மனம் போன போக்கில்

Archive for April 2016

கும்பகோணத்தில் சிலமணிநேரங்கள் கிடைத்தன. சில கோயில்களைப் பார்த்துவர எண்ணினோம்.

அவ்வூரில் திரும்பின திசையெல்லாம் கோயில்கள். ஆகவே, இருக்கிற நேரத்தில் எந்தெந்தக் கோயில்களைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதற்காக நாங்களே ஒரு வடிகட்டியை அமைத்துக்கொண்டோம்: நால்வர்/ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள்.

இந்த அடிப்படையில் 4 கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்: கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில். இவற்றோடு ‘குடந்தைக் காரோணம்’ என்பது காசிவிஸ்வநாதர் கோயிலாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுவதால், ஐந்தாவதாக அக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.

முதலில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். இக்கோயில்களின் பெயரைச்சொல்லி, ‘இங்கெல்லாம் அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் இங்கேயே திரும்ப எவ்வளவு கேட்கிறீர்கள்?’ என்றோம். இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.

கிலோமீட்டர் கணக்குப்பார்த்தால், கோயில்களுக்கிடையே உள்ள தொலைவு குறைவுதான். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று திரும்பும்வரை ஆங்காங்கே காத்திருக்கவேண்டுமல்லவா. அதற்குதான் இத்தொகை.

அவர் எங்களிடம் முன்பணம் எதுவும் கேட்கவில்லை. முதல் கோயில் வாசலில் நிறுத்தி, ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார்.

‘உங்க நம்பர் கொடுங்க’ என்றேன்.

‘அதெல்லாம் வேணாம் இங்கேயேதான் இருப்பேன்!’ என்றார்.

எனக்கு வியப்பு தாங்கவில்லை. என் நம்பரைக்கூட வாங்கிக்கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே. நான் வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வார்? (சிரிக்காதீர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்த, நிறைய ஏமாந்தவனுக்கு இப்படிதான் தோன்றும் ;))))

நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் செல்லச்செல்ல, அதாவது, அவருக்கு நாங்கள் தரவேண்டிய தொகையின் விகித அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய Risk Potential அதிகரிக்க அதிகரிக்க, என்னுடைய ஆச்சர்யமும் அதிகரித்தது.

ஆனால், அவர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பொறுமையாக ஒவ்வொரு கோயில் வாசலிலும் எங்களுக்காகக் காத்திருந்தார்.

காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மகாமகக்குளம். இப்போது மகாமகம் இல்லை என்பதால் அங்கே இறங்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். அனுமதித்தார்கள். இறங்கிக் கால்நனைத்துத் திரும்பினோம். ‘குளம் திறந்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, குழந்தைகளையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே’ என்று வருந்தினோம்.

நிறைவாக, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தோம். அவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து நன்றிசொன்னோம். ‘சாயந்திரம் 7:10 மணிக்கு பஸ் ஸ்டேண்ட் போகணும், வருவீங்களா?’ என்றோம்.

‘வர்றேன்’ என்றார்.

‘உங்க நம்பர் கொடுங்க, 7 மணிக்குக் கூப்பிடறேன்!’

‘அதெல்லாம் வேண்டாம், கரெக்டா வந்துடுவேன்’ என்று கிளம்பிச்சென்றார்.

சொன்னபடி 7:10க்கு வந்தார். ஏறி உட்கார்ந்தோம், ‘எத்தனை மணிக்கு பஸ்?’ என்றார்.

‘7:40’ என்றேன்.

வண்டியைக் கிளப்பினார். நாங்கள் எங்களுக்குள் அரட்டையடித்துக்கொண்டிருந்ததால், அவர் சென்ற வழியைக் கவனிக்கவில்லை.

திடீரென்று வண்டியை நிறுத்தி, ‘இறங்குங்க’ என்றார்.

அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டதா என்று வியப்புடன் வெளியே பார்த்தால், மகாமகக்குளம்.

அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன், ’குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒருவாட்டி தண்ணியில இறங்கிட்டு வரட்டும்’ என்றார்.

முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார், அதனால்தான் இந்தவழியாக வந்திருக்கிறார் என்று புரிந்தது. ‘ஆனா, பஸ்…’

‘அதெல்லாம் பிடிச்சுடலாம், குழந்தைங்களை இறங்கச்சொல்லுங்க!’ என்றார் நம்பிக்கையோடு.

சுமார் ஐந்து நிமிடம்தான் அந்தக் குளக்கரையில் இருந்தோம், நிலா வெளிச்சமும் குழல்விளக்குகளின் ‘சிவசிவா’வும் நீரில் நடனமாட, இந்த 4 நாள் பயணத்தில் எங்கள் குழந்தைகள் மிக அதிகம் ரசித்த விநாடிகள் அவைதாம்.

மனமே இல்லாமல் ஓடிவந்து ஆட்டோவில் அமர்ந்தோம். 7:32க்குப் பேருந்து நிலையம் வந்துவிட்டோம்!

