மாம்பழச் சண்டை (சிறுவர்கதை)
Posted March 21, 2016
on:- In: Kids | Short Story
- 3 Comments
ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது.
ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்!
அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது.
ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’
‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வரவில்லை!
‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’
‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது.
சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள்.
இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள்.
சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது.
‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன்முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது.
‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’
‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.
‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய்.
‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.
‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’
இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை.
ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார்.
கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன.
அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா!’
***
என். சொக்கன் …
21 03 2016
3 Responses to "மாம்பழச் சண்டை (சிறுவர்கதை)"

[…] ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது. ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்! அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது. ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக் கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’ ‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வர வில்லை! ‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’ ‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது. சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள். இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள். சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது. ‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன் முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது. ‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’ ‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய். ‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய். ‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய். ‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’ இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை. ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார். கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன. அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா – —————————— *** என். சொக்கன் …https://nchokkan.wordpress.com/2016/03/21/mngostry/ […]


[…] ***என். சொக்கன் …/nchokkan.wordpress.com/2016/03/21/mngostry/ […]

1 | nparamasivam1951
March 21, 2016 at 9:28 pm
ஏதோ ஒன்றில் ராஜாவாக இருந்தால் சரி.