நெய்மாறன்
Posted July 11, 2014
on:- In: Humor | Language | Tamil | Translation | Uncategorized
- 8 Comments
நெய்மார் என்ற கால்பந்தாட்ட வீரர் பெயரை ஒருவர் ‘நெய்மாறன்’ என்று எழுதக் கண்டேன். வேடிக்கைக்குதான். ஆனால் ரசமான மாற்றம் அது.
சம்பந்தப்பட்ட நெய்மார் இதனை ஏற்பாரோ என்னவோ, ஆனால், நெய்மாறன் என்ற பெயர் நன்றாகவே உள்ளது. தமிழ் மரபுணர்ந்து செய்த சுவாரஸ்யமான மாற்றம்.
மாறன்: பாண்டியன், வேண்டுமானால் நெய் பூசிய வேலை ஏந்திய பாண்டியன் என்பதுபோல் இப்பெயருக்கு விளக்கம் அளிக்கலாம் 🙂
ஆனால் ஒன்று, இப்படி மாற்றுவது மரபு சார்ந்ததுதான். விபீஷணன் / லக்ஷ்மணன் ஆகியோர் வீடணன் / இலக்குவன் என்று மாறியது ஏனோ, அதே காரணம்தான் இதற்கும். நமக்கு வாசிக்க இலகுவான வகையில் மாற்றிப் பயன்படுத்துவது. (அதேசமயம், நெய்மார் என்பதே தமிழில் உச்சரிக்கும்வகையில் உள்ளதால், இந்தக் காரணம் இங்கே பொருந்தாது என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)
இன்னொரு விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்குத் தமிழ் தெரிந்து, அவர் இதனை ஏற்காவிட்டால் அவர் பெயரை மாற்றக்கூடாது என்பது என் கட்சி. அவர் தமிழில் எழுதுவதுபோல்தான் நாமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உதா: எழுத்தாளர் சுஜாதா பெயரை சுசாதா என்று எழுதுவதை நான் ஏற்கவில்லை, not that it matters :))
சிலர் பெயர்களையும் மொழிபெயர்க்கிறார்கள். ’குமார்’ என்ற பெயரைத் தடாலென்று ‘செல்வன்’ என்று சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்கிவாரிப் போடும் 🙂
ஆனால் இதுவும் மரபில் உள்ளதுதான். கம்பர் ராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது, பல வடமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். உதாரணமாக: ருஷ்யசிருங்கர் என்ற முனிவர் பெயரைக் ‘கலைக் கோட்டு முனிவர்’ என்று அழகாக மாற்றுகிறார் அவர்.
***
என். சொக்கன் …
11 07 2014
8 Responses to "நெய்மாறன்"

நெடுமாறன் என்பது இன்னும் தமிழூட்டிய பெயராய் இருக்கும்! 🙂
Neymar Jr. = தம்பி நெடுமாறன்
மேலும் சில:
சந்தர்பால் – பாலசந்திரன்
டேரன் சாமி – சாமிதரன்
டேரன் கங்கா – கங்காதரன்
ரவி ராம்பால் – ரவி பலராமன்
ஆல்வின் காலிசரன் – ஆளவந்தான் காளிதரன்
ரோஹன் கன்ஹாய் – ரோசாப்பூ கண்ணைய்யா
தினேஷ் ராம்டின் – ராம தீனன்
சுனில் நாரைன் – நாராயண சூலன்
இவான் மாட்ரே – இவன் வேற மாதிரி
விராட் கோலி – கோழிவிற்றான்
சியுநரைன் சாட்டர்கூன் – சிவநாராயண குணசந்திரன்
ராம்நரேஷ் சர்வான் – ராமநாத சரவணன்
எப்பூடி? 🙂


பெயர்ச்சொல் மொழிமாற்றத்தில் மற்றொன்று. ஐரோப்பிய Hasoos/Yasus ஆங்கிலத்தில் Jesus Gsus என்றானாரே 🙂


//விபீஷணன் / லக்ஷ்மணன் ஆகியோர் வீடணன் / இலக்குவன் என்று மாறியது//
அன்று அப்படி மாற்றிய நாம் “வேட்டி” யை “வேஷ்டி” என்றும் “துட்டி”யை “துஷ்டி” சொல்லி மகிழ்கிறோமே இன்று.


அன்பு சொக்கன்,
இன்றுதான் இதை படிக்க நேர்ந்தது. இப்படியான பெயர் மாற்றங்களில், நேரடி மொழிபெயர்ப்பாகவே செய்யப்பட்ட பெயர், சென்னையில் உள்ள Park ரயில் நிலையம், Park என்கிற ஆங்கிலேயரின் நினைவாக சூட்டப்பட்டது. அனால், இப்போது அது பூங்கா ரயில் நிலையமாக மாறிவிட்டது!

1 | amas32
July 11, 2014 at 1:08 pm
ருஷியஸ்ரிங்கர் தான் கலைக்கோட்டு முனி 🙂
amas32