கூடுதல் தொலைவு வந்ததற்காக, அவருக்குப் பேசிய தொகைக்குமேல் கொடுக்க விரும்பினேன், மறுத்துவிட்டார், மீதி சில்லறையைக் கவனமாக எடுத்துக்கொடுத்தார்.

‘குழந்தைங்க குளத்தை ரொம்ப ரசிச்சாங்க, நன்றி’ என்றேன்.

‘எங்க ஊர்லேர்ந்து கிளம்பும்போது எல்லாரும் சந்தோஷமாப் போகணும், அதான் சார் எங்களுக்குப் புண்ணியம்’ என்றார். ‘நான் வரட்டுமா?’

‘இப்பவாச்சும் உங்க நம்பர் கொடுங்களேன்’ என்றேன்.

‘ஃபோன் பாக்கெட்லதான் இருக்கு சார், நீங்க கூப்பிட்டா எடுத்துப் பேசத்தெரியாது’ என்றார். ’பார்ப்போம் சார்!’ என்று கிளம்பிச்சென்றுவிட்டார்!

***

என். சொக்கன் …

25 04 2016

ஐடி நிறுவனங்களின் ‘திடீர் டிஸ்மிஸ்’ கலாசாரத்தால் பாதிக்கப்பட்டோரை எண்ணி வருந்தி இணையத்தில் பல பதிவுகளைப்பார்க்கிறேன். அதுபற்றிச் சில சொற்கள்.

என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரைத் தோல்வியாளர்களாக நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். அநேகமாக எல்லாருக்கும் இப்படிதான் அமைந்திருக்கும் என்பது என் ஊகம்.

ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த ஒருவனுக்கு (மிக நல்ல நண்பன்!) சுத்தமாகப் படிப்பே வரவில்லை. ஆனா ஆவன்னாகூட எழுதவரவில்லை என்பதால் அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தினார்கள். பட்டறையொன்றில் சேர்த்துவிட்டார்கள்.

ஆனா ஆவன்னா எழுதவராத ஒருவன் இருக்க இயலுமா என்று ரொம்ப வியந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அழுக்குச்சட்டையோடு வேலைக்குச்செல்கிற அவன் நிலைமை மிக மோசம் என்று நினைத்தேன். (காரணம், எனக்கு ஆனா ஆவன்னா எழுதவந்ததுதான்!)

பள்ளியை முடிக்கும்நேரத்தில் மருத்துவம் சேர விரும்பினேன், என் மதிப்பெண் குறைவு, ஆகவே, இடம் கிடைக்கவில்லை. சுற்றியுள்ள அனைவருடைய பார்வையும் என்னைக் கூசவைத்தது, முடங்கிப்போனேன்.

அதன்பிறகு, மனத்தைத் தேற்றிக்கொண்டு பொறியியல் சேரத் தீர்மானித்தேன். அந்தக் கணமே என் மனநிலை மாறியது, என்னைச்சுற்றி நல்ல மதிப்பெண் எடுக்காதவர்கள், அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களைத் தோல்வியடைந்தவர்கள் என்று கருதினேன், அவர்களுக்காக வருந்தினேன். அந்த வயதுக்குரிய முதிர்ச்சிநிலையில், அதாவது, முதிர்ச்சியற்றநிலையில் கொஞ்சம் கர்வப்பட்டிருக்கவும்கூடும். அப்போது என்னுடன் படித்து MBBS சேர்ந்த சில நண்பர்கள் என்னை அவ்வாறே எண்ணியிருப்பர்.

கல்லூரியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரி கதை, நான் நினைத்த துறை (வேறென்ன, கணினித்துறைதான்) எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தோல்வியடைந்தவனாகக் கருதிக்கொண்டேன்.

அதன்பிறகு, கிடைத்ததைப் படித்தேன், கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை கிடைத்தது. ஆகவே, அவ்வாறு கிடைக்காதவர்கள், அதனால் சிறு வேலைகளில் சேர்ந்தவர்கள், விருப்பமில்லாமல் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், கல்லூரியை முடித்தபிறகும் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களைத் தோல்வியடைந்தவர்களாக நினைத்தேன்.

வேலைக்குச் சேர்ந்தபிறகு, என் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது. என் நெருங்கிய நண்பனொருவனுக்கு வேலை போனது. அவன் அறையில் உட்கார்ந்து பிழியப்பிழிய அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போது, அவனைத் தோல்வியடைந்தவனாகக் கருதினேன்.

அதன்பிறகு, மூன்று நிறுவனங்களில் என்னுடன் வேலைபார்க்கிற சிலர் (இவர்களில் ஓரிருவர் எனக்குக்கீழேயே வேலைபார்த்தவர்கள்) வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிலருக்குத் திறமைக்குறைவு, வேறு சிலர் தங்கள் பொறுப்பில் பொருந்தவில்லை, காரணங்கள் பல, ஆனால் திடுமென்று செய்த வேலையிலிருந்து அனுப்பப்பட்டால், பிறர்பார்வையில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகதானே கருதப்படுவார்கள்?

