ரொட்டிக் கடை
Posted January 12, 2014
on:- In: Bangalore | Food | Uncategorized | Walk
- 4 Comments
மிகவும் சிறிய கடைதான். ஆனால் பெயர்மட்டும் “சூப்பர் சாண்ட்விச்”. நல்ல கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள், குடும்பத்தினர், குழந்தைகள் என்று கலவையான ஜனம்.
சூப்பரெல்லாம் சும்மா பெயரளவில்தானா? அல்லது, சுவை அத்தனை பிரமாதமாக இருக்குமா? சந்தேகத்துடன் அணுகினோம்.
சந்தேகத்துக்குக் காரணம், இதற்குமுன்பாகவே, எங்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இணையத்தில் இந்தக் கடையை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பல பதிவுகள். போதாக்குறைக்கு, அந்தப் பகுதியில் எல்லாருக்கும் அந்தக் கடையைத் தெரிந்திருந்தது. யாரிடம் கேட்டாலும் வழி சொன்னார்கள்.
அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் கடை இது. சாண்ட்விச்சில் என்ன சூப்பர் இருந்துவிடமுடியும்?
சந்தேகத்துடன் மெனுவைப் பார்த்தோம். விலைகள் அதிகமில்லை, குறைவும் இல்லை. ஒவ்வொரு சாண்ட்விச்சும் 15 ரூபாயில் தொடங்கி 30 ரூபாய்வரை.
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே ஜீன்ஸ் தரித்த ஓர் இளம்பெண் எட்டிப்பார்த்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக ‘டிஷ்யூ பேப்பர்?’ என்றார் கடைக்காரரிடம்.
‘இதான் டிஷ்யூ’ என்று அழகாகக் கிழித்துவைத்திருந்த நியூஸ் பேப்பரை நீட்டினார் அவர்.
எனக்குக் கிர்ரென்றது. பெங்களூரின் மத்தியில், அதுவும் ஜெயநகர் போல் எடுத்ததுக்கெல்லாம் கௌரவம் பார்க்கும் பணக்கார நாசூக்கு ஏரியாவில் ஒரு கடை, இப்படி நம்ம ஊர் டீக்கடை ரேஞ்சுக்கு செய்தித் தாளை டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்துகிறது என்றால், இவர்களிடம் ஏதோ இருக்கவேண்டும்?
மெனு கார்டிலிருந்து குத்துமதிப்பாக எதையோ (Capsicum Cheese Sandwich) தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தோம். இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. சிறிய ரொட்டித்துண்டுதான், அதை ஆறாக நறுக்கி, சுமாரான ஒரு காகிதத் தட்டில் வைத்துத் தந்தார்கள்.
எடுத்து வாயில் போட்டால், தனித்துவமான சுவை. ஜிவ்வென்று எகிறும் காரம், அதேசமயம் சாப்பிடுவதைமட்டும் நிறுத்தமுடியவில்லை.
சுவைக்குக் காரணம், அந்த ப்ரெட்டும்தானாம். ஆந்திராவில் எங்கோ விசேஷமாகத் தயாராகி வருகிறதாம்.
நாங்கள் சாப்பிடச் சாப்பிட, அவர்கள் நிமிடத்துக்கு ஏழெட்டு என்ற விகிதத்தில் சாண்ட்விச்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தார்கள். சீஸ், ஜாம், மக்காச்சோளம், சாக்லெட், பழங்கள், குல்கந்து (என்னவொரு குஷியான பெயர்) என்று எதையெதையோ உள்ளே திணித்து.
இவை அனைத்தும் எளிய சாண்ட்விச்கள்தான். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டின் நடுவே எதையோ தடவி மேலே வைத்து நறுக்கித் தருகிறார்கள். அவ்வளவுதான். மெஷின் கிடையாது. காய்கறிகள் உடனுக்குடன் நறுக்கப்படுகின்றன. அதே வேகத்தில் விற்றுத் தீர்கின்றன.
சாப்பிட்ட காரம் நாக்கில் நிற்க, மெனு கார்டை நோட்டமிட்டு, ‘தயிர்’ என்று இருந்த ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் செய்தோம். அதில் கொஞ்சம் காரம் குறையுமோ என்று.
நான்கு நிமிடத்தில் வந்தது ஒரு விநோதமான சாண்ட்விச். வழக்கமான சாண்ட்விச்சை 9 துண்டுகளாக வெட்டி, அதன்மீது தயிர், ஓமப்பொடி, இன்னும் சில மசாலா சமாசாரங்களைத் தூவியிருந்தார்கள். ஒருமாதிரி குத்துமதிப்பாகப் பிய்த்துச் சாப்பிட்டால், அட, இதுவும் காரம், இதுவும் அட்டகாசமான சுவை.
இரண்டு சாண்ட்விச்களுக்கு வயிறு திம்மென்று நிரம்பிவிட்டது. ஸ்னாக்ஸெல்லாம் கிடையாது, முழுமையான இரவு உணவு, அதுவும் நாலே ரொட்டித் துண்டுகளில்!
அவர்களுடைய மெனுவில் மீதமிருக்கும் அனைத்தையும் இன்னும் சிலமுறை வந்து இரண்டு இரண்டாக முயற்சி செய்வதாகத் தீர்மானித்துக்கொண்டு திரும்பினோம்.
பெங்களூர்வாசிகளுக்குக் கூடுதல் விவரங்கள்: ஜெயநகரில் இருக்கும் ICICI வங்கிக்கு அருகே செல்லும் Elephant Rock Roadல் 200 மீட்டர் நடந்தால் ஒரு சிறு சாலை இடதுபுறம் திரும்பிச் செல்லும், அங்கே இந்த ‘ஹரி சூப்பர் சாண்ட்விச் கடை’ உள்ளது. உங்கள் பிரதிக்கு முந்துக.
***
என். சொக்கன் …
12 01 2014
4 Responses to "ரொட்டிக் கடை"

குத்துமதிப்பான சுவைக்கு வாழ்த்துக்கள்…


உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_16.html சென்று பார்க்கவும்… நன்றி…


அறிமுகத்திற்கு நன்றி . போன வாரம் தான் போய் இருந்தேன் . செம்ம டாஸ்ட்டா இருந்துச்சு . இந்த மாதிரி நல்ல சாப்பாடு சமச்சராமாவும் நெறைய எழுதுங்க

1 | amas32
January 12, 2014 at 11:01 pm
நாக்கில் நீர் ஊருகிறது 🙂 என்ன ஒண்ணு என்னால் ப்ரெட் சாப்பிட முடியாது 🙂
amas32