Archive for April 2015
ஒரு புதிய முயற்சியாக, ‘காவிய உபதலைவன்’ என்ற பெயரில் WhatsAppல் ஒரு சிறுவர் தொடர் எழுதினேன்.
தினமும் சில பத்திகளாக இரு வாரங்கள் இந்தத் தொடரை எழுதியது ஒரு நல்ல அனுபவம். சரியாக நூற்றி ஒரு நண்பர்கள் இதனை ரசித்தார்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.
தொடர் இன்று நிறைவடைந்தது. ஆர்வமுள்ளோருக்காக அதை இணையத்திலும் வெளியிடுகிறேன். முதல் அத்தியாயம் இங்கே:
காவிய உபதலைவன்
1
‘மன்னா, உங்களைக் காண ஒரு புலவர் வந்துள்ளார். பார்ப்பதற்கு ரொம்பப் பரிதாபமாக இருக்கிறார். அவரை உள்ளே வரச்சொல்லலாமா?’
மகேந்திரன் மேடையேறிப் பேசியதிலேயே மிக நீளமான வசனம் இதுதான்.
அவன் நல்ல நடிகன்தான். ஆர்வம் உண்டு, உழைப்பு உண்டு, அதிர்ஷ்டம் இல்லை.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், உயரம் இல்லை, நிறம் போதவில்லை.
ஆகவே, அவனுக்குக் கிடைத்ததெல்லாம் சிறிய வேடங்கள்தான். ‘உத்தரவு மன்னா’ என்பதுபோல் தக்கனூண்டு வசனம் இருக்கும். சில நாடகங்களில் அதுவும் கிடையாது. சும்மா வந்துபோகவேண்டியதுதான்.
மகேந்திரன் ஒரு நாடக நடிகன்.
நாடகமென்றால் இன்றைய குழந்தைகளுக்குத் தெரியுமோ என்னவோ. உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால், பள்ளி ஆண்டுவிழாவில் 5 நிமிட டிராமா போடுவீர்களல்லவா? அதையே பெரிய கதையாக, பாட்டு, வசனம் என்று ஜோராக 4 மணி நேரம் நடிப்பார்கள்.
நாலு மணி நேரமா என்று வாயைப் பிளக்காதீர்கள், ராத்திரிமுழுக்க நடிக்கும் நாடகங்களெல்லாம் உண்டு. மக்கள் தூங்காமல் உட்கார்ந்து பார்ப்பார்கள்!
ஆனால் அதிலும், மகேந்திரனுக்குச் சின்ன வேஷங்கள்தான் கிடைக்கும். அதே தக்கனூண்டு வசனம்தான்.
சரித்திர நாடகம் என்றால் மகேந்திரன் காவலாளி, புராண நாடகம் என்றால் ஓரமாக நின்று கும்பிடும் பக்தன், சமூக நாடகம் என்றால் ‘பஸ் எத்தனை மணிக்கு வரும்?’ என்று விசாரிக்கிற பொதுஜனம்.
மகேந்திரன் மேடையில் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. யாரும் அவனைக் கவனிப்பதற்குள் காட்சி முடிந்துவிடும். இப்படியே பல ஊர்களில் நானூறு நாடகங்கள் நடித்துவிட்டான்.
அவனுடைய கனவு, கதாநாயகனாக நடிப்பது அல்ல. ஒரு நாடகத்தில் அவன் இரண்டு காட்சிகளில் ஒரே வேடத்தில் வரவேண்டும். அதைப் பார்க்கிற ஒருவராவது அவனை ஞாபகம் வைத்திருந்து கை தட்டவேண்டும். அவ்வளவுதான்!
ஒவ்வோர் ஊரிலும் நாடகம் நிறைவடைகிற நாளன்று அந்த ஊர் மக்கள் நடிகர்கள் எல்லாரையும் பாராட்டி மெடல் போடுவார்கள். விருந்து கொடுப்பார்கள்.
ஆனால் அதிலும் மகேந்திரன்மாதிரி சிறு நடிகர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் மாலைகூட கிடைக்காது. பிரியாணி சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்குப் பெட்டியைக் கட்டவேண்டியதுதான்.
மகேந்திரனுக்கு மாலையோ மெடலோ வேண்டாம். அவனும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு சின்ன சிரிப்பு, அங்கீகாரம், அதுகூட இல்லை என்றால் என்ன பிழைப்பு இது?
ஏதோ, வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது. யாரும் கவனிக்காவிட்டாலும், விளக்கு வெளிச்சத்தில் மேடையேறுவதில் ஒரு சந்தோஷம். அதனால்தான் மகேந்திரன் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறான்.
(தொடரும்)
***
என். சொக்கன் …
27 04 2015
வாலி
Posted April 21, 2015
on:- In: Poetry | Tamil | Uncategorized
- 2 Comments
நேற்று ஒரு கூட்டத்தில், லா. ச. ரா. அவர்களின் மகன் சப்தரிஷி பேச்சுக்கு நடுவே வேடிக்கையாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் வீட்டுக்கு வாலி வந்திருந்தாராம். யாரோ அவரிடம் ஒரு பாடலைக் குறிப்பிட்டு, ‘அது நீங்க எழுதினதா?’ என்று கேட்டார்களாம்.
வாலி புரிந்ததுபோல் அவர்களைப் பார்த்து, ‘ஆபாசமான பாட்டா?’ என்று கேட்டாராம்.
‘ஆமாம்.’