இப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்து, ‘என் சம்பளத்தையாவது குறைச்சுக்கோங்க, வெளியே அனுப்பிடாதீங்க’ என்று கெஞ்சிய நிகழ்வுண்டு. என்னைவிட மூத்த ஒருவர் அப்படிக் கேட்கும்போது, அதற்கு நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணரும்போது உண்டாகும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.

இப்படி இன்னும் ஏகப்பட்ட அனுபவங்கள், நாம் (சற்றே) உயர்ந்தநிலையில் இருப்பதான பாவனையில் பலரைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடுகிறோம், நமக்குமேலே இருக்கிறவர்களும் நம்மை அப்படிதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால் இப்போது, ஆனா ஆவன்னா வராத என் நண்பனில் ஆரம்பித்து, சிறு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், சிறு வேலைக்குப் போனவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, நான் (ஒருகணமேனும்) தோல்வியாளர்களாகக் கருதிய பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் எல்லாரும் மிக நன்றாக, மிக மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள், அவர்களைத் தோல்வியாளர்களாக நானோ பிறரோ எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதனால், ‘திடீர் டிஸ்மிஸ்’கள் நியாயமாகிவிடாது. அது தனியே பேசவேண்டிய ஒரு விஷயம். நான் சொல்லவருவது, சற்றே விலகி நின்று பார்க்கும்போது, இதுபோன்ற ‘தோல்வி’கள் உண்மையில் சிறு விலகல்களாகமட்டுமே அமைகின்றன, அனைத்தையுமே வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சறுக்கல்களாக எண்ணிக்கொண்டு வாடியிருப்பது புத்திசாலித்தனமாகாது.

Life is unfair, ஏற்றுக்கொண்டு முன்னே போகவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …

17 04 2016

நண்பர் நிக்கோலஸ் லூயிஸ் அனுப்பிய கேள்வி:

“இந்த இணைப்பில் இருக்கும் பாடல்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இவற்றின் பொருள் தெரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?”

அவர் தந்திருந்த இணைப்பு, கம்பரின் ஏர் எழுபது. ஆனால், கேள்வி பொதுவானது என்பதாலும் பலருக்கும் இந்தக் கேள்வி இருப்பதாலும், அவருக்குத் தந்த பதிலை இங்கே எழுதுகிறேன்.

பழந்தமிழ் நூல்களை வாசிப்பது சிரமம் என்பது வெறும் மனத்தடைதான். நிச்சயம் தாண்டிவரக்கூடியது, கொஞ்சம் பயிற்சி தேவை, அவ்வளவுதான்.

குறுந்தொகையையோ தொல்காப்பியத்தையோ ஆழ்வாரையோ நாலடியாரையோ வாசிக்கும்போது நமக்குப் புரியாமலிருக்கக் காரணம் அந்தக் கவிஞர்கள் அல்ல, நாம்தான். தெலுங்குப்பாடலொன்றைக் கேட்கும்போது எனக்கு ஒன்றும் புரியாது, அதற்காக நான் தெலுங்குக் கவிஞரைக் குறைசொல்ல ஏலாதல்லவா? அதுபோல, இந்தத் தமிழ்ப்பாடல்கள் நமக்குப் புரியவில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்: நாம் இழந்த சொற்கள், செய்யுள் இலக்கணம்.

தமிழில் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்கள் ஆயிரம் என்றால், பயன்படுத்தாமல் இழந்த சொற்கள் பல்லாயிரம். அவை நமக்கு எவ்விதத்திலும் தினசரிவாழ்க்கையில் பயன்படப்போவதில்லை என்பதால், நாம் அவற்றைத் திரும்பப்பெறப்போவதும் இல்லை. செய்யுள் படிக்கும்போதுதான் இந்தச் சிரமத்தை உணர்வோம்.

செய்யுள்களை எழுதுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு, அவற்றுக்கு இணங்கி, வாக்கிய அமைப்புகள் மாறும், இவையும் நிஜவாழ்க்கையில் (அதாவது, பேச்சுவழக்கில்) வராது. உதாரணமாக, ‘நிற்க அதற்குத் தக’ என்று ஒருபோதும் நாம் பேசமாட்டோம், ‘அதற்குத் தக நிற்க’ என்றுதான் சொல்வோம், இங்கே ‘தக’ என்ற சொல்லுக்கு உங்களுக்குப் பொருள் புரிந்தாலும்கூட, ‘நிற்க அதற்குத் தக’ என்பதை மாற்றி ‘அதற்குத் தக நிற்க’ என்று புரிந்துகொள்ளும் நுட்பம் தெரியாவிட்டால், திகைக்கவேண்டியதுதான்.

புலவர்கள் ஏன் அப்படி எழுதுகிறார்கள்? நமக்குப் புரிகிறாற்போல் எழுதக்கூடாதா?

