மனம் போன போக்கில்

நூறு மேற்கோள்கள்

Posted on: June 23, 2014

தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes) நூறு வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ’ஆனால், அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக்கூடாது, மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்றார்.

’திருக்குறளிலேயே நிறைய இருக்குமே!’ என்றேன்.

‘இருக்கும், ஆனால் நூறு தேறுமா?’ என்றார்.

நேற்று ரயில் பயணத்தில் முழுத் திருக்குறளையும் புரட்டினேன். ஓரளவு பிரபலமான, படித்தவுடன் சட்டென்று புரியக்கூடிய Quotesஐமட்டும் திரட்ட முயன்றேன்.

நூறு அல்ல, என் மேலோட்டமான பார்வையிலேயே 118 மேற்கோள்கள் கிடைத்தன. இன்னும் நிறைய இருக்கலாம், எனக்குச் சிறந்ததாகத் தோன்றியவற்றை இங்கே தந்துள்ளேன். ஒருமுறை விறுவிறுவென்று வாசித்துப் பாருங்கள், வாழ்வியல் முறைகளில் தொடங்கி Soft Skillsவரை சகலத்தையும் வள்ளுவர் தொட்டுச் சென்றிருப்பது புரியும்.

இத்தனைக்கும், மொத்தமுள்ள திருக்குறள்களில் இது வெறும் 10%கூட இல்லை!

***

என். சொக்கன் …
23 06 2014

1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு

2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்

3. செயற்கு அரிய செய்வார் பெரியர்

4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

5. அறத்தான் வருவதே இன்பம்

6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!

9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

10. மங்கலம் என்ப மனைமாட்சி

11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்

12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்

13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்

14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்

15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

17. அன்பின் வழியது உயிர்நிலை

18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று

19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று

21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்

22. அடக்கம் அமரருள் உய்க்கும்

23. யாகாவார் ஆயினும் நா காக்க

24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு

25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்

27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

28. பிறன் மனை நோக்காத பேராண்மை

29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்

31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!

32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!

33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!

34. கைம்மாறு வேண்டா கடப்பாடு

35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு

36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை

37. ஈதல் இசைபட வாழ்தல்

38. தோன்றின் புகழொடு தோன்றுக

39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்

40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்

41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்

43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்

44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க

45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை

46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்

47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க

49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்

50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்

51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்

52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு

53. பற்றுக பற்று அற்றான் பற்றினை

54. மெய்ப்பொருள் காண்பது அறிவு

55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்

56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு

58. கற்றனைத்து ஊறும் அறிவு

59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்

62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை

64. அறிவு உடையார் எல்லாம் உடையார்

65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்

68. ஆற்றின் அளவு அறிந்து ஈக

69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து

70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்

71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்

72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்

73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்

74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி

75. கடிது ஓச்சி மெல்ல எறிக

76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்

77. உடையர் எனப்படுவது ஊக்கம்

78. உள்ளம் உடைமை உடைமை

79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு

80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்

81. முயற்சி திருவினை ஆக்கும்

82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்

83. இடுக்கண் வருங்கால் நகுக

84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்

85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை

86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து

87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது

88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை

89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்

90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்

91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்

92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்

94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக

96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்

97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு

98. செயற்கு அரிய யா உள நட்பின்?

99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு

100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு

101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு

102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை

103. உண்ணற்க கள்ளை

104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்

105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்

106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்

107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்

108. பணியுமாம் என்றும் பெருமை

109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்

110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு

111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்

112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி

113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்

114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!

115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்

116. மலரினும் மெல்லிது காமம்

117. ஊடலில் தோற்றவர் வென்றார்

118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்

10 Responses to "நூறு மேற்கோள்கள்"

நண்பர் கூறிய ‘மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ clause-களை பாதிக்கு மேற்பட்ட மேற்கோள்கள்களில் மறந்த சொக்கனை என்ன செய்யலாம்? 🙂

எனக்கென்னவோ, ‘பிரபலமான’ நல்ல மேற்கோள்கள் பிடிக்க சிறந்த இடம் தமிழ்த்திரைப்பட பாடல் வரிகள் என்று தோன்றுகிறது. உதாரணம்: அச்சம் என்பது மடமையடா, உழைத்து வாழ வேண்டும் பிறர்…, ஒவ்வொரு பூக்களுமே (பூவுமே)…

மிகவும் அருமை. உலக பொதுமறையாம் ” குறுக தரித்த குறள்”

என்னை எதுவும் செய்யவேண்டாம், மறந்தவர்கள் கொஞ்சம் வெட்கப்படலாம் :>

சொக்கன், நான் கூறியதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என்று சந்தேகப்படுகிறேன்.

நான் சொல்ல வந்தது: நண்பர் கூறிய ‘மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்பது போலல்லாமல் நீங்கள் கூறிய பல குறள் வரிகள் சாமானியனுக்குப் பிரபலமாகாதவையாயோ அல்லது எளிதில் புரியாதவையாகவோ இருந்தது.

நீங்கள் புரிந்து கொண்டதாக நான் சந்தேகப்படுவது: நீங்கள் சுட்டிக்காட்டிய குறள்வழி நீங்களே நடக்கவில்லை, மறந்து விட்டீர்கள்.

யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. அதுவும் இவ்வளவு தமிழார்வம் உள்ள, இவ்வளவு நேர்மையான ஒருவரை நான் இழிவு செய்வேனா? கேலி பேசுவேனா? 😦

எனினும், உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் அன்பு வாசகன்,
இராமநாதன்

Date: Tue, 24 Jun 2014 01:32:39 +0000
To: ram_sp@hotmail.com

பழந்தமிழில் இருந்து நிறைய விளம்பர வாசகங்களும் எடுக்கலாம்.

எல்லாக் கருத்துகளுக்கும் கருவாக விளங்குவது திருக்குறள்தான். நல்ல தொகுப்பு.

மிகவும் பயனுள்ள குறிப்புகள்..

புண்படவெல்லாம் இல்லை இராமநாதன், நான் சொல்லவந்தது: இவை பிரபலமானவைதான், இலக்கிய மேடைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டவைதான், இப்போது பலர் மறந்துவிட்டோம்.

இதற்கே இப்படி என்றால் மீதமுள்ள 90%ஐ நாம் எப்போது வாசிப்பது? அதைதான் சொன்னேன் “:>” என்பது நாங்கள் பயன்படுத்தும் “குறும்பு” ஸ்மைலி, உங்களைத் தவறாக எடுத்துக்கொள்ளவே இல்லை

அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2014
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
%d bloggers like this: