Archive for April 9th, 2016
பூங்காவிலொருநாள்
Posted April 9, 2016
on:- In: Bangalore | Poetry
- 2 Comments
வைரமுத்து தன் வீட்டருகே உள்ள ஒரு பூங்காவில் கவிதை எழுதுவதாக அடிக்கடி சொல்வார். அந்தப் பூங்காவிலுள்ள மரம், இலை, செடிகொடிகளை விளித்து ஒரு கவிதைகூட எழுதியதாக நினைவு.
ஆனால், எங்கள் வாத்தியார் பா. ராகவன் தீவிர கவிதா-விரோதி. ‘நடுரோட்டில் உட்கார்ந்தாலும் எழுதவரவேண்டும், இல்லாவிட்டால் நீ எழுத லாயக்கில்லை’ என்று இரக்கமின்றி சொல்லிவிடுவார். ஆகவே, நாங்களும் கண்ட இடத்தில் உட்கார்ந்து எழுதப் பழகிவிட்டோம்.
இன்று மதியம், ஒரு வேலையாக நகர்மையத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது, சுமார் இரண்டரைமணிநேரங்கள் தின்னக்கிடைத்தன. பக்கத்தில்தான் கப்பன்பார்க், நாமும் இங்கே உட்கார்ந்து ஏதாவது காவியம் எழுதிப்பார்ப்போம் என்று தோன்றியது, நுழைந்தேன்.
என்னுடைய அதிர்ஷ்டம், யாரோ சில புண்ணியவான்கள் கப்பன்பார்க்குக்குள் ஷாமியானா அமைத்து அதன்கீழ் நாற்காலி, மேஜையெல்லாம் போட்டிருந்தார்கள். அங்கே ஒரு பயலைக்காணோம், சட்டென்று லாப்டாப்பை விரித்து அமர்ந்துவிட்டேன்.
பூங்காவில் எழுதும் கவிஞர்களின் விவரக்குறிப்புகள் வேறுவிதமானவை. அவர்களுக்குக் கோடுபோட்ட நோட்டும் பென்சிலும் மரத்தடிப் புல்வெளியும் கன்னத்தில் வைக்க ஆள்காட்டிவிரலும் இருக்கும். ஆனால் நானோ, நாற்காலி, மேஜை, லாப்டாப் என்று அலுவலகம்போல் எழுத அமர்ந்தேன்.
எனினும், பூங்கா பூங்காதானே, ஆகவே, அடியேனுக்கும் காவியம் வரும் என்று நம்பினேன்.
என்னுடைய நன்னேரம், இன்று பெங்களூரில் வெய்யில் குறைவு. துளி காற்று வீசவில்லை, மரங்களோ இலைகளோ சிறிதும் அசையவில்லை, என்றாலும், இதமான வானிலை. சுற்றியுள்ளோரை ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்தபடி சுறுசுறுப்பாக எழுத இயன்றது.
முதலில், ஒரு குழந்தை வந்தது, தத்தித்தத்தி அது நடக்கும் அழகை அதன் பெற்றோர் பல கோணங்களிலிருந்து புகைப்படம் எடுத்தவண்ணமிருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து, மூன்று வெளிநாட்டினர் வந்தார்கள். என்னருகே இருந்த மேஜையில் அமர்ந்து அவர்கள் ஆசுவாசம் கொள்ள, சிலர் அவர்களை அணுகி, ‘உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்றார்கள். அவர்களும் திடீர்ப் பிரபலத்தால் புளகாங்கிதமடைந்து விதவிதமாக போஸ் கொடுத்தார்கள்.
அப்புறம் இரு சிறுவர்கள் வந்தார்கள், ‘அங்கிள், கேட் எங்கே இருக்கு?’ என்றார்கள்.
‘தம்பி, இது கப்பன்பூங்காவின் மையம், சுற்றி மூன்று கேட்கள் உண்டு, மூன்றும் பெங்களூரின் மூன்று வெவ்வேறு இடங்களில் திறக்கிறவை, இவற்றில் உனக்கு எது வேண்டும்?’ என்றேன்.
‘எது பக்கத்தில இருக்கோ அது!’ என்றான் ஒரு சிறுவன்.
‘அடேய், வாழ்க்கை அத்துணை எளிதல்ல’ என்று சொல்லும் தவிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நீ போய்ப் பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிகிட்டு வா, அப்புறம் வழி சொல்றேன்’ என்றேன்.
சில நிமிடங்களில், அந்தச் சிறுவர்களின் தந்தை வந்தார், ‘ஏதோ பொம்மை ட்ரெயின் இருக்காமே, அது எங்கே?’ என்றார். ‘அதோ அங்கே’ என்றதும் அவர்கள் மூவரும் ஒரு சிறு ரயில்போல அதைநோக்கி விரைந்தார்கள்.
அதன்பிறகு, மூன்று பெண்கள் ஒரு கிடாருடன் வந்தார்கள். ‘இளையநிலா பொழிகிறது’ என்று அசந்தர்ப்பமாக வாசிக்கப்போகிறார்களோ என்று நினைத்தேன். அவர்கள் ஏதோ பேசிச்சிரித்தபடி கடந்துசென்றுவிட்டார்கள்.
அதன்பிறகுதான் கவனித்தேன், அவர்களில் மையத்திலிருந்தவருடைய தோளில் இருந்தது கிடாரே அல்ல, கிடார்வடிவத்தில் ஒரு பலூன், அதில் இணையத்தில் நிறைய தென்படும் முட்டைக்கண் மஞ்சள் பொம்மையொன்றின் உருவம் வரையப்பட்டிருந்தது. அதைத் தோளில் சாய்த்தபடி அவர் நடந்துசென்றார்.
எதிரே வாகனமில்லாத தார்ச்சாலை. ஒரு தம்பதி அதன்நடுவே அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்குச் சற்றுத்தள்ளி ஒருவர் புல்வெளியில் சாய்ந்து படுத்தபடி கன்னட நாவலொன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அவரருகே ஏழெட்டுப்பேர் உட்கார்ந்தநிலையில் ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ்’ விளையாடுவதுபோல் வட்டமாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்படியாக, இரண்டரை மணிநேரம் ஓடியதே தெரியவில்லை!
இத்தனையையும் வேடிக்கை பார்த்தாய், சரி, ஏதாவது எழுதினாயா என்கிறீர்களா?
ஒரு குறுநாவலைத் தொடங்கி நான்கரை அத்தியாயங்கள் எழுதினேன், மீதமிருப்பதையும் (வீட்டில்) எழுதிவிட்டுப் பிரசுரிக்கிறேன்!
***
என். சொக்கன் …
09 04 2016