சந்தத்துக்கு/ ஓசைக்கு/ யாப்புக்கு எழுதுவதில் பல சிரமங்கள் உண்டு. அவற்றை விளக்குவது நம் நோக்கமில்லை. சினிமாப்பாட்டில் ‘ஆடுங்கடா என்னச்சுத்தி’ என்று ஒருவர் பாடினால், ‘என்னச்சுத்தி ஆடுங்கடா’ என்று புரிந்துகொண்டு ரசிக்கிறோமல்லவா? அதையே இங்கேயும் செய்தால் போதும்!

இந்த இரண்டு பிரச்னைகளையும் கடந்தால் பழந்தமிழ்ப்பாடல்கள் புரியும், சும்மா, சாதாரணமாகப் புரியாது, குமுதம், விகடன் படிப்பதுபோல் புரியும், தெள்ளத்தெளிவான நீரோடைபோல் புரியும், இதற்கு நான் நேரடிச் சாட்சி: ‘ஒண்ணுமே புரியலை, இதென்ன தெலுங்கா, கன்னடமா?’விலிருந்து, ஐந்து ஆண்டுகளில், ‘உரையெல்லாம் எதுக்கு? பாட்டுல 90% நேரடியாப் புரியுதே!’ என்ற நிலைக்கு நான் வந்துள்ளேன், இதைப் பெருமையாகச் சொல்லவில்லை, நெகிழ்ச்சியோடு சொல்கிறேன், நம் பழந்தமிழ் நூல்களில் எந்தப்பக்கம் தொட்டாலும் பேரின்பம், அதை நேரடியாக ருசிக்கிற பரவசம் சாதாரணமானதல்ல.

உணர்ச்சிவயப்படல் இருக்கட்டும், இப்போது எனக்கு எந்தப் பழம்பாடலும் புரியவில்லை. இதை நான் எளிதாக வாசிக்க என்ன பயிற்சி தேவை?

உணவே மருந்து என்பதுபோல, பாடலேதான் பயிற்சி, உங்களுக்குப்பிடித்த பழம்பாடல்களை நல்ல உரையுடன் வாசிக்கத்தொடங்குங்கள், அந்தப் பயிற்சி போதும்.

அதாவது, அகராதியைப்படித்து இழந்த சொற்களைத் திரும்பப் பெற இயலாது, ஆனால் பாடல்களைப் படிக்கும்போது, ஒவ்வொன்றாக விளங்கும், ஆரம்பத்தில் 20 சொல் கொண்ட பாடலில் 18 சொல் நமக்குப் புரியாது. உரையைப் பார்த்தால்தான் புரியும். ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக, இந்தப் பதினெட்டு என்ற எண் பதினாறு, பத்து, எட்டு, ஆறு, நான்கு, இரண்டு என்று குறையும், அதற்குமேல் குறையாது 🙂

அதேபோல், புலவர்கள் பயன்படுத்தும் வார்த்தைக்கட்டுகளும் நமக்குப் பழக ஆரம்பித்துவிடும். இந்தச் சொல்லை அங்கே வைத்து இதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என்று உரையாசிரியர்கள் சொல்லித்தருவார்கள்.

ஆக, பழந்தமிழ் நூல்களை அக்கறையோடு தொடர்ந்து வாசித்துவந்தால், பாடலில் 90% தானே புரியும், உரைநூல்களைச் சார்ந்திருக்கும் நிலை கொஞ்சம்கொஞ்சமாக மாறும். எந்தக் கோயிலுக்குப்போனாலும் கல்வெட்டுகளில் உள்ள ஆழ்வார், நால்வர் பாடல்களை வாசித்து மனத்துக்குள் பொருள்சொல்ல ஆரம்பிப்பீர்கள், கண்ணில் படுகிற எல்லாரிடமும் ‘இந்தப் பாட்டு என்ன அழகு பார்த்தியா?’ என்று நெகிழ்வீர்கள், இதெல்லாம் நடந்தே தீரும், சந்தேகமில்லை!

சரி, எங்கே ஆரம்பிக்கலாம்?

ஒவ்வொருவருக்கும் ஆரம்பம் மாறுபடும், நான் குறுந்தொகையில் ஆரம்பித்தேன், நீங்கள் திருக்குறளில் ஆரம்பிக்கலாம், சிலப்பதிகாரத்தில் ஆரம்பிக்கலாம், கம்பன், பெரியாழ்வார், பெரியபுராணம், தேவாரம், ஔவையார்… எங்கே வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அடுத்து எங்கே செல்வது என்று உங்களுக்கே புரியும், ஐந்தாறு வருடங்கள் வேறெந்தப்பக்கமும் திரும்பாமல் முனைந்தால், உரைநாடா உத்தம வாசகராகலாம்.

