வந்தது – உங்களுக்கு கடவுள் அருள் அதிகமாய் இருக்கு :))


சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனால் அதனுள் எவ்வளவு பாடங்கள்??


// வாகன ஓட்டம் உறைவதற்காகக் காத்திருந்து // ipdi mudhal muraiyaaga padikkiren .. nalla irukku (naan romba vaasikiradhe illa) 🙂 also andha situations a avlo arpudhamaa explain panni irukinga.. killaadi saar!!


தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும்
நம்பிக்கை அளிக்கும் மனிதர்கள்..!
பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!


‘கிடைப்பது, கிடைக்காமல் இருப்பது நம் கையில் இல்லை, ஆனால் அதற்காகக் கேட்கத் தயங்காதே, கேட்டுவிடு, அதிகபட்சம் இல்லை என்று பதில் கிடைக்கும், அவ்வளவுதானே?’/// இது நல்லாருக்கே 🙂

1 | amas32
September 8, 2013 at 9:31 pm
சிறுகதை எழுத்தாளருக்குத் தேவை தன்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனித்து உள் வாங்கிக் கொள்வது என்றார் சுஜாதா. இந்தப் பதிவைப் படித்தவுடன் எனக்குத் தோன்றுவது நீங்க தான் பலே கில்லாடி 🙂
amas32