ட்ராம் அனுபவம்
Posted October 3, 2013
on:- In: Bangalore | Kolkata | Learning | Life | Magazines | Media | Memories | Train Journey | Tram Journey
- 5 Comments
முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.
அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.
இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!
ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.
டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.
அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.
அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.
என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.
அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.
ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.
எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?
பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.
ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.
***
என். சொக்கன் …
18 09 2013
5 Responses to "ட்ராம் அனுபவம்"

சென்னையில் ட்ராம் வண்டிகள் போக்குவரத்தைச் சமாளிக்க நன்றாகத்தான் செயல்பட்டன. கம்யூனிஸ்டுகள் கையில் சிக்கிய தொழிற்சங்கம் ‘ஸ்ட்ரைக்’ என்று ஆரம்பித்தது. ஒரே கல்லில் இரு மாங்காய் என்பதுபோல அன்று இராஜாஜி ட்ராம் போக்குவரத்தை நிறுத்தி பஸ்கள் அதிகமாக ஓடுவதற்கு வழியும் செய்துவிட்டார். கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கமும் பாதிக்கப்பட்டது.


Tram is very common in european countries like germany, swiss etc.. there they go faster and it is one of major intra-city transport. In Zurich, there are buses, trams and trains for intra-city transport


As a young boy, I remember having traveled in the tram from Triplicane High Road (Muslim High School/Mansion area) to Ice House my auntie’s house. It was a pure joy undoubtedly.


நேற்று சான்ஃபிரான்சிஸ்கோவில் ட்ராமைப் படம் பிடித்துப் போட்ட பின் இந்த வலைப்பதிவு கண்ணில் பட்டது. இங்கேயும் வரலாற்றுச் சின்னம்தான். ஆனால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகிக்கிறார்கள். செம வேகமாக ஓடுகிறது. பூமிக்கடியில் கேபிள் இருக்கிறது என்று டாக்ஸி டிரைவர் சொன்னார்.

1 | amas32
October 3, 2013 at 4:03 pm
:-)) I love your style of story telling!
amas32