ஐந்தாறு வருடமா என்று திகைக்கிறவர்கள், உரைநூல்களைச் சார்ந்தே வாசிக்கலாம், அல்லது, புதுக்கவிதைகள் படிக்கலாம், இதில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம், எப்படியோ தமிழைப் படித்தால் சரி!

***

என். சொக்கன் …

13 04 2016

கடந்த 271 நாளாக தினமணி டாட் காமில் நான் எழுதிவந்த ‘தினம் ஒரு திருவாசகம்’ தொடர் நிறைவடைந்தது. முன்செலுத்திய குருவருளுக்கும் திருவருளுக்கும் நன்றி! வாசித்து ஆதரவுதந்த நண்பர்களுக்கு என் அன்பு.
 
‘மாணிக்கவாசகர்’ என்பது காரணப்பெயர். தினந்தோறும் அவரது மாணிக்கச்சொற்களில் தோய்கிற வாய்ப்பைத் தந்த தினமணி டாட் காம் ஆசிரியர் பார்த்தசாரதி அவர்களுக்குப் பெருவணக்கம்.
 
இத்தொடரில் திருவாசகத்தின் முழு உரை கிடைக்காது, சுமார் 60% பாடல்கள்தான் இடம்பெற்றுள்ளன. வாய்ப்பிருக்கும்போது மீதமுள்ளவற்றை எழுதி நூலாக்க விருப்பம்.
 
ஆச்சர்யமான விஷயம், பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியங்களைப்பற்றிய நூல்களை வெளியிட யாரும் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் இந்தத் தொடரை வெளியிடுவதற்கு இதுவரை மூன்று பதிப்பாளர்கள் என்னைக் கேட்டுள்ளார்கள். மீதமுள்ள பகுதிகளை எழுதியபிறகு தொடர்புகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
 
அதுவரை, ‘தினம் ஒரு திருவாசகம்’ அனைத்து அத்தியாயங்களையும் இங்கே காணலாம்:
 

வைரமுத்து தன் வீட்டருகே உள்ள ஒரு பூங்காவில் கவிதை எழுதுவதாக அடிக்கடி சொல்வார். அந்தப் பூங்காவிலுள்ள மரம், இலை, செடிகொடிகளை விளித்து ஒரு கவிதைகூட எழுதியதாக நினைவு.

 

ஆனால், எங்கள் வாத்தியார் பா. ராகவன் தீவிர கவிதா-விரோதி. ‘நடுரோட்டில் உட்கார்ந்தாலும் எழுதவரவேண்டும், இல்லாவிட்டால் நீ எழுத லாயக்கில்லை’ என்று இரக்கமின்றி சொல்லிவிடுவார். ஆகவே, நாங்களும் கண்ட இடத்தில் உட்கார்ந்து எழுதப் பழகிவிட்டோம்.

 

இன்று மதியம், ஒரு வேலையாக நகர்மையத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது, சுமார் இரண்டரைமணிநேரங்கள் தின்னக்கிடைத்தன. பக்கத்தில்தான் கப்பன்பார்க், நாமும் இங்கே உட்கார்ந்து ஏதாவது காவியம் எழுதிப்பார்ப்போம் என்று தோன்றியது, நுழைந்தேன்.

 

என்னுடைய அதிர்ஷ்டம், யாரோ சில புண்ணியவான்கள் கப்பன்பார்க்குக்குள் ஷாமியானா அமைத்து அதன்கீழ் நாற்காலி, மேஜையெல்லாம் போட்டிருந்தார்கள். அங்கே ஒரு பயலைக்காணோம், சட்டென்று லாப்டாப்பை விரித்து அமர்ந்துவிட்டேன்.

 

பூங்காவில் எழுதும் கவிஞர்களின் விவரக்குறிப்புகள் வேறுவிதமானவை. அவர்களுக்குக் கோடுபோட்ட நோட்டும் பென்சிலும் மரத்தடிப் புல்வெளியும் கன்னத்தில் வைக்க ஆள்காட்டிவிரலும் இருக்கும். ஆனால் நானோ, நாற்காலி, மேஜை, லாப்டாப் என்று அலுவலகம்போல் எழுத அமர்ந்தேன்.

 

எனினும், பூங்கா பூங்காதானே, ஆகவே, அடியேனுக்கும் காவியம் வரும் என்று நம்பினேன்.

 

என்னுடைய நன்னேரம், இன்று பெங்களூரில் வெய்யில் குறைவு. துளி காற்று வீசவில்லை, மரங்களோ இலைகளோ சிறிதும் அசையவில்லை, என்றாலும், இதமான வானிலை. சுற்றியுள்ளோரை ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்தபடி சுறுசுறுப்பாக எழுத இயன்றது.

 

முதலில், ஒரு குழந்தை வந்தது, தத்தித்தத்தி அது நடக்கும் அழகை அதன் பெற்றோர் பல கோணங்களிலிருந்து புகைப்படம் எடுத்தவண்ணமிருந்தனர்.

