மனம் போன போக்கில்

Archive for March 14th, 2014

”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/?p=31326

நான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.

அப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.

இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.

சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்‌ஷன்.

பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?

அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.

அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.

‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.

ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.

அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.

யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?

இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.

சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?

தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!

***

என். சொக்கன் …
05 02 2014

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.

கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.

நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.

அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’

’எதுக்கு?’

‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’

தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.

‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’

யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.

என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.

ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.

இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’

இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’

‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’

ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.

எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.

இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.

‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’

‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’

‘தூக்கிதான் எறியணும்.’

‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’

‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.

’அப்போ இதுக்குக் காசு?’

‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’

‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’

‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’

‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’

‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’

முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.

ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.

***

இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.

‘அதென்ன டப்பா?’

‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’

இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

***

என். சொக்கன் …

14 03 2014


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31