‘தினம் ஒரு பா’ என்ற வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது அதே பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 365 பாடல்கள் + எளிய உரை கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்போர் வானதி பதிப்பகம், 604 பக்கங்கள், விலை ரூ 300. ஆன்லைனில் வாங்குவதற்கு இரு இணைப்புகள்: http://goo.gl/Nyui66 அல்லது https://www.nhm.in/shop/100-00-0002-183-7.html.

இந்நூலுக்கு ஓர் அறிமுகமாக, நான் எழுதிய முன்னுரை இங்கே:
முன்னுரை
விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இது.
கல்லூரி நாள்களில் நானொரு பாக்கெட் நாவல் பிரியனாக இருந்தேன். குறிப்பாக மர்மக் கதைகள் என்றால் அத்துணை இஷ்டம்!
கோயம்பத்தூரில் தெருவுக்கு நாலு பழைய புத்தகக் கடைகள் உண்டு. அவற்றில் இந்த மர்ம நாவல்கள் காசுக்கு எட்டு விகிதத்தில் மிக மலிவாகக் கிடைக்கும்.
அப்படி ஒரு கடையில், நான் இதுவரை வாசித்திராத அதிநவீன கொலைக்கதைகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம், மிகப் பழைய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது.
அந்தப் புத்தகத்துக்கு அட்டைகூட இல்லை, முதல் பக்கமும் பாதி கிழிந்திருந்தது. உள்ளே புரட்டியபோது, ‘குறுந்தொகை : புலியூர் கேசிகன் உரை’ என்று தெரிந்துகொண்டேன்.
ஏனோ, அந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. காரணம் தெரியவில்லை.
அதற்குமுன் நான் சங்க இலக்கிய நூல்கள் எவற்றையும் வாசித்தது கிடையாது, பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் எதேச்சையாகக் கண்ணில் பட்டிருந்தால்தான் உண்டு, மற்றபடி அதில் ஆர்வமோ, ஞானமோ கிடையாது.
ஆனால், அந்தக் கிழிந்த புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை, நான் அதைப் புரட்டியபோது கண்ணில் பட்ட பாடல்கள் அனைத்தும் சிறியதாக நான்கைந்து வரிகளுக்குள் நிறைவடைந்துவிடுபவையாக இருந்ததால் ‘எப்படியாவது படிச்சுடலாம்’ என்று நினைத்தேனோ என்னவோ!
கடைக்காரரிடம் கேட்டேன், ‘இது என்ன விலைங்க?’
பழைய புத்தகக் கடையில் எஞ்சினியரிங் புத்தகங்களுக்கும் மாத நாவல்களுக்கும்தான் மரியாதை, அங்கே பழந்தமிழ் இலக்கியத்தை யார் சீண்டுவார்கள்? அலட்சியமாக, ‘பத்து ரூவா குடு!’ என்றார் அவர்.
அந்தப் ‘பத்து ரூவா’ புத்தகம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னளவில் நான் செய்த மிகச் சிறந்த ‘செலவு’ (அல்லது ‘வரவு’) அதுதான்.
அன்றைக்கு மிக எதேச்சையாகப் படிக்க ஆரம்பித்த அந்தப் புத்தகத்தில், பலாப்பழத்தின் இனிமையையெல்லாம் பிழிந்து ஒரே ஒரு சொட்டில் இறக்கிய தேன்போன்ற குறுந்தொகையின் செறிவில், அதைப் புலியூர் கேசிகன் அருமையாகவும், எளிமையாகவும் விளக்கிய பாங்கில் என்னை மறந்துவிட்டேன், மற்ற சங்க இலக்கியங்களையும், பிற பழந்தமிழ்ப் பாடல்களையும் தேடிப் படிக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது.
இந்த வாசிப்பில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், தமிழ் என்றைக்கும் இளமையானதுதான், சரியானபடி பதம் பிரித்து, நாம் இழந்துவிட்ட சொற்களையெல்லாம் மீட்டுக் கொண்டுவந்து வாசித்தால் போதும், இன்றைக்கும் அதன் இனிமையில் நாம் சொக்குவது உறுதி!
