Archive for March 23rd, 2016
ஏ எழுபத்து நாலே
Posted March 23, 2016
on:சிறுவயதில் ஹிந்தி பிரசார சபா தேர்வுகளுக்காகப் படித்தபோது, அந்தப் பாடங்களில் ‘99ன் சுழல்’ என்று ஒரு கதை வந்தது. குத்துமதிப்பாக நினைவில் உள்ளதைச் சொல்கிறேன்.
ஓர் ஏழை, நிம்மதியாக இருப்பான், அதைப்பார்த்து ஒரு பணக்காரன் பொறாமைப்படுவான், அவன் நிம்மதியைக் கெடுப்பதற்காக, 99 தங்கக்காசுகள் கொண்ட ஒரு மூட்டையை அவன் வீட்டில் போட்டுவிடுவான்.
அவ்வளவுதான், கையில் ஏதும் இல்லாதபோது நிம்மதியாக இருந்த அந்த ஏழை, ’எனக்கு ஏன் 99 தங்கக்காசுகள் கிடைக்கவேண்டும்? அது நூறாக இருந்திருக்கக்கூடாதா?’ என்று தவித்துத் திண்டாடுவான், அவனுடைய நிம்மதி கெடும்.
கிட்டத்தட்ட அதுபோன்ற நிலைதான் எனக்கு.
சுமார் ஓராண்டு முன்பு நான் 95 கிலோ எடை இருந்தேன், மிக விரைவில் செஞ்சுரி போட்டுவிட உத்தேசித்திருந்தேன்.
நண்பர்களின் நல்லெண்ணமும் எப்பிறவியிலோ செய்த நல்லூழும் என்னைச் சரிவிகித உணவுகளின்பக்கம் திருப்பியது, தினசரி நடையைச் சரிசெய்தேன், காய்கறிகளை அதிகரித்து, மாவுச்சத்தைக் குறைத்தேன், எடை குறையத் தொடங்கினேன்.
என்னுடைய இலக்கு 74 கிலோ, சிரிக்காதீர்கள், 95லிருந்து 74 என்பது கஷ்டம் என்பது தெரியும், ஆனால், என் உயரத்துக்கு அதுதான் சரியான எடை. ஆகவே, அந்த இலக்கை எப்படியாவது எட்டிவிடவேண்டும் என்று எண்ணினேன். இழுத்துப்பிடித்து 76 கிலோவரை வந்துவிட்டேன்.
அதன்பிறகு? ம்ஹூம்! எவ்வளவு முயன்றபோதும் எடை சிறிதும் குறையவில்லை.
கடந்த 4 மாதங்களாக, என் எடை 76லிருந்து 78க்குள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. என்ன பாடுபட்டாலும் 76க்குக் குறைவதில்லை, 78க்குமேலே செல்வதும் இல்லை.
என் நண்பர்கள், ‘இதுதான் உன்னுடைய வரம்பு, அதைதான் உன் உடல் சொல்கிறது, இதற்குமேல் குறைக்க முயற்சி செய்யாதே’ என்கிறார்கள்.
ஆரம்பத்தில் நான் அவர்களை நம்பவில்லை. ஆனால் இப்போது, நான் கனவுகண்ட 74 கிலோ கிடைக்கும் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் குறைகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது.
2 கிலோ ஒரு பெரிய மேட்டரா? 19 கிலோ குறைந்தேனே என்று என்னால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. இலக்கைத் தொட இயலவில்லையே என்று மிகவும் வேதனையாயிருக்கிறது.
74ஐ ஒரே ஒருமுறை பார்த்துவிட்டால் போதும், அதன்பிறகு 80கிலோகூட எனக்கு ஓகே, இத்தனை உண்மையாகச் சிரமப்பட்டபிறகும் அந்த 74ஐத் தொட இயலவில்லை என்ற தோல்வி எரிச்சலூட்டுகிறது. இத்தனைக்கும், 95 கிலோவில் நான் (மனத்தளவில்) நிம்மதியாகவே இருந்தேன்!
ஆனாலும், விடுவதாக இல்லை, ஏ கூப்பிடுதூரத்திலிருக்கும் எழுபத்து நாலே, வருகிறேன், இரு!
***
என். சொக்கன் …
23 03 2016