Archive for November 2013
ஒரு வெளம்பரம்
Posted by: என். சொக்கன் on: November 13, 2013
- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Humor | IT | ViLambaram
- 4 Comments
சில ஆண்டுகளுக்குமுன்னால், பணிநிமித்தம் ஓர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம்.
‘பணிநிமித்தம்’ என்ற சொற்றொடர் இருவகைகளைக் கொண்டது. ஒன்று, நாங்கள் அவர்களுக்குப் பணி செய்வது, இரண்டாவது, அவர்கள் எங்களுக்குப் பணி செய்வது.
இதில் நாங்கள் சென்ற ‘பணி’ இரண்டாம் வகை. அதாவது, அந்தச் சந்திப்பின் நிறைவில் அந்த நிறுவனத்தைப்பற்றி எங்களுக்கு எல்லாவிதத்திலும் திருப்தியென்றால், விருப்பமிருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒரு Projectஐ வழங்குவோம், அதன்மூலம் அவர்களுக்கு நல்ல பண வருவாய் உண்டு.
ஆகவே, அந்த நிறுவனத்தினர் எங்களை எப்படியாவது கவர்ந்திழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். புடைவை கட்டிய ரிசப்ஷனிஸ்டுகள் கையால் ரோஜாப்பூ பொக்கே என்ன, அறிவிப்புப் பலகை, எல்சிடி திரையில் எங்களுடைய கட்டவுட்டுகள் என்ன, ஜில்லென்று கொக்ககோலா என்ன, தட்டுத் தட்டாய் நிமிஷத்துக்கொரு வகை பிஸ்கோத்துகள் என்ன, மதியச் சாப்பாடு என்ன என்ன… சுருக்கமாகச் சொன்னால், ராஜோபசாரம்!
அந்த அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே மிஷன் ஸ்டேட்மெண்ட், விஷன் ஸ்டேட்மெண்ட், ரேஷன் கார்ட், க்வாலிட்டி பாலிஸி, எல் ஐ சி பாலிஸி என்று விதவிதமான அட்டைகளை வண்ணமயமாக அச்சிட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் கீழே அவர்களுடைய தலைவரின் அழகான கையெழுத்து.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த என்னுடைய சக ஊழியர், விவாத அறைக்குள் நுழைந்தவுடன், ‘ஆஃபீசையே எங்களுக்காகப் புதுப்பிச்சிருக்கீங்கபோல?’ என்றார் நக்கலாக.
அவர்கள் திகைத்துப்போனார்கள், ‘எ… எ… என்ன சொல்றீங்க சார்?’
’இந்த போர்டெல்லாம் இன்னிக்குக் காலையில கொண்டுவந்து மாட்டினதுதானே?’
அவர்கள் அசடு வழிந்தபடி பேச்சை மாற்றினார்கள். பேச வந்த விஷயத்துக்குள் நுழைந்தோம்.
காஃபி ப்ரேக்கின்போது அவரிடம் கேட்டேன், ‘அந்த போர்டெல்லாம் புதுசுன்னு எப்படிச் சொன்னீங்க? எப்பவோ இங்கே மாட்டிவெச்சதா இருக்கலாமில்லையா?’
’டேய் கோயிந்து’ என்றார் அவர் செல்லமாக, ‘அந்த போர்டுகளைக் கவனி, ஒவ்வொண்ணுக்கும் பக்கத்துல ஏழெட்டுப் பேர், அவங்களோட ஆஃபீஸ்ல உள்ளவங்களே பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி அதை ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு வேடிக்கை பார்க்கறாங்க, அவங்க மூஞ்சைப் பார்த்தாலே இதெல்லாம் புதுச் சரக்கு, இந்த ஆஃபீசுக்குச் சம்பந்தமே இல்லாததுன்னு தெரியலையா?’
***
என். சொக்கன் …
13 11 2013