தள்ளுபடி
Posted February 7, 2016
on:- In: Books | Characters | Chennai | Money | People | Price
- 2 Comments
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு சிறு புத்தகக்கடை இருக்கிறது. அங்கே சில நூல்கள் வாங்கினேன்.
அந்நூல்களின் மொத்த விலை ரூ 750. ஆகவே, ‘ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.
பொதுவாக நூல்விலையில் தள்ளுபடி கேட்டால் பலர் கோபிப்பார்கள். சேலத்தில் ஒரு புத்தகக்கடை முதலாளி ‘தள்ளுபடிக்காகப் புத்தகம் வாங்கறதுன்னா வெளியே போங்க’ என்று கோபமாகச் சொன்னார்.
அப்போது அவரிடம் நிதானமாக விளக்கினேன், ‘நீங்கள் தரும் 10% தள்ளுபடியை வைத்து நான் கோட்டை கட்டப்போவதில்லை, அந்தத் தொகையில் இன்னும் சில நூல்களைதான் வாங்குவேன். அது உங்களுக்குத் தெரியாதா?’
‘இருந்தாலும்…’
‘ஐயா, உங்களுக்கு ஒரு புத்தகத்துக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும், அதில் ஒரு பகுதியை வாசகனுடைய உரிமையாக எண்ணிக் கேட்கிறேன். உங்களால் அதைத் தர இயலாது என்றால் மறுத்துவிடுங்கள், கேட்கிறவர்கள்மீது கோபப்படாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் நூல் வாங்கிக்கொண்டு முழு விலையையும் தந்துவிட்டு வெளியேறினேன்.
நூல் தள்ளுபடிபற்றி என் நண்பர்கள் பலருக்கும் கோபமான கருத்துகள் உண்டு, ‘இப்படி சூப்பர் மார்க்கெட்டில் கேட்பீர்களா? அரிசிக்கடையில் கேட்பீர்களா?’ என்பார்கள்.
கேட்போம், சூப்பர் மார்க்கெட்டில் அநேகமாகத் தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை! அது வாடிக்கையாளரின் உரிமை, நல்ல லாப சதவிகிதம் உள்ள பதிப்பகத்துறையில் தமிழ் நூல்களுக்குமட்டும் தள்ளுபடி தரப்படாமலிருப்பது, வாசகர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமலிருப்பது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.
சொல்லப்போனால், ஒரு நூலின் மதிப்பு அதிலுள்ள காகிதம், அச்சுக்கூலி, வடிவமைப்புச்செலவுகள் போன்றவற்றை விஞ்சியது. அது தரும் அனுபவம், அறிவுக்கு விலைமதிப்பு கிடையாது. அதேசமயம், நூலை அச்சிட்டு விற்கிற ஒருவர் அதன் லாபத்தில் பயனாளருக்கும் பங்களிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பிழையும் இல்லை. உலகம்முழுக்க இதுதான் நடைமுறை, ஆங்கில நூல்கள் குறைந்தபட்சம் 10%ல் தொடங்கி, 50%, அதற்குமேலும் தள்ளுபடி தந்து விற்பனையாகின்றன. தமிழில்மட்டும்தான் 10%க்கே ‘எப்போ புத்தகத் திருவிழா வரும்’ என்று காத்திருக்கவேண்டியுள்ளது.
இதைச் சொன்னவுடன், பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோபித்துக்கொள்வார்கள். வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் வாசகர்களுக்கு எப்போதும் 10% தள்ளுபடி தருவது தங்களுக்குச் சிரமம் என்பார்கள். அதனை நான் ஏற்கிறேன், அதேசமயம், அது வாசகனின் பிரச்னை அல்ல, எதிர்பார்ப்பது அவன் உரிமை.
அது நிற்க, விவேகானந்தர் இல்லத்தில் (அதாவது, ராமகிருஷ்ணமடத்தின் நூல் விற்பனைக் கடைகளில்) பொதுவாக நூல்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இராது. ஆனாலும் நான் அவரிடம் தள்ளுபடி கேட்கக் காரணம், மறுநாள் அங்கே ஒரு கண்காட்சி தொடங்கவிருந்தது. அங்கே 20%வரை நூல்களுக்குத் தள்ளுபடி தருவதாக அறிவித்திருந்தார்கள்.
ஆகவே, ஒருநாள் முன்பாக வாங்கும் எனக்கும் அந்தப் பலனைத் தர இயலுமா என்று அவரிடம் கேட்டேன். சட்டப்படி இந்த வாதம் செல்லாது, எனினும், கேட்பதில் பிழையில்லையே.
அந்த நூல் விற்பனையாளர் கோபப்படவில்லை. ‘நாளை இந்த நூல்களுக்குத் தள்ளுபடி உண்டு. ஆனால் இன்றைக்குத் தர இயலாது, எனக்கு அதற்கு உரிமை இல்லை’ என்று அமைதியாக விளக்கினார். நான் ஏற்றுக்கொண்டேன்.
பில் போடுமுன், ‘750 ரூபாய்க்கு நூல் வாங்கிய ஒருவருக்கு எந்தச் சலுகையும் தர இயலாமலிருப்பது எனக்கு உறுத்துகிறது, இந்த நூல்களை நீங்கள் நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்’ என்றார்.
‘இல்லை, நான் வெளியூர், இன்று இரவு ரயிலில் பெங்களூரு செல்கிறேன்’ என்றேன்.
அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘வேறு வழியில்லை, நீங்கள் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும்’ என்றார் வருத்தத்துடன்.
‘புரிகிறது, பரவாயில்லை’ என்றேன். ‘நீங்கள் முழுத்தொகைக்கும் பில் போடுங்கள்.’
அவர் பில் எழுதினார், ஆனால் அவரது கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன. எழுந்து நின்றார். அங்குமிங்கும் ஏதோ தேடினார். அவரது தவிப்பு எனக்கு விநோதமாகத் தோன்றியது.
நிறைவாக அவர், ‘என்னால் இயன்றது, இந்தப் பழைய பத்திரிகைகள் சிலவற்றை உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றார்.
அந்தப் பழைய பத்திரிகைகளின் மொத்த விலைமதிப்பு இருபது ரூபாய்தான். ஆனால், அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மாலைப்பொழுதை நிரம்ப இனிமையாக்கிவிட்டது!
***
என். சொக்கன் …
07 02 2016
1 | GiRa ஜிரா
February 7, 2016 at 12:32 pm
கேளுங்கள் தரப்படும் என்பது எவ்வளவு உண்மை. சமீபத்தில் இது போலக் கேட்டுக் கிடைத்த அனுபவம் எனக்குமுண்டு.