Archive for June 29th, 2014
ஸ்டேஷனரி எனர்ஜி
Posted June 29, 2014
on:- In: Bangalore | Men | Uncategorized | Women
- 13 Comments
’நங்கைக்கு சார்ட் வாங்கணும்’ என்றார் மனைவி.
சாதாரணமாக இவற்றை நான்தான் வாங்குவது வழக்கம். ஆனால், ஒன்றிரண்டு நாள் Notice இருக்கும், தினசரி நடை பயணத்தின்போது வாங்கி வந்துவிடுவேன்.
இந்தமுறை அந்த அவகாசம் இல்லை, நாளை காலை சார்ட் வேண்டுமாம். சொல்ல மறந்துவிட்டாளாம்.
’முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?’ என்று குழந்தையைக் கடிந்துகொள்ளலாம். என்ன பயன்? ‘மறந்துட்டேன்’ என்றுதான் பதில் சொல்வாள், அல்லது அழுவாள்.
என்ன செய்வது?
பொடிநடையாகச் சென்று வாங்கி வந்துவிடலாமா?
எனக்கு இன்று எழுத்து வேலைகள் ஜாஸ்தி. எழுந்து வெளியே சென்றால் அவை தடைபட்டுவிடும். ‘சாயந்தரமாப் பார்த்துக்கலாம்’ என்றேன்.
‘சாயந்தரம் எப்போ?’
‘நைட் வெளியே சாப்பிடலாம்ன்னு சொன்னேனே’ என்றேன், அதற்குள் எழுதி முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.
‘ஆமா, ஆனா ஹோட்டல்ல பேப்பர் தோசை கிடைக்கும், சார்ட் பேப்பர் விப்பானா என்ன?’
‘ஹோட்டல் பக்கத்துல ஸ்டேஷனரி ஷாப் இருக்கும், அதுல வாங்கிக்கலாம்!’ என்றேன்.
‘ஸ்டேஷனரி ஷாப் இருக்கா? அல்லது இருக்குமா?’
பன்னிரண்டு வருடத் தாம்பத்யம். நான் ஒளித்துவைத்த குண்டைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார்.
ஆனால் எனக்குத் தயங்காமல் பொய் சொல்வதில் அனுபவம் இன்னும் அதிகமல்லவா? சட்டென்று, ‘கடை இருக்கு, பார்த்திருக்கேன்’ என்றேன்.
‘கண்டிப்பா இருக்கா?’
‘ஆமா!’
‘நாம சாப்பிடப் போகும்போது திறந்திருக்குமா?’
‘திறந்திருக்கும், இப்போ என்னை எழுத விடேன், ப்ளீஸ்!’
அதன்பிறகு, அவர் இதுபற்றிப் பேசவில்லை. இரவு சாப்பிடக் கிளம்பும்போது, ’அந்த ஸ்டேஷனரி ஷாப்’ என்றார்.
’ஞாபகமிருக்கு, நீ குழந்தைங்களைக் கூட்டிகிட்டு ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் பண்ணு, நான் அதுக்குள்ள சார்ட் வாங்கிட்டு வந்துடறேன்’ என்றேன் தெம்பாக.
ஆட்டோ அந்த உணவகத்தின் அருகே நின்றது. அவர்கள் இறங்கிக் கடைக்குள் நுழைய, நான் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.
முதலில் தென்பட்டது ஒரு சூப்பர் மார்க்கெட். அதனுள் ஸ்டேஷனரி பொருள்களும் இருக்கக்கூடுமல்லவா? நுழைந்து விசாரித்தேன், ‘இருக்கு சார்’ என்றான் சிப்பந்தி.
‘சூப்பர், ரெண்டு கொடுங்க!’
‘ஷ்யூர் சார்’ என்று ஷெல்ஃப்களில் தேட ஆரம்பித்தான்.
ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்…. பென்சில்கள், ஷார்ப்னர்கள், நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் போட்டுத் தேடிவிட்டு, ‘ஸாரி சார், தீர்ந்துடுச்சு போல’ என்றான்.
எனக்குப் பகீரென்றது. அவசரமாக வெளியே ஓடி வந்து சாலையின் எதிர்ப்பக்கம் தேட ஆரம்பித்தேன். ஒரு துணிக்கடை, பக்கத்தில் அடையார் ஆனந்த பவன், இந்தப் பக்கம் வடக்கத்தித் தின்பண்டங்கள் விற்கும் ‘சாட்’டுக்கடை, அதனருகே ஓர் இளநீர்க் கடை, சற்றுத் தள்ளி ஒரு பேக்கரி, அதனருகே இன்னொரு துணிக்கடை, பக்கத்தில் ஸ்வீட் ஷாப்.
பெங்களூர்வாசிகள்மேல் (என்னையும் சேர்த்து) எரிச்சலாக வந்தது. சம்பளத்தையெல்லாம் தின்னவும் உடுத்தவுமே செலவழித்துவிடுவார்களா? ஒரு பயலுக்குச் சார்ட் பேப்பர் தேவைப்படாதா?
தெரு முனைவரை நடந்தேன், நான் எதிர்பார்த்த கடை இல்லை. நொந்த மனத்துடன் சமாதானங்களை யோசிக்க ஆரம்பித்தேன், ‘கடை எப்பவும் திறந்திருக்கும், இன்னிக்குப் பூட்டிட்டான்போல, ஞாயித்துக்கிழமை சாயங்காலமாச்சே!’
இந்த வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இடதுபக்கம் திரும்பினால், ஒரு குறுக்குச் சந்தில் பளிச்சென்ற வெளிச்சத்துடன் அதென்ன? ‘பாலாஜி ஸ்டேஷனரி ஷாப்!’
ஏழுமலையானுக்கு வந்தனம். குடுகுடுவென்று ஓடி, ‘சார்ட் பேப்பர் இருக்கா?’ என்றேன்.
‘இருக்கு சார், எந்தக் கலர்?’ என்றான் அவன்.
‘ஏதாவது ஒரு கலர், சீக்கிரமாக் கொடுங்க பாஸ்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். சில்லறையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தேன்.
அப்போது என்னுடைய நடையை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். ’கந்தன் கருணை’யில் படையினர்முன்னே கம்பீரமாக நடக்கும் சிவாஜி கணேசன் தோற்றுப்போயிருப்பார்!
***
என். சொக்கன் …
29 06 2014