 

சிறிதுநேரம் கழித்து, மூன்று வெளிநாட்டினர் வந்தார்கள். என்னருகே இருந்த மேஜையில் அமர்ந்து அவர்கள் ஆசுவாசம் கொள்ள, சிலர் அவர்களை அணுகி, ‘உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்றார்கள். அவர்களும் திடீர்ப் பிரபலத்தால் புளகாங்கிதமடைந்து விதவிதமாக போஸ் கொடுத்தார்கள்.

 

அப்புறம் இரு சிறுவர்கள் வந்தார்கள், ‘அங்கிள், கேட் எங்கே இருக்கு?’ என்றார்கள்.

 

‘தம்பி, இது கப்பன்பூங்காவின் மையம், சுற்றி மூன்று கேட்கள் உண்டு, மூன்றும் பெங்களூரின் மூன்று வெவ்வேறு இடங்களில் திறக்கிறவை, இவற்றில் உனக்கு எது வேண்டும்?’ என்றேன்.

 

‘எது பக்கத்தில இருக்கோ அது!’ என்றான் ஒரு சிறுவன்.

 

‘அடேய், வாழ்க்கை அத்துணை எளிதல்ல’ என்று சொல்லும் தவிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நீ போய்ப் பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிகிட்டு வா, அப்புறம் வழி சொல்றேன்’ என்றேன்.

 

சில நிமிடங்களில், அந்தச் சிறுவர்களின் தந்தை வந்தார், ‘ஏதோ பொம்மை ட்ரெயின் இருக்காமே, அது எங்கே?’ என்றார். ‘அதோ அங்கே’ என்றதும் அவர்கள் மூவரும் ஒரு சிறு ரயில்போல அதைநோக்கி விரைந்தார்கள்.

 

அதன்பிறகு, மூன்று பெண்கள் ஒரு கிடாருடன் வந்தார்கள். ‘இளையநிலா பொழிகிறது’ என்று அசந்தர்ப்பமாக வாசிக்கப்போகிறார்களோ என்று நினைத்தேன். அவர்கள் ஏதோ பேசிச்சிரித்தபடி கடந்துசென்றுவிட்டார்கள்.

 

அதன்பிறகுதான் கவனித்தேன், அவர்களில் மையத்திலிருந்தவருடைய தோளில் இருந்தது கிடாரே அல்ல, கிடார்வடிவத்தில் ஒரு பலூன், அதில் இணையத்தில் நிறைய தென்படும் முட்டைக்கண் மஞ்சள் பொம்மையொன்றின் உருவம் வரையப்பட்டிருந்தது. அதைத் தோளில் சாய்த்தபடி அவர் நடந்துசென்றார்.

 

எதிரே வாகனமில்லாத தார்ச்சாலை. ஒரு தம்பதி அதன்நடுவே அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்குச் சற்றுத்தள்ளி ஒருவர் புல்வெளியில் சாய்ந்து படுத்தபடி கன்னட நாவலொன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அவரருகே ஏழெட்டுப்பேர் உட்கார்ந்தநிலையில் ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ்’ விளையாடுவதுபோல் வட்டமாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

இப்படியாக, இரண்டரை மணிநேரம் ஓடியதே தெரியவில்லை!

 

இத்தனையையும் வேடிக்கை பார்த்தாய், சரி, ஏதாவது எழுதினாயா என்கிறீர்களா?

 

ஒரு குறுநாவலைத் தொடங்கி நான்கரை அத்தியாயங்கள் எழுதினேன், மீதமிருப்பதையும் (வீட்டில்) எழுதிவிட்டுப் பிரசுரிக்கிறேன்!

***

என். சொக்கன் …

09 04 2016

பதிப்பாளர்களைப்பற்றிய புலம்பல்கள் பலவற்றை எழுதியாயிற்று. ஒரு மாற்றத்துக்கு, இது பாராட்டுப்பதிவு.

 

நண்பர் ரவிசங்கர் மூலமாக, டெல்லியைச் சேர்ந்த ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தினரின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் எனக்கு இரண்டு நூல்களை மொழிபெயர்க்கத் தந்திருந்தார்கள். அதற்காக நான் முன்வைத்த கட்டணத்தையும் ஏற்றுக்கொண்டார்கள், உடனே மொழிபெயர்த்துத் தந்துவிட்டேன்.

 

 

அந்த நேரத்தில், எனக்கு வேறு சில வேலைகள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு Invoice அனுப்பவில்லை. நண்பர் சிபாரிசு செய்த நிறுவனம் என்பதால், என்ன அவசரம், அப்புறம் அனுப்பிக்கொள்ளலாம் என்று வாளாவிருந்துவிட்டேன்.

 

 

பத்து நாள் கழித்து, அந்நிறுவனத்தின் தலைவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸ் அனுப்பலை’ என்றார்.

 

 

‘அனுப்பிடறேன் சார், கொஞ்சம் வேலை ஜாஸ்தி, மன்னிக்கணும்’ என்றேன்.

 

 

‘நன்றி’ என்று வைத்துவிட்டார்.