‘அப்ப நான்தான் எழுதியிருப்பேன்’ என்றாராம் வாலி.
கேட்டதும் சிரிப்புதான் வந்தது. அதன்பிறகு ஏன் சிரித்தோம் என்று வருத்தமும் வந்தது.
தமிழ்த் திரைக் கவிஞர்களில் கண்ணதாசன்மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரைவிட, வாலிதான் செல்லம். தான் எடுத்துக்கொண்ட ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி எழுதியவர் வாலி, கொள்கைப் பரப்பு, காதல், கொண்டாட்டம், கேலி, ஆபாசம் என்று எந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும், அவரது பாடல்கள் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் யார் அவரது பார்வையாளர்களோ அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்தன.
வாலியின் உரைநடையும் அபாரமானது. என் கணிப்பில், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சுயசரிதைகளில் ஒன்று அவருடையது. அதன்பிறகு அதில் உள்ள சம்பவங்களையே வெவ்வேறு கட்டுரைகளாக, தொடர்களாக எழுதி நீர்த்துப்போகவைத்தார் என்பது வேறு விஷயம். ஆனால் வாலி எதை உரைநடையாக எழுதினாலும் சலிப்பில்லாமல் விறுவிறுவென்று படிக்க இயலும், அந்த விஷயத்தில் அவரை இன்னொரு புகழ் பெற்ற ஸ்ரீரங்க ரங்கராஜனுக்கு இணையாகவே சொல்வேன்.
அவரது நீளமான, சமஸ்கிருதச் சொற்கள் மலிந்த வசன கவிதைப் படைப்புகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன். அவற்றில் ஆங்காங்கே பளிச் வரிகள் தென்படும், அவை எதுகை, மோனை, இயைபின் நேர்த்தியான பயன்பாடுகளாக இருக்கும். விஷயம் சொல்லும் துடிப்பு தெரியும், அதைத் தாண்டி அவற்றுக்குப் பெரிய முக்கியத்துவத்தை நான் வைத்ததில்லை.
என்னைப் பொறுத்தவரை அவரது சிறந்த படைப்புகள் திரைப் பாடல்கள்தான், அவற்றின் தேவையை அவர் முழுமையாகப் பூர்த்தி செய்தார், நான்கு தலைமுறை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள் மத்தியில் ஒரு பிதாமகரைப்போல் வாழ்ந்தார். புதிதாக யார் எழுதினாலும் உடனே தொலைபேசியில் அழைத்துப் பாராட்டும் மனம் அவருக்கு இருந்தது.
அவருக்குப் பெயர் சொல்லும் விருதுகள் அதிகம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எப்போதும் உண்டு. மேற்சொன்ன நிகழ்வுபோல் அவரை ஆபாசக் கவிஞராகவே பலர் பார்ப்பதுபற்றிய வருத்தமும்.
தமிழ்த் திரைப் பாடல்களில் அநேகமாகக் காமம் கலந்த வரிகளை எழுதாத கவிஞர்களே இல்லை. அதிகம் யோசிக்காமல் இப்போதே நூற்றுக்கணக்கில் வரிகளை லிஸ்ட் போட்டுக் கிளர்ச்சியூட்ட இயலும்.
உண்மையில், அது திரைப் பாடல்களின் தேவை. அதை அழகியலோடு சொல்வதும் உண்டு, அசிங்கமாகச் சொல்வதும் உண்டு, அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆகவே, இதற்காக நாம் வாலியைப் புறக்கணிக்கவேண்டியதுமில்லை, அதீதமாகப் புகழவேண்டியதும் இல்லை. தன் எழுத்து எப்படிப்பட்டது என்ற தெளிவான புரிந்துகொள்ளலோடு அவர் இருந்தார், நிறைவுவரை தன்னூக்கத்துடன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார் என்பதே அவரை எண்ணிப் பெருமைப்படவேண்டிய விஷயம்தான்.
என்னைப் பொறுத்தவரை வாலி பாடல் கேட்காத நாளில்லை, அவரை நினைக்காத நாளுமில்லை.
***
என். சொக்கன் …
20 04 2015
இன்றைய விடுமுறை வேலையாக, ‘சதுரங்கப் பலகையில் எத்தனை சதுரங்கள்’ என்று நானும் நங்கையும் ஆராய்ந்தோம். அதாவது, ஒரு N x N Matrixல் எத்தனை சிறு, பெரிய உள்சதுரங்கள் உள்ளன என்று கணக்கிடும் முறை. தமிழ் வீடியோ பதிவாக.
- In: Fiction | Kids | Short Story
- 10 Comments
(ஜப்பானிய நாடோடிக் கதையொன்றைத் தழுவியது)
ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.
அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.
இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.
பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’
அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.
ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.
‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.
அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.
பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.
சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’
‘ஏன்?’
‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’
‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.
சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’
‘ஏன்?’
‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’
‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.
சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’
‘ஏன்?’
‘இதோ, அரக்கி வர்றா.’
இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.
சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.
‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’
‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.
‘என்னை உனக்குத் தெரியுமா?’
‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’
கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’
‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.
‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’
‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.
சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.
‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.
‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’
‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.
‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’
‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.
பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.
சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.
மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள்.
பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.
இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.
அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.
சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.
அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.
சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.
இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.
சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.
பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள்.
‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.
அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!
***
என். சொக்கன் …
10 04 2015