Archive for January 6th, 2015
சிப்பிக்கேற்ற முத்து
Posted January 6, 2015
on:- In: MSV | Music | Poetry | Uncategorized
- 3 Comments
நண்பர் ஆனந்த் ராகவ் தயவில் இன்று ‘சிப்பி இருக்குது முத்துமிருக்குது’ பாடலைப்பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம்.
அந்தப் பாடலின் காட்சிப்படி, நாயகி சிரமமான மெட்டுகளைத் தருகிறாள், நாயகன் சிரமப்பட்டு அவற்றுக்கு வரிகளை எழுதுகிறான், அவள் மனத்தில் இடம் பிடிக்கிறான். அருமையான பாடல், சூழ்நிலை, ரசனைக்குரிய படமாக்கம்.
ஆனால் சற்றே வெளியே வந்து பார்த்தால், அங்கே நாயகி தரும் மெட்டு மிகச் சாதாரணமானது, கொஞ்சம் சந்தப் பயிற்சி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதற்கு எழுதலாம்.
உதாரணமாக, அவள் சொல்லும் தனனனான தனனனான தானா என்ற மெட்டுக்கு நாயகன் ’யம்மாடியோவ்’ என்று பயங்கரமாகத் திணறுவார். உண்மையில் அது ஒரு சாதாரணமான சந்தம் (கண்ணதாசன் திணறியிருக்கவே மாட்டார்!)
இப்படி மொத்தப் பாடலும் மெட்டு எளிமையாகதான் இருக்கும். இதில் என்ன பெரிய சவால்? என்று ஒருமுறை நண்பர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் சட்டென்று சொன்ன பதில்: அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது, அவன் ஜெயிக்கவேண்டும் என்று எளிய மெட்டாகத் தருகிறாள், அதில் உமக்கு என்னய்யா பிரச்னை?
இது சமத்காரமான பதில் அல்ல. நிஜமாகவே இயக்குநர் அப்படிதான் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார், அப்படிதான் MSV, கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது: அவள் எளிய மெட்டுகளைத் தந்தால் போதும், அவன் அவற்றுக்கு எழுதத் திணறுவதுபோல் காட்சியமைப்பு, ஆகவே வரிகள் கொஞ்சம் சிரமமாக இருக்கவேண்டும். ’உன்னை நினைச்சதும் உள்ளம் குளிருது, உடம்பு முழுக்க வேர்த்துக் கொட்டுது ராஜாத்தி’ என்பதுபோல் எளிமையாக இருந்துவிடக்கூடாது.
இதனால், கண்ணதாசன் கதைக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தப் பாடலில் சிரமமான வார்த்தைகளைப் போட்டிருப்பார் என்பது என் ஊகம், Unlike few நவ கவிஞர்கள், கண்ணதாசனுக்குக் கஷ்டமாக எழுதுவதுதான் கஷ்டம், புரியும்படி எளிமையாக எழுதுவது ஈஸி :))
ஒருவேளை இயக்குநர் MSV, கண்ணதாசனிடம் காட்சியை 180 டிகிரி மாற்றிச் சொல்லியிருந்தால் (மெட்டு நிஜமாகவே கடினமாக இருக்கவேண்டும், ஆனால் நாயகன் திணறாமல் கடகடவென்று எழுதியதுபோல் பாடல் வரிகள் எளிமையாக இருக்கவேண்டும்) அப்போதும் இந்த இருவரும் தூள் கிளப்பியிருப்பார்கள்.
அப்போதெல்லாம் திரைப்பாடல்களில் பாத்திரமறிந்துதான் சமையல்!
***
என். சொக்கன் …
06 01 2015