 

 

ஒரு வாரம் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, இன்வாய்ஸ் இன்னும் வரலையே’ என்றார்.

 

 

கூச்சத்துடன் மறுபடி மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். விரைவில் அனுப்பிவிடுவதாக உறுதியளித்தேன்.

 

 

இரண்டுநாள் கழித்து, மீண்டும் அழைத்தார், ‘ஐயா, நீங்க இன்வாய்ஸை மெதுவா அனுப்புங்க, அந்தத் தொகையைமட்டும் சரியாச் சொல்லுங்க, அடுத்தவாரம் என் மகன் பெங்களூரு வர்றான், அவன்கிட்ட காசைக் கொடுத்து அனுப்பிடறேன்’ என்றார்.

 

 

இந்தமுறை எனக்கு மிகவும் வெட்கமாகிவிட்டது. சட்டென்று அவருக்கு இன்வாய்ஸ் தயாரித்து அனுப்பினேன்.

 

 

மறுநாள், பைசா சுத்தமாக என் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது.

 

 

தொகை சிறியதுதான், ஆனால், எழுதியவனைத் துரத்திப்பிடித்துக் காசு தரும்வரை ஓயாத மனம் பெரியதல்லவா? அப்பெருமானார் வாழ்க!

 

***

என். சொக்கன் …

06 04 2016

மகள்கள் இருவருக்கும் பள்ளிப் புத்தகங்களின் விலைப்பட்டியல் வந்திருந்தது. இருவருக்கும் சேர்த்து ரூ 7200.

அநேகமாக ஒவ்வோராண்டும் நடக்கிற விஷயம்தான், ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசிக்கவைத்தது, ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள், நோட்டுகளா? அதிகமில்லையோ?

இதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது, பலரும் ‘இது ரொம்ப மலிவு’ என்றார்கள். பலர் ஒரு குழந்தைக்கே ஐயாயிரத்துக்குமேல் செலவழிப்பதாகச் சொன்னது மேலும் அதிர்ச்சியளித்தது.

ஒரு வகுப்புக்கு, மிஞ்சிப்போனால் ஐந்து பெரிய புத்தகங்கள், ஐந்தாறு சிறிய புத்தகங்கள், அனைத்தும் வண்ணமயமாக அச்சிட்டாலும் இவற்றின் மொத்த விலை ஆயிரத்தைநூறைத் தாண்டாது.

அடுத்து, நோட்டுகள், பலவிதங்களில் சுமார் இருபது நோட்டுகள், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் என்று வைத்தால் ஆயிரம் ரூபாய்.

மீதமுள்ளவை (அட்டைபோடும் காகிதம், ஸ்டிக்கர் லேபிள், எழுதுபொருள்கள், அனைத்தையும் வைக்கிற பை) ஓர் ஐநூறு. மொத்தம் மூவாயிரம் வருகிறது.

இங்கே நான் சொல்லியிருக்கும் கணக்கு அத்தனையும் ‘அதிகபட்சக்’கணக்குதான், வெளியே சந்தையில் இவற்றை வாங்கினால் நிச்சயம் இரண்டாயிரம் அல்லது அதற்குள் வாங்கிவிடலாம்.

ஆனால், பள்ளிகள் அதை அனுமதிப்பதில்லை. இதற்காகச் சில MBAக்களை வைத்து என்னென்னவோ திட்டம் தயாரிக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

காரணம், இந்த ஆண்டு 7200 ரூபாய் செலவழிப்பதற்குப் பதில், இந்தப் புத்தகங்களை வெளியே வாங்கிப்பார்த்தால் என்ன என்று நாங்கள் முயன்றபோதுதான் இதற்காகச் செய்யப்படும் தில்லுமுல்லுகள் எனக்குப் புரிந்தன:

1. அனைத்துப் புத்தகங்களையும் ஒரே பதிப்பாளரிடம் வாங்குவதில்லை, வெவ்வேறு பதிப்பாளர்களிடம் வாங்கினால், பெற்றோர் நாலு இடத்தில் தேடமாட்டார்கள்

2. சரி, எல்லாப் பதிப்பாளர் புத்தகங்களையும் விற்கிற கடைகளில் வாங்கினால்? அந்தக் கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில் இப்புத்தகங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்று சொல்லவைத்துவிடுகிறார்கள், இதையும் அனுபவப்பூர்வமாகப் பார்த்தோம்

3. இதை மீறி ஒருவன் போராடுகிறான் என்றால், புத்தகங்களின் பெயர்களைக் கடைசி விநாடிவரை சொல்வதில்லை, அப்புறம் எப்படித் தேடுவீங்க!

