Archive for June 13th, 2014
பந்தாட்டத் திருவிழா
Posted June 13, 2014
on:- In: Poetry | Tamil | Uncategorized
- 7 Comments
FIFA உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளதால் ஊரெல்லாம் ’பந்தாட்டத் திருவிழா’ என்கிறார்கள். இந்த நல்வேளையில் ’குற்றாலக் குறவஞ்சி’யில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய அந்தப் பிரபலமான ’பந்தாட்டமே திருவிழா’வை வாசிக்க எனக்கு ஆசை.
1
மலர்களைக் கொண்ட பசுமையான கொடி போன்ற அழகை உடைய வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
ஆட்டம் தொடங்கியபின் வெற்றி வெற்றி என்று சத்தமிடுவார்கள். ஆனால் இங்கே, ஆட்டம் தொடங்குமுன்பே வெற்றி முழக்கம். எப்படி?
வசந்தவல்லியின் சிவந்த கைகள், அதில் அழகான வளையல்கள், அவை கலின் கலின் என்று சத்தமிடுகின்றன. அது ‘வெற்றி, வெற்றி’ என்று சத்தமிடுவதுபோல் இருக்கிறது. அதோடு தண்டை, சிலம்பு ஓசையும் சேர்ந்துகொள்கிறது.
அவளுடைய மார்பகங்கள் குழைந்து ஆடுகின்றன. அவற்றுக்கு ஒரே மகிழ்ச்சி. ’எதிரியை ஜெயித்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றன.
மார்பகங்களுக்கு யார் எதிரி?
அவள் கையில் இருக்கும் பந்துதான். அதோடு நடத்திய ’அழகு’ப் போரில் மார்பகங்கள் வென்றுவிட்டன!
2
செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகளைப் போன்ற வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி அணிந்திருக்கும் கனமான காதணிகள் மீன் போன்ற அவளுடைய கண்களின்மீது புரண்டு ஆடுகின்றன. மேகம் போன்ற கூந்தலை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் பயந்து கலைந்தன.
இந்த வண்டுகள் ஓடும்போது, மன்மதனின் வில்லின் இருந்த நாண் அறுந்துவிட்டது. இனி உலகம் என்ன ஆகுமோ!
வசந்தவல்லியின் கூந்தலில் இருந்து வண்டுகள் ஓடினால் மன்மதனின் வில் ஏன் அறுந்துபோகவேண்டும்?
மன்மதனுடைய வில் கரும்பு என்பது எல்லாருக்கும் தெரியும், அதில் செலுத்தப்படுவது மலர் அம்பு என்பதும் தெரியும், அந்த வில்லின் நாண், வண்டுக் கூட்டம்.
இப்போது, இந்த வண்டுகள் ஓடுவதால், அந்த வண்டுகளும் ஓட, மன்மதன் வில் பயனற்றுப்போக, உலகமே காதலின்றித் தவிக்கிறது. இதை எண்ணி அவளுடைய இடை துவண்டுபோகிறது.
3
நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!
4
சந்திரனைத் தலையில் சூடிய குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கிற இந்த நகரத்தின் வீதிகளில் சங்குப் பூச்சிகள் வரிசையாகச் செல்கின்றன. அங்கே வசந்தவல்லி பொற்பந்து விளையாடுகிறாள்!
அவள் ஆடுவதைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இவள் யார்? வசந்தவல்லிதானா? அல்லது திருமகளோ? சுந்தரியோ? தேவ மகளிர் என்று சொல்லப்படும் ரம்பையோ? மோகினியோ?
இவள் எப்படிப் பந்தாடுகிறாள்? பந்தைப் பார்த்ததும் அதை அடிக்க இவளுடைய மனம் முதலில் செல்கிறதா? அல்லது, கண்கள் முதலில் செல்கின்றனவா? அல்லது கைகள் முதலில் செல்கின்றனவா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அருமையாக ஆடுகிறாள் என்பதுமட்டும் தெரிகிறது!
*********************************
பாடல்கள்
*********************************
செங்கையில் வண்டு கலின் கலின் என்று
….செயம் செயம் என்று ஆட, இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
….தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
….குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை
….புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
….மதன் சிலை வண்டு ஓட, இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்
….என்று இசை திண்டாட, மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!
சூடக முன் கையில் வால் வளை கண்டு இரு
….தோள் வளை நின்று ஆடப் புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு
….பாவனை கொண்டு ஆட, நய
நாடகம் ஆடிய தோகை மயில் என
….நல் நகர் வீதியிலே, அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
….அடர்ந்து பந்தாடினாளோ!
இந்திரையோ! இவள் சுந்தரியோ! தெய்வ
….ரம்பையோ! மோகினியோ! மனம்
முந்தியதோ! விழி முந்தியதோ! கரம்
….முந்தியதோ எனவே! உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
….சங்கு அணி வீதியிலே! மணிய
பைந்தொடு நாரி வசந்த ஒய்யாரி
….பொன் பந்து கொண்டாடினாளே!
***
என். சொக்கன் …
12 06 2014