இணையத்தில் நான் சில பழந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லி, அவற்றுக்கு எளிய (இன்றைய) தமிழில் விளக்கம் சொன்னபோது, ‘அட! நல்லாருக்கே!’ என்று பலர் வியந்தார்கள், ‘இதுமாதிரி இன்னும் எழுதுங்க!’ என்றார்கள்.
‘நான் எதுக்குங்க எழுதணும்? அதான் ஏற்கெனவே பல பேர் ஏராளமா எழுதியிருக்காங்களே, அதை வாங்கிப் படிக்கலாமே!’
ம்ஹூம், இவர்கள் குறுந்தொகையோ புறநானூறோ கம்பனோ தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ நாலடியாரோ வாங்கமாட்டார்கள், ஒருவேளை வாங்கினாலும், படிக்கமாட்டார்கள். பிடிவாதம் அல்ல, பிரமிப்புதான் காரணம்!
‘இவ்வளவு இருக்கே’ என்கிற அந்த வியப்பை, ‘இவ்ளோதான்’ என்கிற அளவுக்குக் குறைக்கவேண்டுமென்றால், ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பதம் காட்டவேண்டும், அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் சிலராவது அந்த நூல்களைத் தேடிச் சென்று வாசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.
அதற்காக, பல பழந்தமிழ் நூல்களில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தினம் ஒன்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கினேன். ‘தினம் ஒரு பா’ என்ற அந்த இணைய தளத்தில் (http://365paa.wordpress.com/) வெளியான பாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
இதில் பக்தி இலக்கியம் உண்டு, காதல் உண்டு, பிரிவு உண்டு, அறிவுரை உண்டு, தத்துவம் உண்டு, இலக்கணம் உண்டு, வேடிக்கை உண்டு, புதிர் உண்டு… எல்லாமே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை, ஆனால் அவை தருகிற உணர்ச்சிகள் அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகிறவை என்பதை நினைத்து நாம் வியக்கலாம், பெருமைப்படலாம்.
தனிப்பட்டமுறையிலும், இந்தத் ‘தினம் ஒரு பா’ எனக்குத் தந்த கொடைகள் அளவிடமுடியாதவை.
நான் பண்டிதன் அல்லன். ஒரு பழம்பாடலைப் பார்த்தவுடன் அதன் பொருள் புரிந்துவிடாது. தலையைச் சொறிந்துகொண்டு அகராதியைத் தேடி ஓடுகிறவன்தான்.
அதேசமயம், தினம் ஒரு பாடலுக்கு விளக்கம் எழுதுவது என்று தொடங்கியபிறகு, சொற்களைப் பிரிப்பது, புரிந்துகொள்வது, புழக்கத்தில் இல்லாத, ஆனால் எளிய சொற்களை அடையாளம் காண்பது, இப்போது நாம் சகஜமாகப் பயன்படுத்தும் சொற்களோடு அவற்றை ஒப்பிட்டு மகிழ்வது என்று இதுவே ஒரு மிகச் சுவாரஸ்யமான விளையாட்டாகிவிட்டது.
முக்கியமாக, கவி நயம். அதுவரை நான் மேலோட்டமாகமட்டுமே வாசித்திருந்த பல நூல்களை ஆழச் சென்று முழுக்க வாசிக்கும் ஆர்வத்தைப் பெற்றேன், அவற்றின் மேன்மை புரியத் தொடங்கியது.
இந்தப் பலனெல்லாம், இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற அக்கறையுடன் இதனைத் தொகுத்திருக்கிறேன். இறைவன் அருள் துணை நிற்கட்டும்.
***
என். சொக்கன் …
28 10 2013
Like this:
Like Loading...
Related
1 | Pandian
October 28, 2013 at 11:52 pm
Reblogged this on கடைசி பெஞ்ச் and commented:
தினம் ஒரு பா
ஆசிரியர் அவர்களின் முன்னுரை