4. சரி, புத்தகம் தருகிற அன்று காலை பள்ளிக்குச் சென்று, புத்தகப் பெயர்களைப் பார்த்துக்கொண்டு, வேறு கடைகளில் ஆன்லைனிலோ நேரிலோ சென்று வாங்கினால்? அங்கேயும் ஓர் ‘இக்கு’ வைத்துவிடுகிறார்கள், புத்தகங்கள் ஒரே ஒரு நாள்தான் விநியோகிக்கப்படும், அவற்றை வெளியே வாங்க முயன்று தோற்றால், வருடம்முழுக்க உங்கள் குழந்தை புத்தகங்கள் இன்றிப் படிக்கவேண்டும், அந்த ஆபத்து சாத்தியத்துக்குப் பயந்து பெரும்பாலான பெற்றோர் பணிந்துவிடுவார்கள்

நாங்களும் அப்படிதான் பணிந்தோம், புத்தகங்களை வாங்கிவந்துவிட்டோம், மேலோட்டமாகப் புரட்டியபோது, அதிர்ச்சிகள் இன்னும் பெரிதாக இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்துக்கும் யானை விலை, அல்லது, டைனோசர் விலை. அவற்றின் அச்சுத்தரத்துக்கு இந்த விலையில் பாதிகூட ஆகாது, அநேகமாக 300% லாபத்தில் விற்பார்கள் என்று ஊகிக்கிறேன், அதில் 100% பள்ளிக்குச் செல்லுமாக இருக்கும்!

சில புத்தகங்கள் ‘சாணித்தாள்’ எனப்படும் மட்டமான காகிதத்தில் இருந்தன, அவற்றைப் பத்துமுறை புரட்டிப்பார்த்தால் கிழிந்துவிடும், விலைமட்டும் நூற்றைம்பது, இருநூறு.

எங்கள் இளைய மகளுக்கு ‘Wizard Of Oz’ பாடமாக உள்ளது, அதற்காக அவர்கள் தந்திருக்கும் புத்தகம் (சுருங்கிய வடிவம்) எண்பது ரூபாய், அதே புத்தகம் வெளியே இன்னும் நல்ல தரமான காகிதத்தில், முழு வடிவத்தில், அழகழகான படங்களுடன் கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கிறது.

இவர்கள் தருகிற (அதாவது, ‘விற்கிற’) நோட்டுப்புத்தகங்களில் விலை குறிப்பிடப்படுவதில்லை, புத்தகங்களின் விலையைக்கூட்டியபின், அதை மொத்த விலையிலிருந்து கழித்துக் கணக்கிட்டால், ஒரு நோட்டுப்புத்தகம் சுமார் 90 ரூபாய் ஆகிறது. சந்தனமரத்தைக் கூழாக்கி அச்சிடுகிறார்களோ என்னவோ!

’படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்’ என்பது பாரதி வாக்கு. படிப்பிப்பவன் பண்ணினால்?

***

என். சொக்கன் …

04 04 2016

சக ஊழியர் ஒருவருடைய தங்கைக்குச் சிறு சாலை விபத்து. திடீர் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றவர் இன்று வேலைக்குத் திரும்பினார். ‘எப்படி இருக்காங்க உங்க தங்கச்சி?’ என்று விசாரித்தேன்.

‘நல்லா இருக்கா சார், வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்துட்டோம்’ என்றார்.

‘என்ன பிரச்னை?’

’சிக்னல்ல ரோட்டைத் தாண்டும்போது ஒரு பைக் வந்து இடிச்சிடுச்சு!’

‘யார்மேல தப்பு?’

‘பைக் ஓட்டினவன்மேலதான்’ என்றார், ‘சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்திருக்கான்.’

‘அடடா, அப்புறம்?’

‘நல்லவேளை, சிக்னலைத் தாண்டினவனுக்குக் கொஞ்சமாவது புத்தி இருந்திருக்கு, சட்டுன்னு தப்பிச்சு ஓடிடாம, அவனே இவளை மருத்துவமனைக்குக் கூட்டிகிட்டுப்போயிருக்கான், சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைக் கட்டி, எங்களுக்கு விவரம் சொல்லி, நாங்க வர்றவரைக்கும் அங்கேயே இருந்து.. நல்லவன்தான்’ என்று சிரித்தார்.

’இப்ப ஒண்ணும் பிரச்னையில்லையே?’

‘ஒண்ணும் பிரச்னையில்லை சார், அவ நல்லாதான் இருக்கா’ என்றவர் ‘எங்கப்பாதான் கொஞ்சம் சொதப்பிட்டார்’ என்றார்.

‘ஏன்? என்னாச்சு?’

‘சிக்னலைத் தாண்டினது அவன் தப்புதானே? அப்ப சிகிச்சைக்கு அவன்தானே பணம் கொடுக்கணும்? நான் வர்றதுக்குள்ள இவரே வலியப்போய் அவனுக்கு மொத்தப் பணத்தையும் கொடுத்திருக்கார், பொழக்கத்தெரியாத ஆளு!’ என்று சலித்துக்கொண்டபோது, அந்தச் சிரிப்பில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்ததை ரசித்தேன்.

***

என். சொக்கன் …

01 04 2016


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2016
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930